சமூகம்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “அவர் பேசப் பேச நமக்கு லாபம்தான்! - சீண்டும் மலை... சிரிக்கும் சாமி!

நிர்மலா சீதாராமன், அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
நிர்மலா சீதாராமன், அண்ணாமலை

எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் சர்ஜரி செய்திருக்கும் பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி.ராகவனைச் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார்

“மோடியை அவதூறாகப் பேசியதாக இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்த சூரத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருக்கிறார் ராகுல் காந்தி. அந்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஏப்ரல் 13-ம் தேதி வரை ஜாமீன் வழங்கியிருப்பதுடன், `வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை’ என்றும் சொல்லியிருக்கிறது” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

“மார்ச் 23-ம் தேதி வெளியான தீர்ப்புக்கு ஏப்ரல் 3-ம் தேதி மேல்முறையீடு செய்திருக்கிறாரே... ஏன் இந்த தாமதம்?”

“காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தேன். ‘பா.ஜ.க அரசு சட்டரீதியாக மிகவும் வலிமையாக இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும், எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாமல் போய்விடும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேல்முறையீட்டு மனுவும், வாதமும் தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டும். இதற்காகவே, குஜராத் மொழியில் இருந்த 671 பக்கங்கள்கொண்ட தீர்ப்பின் நகலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சீனியர் வழக்கறிஞர்களிடம் கொடுத்து ஆலோசனை செய்திருக்கிறார் ராகுல். எனவேதான் இத்தனை நாள்கள் எடுத்துக்கொண்டார்’ என்கிறார்கள்.”

“ம்...”

“கொலை முயற்சி வழக்கு ஒன்றில் லட்சத்தீவு எம்.பி முகமது ஃபைசலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது லட்சத்தீவிலுள்ள கவரொட்டி நீதிமன்றம். அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மேல்முறையீட்டில், அந்தத் தண்டனையை கேரள உயர் நீதிமன்றம் ரத்துசெய்ததால், முகமது ஃபைசலின் தகுதிநீக்க அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது மக்களவைச் செயலகம். அதேபோல ராகுலும் மீண்டும் எம்.பி-யாகிவிடுவார் என்று நம்புகிறார்கள் காங்கிரஸார்.”

“அதுசரி... சென்னைக்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலையிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை என்கிறார்களே?”

“எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடந்த பாராட்டு விழாவுக்காகவே அவர் சென்னைக்கு வந்தார். அப்படியே, பைபாஸ் சர்ஜரி செய்திருக்கும் பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.டி.ராகவனைச் சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். அந்தச் சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார்கள். அப்போது அண்ணாமலையின் சமீபகால சர்ச்சைப் பேச்சுகள் குறித்து ராகவனிடம் வருத்தப்பட்ட நிர்மலா சீதாராமன், ‘உங்களைப் போன்ற அனுபவமிக்கவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும்’ என்று சொன்னாராம். ஆட்சி மேலிடத்தில் முடிவெடுக்கும் இடத்திலிருப்பவர் நிர்மலா சீதாராமன். அவரே தனக்கெதிரான மனநிலையில் இருப்பதை எப்படியோ தெரிந்துகொண்ட அண்ணாமலை, பெங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பிய கையோடு, விமான நிலையத்தில் வைத்தே நிர்மலா சீதாராமனைச் சந்தித்திருக்கிறார். அப்போது, கூட்டணி தொடர்பாகத் தன் நிலைப்பாட்டை அண்ணாமலை விளக்க, இறுக்கமான முகத்தோடு கேட்டுக்கொண்டாராம் நிர்மலா சீதாராமன். அண்ணாமலையின் கருத்து குறித்து எதுவும் பேசாமல், ‘கூட்டணி குறித்து தேசியத் தலைமை முடிவுசெய்யும்’ என்று மட்டும் சொல்லிவிட்டு டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.”

நிர்மலா சீதாராமன், அண்ணாமலை
நிர்மலா சீதாராமன், அண்ணாமலை

“அ.தி.மு.க கூட்டணி குறித்து பா.ஜ.க நிர்வாகிகளே முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகிறார்களே?”

“அண்ணாமலைதான் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசியிருக்கிறார். ‘அ.தி.மு.க-வுடன்தான் கூட்டணி. ஒன்பது தொகுதிகளில் பா.ஜ.க கவனம் செலுத்துகிறது’ என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சொன்னதற்கு, ‘கூட்டணி தொடர்பாக அமித் ஷா இன்னும் உறுதிசெய்யவில்லை’ என்றிருக்கிறார் அண்ணாமலை. `கூட்டணி தொடரும்’ என அமித் ஷாவே அறிவித்த பிறகும் அண்ணாமலையின் இந்தக் குழப்படிப் பேச்சு, கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் களேபரங்களை உருவாக்கியிருக்கிறது. இது குறித்து அண்ணாமலையிடம் விரிவாகப் பேசினாராம் வானதி சீனிவாசன். ‘சரிங்கக்கா... சரிங்கக்கா...’ எனத் தலையை மட்டும் ஆட்டிய அண்ணாமலை, வானதி சொன்ன எதையும் மூளையில் ஏற்றிக்கொள்ளவில்லை என்கிறார்கள். தமிழகத்துக்கு வரும் பிரதமரை வரவேற்பது குறித்து நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும்கூட சீனியர்கள் பேச்சு எதையும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லையாம். கூட்டம் முடிந்து வெளியில் வந்த பிறகும்கூட, அ.தி.மு.க-வைச் சீண்டிப்பார்க்கும் வகையில் வார்த்தைகளை விட்டிருக்கிறார் மலை.”

“ஓஹோ... அதற்குத்தான், ‘கூட்டணி குறித்து மாநிலத் தலைவர்கள் முடிவுசெய்வதில்லை. தேசியத் தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள்’ என எடப்பாடி பழனிசாமி வெடித்தாரா?”

“ஆமாம். அண்ணாமலை உருவாக்கிவிட்ட டேமேஜால், எடப்பாடியைச் சமாதானம் செய்யும் இக்கட்டில் மாட்டியிருக்கிறது டெல்லி தலைமை. அதற்காக, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கும் சீட்டுகள் கொடுக்கும் அளவுக்கு இறங்கியிருக்கிறார்களாம். பெங்களூரு, கோலார் போன்ற தமிழர் அதிகம் வசிக்கும் ஏரியாக்களில் மூன்று தொகுதிகளை அ.தி.மு.க-வுக்கு ஒதுக்குவது எனப் பேசப்பட்டிருக்கிறது. ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடியால்தான் அ.தி.மு.க சார்பில் அண்டை மாநிலத்திலும் வேட்பாளர்களைக் களமிறக்க முடிந்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் பாராட்டுவார்கள்’ என்றெல்லாம் சொல்லி எடப்பாடி தரப்பைச் சமாதானப்படுத்தியிருக்கிறது டெல்லி சமாதானக் குழு. பிரதமர் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு, எடப்பாடியை பெங்களூருக்கு அழைக்கவும் ஏற்பாடுகள் `தடதட’க்கின்றன. ‘ஒத்தை ஆட்டுக்குட்டிக்காக ஆனையைக் காவு கொடுப்பதா... அண்ணாமலையை எச்சரித்து வாயை மூடவைப்பதை விட்டுவிட்டு, அதை ஈடுகட்டுவதற்காக ஒரு தேசியக் கட்சி இவ்வளவு இறங்கத்தான் வேண்டுமா?’ எனக் கொந்தளிக்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள். அதேநேரத்தில், ‘அண்ணாமலை பேசப்பேச நமக்கு லாபம்தான்’ என்று சிரிக்கிறதாம் எடப்பாடி தரப்பு.”

“உட்கட்சித் தேர்தலுக்கும் எடப்பாடி தயாராகிறாராமே?”

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“ஆமாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருந்தபோதுதான், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பன்னீரின் ஆதரவாளர்கள் பலருக்கு, தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஒன்றிய - கிளைக் கழகங்களில் பதவிகள் வழங்கப்பட்டன. இப்போது அந்தப் பதவிகளையெல்லாம் கலைத்துவிட்டு, புதிதாகத் தன் ஆதரவாளர்களுக்குப் பதவி கொடுக்கத் தயாராகிறாராம் எடப்பாடி. அதற்காகத்தான் இந்த உட்கட்சித் தேர்தலாம். பொதுச்செயலாளர் தேர்வை அங்கீகரித்து, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எப்படியாவது அதைப் பதிவேற்ற வைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறது எடப்பாடி தரப்பு” என்ற கழுகாருக்கு கருப்பட்டி அல்வா கொடுத்தோம். அதை ருசித்தபடியே தி.மு.க செய்திக்குத் தாவினார்.

“தேர்தல் ஆலோசகர் சுனில்மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம் செனடாப் ரோடு. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் ஆலோசனை அளித்துக்கொண்டு, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் அவர்தான் ஆலோசனை அளிப்பதாக மாநில உளவுத்துறை ‘நோட்’ போட்டிருக்கிறது. தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுக்கும் சில திட்டங்களையும், எடப்பாடிக்குப் போட்டுக்கொடுத்திருக்கிறாராம் சுனில். சட்டம்-ஒழுங்கு தொடர்பாக தி.மு.க-வை எடப்பாடி ‘அட்டாக்’ செய்வதெல்லாம் சுனில் கொடுத்த ‘புள்ளிவிவரங்களை’ வைத்துத்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சுனிலின் ‘டபுள் கேம்’ விவகாரத்தை காங்கிரஸ் மேலிடம் வரை புகாராகக் கொண்டு செல்லத் தயாராகிறது தி.மு.க தரப்பு.”

“தென்மாவட்ட அமைச்சர் ஒருவர்மீது கோட்டையில் புகார் மழை கொட்டுகிறதாமே?”

“ஆமாம்... ஆமாம்... சின்ன துறை... இதை வைத்து என்ன செய்வது என்ற சோகத்தில் இருந்தவருக்கு, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட துறைசார்ந்த தேர்தல் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் தேர்தலில் முக்கியப் பொறுப்புக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கிறேன் என்று சொல்லி, வசூல்வேட்டையைத் தொடங்கிவிட்டதாம் அமைச்சர் தரப்பு. சோகம் என்னவென்றால், கட்சிக்காக உழைத்த உடன்பிறப்புகளிடம்கூட இரக்கமே இல்லாமல், லட்டுகளைக் கேட்கிறாராம் அவர். சாமியே வரம் கொடுத்தாலும் ‘பூசாரி’ வழிவிட மாட்டார்போல எனக் கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்” என்ற கழுகார்...

“அகிம்சை அமைச்சர் மற்றும் மன்னர் அமைச்சரின் துறைகளை கவனித்துவரும் அதிகாரி கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம். அமைச்சர்கள் தங்களை வளப்படுத்த ஐடியாக்கள் கேட்டு நச்சரிப்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள். பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அமைச்சர்களின் இழுவைகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் அதிகாரி, ஆசையை நிறைவேற்றலாம்... பேராசையை எப்படிப் பூர்த்தி செய்வதெனப் புலம்புவதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* அ.தி.மு.க ஆட்சியில் ‘குடியிருப்பு’ துறையில் கொடிகட்டிப் பறந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூன்றெழுத்து இனிஷியல் நிறுவனம்தான், தி.மு.க ஆட்சியிலும் கோலோச்சுகிறதாம். எந்த ஆட்சி பொறுப்பேற்றாலும், துறை அமைச்சர் தரப்பைத் தொடர்ந்து குஷியாக வைத்திருப்பதாலேயே புராஜெக்ட்டை அள்ளிக்குவிக்கிறது அந்த நிறுவனம் என்கிறார்கள்.

* ஆருத்ரா பண மோசடி வழக்கை ஐ.ஜி லெவல் அதிகாரிகள் மட்டுமே கையாள்கிறார்கள். முக்கிய ஆதாரம் சிக்கியிருப்பதால், இன்னும் சில நாள்களில் இரண்டு முக்கியமான கைதுகள் அரங்கேறப்போகின்றனவாம்.