மிஸ்டர் கழுகு: ஈரோட்டை மறந்துவிட்டு இங்கென்ன வேலை? - கடுகடுத்த முதல்வர்.. தெறித்து ஓடிய நிர்வாகிகள்!

இந்தத் தேர்தலை, தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கிடைத்த கடைசி வாய்ப்பாகப் பார்க்கிறார் எடப்பாடி. அதனால் தொகுதியிலேயே தங்கியிருந்து தேர்தல் வேலைகளைக் கண்காணிக்கிறார்
“குடிக்கிற தண்ணீரில்கூட இந்த மனிதர்களால், எப்படி இப்படி வன்மத்தைக் காட்ட முடிகிறதோ தெரியவில்லை... வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை. அதற்குள்ளாக சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராம மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இறந்த நாயின் உடலைப் போட்டிருக்கிறது ஒரு கும்பல்” என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகார், சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உரையாடலைத் தொடங்கினார்...
“பருவம் தவறிப் பெய்த திடீர் மழையால், டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை உடனடியாக களத்துக்கு அனுப்பி சேத விவரங்களை ஆய்வு செய்யச் சொன்னதோடு, விவசாயிகளுக்கு இழப்பீடும் அறிவித்திருக்கிறார் முதல்வர். ‘வயலில் வீணான நெல்மணிகளைவிட, அரசு கொள்முதல் நிலையங்களில் நாசமான நெல் மூட்டைகளே அதிகம். அதைப் பார்க்கப் பார்க்க வயிறு எரிகிறது. வெட்டவெளியில் மூட்டைகளைப் போட்டு வைக்கும் அவலத்துக்கு முடிவுகட்ட, நெல் கொள்முதல் மையம்தோறும் குடோன்கள் அமைக்க வேண்டும்’ என்று விவசாயிகள் வேதனையோடு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். முதல்வர் என்ன செய்யப்போகிறார் எனப் பார்ப்போம்.”
“சென்னையில் கட்சிக்காரர்களை அழைத்து செம டோஸ் விட்டாராமே?”

“ஆமாம். ஈரோடு தேர்தல் பணியிலிருந்த கட்சிக்காரர்கள் பலரும் துர்கா ஸ்டாலினின் சகோதரி இறப்புக்காக நேரில் வந்து துக்கம் விசாரித்திருக்கிறார்கள். இதில் ஸ்டாலினுக்குத் துளியும் உடன்பாடில்லை. ‘தேர்தல் பணிகளைவிட்டுவிட்டு இங்கே ஏன் வந்தீர்கள்?’ என முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டாராம். ‘ஈரோடு கிழக்கில் ரொம்பவே மெத்தனமாக வேலை பார்க்கிறீர்கள் எனத் தகவல் வருகிறது. இடைத்தேர்தலை விட்டுவிட்டு இங்கென்ன வேலை... உங்களுக்குள் இருக்கும் ஈகோவை விட்டுவிட்டுத் தேர்தலில் ஜெயிப்பதற்கு வழியைப் பாருங்கள்’ என வெடித்துவிட்டார் முதல்வர் என்கிறார்கள். இதனால் துக்கம் கேட்க வந்தவர்களெல்லாம் அடுத்தடுத்த ஃப்ளைட்டுகளைப் பிடித்து, வந்த தடம் தெரியாமல் தெறித்து ஓடியிருக்கிறார்கள்.”
“ஈரோடு இடைத்தேர்தல் தி.மு.க எதிர்பார்த்த அளவுக்கு ஈஸியாக இருக்காதுபோலவே?”
“இந்தத் தேர்தலை, தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கிடைத்த கடைசி வாய்ப்பாகப் பார்க்கிறார் எடப்பாடி. அதனால் தொகுதியிலேயே தங்கியிருந்து தேர்தல் வேலைகளைக் கண்காணிக்கிறார். தி.மு.க-வை முந்திக்கொண்டு ரோஸ் மில்க் விநியோகத்தைத் தொடங்கியவர்கள், அடுத்தடுத்த ரவுண்டுக்கும் தயாராகிவருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு ஸ்வீட் பாக்ஸ் தர வேண்டும், வேட்பாளர் தரப்பு 5 ஸ்வீட் பாக்ஸ்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது எடப்பாடியின் உத்தரவு. ‘அண்ணே, கைவசம் அவ்வளவு இல்லை...’ என்று நழுவுகிறவர்களை, ‘ஒண்ணும் பிரச்னையில்லை... நான் கைகாட்டுகிற ஆட்களிடம் கடனா வாங்கிக்கொடுங்க. அப்புறமா தாங்க’ என்று கிடுக்கிப்பிடி போடுகிறதாம் எடப்பாடி தரப்பு. எல்லா மாஜிக்களிடமிருந்தும் சொன்னபடி ஸ்வீட் பாக்ஸ் வருகிறதா என்று வரவு வைக்கும் பொறுப்பு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம்.”

“மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை, தமிழ்ப்படுத்தித் திரையிட்டிருக்கிறாரே தொல்.திருமாவளவன்?”
“சொன்னதைச் செய்து காட்டியிருக்கிறார் மனிதர். அது பற்றி பொதுவெளியில் பேசுவதற்கு தி.மு.க-வினரே தயக்கம் காட்டும் நிலையில், துணிச்சலாக அதைத் தமிழில் மொழிபெயர்த்து பரப்பியிருக்கிறார் திருமா. சென்னை அசோக்நகரில் நடந்த திரையிடல் நிகழ்வில், ‘பெரியாரை எதிர்ப்பது தமிழ்த் தேசியமல்ல. சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம்... தி.மு.க., தி.க-வை எதிர்ப்பது திரிபுவாதம்’ என சீமானை பெயர் சொல்லாமல் அவர் விமர்சித்தது நாம் தமிழர் கட்சியினரை உஷ்ணப்படுத்தியிருக்கிறது. ‘பேனா சிலை அமைப்பதற்கு எதிராக சீமான் கடுமையாகப் பேசியதால்தான், திருமா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மூலம் தாக்குதலை நடத்துகிறது தி.மு.க’ எனக் கொந்தளிக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.”
“கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்...”
“ஹா... ஹா... எதைப் பற்றிக் கேட்கிறீர்கள் என்று புரிகிறது. சொந்த ஊரிலிருந்து 60 கிலோமீட்டரில் நடக்கும் ஈரோடு இடைத்தேர்தலிலேயே எதுவும் செய்ய முடியாத மாநிலத் தலைவர் அண்ணாமலையை, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இணைப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது பா.ஜ.க. இந்த நியமனத்தை, ‘அண்ணாமலைக்குக் கிடைத்த புரொமோஷன்’ என்று சொல்லி, கொண்டாட்டத்தில் இருக்கிறார்களாம் அவரின் ஆதரவாளர்கள். அவர்களைவிட கட்சி சீனியர்கள்தான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். ‘பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, ஒருவரை மற்றொரு மாநிலத்துக்குப் பொறுப்பாளராக நியமிப்பது என்பது, சொந்த மாநில அரசியலில் அவரது முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கான முதற்படிதான். தமிழ்நாடு அரசியலிலிருந்து படிப்படியாக ஓரங்கட்டப்படுவார் அண்ணாமலை. ஆனால், அது கெளரவமாக நடக்கும்’ என்கிறார்கள் அவர்கள். `பா.ஜ.க ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகாவில் பல பெருந்தலைகளும், சீனியர்களும் இருக்கிறார்கள். இங்குபோல அங்கே அண்ணாமலையால் ஆட்டம்போட முடியாது. எடியூரப்பா ஆதரவாளர்களைச் சமாளிப்பதற்குள்ளாகவே அவருக்குப் போதும் போதுமென்றாகிவிடும்’ என்கிறார்கள் சீனியர்கள்.”
“அப்படியானால், ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதாக அவர் அறிவித்த நடைப்பயணத்தின் கதி?”
“மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடகாவில் தேர்தல் சூடு கொளுத்தப்போகிறது. அந்தச் சூழலில் நடைப்பயணம் செய்வது சரியாக இருக்காது என்பதால், இப்போதைக்கு அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கட்சி மேலிடம் சொல்லியிருக்கிறதாம். அநேகமாக வெயில் காலம் முடிந்து ஜூன், ஜூலையில் அவர் நடக்கத் தொடங்குவார் எனத் தெரிகிறது” என்ற கழுகாருக்கு சூடாக வாழைத்தண்டு சூப் கொடுத்தோம். அதைச் சுவைத்தபடியே அடுத்த செய்திகளுக்குத் தாவினார்...
“தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் நியமன பிரச்னை கோர்ட் வரை சென்றாலும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை மா.செ ஆக்கினாரல்லவா கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்... இப்போது அவர்களுக்குள்ளேயே மோதல் வெடித்திருக்கிறது. பொது இடத்தில்கூட ராஜாவை ஒருமையில் அழைக்கிறாராம் அமைச்சர். பொறுமையிழந்த ராஜா, ‘பொது இடத்தில் இப்படி அழைக்க வேண்டாம்’ என இருவருக்கும் நெருக்கமானவர் மூலம் அமைச்சருக்குத் தூது அனுப்பியிருக்கிறார். ‘நான் பாத்து மா.செ ஆக்குன பய அவன். எப்படிப் பேசணும்னு எனக்கே சொல்லிக் குடுக்குறானா... ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க... அவன மாத்த 10 நிமிஷம் ஆகாது’ என்று தூது வந்தவரிடம் பொங்கிவிட்டாராம் அமைச்சர். இது குறித்து அமைச்சரிடம் ராஜா நேரடியாகவே கேட்க, இருவருக்குள்ளும் வார்த்தைப்போர் வெடித்திருக்கிறது. முதல்வர் அழைத்து எச்சரித்தும் சாதிய மனப்பான்மையை விடுவதாகத் தெரியவில்லை அமைச்சர் எனப் புலம்புகிறார்கள் உள்ளூர் நிர்வாகிகள்” என்ற கழுகார்...
“விருதுநகர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அலுவலராக இருந்த ஒருவர், சமீபத்தில் திருநெல்வேலிக்குத் தூக்கியடிக்கப்பட்டார். அவர் இருந்த இடத்தில், அ.தி.மு.க சார்பு அதிகாரி ஒருவரை நியமித்திருக்கிறார்களாம். திருநெல்வேலிக்குத் தூக்கியடிக்கப்பட்ட அந்த அதிகாரி, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு நெருக்கமானவர் என்பதோடு, பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவராம். ‘செய்தித்துறை மேலிடத்தின் மில்க் உதவியாளரும், முருகக் கடவுள் பெயர்கொண்ட மூத்த அதிகாரி ஒருவரும்தான் இந்தப் பணியிட மாற்றங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தி.மு.க பாரம்பர்யம்கொண்ட அதிகாரிகளைப் பந்தாடிவிட்டு, முக்கியப் பொறுப்புகளில் அ.தி.மு.க சார்பு அதிகாரிகளை நியமிக்கிறார்கள். இதற்காக, பல லட்டுகள் கைமாறுகின்றன’ என்கிறது அறிவாலய சார்புள்ள செய்தித்துறை வட்டாரம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.
கழுகார் எக்ஸ்க்ளூசிவ்
* தி.மு.க-வின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரின் சொத்துகள், பினாமிகள் விவரங்களை மத்திய உளவுத்துறை மூலம் டெல்லி தலைமை சேகரித்துக்கொண்டிருக்கிறதாம். இப்போது தங்களுக்கு அடக்கமாக இருக்கும் அவர், பிபிசி ஆவணப்படம், அதானி விவகாரம் உள்ளிட்டவற்றில் ஓவராகக் குரல் கொடுத்தால் தேவைப்படும் என்பதாலேயே, இந்தத் தகவல் சேகரிப்பு என்கிறது டெல்லி பட்சி.
* ‘ஹவாலா’ பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் ‘கொய்யா’ பிரமுகரைக் குறிவைத்திருக்கிறது மத்திய உளவுத்துறை. மண்ணடி விடுதியில் தொடங்கி இளையான்குடி தொடர்புகள் வரை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
* முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ‘வெயில்’ நகருக்குக் கள ஆய்வுக்குச் சென்றபோது, இரண்டு வடக்கு மண்டல காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றிய புகார்கள் அவரது கவனத்துக்குக் கொண்டுவரப் பட்டிருக்கின்றன. அதன் பிறகே இரண்டு ஐ.பி.எஸ்-களும் தூக்கியடிக்கப்பட்டார்களாம்.