சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆவேச முதல்வர்... பதுங்கிய கமல்... பதற்றத்தில் ஓ.பி.எஸ்!

ஸ்டாலின், கமல், பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின், கமல், பன்னீர்செல்வம்

‘தலைவர் இதோ வருகிறார்... இன்று கிளம்பிவிடுவார்’ எனப் போக்குக் காட்டிய கமல் தரப்பு, கடைசிவரையில் கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் கொடைக்கானலில் சினிமா படப்பிடிப்பில் இருந்திருக்கிறார் கமல்.

“இதோ, அதோ என இழுத்துக்கொண்டிருந்த அமைச்சரவை மாற்றம் ஒருவழியாக நடந்தேவிட்டதே...” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். “நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் மாற்றம் வந்திருக்கிறது. நமது கவர் ஸ்டோரியும் அது தொடர்பானதுதான்” என்றோம். கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “கட்சி வளர்ச்சி நிதியைப் பெரும்பாலான அமைச்சர்கள் கொடுத்துவிடும் நிலையில், மூன்று அமைச்சர்கள் மட்டும் தருவதே இல்லையாம். அவர்களுக்கான எச்சரிக்கையாகக்கூட இந்த அமைச்சரவை மாற்றத்தைப் பார்க்கலாம்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

“வரும் 23-ம் தேதி, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமாக இது திட்டமிடப்பட்டிருக்கிறது. ஜப்பானில், தமிழ்ச் சங்கம் நடத்தும் ஒரு நிகழ்விலும் முதல்வர் கலந்துகொள்ளவிருக்கிறார் என்கிறார்கள். கூடவே, சிங்கப்பூரில் முதல்வருக்கு முழு உடல் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறதாம் குடும்பம். ஒரு வார பயணத்தை முடித்துக்கொண்டு, இந்த மாத இறுதியில்தான் தமிழகத்துக்குத் திரும்புகிறார் முதல்வர்.”

“அமைச்சர் உதயநிதியும் லண்டன் பயணமாகிறாராமே?”

“ம்... லண்டனில் படித்துவரும் தன் மகனைப் பார்ப்பதற்காகக் குடும்பத்துடன் செல்கிறார். விடுமுறை நாள்களை மகனுடன் கழித்துவிட்டு ஊர் திரும்பவிருக்கிறாராம். அதேநேரத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் துறைரீதியிலான சுற்றுப்பயணத்துக்காக லண்டனுக்குச் செல்கிறார்.”

“இணை பிரியாத நட்பு... சரி, டெண்டர் விவகாரத்தில் முதல்வர் ஆவேசமானதாகச் சொல்கிறார்களே... என்ன பிரச்னை?”

ஸ்டாலின்
ஸ்டாலின்

“அவரது கோபத்துக்குக் காரணம், ‘டெண்டர் விவகாரங்களில், முதல்வர் எதையுமே கண்டுகொள்வது கிடையாது. அவர் கவனத்துக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்கள் நடக்கின்றன’ எனப் பரவும் செய்திகள்தானாம். பல்வேறு துறைகளில், அரசு டெண்டர்கள் கிடைக்காமல் தோல்வி கண்ட சில நிறுவனங்கள்தான் இது போன்ற செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்புவதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டதும், ‘டெண்டர் கிடைக்காத விரக்தியில், 17 நிறுவனங்கள் அரசுக்கு எதிராக அவதூறு கிளப்புகின்றன. டெண்டர் விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதால்தான் அவர்களுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டிருக்கிறது’ என ரிப்போர்ட் அளித்திருக்கிறது உளவுத்துறை. கண்சிவந்த முதல்வர், ‘உள்நோக்கத்துடன், அரசுக்கு எதிராக அவதூறு கிளப்பும் இது போன்ற ஆட்கள் இனி அரசு டெண்டர் பக்கமே வரக் கூடாது’ எனக் கொதித்துவிட்டாராம். அவதூறு கிளப்பும் நிறுவனங்களின் பட்டியல், முக்கியமான இலாகாக்களை வைத்திருக்கும் அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகத் தகவல்.”

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

“அ.தி.மு.க செய்தி எதுவும் இல்லையா?”

“ `அ.தி.மு.க எம்.பி-யாக ரவீந்திரநாத்தை அங்கீகரிக்கக் கூடாது’ என எடப்பாடி தரப்பில் கொடுக்கப்பட்ட மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. எனவே, `விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி, சி.வி.சண்முகம் மூலம் மக்களவை சபாநாயகருக்கு மீண்டும் ஒரு மனுவை அளித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரம், நீதிமன்றங்களின் தீர்ப்பு உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி இந்த மனு வழங்கப்பட்டிருப்பதால், விரைவிலேயே நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள். இதனால், மகனின் அங்கீகாரம் பறிபோய்விடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறாராம் பன்னீர்.”

“பாவம் மனிதர்... மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது காங்கிரஸ் வருத்தத்தில் இருக்கிறதாமே?”

“வருத்தமா... ஆதங்கத்தில் இருக்கிறார்கள். கர்நாடகாவில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ள கமல்ஹாசனை, கதர்கள் அழைத்திருக்கிறார்கள். டெல்லி காங்கிரஸ் மேலிடத்திலிருந்தே இதற்கான அழைப்பு கமலுக்கு வந்ததாம். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் அழைப்பு விடுத்திருக்கிறார். ‘தலைவர் இதோ வருகிறார்... இன்று கிளம்பிவிடுவார்’ எனப் போக்குக் காட்டிய கமல் தரப்பு, கடைசிவரையில் கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் கொடைக்கானலில் சினிமா படப்பிடிப்பில் இருந்திருக்கிறார் கமல். இதில்தான் காங்கிரஸுக்கு ஏக வருத்தம். ‘திருமாவளவன் உணர்வுபூர்வமாக கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் வீரநடை போட்ட கமல் இப்படிப் பதுங்கிவிட்டாரே...’ என ஆதங்கப்படுகிறார்கள் காங்கிரஸார்...”

கமல்
கமல்

“காங்கிரஸுக்குப் பிரசாரம் செய்தால், பா.ஜ.க-வுக்குக் கோபம் வரும்... வீணாகத் தன்னைவைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்திருப்பார் கமல்...”

“கர்நாடக பா.ஜ.க-வை விடுங்கள். தமிழ்நாட்டில் ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் மிக ஆர்வமாகக் கட்சி வேலை பார்த்துவந்த பா.ஜ.க., இப்போது அதை ஆறு தொகுதிகளாகச் சுருக்கிக்கொண்டதாம். நீலகிரி, சிவகங்கை, வேலூர் தொகுதிகளில் கட்சியின் செயல்பாடுகள் படிப்படியாக முடங்கிவிட்டன. விசாரித்தால், ‘நீலகிரியில் போட்டியிடத் தீர்மானித்து, அங்கு மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தீவிரமாகியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். அப்படி அவர் ஜெயித்தால், கொங்கு மண்டலத்தில் முருகனின் கொடி உயரப் பறக்கும் என்பதோடு, கமலாலயத்திலும் அவரது செல்வாக்கு உயர்ந்துவிடும் என்பதால், நீலகிரியில் பா.ஜ.க-வின் களப்பணியை வெகுவாகச் சுருக்க ஆரம்பித்துவிட்டது அண்ணாமலை தரப்பு’ என்று கண்ணைக் கசக்குகிறார்கள் முருகனின் ஆதரவாளர்கள். ‘25 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று வீராப்பாகச் சொல்லிவந்த அண்ணாமலை, இப்போது ஆறு தொகுதிகளுக்கே அல்லாடுகிறார்...’ எனச் சீறுகிறார்கள் கமலாலய சீனியர்கள்” என்ற கழுகாருக்கு மைசூர் பாகு கொடுத்தோம். சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் நெருங்கிவிட்டது. நிதித்துறைச் செயலாளராக இருக்கும் முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராகப் பணியமர்த்தப்பட விருக்கிறாராம். முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், நிதித்துறைச் செயலாளராக மாற்றப்படுவார் என்கிறார்கள். உள்ளாட்சித்துறையில் செயலாளராக இருக்கும் அமுதாவுக்கு உள்துறைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்படுமெனத் தெரிகிறது. அடுத்த மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு. அவர் இடத்துக்கு, சிவ தாஸ் மீனா வரவிருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரம். அதேபோல பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களும், எஸ்.பி-க்களும் மாற்றப்படவிருக்கிறார்கள் என்ற பேச்சு கோட்டை வட்டாரத்தில் பரபரக்கிறது” என்ற கழுகார்...

குடும்பத்துடன்... மாணவி ஷப்ரீன் இமானா
குடும்பத்துடன்... மாணவி ஷப்ரீன் இமானா

“ப்ளஸ் டூ தேர்வில் தமிழ்வழியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த மாணவி ஷப்ரீன் இமானா, தன்னுடைய குடும்பத்துடன் ராஜ் பவன் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் இந்த மாளிகையில், விதிமுறைப்படி தனிநபர்கள் தங்கவைக்கப்படுவதில்லை. தன்னைச் சந்திப்பதற்காக அந்த மாணவி குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்தபோது, ‘எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, மாநில அளவில் ரேங்க் பெற்றிருக்கிறார். அவருக்காக விதிமுறைகளைத் தளர்த்துவதில் தவறே இல்லை’ என்று சொன்னாராம் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து சமூக நல்லிணக்கத்திற்காக செயல்பட்டால் சரிதான்...” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெய்டு நடத்திய என்.ஐ.ஏ ஐந்து பேரைக் கைதுசெய்திருக்கிறது. இவர்கள் துருக்கிக்குச் சென்று, சிரியாவைச் சேர்ந்த இயக்கவாதிகளைச் சந்தித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறதாம். விரைவில் அடுத்தகட்ட கைதுகள் அரங்கேறும் என்கிறது என்.ஐ.ஏ வட்டாரம்.

* ‘மாப்பிள்ளையுடனான சந்திப்பு, திட்டமிடப்படாத நிகழ்வுதான்’ என்று வேட்டியைப் போட்டுத் தாண்டிக் காட்டிவிட்டார் பணிவானவர். ஆனாலும், அவர்மீதான கோபம் துளியும் குறையவில்லையாம் டெல்லிக்கு.

* அமைச்சரவை மாற்றத்திலிருந்து தப்பியவரின் துறை உயரதிகாரி ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். அந்த அமைச்சர் குறித்து அதிக நெகட்டிவ் விஷயங்களை மேலிடத்துக்குச் சொன்னதே அவர்தானாம். இதனால், தான் விரைவிலே பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம் அதிகாரி.