அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: உள்ளதும் போயிடும் ஜாக்கிரதை! - டோஸ்விட்ட ஸ்டாலின்... ஜெர்க்கான மா.செ-க்கள்!

மானிய விலையில் ஆட்டோக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மானிய விலையில் ஆட்டோக்கள்

`யாருக்கும் கட்சிப் பொறுப்பு நிரந்தரமல்ல. கொடுக்கும் வேலைகளைச் சரியாகச் செய்யவில்லையென்றால் யாராக இருந்தாலும் மாற்றத் தயங்க மாட்டேன்

``திருவாரூரில் ஜூன் 3-ம் தேதி நடப்பதாக இருந்த கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் கலைஞர் கோட்டத் திறப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் 15-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது” என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர், மாத இறுதியில்தானே ஊர் திரும்புகிறார்?” என்று கேட்டபடியே அவருக்கு, தேன் நெல்லி கொடுத்தோம்.

“ஆனால், தான் ஊரில் இல்லாவிட்டாலும் கட்சிப் பணிகள் சுறுசுறுப்பாக நடக்கும் வகையில், கட்சியினருக்கு கீ கொடுத்துவிட்டார் முதல்வர். மே 14-ம் தேதி காணொளி வாயிலாக நடந்த தி.மு.க மா.செ-க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ‘அமைச்சர்கள், மா.செ-க்கள், எம்.எல்.ஏ-க்களுக்குப் பல ஆசைகள் இருக்கலாம். தப்பில்லை. ஆனால், இப்போது வகிக்கும் பதவியின் பொறுப்பறிந்து செயல்பட வேண்டும். அப்படிச் சிறப்பாகப் பணியாற்றினால்... எதிர்பார்த்தது நிச்சயம் கிடைக்கும். வேலை எதையும் செய்யாமல் பதவியை மட்டுமே எதிர்பார்த்தால் இருக்கிற பொறுப்பும் பறிபோய்விடும்... ஜாக்கிரதை!’ என்று குட்டு வைத்திருக்கிறார். கூட்டத்தில், அமைச்சர்கள் உள்ளிட்ட பத்து மாவட்டச் செயலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசியவர், `யாருக்கும் கட்சிப் பொறுப்பு நிரந்தரமல்ல. கொடுக்கும் வேலைகளைச் சரியாகச் செய்யவில்லையென்றால் யாராக இருந்தாலும் மாற்றத் தயங்க மாட்டேன். ஆட்சியைவிட எனக்குக் கட்சிதான் முக்கியம். கட்சியை பலவீனப்படுத்தும் எந்தச் செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன்’ என டோஸ்விட்டாராம். இதைக் கேட்டு அந்த பத்துப் பேருடன், மற்றவர்களும் ஜெர்க் ஆகியிருக்கிறார்கள்.”

ஸ்டாலின்
ஸ்டாலின்

“இப்படிக் கோபப்படும் அளவுக்கு என்ன நடந்தது?”

“ ‘ஆட்சிக்கு வந்த பிறகு, தலைவர் கட்சியைக் கண்டுகொள்வதில்லை... கட்சி விவகாரங்கள் அவரது காதுக்கே செல்வதில்லை’ என்று தொடர்ந்து எழுந்த விமர்சனங்கள் ஒருவழியாக முதல்வரின் காதுகளை அடைந்துவிட்டன. மக்களவைத் தேர்தல் வேறு நெருங்குகிறதல்லவா... அதுதான் இவ்வளவு வேகம். எனவேதான், ‘உறுப்பினர் சேர்க்கை என்பது தெருத் தெருவாகச் சென்று மக்களைச் சந்திக்கத்தானே தவிர, கட்சிக்கு ஆள்பிடிக்க அல்ல. அப்படி நேரடியாக மக்களிடம் நாம் செல்லும்போதுதான் ஆட்சி குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவரும். கட்சிக்கு, தொண்டர்களே அச்சாணி. அவர்கள் என்ன சொல்கிறார்கள், அவர்களின் தேவை என்ன என்பதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அப்போதுதான் அவர்களும் உற்சாகமாகப் பணியாற்றுவார்கள்’ என அந்தக் கூட்டத்தில் ஒரே அட்வைஸ் மழையாம். கூடவே, ‘தொகுதிப் பார்வையாளர்கள் யாரிடமும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம். எனக்கு வேலை நடக்க வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தராத யாராக இருந்தாலும் நீங்கள் தலைமையில் புகார் அளிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.”

“ம்... அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”

“எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் கூத்துகள்தான். பொதுச்செயலாளராகப் பதவியேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் விழா என்பதால், அதை சேலத்தில் பெரிய மாநாடுபோல விமரிசையாகக் கொண்டாட முதலில் உத்தரவு போட்டிருந்தார்கள். அதன்படி, தமிழ்நாடு முழுவதுமிருந்து முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் சேலத்துக்குச் செல்ல ஆயத்தமாகியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சீனியர்கள் சிலர், ‘ஒருவேளை கூட்டம் கூடவில்லையென்றால், எடப்பாடிக்குக் கட்சியினர் மத்தியில் மரியாதையே இல்லை என்று கிளப்பிவிட்டுவிடுவார்கள். இப்போது இருக்கும் சூழலில் இப்படியான பேச்சு கட்சியில் தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்தும்’ என ஆலோசனை சொல்ல, அதையடுத்தே பிளான் மாறியதாம். அதன்படி ‘பிறந்தநாளுக்காகச் சேலத்துக்கெல்லாம் வர வேண்டாம். நிர்வாகிகள் அந்தந்த ஊரிலேயே விழாவை நடத்துங்கள்’ என்று மாற்று உத்தரவு பறந்திருக்கிறது. ஆனாலும் பெரிய அளவில் யாரும் கொண்டாடவே இல்லையாம். இதனால் எடப்பாடி டோட்டல் அப்செட்... ஆனால், ஒரே ஒருவர்தான் எடப்பாடியின் மனதில் பால் வார்த்தாராம்!”

“என்ன ஓர் ஆச்சர்யம்... யார் அவர்?”

“பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார்தான்... எடப்பாடியின் 69-வது பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் 69 பேருக்கு எடப்பாடி கையாலேயே மானிய விலையில் ஆட்டோக்களைக் கொடுக்கவைத்திருக்கிறார். இதில் எடப்பாடி ரொம்பவே குஷியாம். ‘ஏற்கெனவே ஈரோடு இடைத்தேர்தல் செலவில் கைகொடுத்தார்... இப்போது பிறந்தநாளையும் விமரிசையாகக் கொண்டாடி எடப்பாடியின் குட் புக்கில் இடம் பிடித்துவிட்டார்...’ என்று கொங்கு மண்டல அ.தி.மு.க மாஜிக்கள் ஜெயக்குமாரைப் போட்டியாளராகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்களாம்” என்ற கழுகாருக்கு இளநீர் பாயசம் கொடுத்தோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

மானிய விலையில் ஆட்டோக்கள்
மானிய விலையில் ஆட்டோக்கள்

“கர்நாடகத் தேர்தலில் ‘சாதித்த’ கையோடு தமிழ்நாடு பா.ஜ.க-வை ‘கைதூக்கி’விடும் வேலையில் இறங்கிவிட்டார் அண்ணாமலை. கமலாலயத்தில் பெருங்கோட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அவர், ‘பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு சாதனைகளை மாநிலம் முழுக்கக் கொண்டு சேர்க்க வேண்டும்’ என்பதில் தொடங்கி, ‘சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் கட்சியினரிடையே நடந்த தகராறு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பது’ வரை கூட்டத்தில் விவாதித்திருக்கிறார். கூடவே, ‘நாடாளுமன்றக் கூட்டணி நவம்பரில்தான் முடிவாகும். எனவே, கட்சியை வளர்க்கும் வேலையைப் பாருங்கள். கூட்டணி இல்லாமலும் வெற்றிபெறும் அளவுக்கு நம்முடைய வேலை இருக்க வேண்டும்’ என்றவர், ‘ஜூன் மாதம் நடத்துவதாக இருந்த நடைப்பயணத்தை ரத்து செய்துவிட்டேன்’ எனவும் சொல்லியிருக்கிறார்.”

“முன்வைத்த காலைப் பின் வைக்காத அண்ணாமலைக்கு இப்படியொரு சோதனையா?”

“ம்க்கும்... கர்நாடகத் தேர்தலில் அண்ணாமலை பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்பட்ட சரிவால், அவரின் காட்ஃபாதர் பி.எல்.சந்தோஷும் சோர்வடைந்துவிட்டார். ‘நாம போகிற பாதை சரியா, தப்பான்னே தெரியலை... தேர்தல் ரிவ்யூ வரும்வரை புதிதாக எந்த அரசியல் முன்னெடுப்பும் வேண்டாம்’ என்று அவர் சொன்னதால்தான், நடைப்பயணத்தை ரத்துசெய்தாராம் அண்ணாமலை.”

“வெற்றியைக் கொண்டாடவேண்டிய கே.எஸ்.அழகிரியை எங்கே ஆளையே காணோம்?!”

 கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

“பிப்ரவரியிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இடையில், கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அகில இந்தியத் தலைவர் கார்கே, தமிழ்நாட்டுக்கான புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான வேலைகளில் கவனம் செலுத்தவில்லை. கர்நாடகத் தேர்தல் முடிந்துவிட்டதால், தலைவர் மாற்றம் விரைவில் இருக்கும். ‘எப்படியும் தனக்கு மீண்டும் தலைவர் பொறுப்பு கிடைக்கப் போவதில்லை. எதற்குத் தேவையில்லாமல் கொண்டாட்டத்துக்காகக் கைக்காசைச் செலவழிக்க வேண்டும்’ என்றுதான் சத்தியமூர்த்தி பவன் பக்கமே எட்டிப் பார்க்காமல் கடலூரிலேயே இருந்துகொண்டார் கே.எஸ்.அழகிரி’ என்கிறார்கள் கதர்ச் சட்டைகள்.”

“ஐபிஎல் போட்டிக்குப் போன உமது நிருபர்கள் அங்கு நடந்த ஒரு சர்ச்சைக்குரிய சந்திப்பு தொடர்பாக ஏதாவது செய்தி கொடுத்திருக்கிறார்களா?”

“நீர்தானே ‘எக்ஸ்க்ளூசிவ்’ கொடுப்பீர். நீரே சொல்லும்...”

“மே 14-ம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில், வருமான வரித்துறையைச் சேர்ந்த உயரதிகாரியும், தி.மு.க மேலிட குடும்பப் பிரமுகரும் சந்தித்தார்களாம். இந்தச் சந்திப்பில், குடும்பத்துக்கு நெருக்கமான சர்ச்சைக்குரிய பிரமுகரும் இடையில் கலந்துகொண்டார் என்கிறார்கள். வருமான வரித்துறை ரெய்டுகள் தடதடத்த நிலையில், இந்தச் சந்திப்பு, சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.”

“மேலே சொல்லும்...”

“சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களுடன் விரைவில் உம்மைச் சந்திக்கிறேன். கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்ற உமது நிருபரை கொஞ்சம் அக்கம் பக்கமும் பார்க்கச் சொல்லும்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* திகார் ஜெயிலுக்குள் நடந்த கேங்ஸ்டர் கொலைச் சம்பவத்தின் எதிரொலியாக அங்கு பணியிலிருந்த தமிழக போலீஸார் நடவடிக்கையில் சிக்கினார்கள் அல்லவா... அந்த டீமில் எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி ஒருவர் விரைவில் தமிழ்நாட்டுக்கு வரவிருக்கிறாராம். அவருக்கு பதில் யாரை டெல்லிக்கு அனுப்பலாம் என டி.ஜி.பி அலுவலகத்தில் ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது.

* ஆளுங்கட்சியுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி, மணல், ஸ்க்ராப் பிசினஸில் ‘செல்வம்’ கொழிக்கும் கதர்ச் சட்டை மக்கள் பிரதிநிதி, இப்போது ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்திருக்கிறார். தொழில் போட்டியில், லோக்கல் தாமரைக் கட்சியினரோடு ஏற்பட்ட தகராறில் எல்லை மீறிய வன்முறையில் இறங்கியிருக்கிறதாம் அந்த கதர்ச் சட்டை தரப்பு!