அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘படித்தவுடன் கிழித்துவிடவும்!’ - நீக்கி, சேர்த்த பா.ஜ.க... கடுப்பில் அ.தி.மு.க!

எடப்பாடி பட எரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பட எரிப்பு

நான் ஊரெல்லாம் பறந்து சேகரிக்கும் செய்திகளை, உட்கார்ந்த இடத்திலிருந்தே ஸ்மெல் செய்துவிடுகிறீரே... நீர் சொல்வது உண்மைதான்

“தி.மு.க பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாதுபோல...” என்றபடி வேர்க்கடலையைக் கொறித்துக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “கே.என்.நேரு - திருச்சி சிவா மோதலைச் சொல்கிறீர்களா?” என்றோம். கடலையை நமக்குப் பகிர்ந்தளித்தவர், “அதைப் பற்றித்தான் உமது நிருபர் விலாவாரியாகச் செய்தி அனுப்பியிருக்கிறாரே... நான் திருநெல்வேலி தி.மு.க விவகாரத்தைச் சொல்கிறேன்” என்றபடி செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

“திருநெல்வேலி மேயர் சரவணனை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியே தீர வேண்டுமென்று தீயாய் வேலைசெய்கிறார் தி.மு.க-வின் திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. அவரின் ஆதரவு கவுன்சிலர்கள் 35 பேர் அணிதிரண்டு வந்து சரவணனுக்கு எதிராக அறிவாலயத்தில் புகாரும் அளித்திருக்கிறார்கள். ‘கட்சிக்காரர்களை மதிப்பதில்லை. தன் இஷ்டத்துக்கு அவரே டெண்டர்களை ஒதுக்கீடு செய்கிறார்’ என வழக்கமான குற்றச்சாட்டுதான் புகாரில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதன் பின்னணியே வேறு என்கிறார்கள் திருநெல்வேலி உடன்பிறப்புகள்.”

அப்துல்வஹாப்
அப்துல்வஹாப்

“பீடிகை போடாமல் மேலே சொல்லும்.”

“சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள்மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம் தலைமை. குறைந்தபட்சம் ஒருவரையாவது மாற்றிவிட்டு, வேறொருவரை அமைச்சராக்கலாமா என்று விவாதிக்கும் அளவுக்கு இந்தப் பிரச்னையை சீரியஸாக அணுகுகிறதாம் தலைமை. இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல்வஹாப், அமைச்சர் பதவிக்கு காய்நகர்த்தினாராம். அமைச்சரவையில் துண்டு போடுவதற்காக, ‘நெல்லை - தென்காசி மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை’ என்றெல்லாம் எடுத்துவிட்டிருக்கிறார். தனது இந்த வியூகத்தை உடைப்பதற்காகவே, தென்மாவட்ட சீனியர்கள் சிலர் மேயர் சரவணனை தனக்கெதிராகத் தூண்டி விட்டிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டிருக்கிறார் வஹாப். ஜவுளி நிறுவனத்துக்கு அருகே நிழற்குடை கட்டிய சர்ச்சை முதல் தனக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கேட்டு, அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எழுதிய கடிதம் ‘லீக்’ ஆனது வரை எல்லாமே அவர்களின் கைங்கர்யம்தான் என்ற கோபத்திலேயே மேயர் மீது பாய்கிறதாம் வஹாப் தரப்பு.”

“அவரது அமைச்சர் கனவு நிறைவேற வாய்ப்பிருக்கிறதா என்ன?”

“மீதியையும் கேளும். சண்டையில், வஹாப்பைவிட வேகம் காட்டுகிறார் மேயர் சரவணன். கட்சியின் மா.செ., எம்.எல்.ஏ என்ற முறையில் மாநகராட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் வஹாப் கொடுக்கும் குடைச்சல்களை, கே.என்.நேருவைச் சந்தித்துப் புட்டுப் புட்டுவைத்திருக்கிறார் மேயர். இதற்கிடையே, ‘சரவணனை மேயர் பொறுப்பிலிருந்து நீக்கினால், திருநெல்வேலியில் சமூகரீதியான பிரச்னை எழும். வஹாப்பை சமாதானம் செய்யவில்லையென்றால், திருச்சியில் நடந்த அடிதடி திருநெல்வேலியிலும் அரங்கேறும்’ என்று எச்சரித்திருக்கிறார்கள் உளவுப் புள்ளிகள். ‘இருக்கிற பிரச்னையில் இது வேறயா?’ என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது அறிவாலயம்.”

“தலைமைக்குத் தெரியாமல் கமிஷன் வாங்க புது வழியைக் கண்டுபிடித்துவிட்டார்களாமே அமைச்சர்கள்?”

மிஸ்டர் கழுகு: ‘படித்தவுடன் கிழித்துவிடவும்!’ - நீக்கி, சேர்த்த பா.ஜ.க... கடுப்பில் அ.தி.மு.க!

“நான் ஊரெல்லாம் பறந்து சேகரிக்கும் செய்திகளை, உட்கார்ந்த இடத்திலிருந்தே ஸ்மெல் செய்துவிடுகிறீரே... நீர் சொல்வது உண்மைதான். ‘கையில வாங்குனேன்... பையில போடலை... காசு போன இடம் தெரியலை...’ என்ற மனநிலையில்தான் பல மாண்புமிகுக்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும், ஒவ்வொரு டெண்டரிலும் ‘கட்சியின் வளர்ச்சி நிதி’யையும் சேர்த்துத்தான் வாங்குகிறார்களாம். டெண்டருக்கு வாங்கும் கமிஷனில் பெரும் பகுதியை ‘கட்சியின் வளர்ச்சி நிதி’யென இரக்கமேயில்லாமல் மேலிடம் கறந்துவிடுகிறதாம். இதைச் சரிக்கட்ட பெரிய துறையைக் கையில் வைத்திருக்கும் சீனியர் அமைச்சர், புத்திசாலித்தனமாக ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார் என்கிறார்கள். பில்லுக்கு ஜி.எஸ்.டி போடுவதுபோல, இவர் கமிஷனுக்கே வரிபோல 2% கூடுதலாக வசூல் செய்யத் தொடங்கிவிட்டாராம். இந்த ‘புரட்சிகரத்’ திட்டத்தைக் கேள்விப்பட்ட மற்ற அமைச்சர்களும் ‘அட இது நல்லா இருக்கேப்பா...’ என இதே பாணியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். கூடுதல் பர்சன்டேஜைக் கொடுத்துவிட்டு, ‘இதற்கு எப்படி பில் எழுதுவது?’ எனத் தெரியாமல் புலம்பியபடியே கோட்டையைச் சுற்றிவருகிறார்களாம் ஒப்பந்ததாரர்கள்.”

“இவர்கள் இப்படியென்றால் ஒருவர், ‘பர்சன்டேஜ்’ வாங்கியதையே மறந்துவிடுகிறாராமே...”

“அதை ஏன் கேட்கிறீர்கள்... சூப்பர் சீனியர் அல்லவா... அந்த வயதுக்கே உரிய பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்படுகிறார் அவர். அதில், மறதிதான் அவருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். சட்டமன்றம் முதல் மேடைப்பேச்சு வரை அவருக்குத் தண்ணிபட்டபாடு என்பதால், எப்படியோ சமாளித்துவிடுகிறார். கணக்குதான் அவருக்கு பெரும் பிணக்காக இருக்கிறதாம். தனது துறை சார்ந்து ஒப்புதலுக்கு வரும் விஷயங்களுக்கான ‘பர்சன்டேஜ்’-ஐ வாங்கிவிட்டு, அடிக்கடி மறந்துவிடுகிறாராம். வாங்கியவருக்கு அது சாதாரணத் தலைவலி. கொடுத்தவருக்கு அது உயிர் வாதை அல்லவா... ஒரு கட்டத்துக்கு மேல் சகிக்க முடியாமல், ‘ஐயா, டீலிங் விவகாரங்களை, பொறுப்பான யாரிடமாவது ஒப்படைத்துவிடுங்கள் அல்லது எழுதியாவது வையுங்கள்... முடியல’ என வாய்விட்டே கதறிவிட்டார்களாம்.”

“அதுசரி... பா.ஜ.க-வில் நீக்கம், சேர்க்கை என மாறி மாறிக் குழப்புகிறார்களே... அங்கே யாருக்கு ஞாபக மறதி?”

எடப்பாடி பட எரிப்பு
எடப்பாடி பட எரிப்பு

“அவர்கள் தெளிவாக இருந்தால்தானே ஆச்சர்யம்... அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க இளைஞரணித் தலைவர் தினேஷ் ரோடி என்பவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மாவட்டத் தலைவரான வெங்கடேசன் சென்ன கேசவன். இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்துக்குள், சென்ன கேசவனின் உத்தரவை ரத்துசெய்த மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, தினேஷ் ரோடிக்கு மீண்டும் அதே பொறுப்பைக் கொடுத்துவிட்டார். இதன் பின்னணியில் அண்ணாமலை Vs கேசவ விநாயகத்தின் ஈகோ யுத்தமும் இருக்கிறது.”

“ம்...”

“எடப்பாடி பட எரிப்பு நடந்தது தனது மாவட்டத்தில் என்பதால், நடவடிக்கை எடுக்காத அண்ணாமலை மீது பாய்ந்துவிட்டார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ. ‘அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. மைக்கைக் கண்டதும் எதை வேண்டுமானாலும் பேசுவது ஒரு வியாதி. ஆட்சி மாறினால் அண்ணாமலை மீண்டும் போலீஸ் வேலைக்குத்தான் போக வேண்டும்’ எனப் போட்டுத்தாக்கினார் ராஜூ. இந்த வார்த்தைப் போர் நீண்டால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடும். எனவே, படத்தை எரித்த தினேஷ் ரோடியை உடனே சஸ்பெண்ட் செய்யச் சொன்னாராம் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம். எம்.பி தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் ஆசையில் இருக்கும் சென்ன கேசவன், தேர்தலில் கடம்பூராரின் ஒத்துழைப்பு தேவை என்பதால் எள் என்றதும் எண்ணெயோடு நின்றிருக்கிறார். ஏற்கெனவே கேசவ விநாயகத்துடன் ஈகோவில் இருக்கும் அண்ணாமலை, இதில் கடுப்பாகிவிட்டாராம். பொன்.பாலகணபதியை அழைத்து, ‘நீக்குறதுக்கு அவர் யாரு... அப்போ என்னைத் தரக்குறைவாகப் பேசியதற்கு நடவடிக்கை இல்லையா?’ எனப் பொங்கியதோடு, தினேஷ் ரோடி நீக்க அறிவிப்பை உடனே ரத்துசெய்ய உத்தரவிட்டாராம். இதனாலேயே இரவில் நீக்கப்பட்டவர், பகலில் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். இதனால்தான், ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ காமெடிக் காட்சிபோல் ஆகியிருக்கிறது நீக்க அறிவிப்பு” என்ற கழுகார்...

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“பொதுச்செயலாளர் தேர்தலை எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்த ஆயத்தமாகிவருகிறார் எடப்பாடி. முதற்கட்டமாக உறுப்பினர் அட்டை விநியோகம் தொடங்கியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோரின் புகைப்படங் களுடன்கூடிய 1.48 கோடி உறுப்பினர் அட்டைகளை அச்சடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம். பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், அதைக் கொடுக்கவா வேண்டாமா என்ற யோசனையில் இருந்திருக்கிறார்கள். தற்போது தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்ததால், ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் விநியோகித்துவிட வேண்டும் என்று வேகம் காட்டுகிறார்களாம் நிர்வாகிகள். 1.48 கோடி தொண்டர்களுக்கு இப்போது எங்கே போவது... எனவே, அ.ம.மு.க., ஓ.பி.எஸ் அணி மட்டுமன்றி பா.ஜ.க-விலிருந்தும் ஆள் இழுப்புப் படலம் தொடரலாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கியிருக்கும் முன்னாள் மாஜி ஒருவர், தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவரிடம் ஏகமாக சரணடைந்துவிட்டாராம். நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக இதுவரை 25 ஸ்வீட் பாக்ஸுகளைப் படியளந்திருக்கிறாராம் மாஜி.

* தென்மாவட்ட அமைச்சர் ஒருவருக்குச் சகலமுமாக இருக்கும் ‘பிரமாண்ட இயக்குநர்’ பெயரைக்கொண்ட ‘அரச’ பிரமுகர், அமைச்சரின் மாவட்டத்தில் கனிம வள பிசினஸிலும் இறங்கியிருக்கிறார். இதில் கடுப்பான லோக்கல் கதர் எம்.எல்.ஏ., விவகாரத்தை அறிவாலயத்தில் போட்டுக்கொடுக்க, விசாரணை தொடங்கியிருக்கிறது.