அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: தி.மு.க ஃபைல்ஸ்... ‘பவர் பாய்ன்ட்’ அண்ணாமலை... புறக்கணித்த கழகங்கள்!

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

, ‘பாய நினைத்தால் நமது பிரதான எதிரியான தி.மு.க-மீது பாயுங்கள். வளர்த்தவர்கள் மார்பிலேயே ஆட்டுக்கிடா பாயக் கூடாது

அலுவலகத்துக்குள் நுழைந்ததும், கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார் கழுகார். “அடேங்கப்பா... அத்தனை மாநகராட்சிகள், மேயர்கள் குறித்தும் விரிவாக எழுதிவிட்டீர்களே... மாநில சுயாட்சி பேசும் தி.மு.க அரசு, உள்ளாட்சிகள் சுயமாகவும் சிறப்பாகவும் செயல்படுவதை இனியாவது உறுதிசெய்ய வேண்டும்” என்றவருக்கு, சூடான திருநெல்வேலி அல்வா கொடுத்தோம். “அல்வாவைப் பார்த்ததும் அவர் ஞாபகம்தான் வருகிறது” எனக் கிண்டலடித்தபடியே உரையாடலைத் தொடர்ந்தார்...

“ரஃபேல் வாட்ச்சுக்கு பில் கேட்டு தி.மு.க-வினர் அழுத்தம் கொடுத்தபோது, ‘ஏப்ரல் 14-ம் தேதி வாட்ச் பில்லோடு, தி.மு.க-வின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்’ என்று சொன்ன அண்ணாமலை, தி.மு.க-வினரின் அபரிமிதமான சொத்துச் சேர்க்கையை அம்பலப்படுத்தியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் சொத்து, பங்கு விவகாரங்களுடன், பணப் பரிவர்த்தனை குறித்த தகவல்களும் அதில் இருந்தன. இருப்பினும், ‘தி.மு.க-வினரின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாகச் சொல்லிவிட்டு, சொத்துப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதுவும் இணையத்தில் மேலோட்டமாக மேய்ந்து திரட்டிய தகவல்களாக இருக்கின்றன’ என்று அறப்போர் ஜெயராமன் உள்ளிட்டோரே சொல்லியிருக்கிறார்கள். அதேநேரத்தில், ‘கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் ஊழல் குறித்தும் பேசுவார் என்றோ, `மோடியை வரிசையில் நின்று பார்க்கவேண்டிய அவசியம் எனக்கில்லை’ என்று சொல்வார் என்றோ நாங்களே எதிர்பார்க்கவில்லை’ என்று பா.ஜ.க சீனியர்களும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.”

அண்ணாமலை
அண்ணாமலை

“ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா அவர் பேச்சை அவரே கேட்க மாட்டாரே... சரி, இந்தப் பட்டியலுக்கு ஆளும் தரப்பில் என்ன ரியாக்‌ஷன்?”

“உண்மையில், ‘அண்ணாமலை ஏதோ பெரிதாக வெளியிடப்போகிறார். அதை எப்படிச் சமாளிப்பது?’ என்ற பதற்றத்தோடுதான் ஆளும் தரப்பு இருந்திருக்கிறது. ஆனால், ‘தி.மு.க ஃபைல்ஸ்’ என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட தகவல்களைப் பார்த்துவிட்டு, ‘விளம்பரத்துக்காகத்தான் இதைச் செய்கிறார்... அதற்கு இடம்கொடுக்க வேண்டாம்... சட்டரீதியில் சந்தித்துவிட்டுப் போங்கள்’ எனச் சொல்லிவிட்டதாம் தி.மு.க தலைமை. அதுவும், அமைச்சர் எ.வ.வேலுவைப் பற்றி வெளியிடப்பட்ட சில தகவல்களெல்லாம், அவருடையதே இல்லையாம். 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலையில் சுயேச்சையாகப் போட்டியிட்ட க.வ.வேலு என்பவரின் பிரமாணப் பத்திரத்தில் இருந்த தகவல்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. இதைச் சொல்லிச் சொல்லி விலா நோகச் சிரித்திருக்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.”

“பிறகு ஏன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, வக்கீல் நோட்டீஸெல்லாம் அனுப்பினார்களாம்?”

வில்சன், ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ
வில்சன், ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ

“தலைமை வேண்டாம் என்றுதான் சொன்னதாம். ‘உடனே மறுக்காவிட்டால் அண்ணாமலை பேசியதே முக்கியச் செய்தியாகிவிடும்’ என்று கூறி அன்றைய தினமே அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பிரஸ் மீட் நடத்தியிருக்கிறார்கள். ‘ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மெட்ரோ நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றார்... உதயநிதியின் நோபல் கம்பெனி... கிருத்திகாவின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் என முதன்மைக் குடும்பத்தினர் குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருப்பதால், இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் சட்ட நடவடிக்கை தேவை. எனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதே சரி’ என்று மூத்த நிர்வாகிகளும், சட்டப் புள்ளிகளும் யோசனை சொன்னார்களாம்.”

“ஓஹோ...”

“பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, ‘சம்பந்தப்பட்ட தி.மு.க-காரர்களிடம் இது குறித்துக் கேள்வி கேளுங்கள்’ என்று சொல்ல, பத்திரிகையாளர்களும் மூத்த அமைச்சர் துரைமுருகன் தொடங்கி மனோ தங்கராஜ் வரை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, ‘அரசியலாக இதை எதிர்கொள்ள வேண்டாம். சட்டரீதியில் அணுகினால் போதும். மற்றவர்கள் யாரும், எங்கும் இது குறித்துப் பேச வேண்டாம்’ எனத் தலைமையிடமிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. கூடவே, ‘அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்டு தி.மு.க குறித்து வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும். இல்லையென்றால், 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு போடுவோம் என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தி.மு.க.”

“அ.தி.மு.க-வின் ரியாக்‌ஷன்?”

“அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஜெயக்குமார், ‘பாய நினைத்தால் நமது பிரதான எதிரியான தி.மு.க-மீது பாயுங்கள். வளர்த்தவர்கள் மார்பிலேயே ஆட்டுக்கிடா பாயக் கூடாது’ என்று கொந்தளித்திருக்கிறார். 16-ம் தேதி அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்திலும் இந்தப் பிரச்னையை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. ‘போகிற போக்கில் நம்மையும் வம்புக்கு இழுத்திருக்கிறார் அண்ணாமலை. இதற்கு பதிலடி கொடுத்தால் மட்டும் போதாது. இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வெக்கணும். அவரைப் பேசவிட்டுக்கொண்டேயிருந்தால் தொண்டர்கள் மத்தியிலும், நிர்வாகிகள் மத்தியிலும் ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விடும்’ எனக் கொதித்திருக்கிறார் முனுசாமி. திண்டுக்கல் சீனிவாசனோ, ‘அண்ணாமலைக்கு அரசியலே தெரியலை... வாய்த்துடுக்கா எதையாவது பேசிடுறான். இருந்தாலும் அந்தப் பையனைப் பத்திப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.”

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“எடப்பாடி என்ன சொன்னாராம்?”

“சீனியர்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எடப்பாடி, ‘கூட்டணி, டெல்லியுடனான உறவு குறித்தெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கட்சியை வளர்ப்பதைப் பற்றி மட்டும் யோசிங்க. நமக்கு எதிரி யாருன்னு நாமதான் முடிவு செய்ய வேண்டும். அவர் பேசுறதை இக்னோர் பண்ணுங்க’ என்றிருக்கிறார். செயற்குழுக் கூட்டத்துக்கு முன்பே சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி, ‘அண்ணாமலை பேட்டி கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்தி பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார். அவரைப் பற்றி தயவுசெய்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். ஒரு முதிர்ந்த அரசியல்வாதியைப் பற்றி கேள்வி கேளுங்கள். பதில் கூறுகிறேன்’ என்று லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்துவிட்டார்.”

“பா.ஜ.க-வினர் என்ன சொல்கிறார்கள்?”

“எக்ஸெல் ஷீட்டிலிருந்து, பவர் பாயின்ட்டுக்கு முன்னேறியிருக்கிறார் அண்ணாமலை என்று கிண்டலடிக்கிறார்கள். அதேநேரத்தில், டெல்லியின் முழு ஆசீர்வாதம் இருப்பதால்தான் கமலாலய சீனியர்கள் யாரும் அண்ணாமலைக்கு எதிராக வாய் திறக்கவில்லை. ‘தலைமை சுதந்திரம் கொடுக்கிறது என்பதற்காக எல்லை மீறிச் செல்கிறார். அண்ணாமலையை வைத்து ஆழம் பார்க்கிறது டெல்லி. ஆனால், நிலைமை கைமீறுவதாக உணர்ந்தால், அண்ணாமலையை பலிகொடுக்கவும் டெல்லி தயங்காது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்’ என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். ஆனால், அ.தி.மு.க-வுக்கு எதிராக வழக்கம்போல தனது வார் ரூம் டீமை இறக்கிவிட்டிருக்கிறார் அண்ணாமலை. அ.தி.மு.க தலைமையோ, ‘பா.ஜ.க-வினரின் விமர்சனத்துக்கு யாரும் பதில் கொடுக்க வேண்டாம். `இக்னோர்’ எனச் சொன்னது அண்ணாமலையை மட்டுமல்ல... அவரது அடிப்பொடிகளையும்தான்’ என உத்தரவு போட்டிருக்கிறதாம்” என்ற கழுகாருக்கு சூடான இஞ்சி டீயை நீட்டினோம். டீயைச் சுவைத்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“வெயில் மாநகராட்சியில், ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிக்காக டெண்டர் விதிகளையே மாற்றியிருக்கிறார்களாம் அதிகாரிகள். மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் டெண்டரில் கோடிக்கணக்கான பணம் புரளுவதையடுத்து, ஆளுங்கட்சி முக்கியப் புள்ளி தனது வலது கரத்தின் பெயரில், அந்த டெண்டரை எடுத்திருக்கிறாராம். மாநகராட்சியின் எந்தப் பணியாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை டெண்டர் வைக்க வேண்டும். அதுதான் நடைமுறையும்கூட. ஆனால், இப்போது அளிக்கப்பட்டிருக்கும் குப்பை எடுக்கும் டெண்டர் ஆளுங்கட்சி பெரும்புள்ளி என்பதால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் ‘ஆளுங்கட்சியினரைப் பகைத்துக்கொண்டு எப்படிப் பணியாற்ற முடியும்?’ என்று பம்முகிறார்கள்’’ என்ற கழுகார்...

“சென்னை துறைமுகம் - மதுரவாயலுக்கிடையே, 20.5 கி.மீட்டருக்கு இரண்டடுக்கு மேம்பாலம் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஓராண்டு முடியப்போகிறது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி கிடைக்காததால், பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இது குறித்து பல தரப்பிலுமிருந்து கேள்வி எழுந்ததால் ஒப்பந்ததாரர் தேர்வு மட்டும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அதுவும் நடக்காமல் தள்ளிப்போயிருக்கிறது. இத்தனை குழப்பங்கள் ஏன் என விசாரித்தால், சென்னை துறைமுக சீனியர் அதிகாரி ஒருவரைக் கைகாட்டுகிறார்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். இந்தக் கால தாமதத்தால் திட்ட மதிப்பீடு சுமார் ரூ.500 கோடி வரை அதிகரித்திருக்கிறது. ‘திட்டத்தைச் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜெயலலிதா ஆட்சியில் நடந்ததைப்போல திட்டம் முடங்கக்கூடும்’ என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்” என்றபடி விண்ணில் பாய்ந்தார்.