
‘சின்னவருக்கு’ நெருக்கமான வட்டாரங்களில் அமலாக்கத்துறை புகுந்ததை அறிவாலய மேலிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
வியர்வையில் தொப்பலாக நனைந்தபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். அவருக்கு வெயிலுக்கு இதமாக நறுக்கிய தர்பூசணி பழத்துண்டுகளைக் கொடுத்தோம். அவற்றைச் சுவைத்தபடி, “வெயில் நம்மைச் சுட்டெரிக்கிறது. ரெய்டு தி.மு.க-வைச் சுட்டெரிக்கிறது. ‘சின்னவருக்கு’ நெருக்கமான வட்டாரங்களில் அமலாக்கத்துறை புகுந்ததை அறிவாலய மேலிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
“மே 16-ம் தேதி, சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா’-வில் இரண்டு மணி நேரம் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு நபர்களின் வீடுகளிலும் ரெய்டு நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் ஒரு வீட்டிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கின்றனவாம். ‘உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை’யை நடத்திவரும் பாபு என்பவர் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நேரில் வரவழைத்தும் விசாரித்திருக்கிறார்கள்.”
“உதயநிதியைக் குறிவைத்து அமலாக்கத்துறை நகர்கிறதோ?”
“அப்படித்தான் தெரிகிறது. ‘லைக்கா’ நிறுவன நிர்வாகி ஒருவர், அமலாக்கத்துறையிடம் வாக்குமூலமே அளித்திருப்பதாகத் தகவல். அந்த வாக்குமூலத்தில், ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனத்துடனான சில பரிமாற்ற விவகாரங்களும் இருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிர்வாகத்திலிருந்து, தான் விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் உதயநிதி. ஆனாலும், அமலாக்கத்துறையின் பிடி அந்த நிறுவனத்தை நோக்கி இறுகுவதாகத் தெரிகிறது. சென்னை ஜெமினி பாலத்தை ஒட்டியிருக்கும் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் அமலாக்கத்துறை சிக்கலில் மாட்டவிருக்கிறது.”
“ரெய்டு செய்திகளைத் தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள்... நடைப்பயணத் திட்டத்தை மாற்றியிருக்கிறாராமே அண்ணாமலை?”
“ஆமாம். நடைப்பயணத்தை ‘பஸ்’ பயணமாக அவர் மாற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள் கமலாலயத்தில். ஒவ்வோர் ஊருக்கும் சொகுசு பஸ்ஸில் பயணித்து, அந்த ஊர்களுக்குள் சில கிலோமீட்டர் நடக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் அண்ணாமலை. இதற்காக, ‘மோடி பஸ்’ என்கிற பெயரில் அவருக்காக பிரத்யேக வசதிகளுடன் பஸ் தயாராகிறது. மத்திய அரசின் ஒன்பது ஆண்டு சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்தச் சொல்லி டெல்லியிலிருந்து உத்தரவு வந்திருப்பதால், அடுத்த ஒரு மாதத்துக்கு இந்தக் கூட்டங்களைத்தான் நடத்தப்போகிறார்கள். எனவே, ஜூலை மாதத்திலிருந்து தன் ‘பஸ்’ பயணத்தைத் தொடங்கவிருக்கிறாராம் அண்ணாமலை.”
“ஏப்ரலில் நடைப்பயணம் என்றவர் அதை ஜூலைக்கு மாற்றிவிட்டாரா... அப்போதாவது கிளம்புகிறாரா என்று பார்ப்போம். சரி, தி.மு.க கூட்டணிக்குள் என்ன சத்தம்?”
“ ‘மதுவிலக்குக்கான போராட்டத்தை எடப்பாடி நடத்தினால், அவருடன் சேர்ந்து போராடத் தயார்’ எனப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். விழுப்புரத்தில் நடந்த பழங்குடி மக்கள் மாநாட்டில், ‘தமிழகத்தில் நிலவும் பல்வேறுவிதமான தீண்டாமைக் கொடுமைகளைத் தடுக்க வேண்டும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்த இரண்டையுமே சீரியஸாகப் பார்க்கிறது தி.மு.க.”
“ஏன்?”
“எல்லாம் அரசியல் கணக்குதான். ‘கூட்டணியைவிட்டு அவர்கள் பிரியப் போவதில்லை. அதேநேரத்தில், தி.மு.க-வுக்கு மறைமுக நெருக்கடியைக் கொடுத்து, ‘எங்களுக்கு வேறு போக்கிடம் இருக்கிறது’ என்பதைச் சொல்லப் பார்க்கிறார்கள். டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராகத் தோழர்கள் தொடர்ச்சியாகப் போராடுவதை, அரசியல் பார்வையோடு பார்க்கிறது ஆட்சி மேலிடம்’ என்கிறார்கள் சீனியர் தி.மு.க நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கிவிடும். அப்போது, தி.மு.க இழுத்த இழுப்புக்கெல்லாம் அசைந்து கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனவாம் கூட்டணிக் கட்சிகள்.”

“பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடும் கோபத்தில் இருக்கிறாராமே?”
“இருக்காதா பின்னே... கடந்த அ.தி.மு.க ஆட்சியில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பராமரிப்புப் பணி ஒப்பந்தம், அப்போதைய அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக இருந்த ஒருவருக்கு அளிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், இப்போது புதிதாக டெண்டர் கோரும் முடிவில் இருந்திருக்கிறார்கள். ‘லண்டனிலிருந்து நான் வந்தவுடன் டெண்டர் கோரலாம். அதுவரையில் எதுவும் செய்ய வேண்டாம்’ என உத்தரவு இட்டுவிட்டுத்தான் சென்றிருக்கிறார் அமைச்சர் அன்பில். ஆனால், சில அதிகாரிகள் கூட்டணி போட்டுக்கொண்டு, அமைச்சர் வருவதற்குள் அதே அ.தி.மு.க பிரமுகருக்கு மீண்டும் டெண்டரைத் தாரை வார்த்துவிட்டார்கள்.
போதாக்குறைக்கு, மதுரையில் கட்டப்பட்டுவரும் ‘கலைஞர் நூலக’ பராமரிப்புப் பணி ஒப்பந்தமும் அவருக்கே கையளிக்கப்பட்டிருக்கிறதாம். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த அமைச்சர் அன்பில் மகேஸ், ‘இந்த ஆட்சியிலேயும் அ.தி.மு.க-காரங்களே சம்பாதிச்சுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்... என் கட்சிக்காரனுக்கு என்ன பதில் சொல்றது?’ என அதிகாரிகளிடம் போனில் எகிறிவிட்டாராம். அமைச்சர் சென்னைக்குத் திரும்பியதும், பள்ளிக்கல்வித்துறையில் சில அதிரடிகள் அரங்கேறும் எனத் தெரிகிறது” என்ற கழுகாருக்கு இளநீர் சர்பத் கொடுத்தோம். அதைக் குடித்தபடி செய்திகளைத் தொடர்ந்தார்.

“ஆ வூன்னா மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிவிடுகிறார்களே?”
“தான்தான், பொதுச்செயலாளர் என்பதை கட்சியினர் மறந்துவிடக்கூடாது என்று எடப்பாடி நினைக்கிறார் போலும். விஷயத்துக்கு வருகிறேன். மே 17-ம் தேதி நடத்தப்பட்ட மா.செ-க்கள் கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை, மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாடு குறித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். இதையடுத்து, சீனியர்களை மட்டும் தனது அறைக்கு அழைத்த எடப்பாடி, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாகவும், தி.மு.க-வுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் பேசியிருக்கிறார். ‘தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மே 22-ம் தேதி ஆளுநர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று மனு கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், சீனியர்கள் சிலருக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லையாம்.”

“ஏன்?”
“ ‘ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஆளுநரின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. இப்போதுகூட, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை கேட்டு அரசியல் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் ஆர்.என்.ரவி. இந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் ஆளுநரிடம் போய் நாம் எதற்கு நிற்க வேண்டும்... எதிர்க்கட்சித் தலைவர் நீங்களா, ஆர்.என்.ரவியா... நாமே தி.மு.க-வுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கலாமே?’ என அந்த சீனியர்கள் எடப்பாடியிடம் கோபமாகவே சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், ஆளுநரிடம் மனு கொடுப்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். எனவே, அதற்கு மேல் அந்த விவகாரத்தில் எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார்களாம் சீனியர்கள்” என்ற கழுகார்...

“கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி, ஏரியிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் தனது பெயரிலேயே பாஸ் எடுத்து வைத்திருந்தார். இந்த பாஸ் காலாவதியான பிறகும் தொடர்ந்து மணல் எடுத்துக்கொண்டிருக்கிறாராம். அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக மண் எடுத்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. முன்பெல்லாம் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக வேறு யாருடைய பெயரிலாவது பாஸ் எடுத்து மண்ணை அள்ளுவார்கள். ஆனால், வினோத் காந்தி தனது பெயரிலேயே தைரியமாக பாஸ் எடுத்து, விதிகளை மீறி மண் எடுக்கிறார். இதைத் தட்டிக்கேட்கும் இடத்திலிருக்கும் அதிகாரிகளும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.
கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:
* குடிநீர் வழங்கல்துறையில் பொதுமக்களோடு தொடர்பிலிருக்கவேண்டிய அதிகாரி, எந்நேரமும் துறை மேலிடத்தின் வீட்டிலேயே குடியிருக்கிறாராம். மேலிடத்தை உபசரிப்பதிலேயே காலத்தைக் கடத்துவதால், அவர் செய்யவேண்டிய பணிகளெல்லாம் தேங்கியிருப்பதாகப் புலம்புகிறார்கள் துறைப் பணியாளர்கள்.
* சென்னை மாநகராட்சி நிலைக்குழுவிலிருக்கும் ‘சிவன்’ பெயர்கொண்டவர், பூங்கா, விளையாட்டுத்திடல், கல்வி நிலையங்களுக்கு வாங்கும் பொருள்களுக்கான டெண்டர்களில் ஏகத்துக்கும் புகுந்து விளையாடுகிறாராம். ‘இவ்வளவு கொடுக்கலைன்னா புதிய ஒப்பந்தம் கிடைக்காது... கொடுத்த ஒப்பந்தமும் ரத்தாகிடும்’ என அவர் விடும் உதாரில் ஒப்பந்ததாரர்களுக்கு உதறல் எடுக்கிறதாம்.