அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘வெடுக்’ ஆளுநர்... ‘சுருக்’ இ.பி.எஸ்... அ.தி.மு.க பேரணிக் குழப்பங்கள்!

ஆளுநரிடம் மனு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளுநரிடம் மனு

தி.மு.க அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சின்னமலை தாலுகா அலுவலகச் சாலையிலிருந்து பேரணியாகச் சென்று, ஆளுநரைச் சந்தித்து மனு கொடுப்பதுதான் எடப்பாடியின் திட்டம்.

“ஒவ்வொருவராக ‘விட்டால் போதும்’ எனக் கிளம்புகிறார்களே...” - கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். நறுக்கிய தர்பூசணிப்பழத் துண்டுகளைத் தட்டில் வைத்தபடி, “யாரைச் சொல்கிறீர்?” என்றோம். “செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிப்பவர்களைத்தான் சொல்கிறேன். வழக்கை விசாரிக்கும் நீதிபதியும், விசாரணை அதிகாரியான ஒரு டி.எஸ்.பி-யும் விடுமுறையில் கிளம்பிவிட்டார்களாம். ‘விடுமுறையில் சென்றவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்’ என வேதனையில் பொருமுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்” என்று தர்பூசணியைச் சுவைத்தபடி, மற்ற செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“கள்ளச்சாராயத்துக்கு எதிராக பா.ஜ.க ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்கச் செல்வதற்குத் தயாரான அண்ணாமலைக்கு, ‘கூட்டம் வரவில்லை’ என்ற கசப்பான தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. எரிச்சலானவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை போனில் அழைத்துக் கொதித்திருக்கிறார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் கூடவில்லை என்பதால் கடுகடுப்போடுதான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டாராம் அண்ணாமலை. ‘முதல்நாள் சொல்லி அடுத்த நாள் கூட்டம் கூட்டுவதற்கு நாம என்ன தி.மு.க-வா, அ.தி.மு.க-வா... கட்சியை வளர்க்கணும். இல்லைன்னா கூட்டத்துக்கு ஆகுற செலவையாவது கொடுக்கணும். எதுவுமே இல்லாம கூட்டத்தைச் சேர்க்கச் சொன்னா இதுதான் நடக்கும்’ எனப் பொருமுகிறார்கள் கட்சி நிர்வாகிகள்.”

“கோவையில் நடந்த செயற்குழுக் கூட்டமும் பிசுபிசுத்துப்போனதாமே...”

“கேள்விப்பட்டேன். இதற்கும் சரியான திட்டமிடல் இல்லாததுதான் காரணமாம். காலை 11 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வு, இடைவெளியே இல்லாமல் மாலை 4 மணி வரை சென்றிருக்கிறது. கூட்டம் நடக்கும்போதே பலரும் வெளியேறியிருக்கிறார்கள். வெளியே சென்றவர்கள் யாரும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லையாம். ‘அடுத்தடுத்து மாவட்ட, மண்டல் செயற்குழுக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில் அவற்றையாவது சரியான திட்டமிடலோடு நடத்த வேண்டும்’ என்கிறார்கள் சீனியர்கள். அதுமட்டுமல்ல, கோவையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசனே பங்கேற்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.”

ஆளுநரிடம் மனு
ஆளுநரிடம் மனு

“திட்டமிட்டு நடத்திய பேரணியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள்போலவே...”

“தி.மு.க அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சின்னமலை தாலுகா அலுவலகச் சாலையிலிருந்து பேரணியாகச் சென்று, ஆளுநரைச் சந்தித்து மனு கொடுப்பதுதான் எடப்பாடியின் திட்டம். ஆனால், காவல்துறை குறுகிய தூரம் மட்டுமே பேரணியாகச் செல்ல அனுமதி கொடுத்தது. ‘சரி... வெயிலில் எதற்கு அவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?’ என நினைத்தாரோ என்னவோ, எடப்பாடியும் அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். அதன்படி, மே 22 காலை 10:25 மணிக்குப் பேரணி தொடங்கி 11:30 மணிக்கு ஆளுநரைச் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த பிளானை, ஆளுநர் மாளிகையும் மாற்றியமைத்திருக்கிறது.”

“என்ன செய்தார்கள்?”

“காலையில் ஆளுநர் வேறு சில முக்கிய நபர்களைச் சந்திக்கவிருப்பதால், 12 மணிக்குச் சந்திப்பை தள்ளிவைத்திருப்பதாகக் கடைசி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். இதனால், காலையிலேயே எடப்பாடி கடும் அப்செட்டாம். இதனால், அவர் பேரணிக்கே தாமதமாகத்தான் வந்தார். ஒருவழியாக 12:20 மணிக்கு ஆளுநரைச் சந்தித்த எடப்பாடி, புகார்களின் சுருக்கத்தை ஆளுநருக்கு வாசித்துக் காட்டியதோடு, ‘சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ஆளுநர், ‘ஐ வில் டேக் திஸ்... அண்ட் ஐ நோ ஆல் திஸ்’ என வெடுக்கென்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னதால் எடப்பாடி கடுமையாக அப்செட் ஆகிவிட்டாராம்.”

“ஐயோ பாவம்...”

மிஸ்டர் கழுகு: ‘வெடுக்’ ஆளுநர்... ‘சுருக்’ இ.பி.எஸ்... அ.தி.மு.க பேரணிக் குழப்பங்கள்!

“மேலே சொல்கிறேன் கேளும்... ஆளுநரைச் சந்திக்க, எடப்பாடியுடன் சேர்த்து மொத்தம் 10 பேருக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், யாரையெல்லாம் உள்ளே அழைத்துச் செல்வதென ஆளுநர் அறைக்கு வெளியே பெரிய விவாதமே நடந்திருக்கிறது. எதிர்பாராதவிதமாக பெஞ்சமினையும் பாலகங்காவையும் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார் எடப்பாடி. இதனால் செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா உள்ளிட்டோரின் முகம் வாடிவிட்டதாம். அதுமட்டுமல்ல... மதுரையிலிருந்து 500 பேரை இறக்கி, போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்திய ஆர்.பி.உதயகுமாரை, எடப்பாடி உள்ளே அழைத்துச் செல்லவில்லையாம். ‘எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என இப்போதெல்லாம் சொல்வதே இல்லை. என்னைத் தவிர்க்க நினைக்கிறார் எடப்பாடி’ என்று சோகத்தில் வாடிப்போய்விட்டாராம் அவர்” என்ற கழுகாருக்கு, சுவைக்க சூடான இஞ்சி டீயைக் கொடுத்தோம். அதைப் பருகியபடியே கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டவர் அடுத்த செய்திகளைத் தொடர்ந்தார்.

“கவர் ஸ்டோரியோடு தொடர்புடைய தகவல்கள் என்னிடமும் இருக்கின்றன சொல்கிறேன் கேளும்... திருவாரூர் மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக சக்கரபாணி இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்படுவார் என்கிறது அறிவாலய வட்டாரம். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருப்பதால், அந்த மாவட்டத்துக்கு ஒரு பொறுப்பு அமைச்சரை நியமிக்கவும் பரிசீலிக்கப்பட்டிருக்கிறதாம். ஜூன் 3-ம் தேதிக்குப் பிறகு பல மாற்றங்களுக்குத் தயாராகிறது அறிவாலயம்.”

“சீனியர் அமைச்சர் ஒருவர்மீது கடுப்பில் இருக்கிறாராமே பி.டி.ஆர்..?”

“ஆமாம், எனக்கும் அந்தத் தகவல் வந்தது. அவரின் வலதுகரமான மிசா பாண்டியனைக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது தலைமை. இந்த விவகாரம் முன்பே கசிய, கட்சியின் சீனியரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பி.டி.ஆர். ‘அமைச்சரவையில் செய்த மாற்றமே எனக்குச் சறுக்கலாகிவிட்டது. இந்த நேரத்தில் என்னுடைய ஆதரவாளரையும் ஓரங்கட்டினால், கட்சியில் எனக்குப் பெரிய பின்னடைவாகப் போய்விடும். இதைச் செய்ய வேண்டுமென முடிவெடுத்து விட்டால், அதைக் கொஞ்ச நாள் கழித்தாவது செய்யுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார். ஏற்கெனவே, பி.டி.ஆர் மீது கடுகடுப்பில் இருந்த அந்த சீனியர் அமைச்சர், ‘எதுவுமே நடக்காது’ எனக் கூறியவர், பின்னாலேயே பாண்டியனை நீக்குவதற்கான வேலையையும் செய்துவிட்டாராம். அதுதான் பி.டி.ஆரின் கோபத்துக்குக் காரணம்” என்ற கழுகார்.

பி.டி.ஆர்
பி.டி.ஆர்

“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் பரபரத்திருக்கிறது. ஆவின் மேலாண்மை இயக்குநராக இருந்த சுப்பையனை, கூட்டுறவு சங்கப் பதிவாளராக இடம் மாற்றியிருக்கிறார்கள். பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுக்கொண்டதால்தான், அவரை ஆவினிலிருந்து தூக்கி அடித்ததாம் மேலிடம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட வினீத், ஆவினுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். விஷச்சாராய விவகாரத்தைத் தொடர்ந்து, செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ராகுல்நாத் தூத்துக்குடி ஆட்சியராக மாற்றப்பட்டார். இந்த விவகாரத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று தெரிந்தவுடன், அந்தப் பணியிட மாற்றத்தை ‘கேன்சல்’ செய்திருக்கிறது மேலிடம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* ‘தள்ளாடும்’ துறையில், பாட்டிலுக்கு மேல் வசூலாகும் பணத்தில், பாதிக்குப் பாதி கமிஷன் பெற்றுக்கொள்கிறாராம் பெரிய இனிஷியல் கொண்ட அமைச்சர். ‘பஞ்சாயத்தை மட்டும் நான் பார்த்துக்கணும்... வசூலுக்கு மட்டும் அவர் வந்துடுறாரு’ என்று பொருமுகிறாராம் துறைக்கான அமைச்சர்.

* விஷச்சாராய விவகாரத்தைத் தொடர்ந்து மதுவிலக்குப் பிரிவில், அடுத்தடுத்து அதிகாரிகள் இடம் மாற்றப்படுகிறார்கள். ஆனால், அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் அதிகாரி மட்டும் ‘எஸ்கேப்.’ ‘எங்களை பலிகடா ஆக்கிவிட்டாரே’ எனத் துறையிலுள்ள அதிகாரிகளெல்லாம் புலம்புகிறார்கள்.

* 2,000 ரூபாய் நோட்டுக்கு மத்திய அரசு வேட்டு வைத்ததால், அதிகம் வெளிறிப்போயிருப்பது ‘கோட்டை’ மாவட்ட முன்னாள் மாண்புமிகுதானாம். ‘சம்பாதிச்சதுல பாதியைத் தங்கமா மாத்திட்டாரு. மீதியெல்லாம் 2,000 ரூபாயா இருந்துச்சு. இப்ப எங்க போய் மாத்துறதுன்னு அண்ணன் அல்லாடுறாரு’ என விசும்புகிறார்கள் மாஜியின் அடிப்பொடிகள்.