
ஆயிரம் விளக்கு தி.மு.க எம்.எல்.ஏ எழிலன், அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து நேரடியாகத் தன் வருத்தத்தைக் கொட்டியிருக்கிறார்.
“குருப்பெயர்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர்கள் பெயர்ச்சியும் வருகிறதுபோலவே..?” பொங்கலைச் சுவைத்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “வழக்கமான வதந்தியாக இருக்கப்போகிறது...” என்றோம். “தொடக்கத்தில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. விசாரித்தேன், அமைச்சரவை மாற்றம் குறித்து மேலிடம் சீரியஸாக விவாதித்திருப்பதால், விஷயம் கவனிக்கப்படவேண்டியதுதான்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
“பால் வளத்துறை அமைச்சர் நாசர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் ஆட்சித் தலைமைக்குச் சென்றிருக்கின்றன. ஏற்கெனவே நாசரின் மகனிடமிருந்த கட்சிப் பதவியைப் பறித்து எச்சரித்தது கட்சித் தலைமை. அதன் பிறகும் அவர்களின் செயல்பாட்டில் தலைமைக்கு திருப்தி இல்லையாம். அதேபோல, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மீதும் புகார்கள் சென்றிருக்கின்றன. ‘அமைச்சரின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அமைச்சரின் உறவினர்கள் ஆட்டம் துறைக்குள் அதிகரித்திருக்கிறது’ என உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். முதல்வரின் ரெட் ஷீட்டில் முதல் இரண்டு பெயர்கள் இவர்களுடையவைதான் என்கிறது கோட்டை வட்டாரம்.”
“ஓ... யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது?”
“திருவாரூர் எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா ஆகியோருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்கலாம் என்கிறது அறிவாலயத் தரப்பு. அமைச்சர் சிவசங்கரிடமிருக்கும் போக்குவரத்துத்துறையை டி.ஆர்.பி.ராஜாவிடம் வழங்கிவிட்டு, சிவசங்கருக்கு பால் வளம் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். கயல்விழி செல்வராஜிடமிருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை சங்கரன்கோவில் ராஜாவுக்கு வழங்கப்படலாமாம். முதல்வர், அடுத்த மாதம் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார். சுற்றுப்பயணத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக, மே 2-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்குள் அமைச்சரவை மாற்றத்துக்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இதுபோக, நீங்கள் கவர் ஸ்டோரியில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களெல்லாம் தலைமைக்குப் பெரிய தலைவலியாக மாறியிருப்பதால், அமைச்சரவை மாற்றப் படலத்தைக் கொஞ்சம் தள்ளிப்போடவும் வாய்ப்பிருக்கிறதாம். பார்ப்போம்!”
“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்குச் செல்கிறாரே... என்ன திட்டமாம்?”
“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறார். தன்னைப் பற்றியும் அ.தி.மு.க-வைப் பற்றியும் பா.ஜ.க பிரமுகர்கள் விமர்சித்து வெளியிடும் கருத்துகள் அனைத்தையும் தொகுத்து அமித் ஷாவிடம் கொடுக்கப்போகிறாராம் எடப்பாடி. தவிர, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ சர்ச்சை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்போவதாகத் தகவல். ‘ஒரே கூட்டணிக்குள் இருந்துகொண்டு எதிராக வேட்பாளரைக் களமிறக்குவது நியாயமா... உங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னமும், பொதுச்செயலாளர் அங்கீகாரமும் கிடைத்துவிட்டனவே’ என டெல்லியிலிருந்து அட்வைஸ் வந்ததைத் தொடர்ந்து, அமித் ஷாவைச் சந்திப்பதற்கு முன்னதாக கர்நாடகாவில் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கிறார் எடப்பாடி.”
“ம்ம்... 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் இந்த அளவுக்கா அஜாக்கிரதையுடன் இருந்தார் ஸ்டாலின்?”

“இதே கேள்விதான் எல்லோருக்கும். தி.மு.க-வில் இருப்பவர்களே இந்த மசோதா கொண்டுவரப்பட்டதை ரசிக்கவில்லை. ஆயிரம் விளக்கு தி.மு.க எம்.எல்.ஏ எழிலன், அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து நேரடியாகத் தன் வருத்தத்தைக் கொட்டியிருக்கிறார். ‘முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்குச் சிலை வைக்கப்போவதாக அறிவித்தீர்கள். அதற்கு நாடெங்கிலுமிருந்து பாராட்டு கிடைத்தது. அந்தப் பாராட்டுக் குரல் ஓய்வதற்குள் நாமே அதைக் கெடுத்துவிட்டோம். உழைப்பாளர் தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ‘தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் இயக்கம்தான் தி.மு.க’ என இனி எங்கேயாவது நம்மால் பேச முடியுமா... தொழிலாளர்கள் இனி நம்மை நம்பி வாக்களிப்பார்களா?’ என மனதிலிருந்த ஆதங்கத்தையெல்லாம் நேரடியாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார் எழிலன். அருகிலிருந்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனும் எழிலனின் கருத்துகளை ஆமோதிக்க, முதல்வரின் முகம் இருண்டிருக்கிறது. ‘இந்த மசோதாவிலுள்ள இப்படியான பாதகங்களை தங்கம் தென்னரசு என்னிடம் விளக்கவே இல்லை...’ எனக் கண் சிவந்திருக்கிறார் முதல்வர்.”
“அதுசரி, முழுமையாகப் படித்துப் பார்க்காமல் ஒப்புதல் வழங்கிவிட்டாராமா... நன்றாக இருக்கிறதே...”
“எல்லாம் சொல்லிக்கொள்வதுதானே... திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய முப்பெரும் விழா மாநாட்டில் நல்ல கூட்டம் கவனித்தீர்களா... ‘ஆளும் தரப்பிலிருந்து இரண்டு முக்கியப் புள்ளிகளின் ஆதரவோடுதான் இந்தக் கூட்டம் திரட்டப்பட்டிருக்கிறது. ஓ.பி.எஸ் மூலமாக எடப்பாடிக்குக் குடைச்சல் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே, அரசியல்ரீதியாக பன்னீரின் இருப்பைத் தக்கவைக்கிறது தி.மு.க’ எனக் கொந்தளிக்கிறது எடப்பாடி வட்டாரம். வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் மாநாடு நடத்தவிருக்கிறார் எடப்பாடி. அதற்குப் போட்டியாக சேலத்தில் மாநாடு நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் பன்னீர். சேலத்தைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அல்லது திருவண்ணாமலையில் மாநாட்டை நடத்திவிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவும் முடிவெடுத்திருக்கிறாராம் பன்னீர். எப்படியோ எடப்பாடியை விடுவதாக இல்லை பன்னீர்.”

“ம்ம்... சசிகலா ஏன் வரவில்லையாம்?”
“அதெப்படி வருவார், அவரை பன்னீர் நேரில் சென்று அழைத்தாரா என்ன... போனில்தானே பேசினார். ‘நீங்க உருவாக்கிய ஆள்தான் பன்னீர். நீங்க இல்லைன்னா அவருக்கு அரசியல் அடையாளம் ஏது... இப்போ, அவர் உங்களுக்கு அரசியல் அடையாளம் தர்றாரா... நீங்க போகாதீங்க’ என சசிகலாவை ஏகத்துக்கும் குழப்பிவிட்டுவிட்டனவாம் மன்னார்குடி உறவுகள். இதைத் தொடர்ந்து, ‘தேர்தல் சமயத்துல ஒண்ணா பயணிக்கலாம். இப்ப மாநாட்டுல கலந்துக்குறது சரியா இருக்காது’ என வர மறுத்துவிட்டாராம் சசிகலா. பன்னீரை முதன்மைப்படுத்தியே முப்பெரும் விழா நடந்திருக்கிறது” என்ற கழுகாருக்குச் சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். உறிஞ்சிப் பருகியவர் செய்திகளைத் தொடர்ந்தார்.
“ஜூன் மாதம் ஓய்வுபெறவிருக்கிறார் டி.ஜி.பி சைலேந்திரபாபு. இப்போதே, ஐ.பி.எஸ் அதிகாரிகள் மத்தியில் புதிய பதவிகளை எட்டிப் பிடிப்பதற்கான காய்நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு ஆளுங்கட்சியின் ஆசி பரிபூரணமாக இருப்பதால், அடுத்த சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி அவர்தான் என்கிறார்கள். சென்னை காவல்துறை ஆணையர் பதவிக்கு உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களுக்கிடையே, தன்னுடைய டெல்லி லாபி மூலமாக முயல்கிறாராம் மகேஷ் குமார் அகர்வால். உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் பதவிகளுக்கும் போட்டி பரபரக்கிறது.”
“பலே... ஒரு காவல்துறை உயரதிகாரியை அழைத்து, காவல்துறை மேலிடம் ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிவிட்டதாமே?”
“உண்மைதான். காவல்துறை கேன்டீன்களையெல்லாம் கவனிக்கிறார் அந்த உயரதிகாரி. கேன்டீனுக்குப் பொருள்களை சப்ளை செய்யும் பெரும் நிறுவனங்களை அழைத்த அந்த அதிகாரி, ‘பத்து பர்சன்ட் கொடுங்க. இல்லைன்னா, கொள்முதல் ஆர்டரும் கிடைக்காது, பில்லும் க்ளியர் ஆகாது’ என ‘நாகரிகமாக’ச் சொன்னாராம். மிரண்டுபோன நிறுவனங்கள் விஷயத்தை, காவல்துறை மேலிடம் வரை கொண்டு செல்ல, அந்த உயரதிகாரியை அழைத்து, ‘ஏற்கெனவே இருக்கிற கெட்ட பெயர் போதாதா, கடைசி நேர வசூல்ல இறங்கீட்டீங்களோ...’ என வெளுத்து வாங்கிவிட்டதாம் காவல்துறை தலைமை. இதில் அந்த உயரதிகாரி ஆடிப்போயிருக்கிறார்” என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,
“பொதுச்செயலாளர் பதவியை ஏற்ற கையோடு, அமைப்புரீதியாகப் பெரும் மாற்றங்களுக்கு எடப்பாடி தயாராவதாக ஏற்கெனவே சொல்லியிருந்தேன் அல்லவா... இந்த விவகாரத்தில், பிற கட்சிகளிலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தவர்களுக்கும் ‘ஜாக்பாட்’ அடிக்கப்போகிறதாம். முக்கியப் பதவிகளை அவர்களுக்கு வழங்கி, கட்சியை வலுப்படுத்த முடிவெடுத்துவிட்டாராம் எடப்பாடி” என்றபடி பறந்தார் கழுகார்.
கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:
* `நிதியமைச்சர் பி.டி.ஆர் குரல்’ எனச் சொல்லப்படும் ஆடியோவை வெளியிட்டது அவருக்கு நெருக்கமான இளைஞர் ஒருவர்தான் எனச் சந்தேகிக்கிறது தலைமை. சம்பந்தப்பட்ட இளைஞர், தமிழக பா.ஜ.க-வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஒருவரின் உறவினர் என்பதால், பி.டி.ஆருக்கும் அந்தச் சந்தேகம் வலுத்திருக்கிறதாம்.
* வாரிசுக்கு உறுதுணையாக இருக்கும் இரண்டு பி.ஏ-க்களுக்குள் யார் பெரியவர் எனக் கடுமையான பனிப்போர் நிலவிவருகிறதாம். இதனாலேயே, வாரிசைச் சந்திக்க முடியாமல் அதிகாரிகள் முதல் ஆளும் தரப்பினர் வரை குழம்பிப்போய் நிற்கிறார்களாம்.