
‘முள்ளும் மலரும்’ படத்தில், வெள்ளந்தித்தனம் கூடிய ரஜினியின் முரட்டுத்தனங்களை, புன்னகையோடு ரசித்துப் புரிந்துகொள்ளும் சரத் பாபு பாத்திரம் தனித்துவமானது.
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
அரசியலில் எந்த அளவுக்குப் பணிவு இருக்க வேண்டும்?
மீசையில் மண் ஒட்டாத அளவுக்கு!
நாராயணி, நாகப்பட்டினம்.
ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறதே?
மகிழ்ச்சி!
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
மனித வாழ்வில் மொழி, இனம், மதம், சாதி இவற்றையெல்லாம் கடந்து கடைசியில் மிஞ்சி நிற்பது எது?
மரணமும், புகழும், அன்பும்!
கே.எம்.ஸ்விட் முருகன், கரடிகொல்லப்பட்டி.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றும் தமிழ்நாட்டில் எந்த அளவு இருக்கிறது?
குவார்ட்டர் அளவுக்கு இருக்கிறது!

பத்மா, நாகூர்.
நடிகர் சரத் பாபு?
‘முள்ளும் மலரும்’ படத்தில், வெள்ளந்தித்தனம் கூடிய ரஜினியின் முரட்டுத்தனங்களை, புன்னகையோடு ரசித்துப் புரிந்துகொள்ளும் சரத் பாபு பாத்திரம் தனித்துவமானது. ‘உதிரிப்பூக்கள்’ படத்தில், விஜயனுக்கும் சரத் பாபுவுக்குமான சண்டைக் காட்சியைப் புதுமையாகக் காட்சிப் படுத்தியிருப்பார் மகேந்திரன். அதாவது, சண்டையைக் காட்டாமலேயே. காட்சியின் முடிவில், “உங்களை நான் திருப்பி அடிச்சிருப்பேன்... லஷ்மி விதவையாகிறதை நான் விரும்பலை” என்று சொல்கிற சரத் பாபுவின் முகம் மறக்க முடியாதது. ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா...’ பாடலை சரத் பாபுவின் புன்னகையில்லாமல் நம்மால் நினைவுகூர முடியுமா..? ‘அசோக்...’ நீ மறைந்த நாளைக் குறித்து வைத்துக்கொள்கிறோம்!
கி.சரஸ்வதி, ஈரோடு.
விலகியிருப்பதும் மறந்திருப்பதும் ஒன்றா?
மறக்க வேண்டும் என்பதால், விலகியிருக்கலாம். விலகியிருப்பதால், மறந்துவிட முடியாது!
மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை.
பேசுவதற்குக் கற்றுக்கொடுக்கும் பெற்றோர், மெளனமாக இருப்பதற்குக் கற்றுத் தரவில்லையே ஏன்?
மிக முக்கியமான உளவியல் கேள்வி. இன்றைய அவசர காலகட்டத்தில், நினைத்தவுடன் உலகின் எந்த மூலைக்கும், எப்படியும் பேச முடிகிற தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட சுழலில், எதற்கும் காத்திருக்க வேண்டியிராத நிதானமற்ற சூழலில், பேச்சே பலருக்கும் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. ஏனென்றால், மொழி இன்னும்கூட மனிதர்களின் உணர்வுகளைச் சரியாகப் பிரதிபலிக்கும் நிலைக்கு வளரவில்லை அல்லது அதை அப்படிப் பயன்படுத்த நமக்கு இன்னும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. எனவே, மொழி அளவுக்கு மௌனத்தையும் நாம் ஆழமாகக் கற்க வேண்டும்; கற்பிக்க வேண்டும். அதுவொரு தனித்த கலை. ‘சும்மா இரு சொல் அற’ என்று அருணகிரிநாதர் சும்மா பாடவில்லை!

கி.சீனிவாசன், சிவகங்கை.
“ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் செல்வது தொழில் முதலீடுகளை ஈர்க்க அல்ல... சொந்த முதலீடுகளுக்கு” என எப்படி எடப்பாடி பழனிசாமியால் உறுதியாகச் சொல்ல முடிகிறது?
அவரும் முதல்வராக இருந்தவர்தானே..?!
அ.யாழினிபர்வதம், சென்னை.
அண்ணாமலை லோக் சபா தேர்தலில் போட்டியிட மாட்டாராமே?
புத்திசாலித்தனம்!
இல.கண்ணன், நங்கவள்ளி.
“மக்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால், எங்களைப் பார்த்தால்கூட முதல்வர் சிரிப்பது இல்லை” என்று அமைச்சர் காந்தி கூறியிருப்பது பற்றி..?
என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம்...

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
“ஜனாதிபதி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல” என்கிறாரே நிர்மலா சீதாராமன்..?
அப்படியானால் நாடாளுமன்றக் கட்டடத்தை அவரை வைத்துத் திறக்கலாமே?
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!