Published:Updated:

மிஸ்டர் கழுகு: நிலுவைத் தொகை விவகாரம்... அடித்து பொய் பேசும் அண்ணாமலை!

அண்ணாமலை!
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை!

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய மின் நிறுவனம் குறித்து அனைத்து விவரங்களையும் பா.ஜ.க தரப்பு டெல்லிக்கு அனுப்பிவிட்டது.

மிஸ்டர் கழுகு: நிலுவைத் தொகை விவகாரம்... அடித்து பொய் பேசும் அண்ணாமலை!

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய மின் நிறுவனம் குறித்து அனைத்து விவரங்களையும் பா.ஜ.க தரப்பு டெல்லிக்கு அனுப்பிவிட்டது.

Published:Updated:
அண்ணாமலை!
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை!

சென்னை வளசரவாக்கத்தில், மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்திலேயே இரண்டாம் வகுப்பு குழந்தை, பள்ளி வேன் மோதி உயிரிழந்த துயரச் செய்தியை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘அசம்பாவிதங்கள் ஏற்படும்போது மட்டும் கல்வித்துறையும், பள்ளி நிர்வாகங்களும் மாணவர்கள் பாதுகாப்பு பற்றிப் பரபரக்கின்றன. அதன் பிறகு அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை!’’ என்றபடி கோபத்தைக் கொட்டிய கழுகார், சிறு மெளனத்துக்குப் பிறகு செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்...

வெள்ளக்கோயில் சாமிநாதன்
வெள்ளக்கோயில் சாமிநாதன்

‘‘அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் மீதான புகார் ஒன்று தடதடக்க ஆரம்பித்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம், நல்லூரிலுள்ள விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைப் பலரும் ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கிறார்கள். அந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக சாமிநாதனின் மனைவி உமாதேவி பெயரிலும் வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டை ராசி இல்லையென்று கருதி கடந்த ஆண்டு நகைக்கடைக்காரர் ஒருவரிடம் விலை பேசி பெரும் தொகையை வாங்கிவிட்டதாம் அமைச்சர் தரப்பு. இந்த நிலையில், வீடு பத்திரப்பதிவுக்குச் சென்றபோதுதான், சம்பந்தப்பட்ட இடம் கோயில் நிலம் என்று சர்ச்சை கிளம்பி, விளக்கம் கேட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அமைச்சரின் மனைவிக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.’’

‘‘அடேங்கப்பா... கோயில் நிலம் என்று கண்டுபிடிப்பதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவா? அதிருக்கட்டும், சீனியர் அமைச்சர் ஒருவரின் பகிரங்க மிரட்டலால் அதிகாரிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாமே?”

“அமைச்சர் துரைமுருகனைத்தானே சொல்கிறீர்கள்... மார்ச் 27 அன்று காட்பாடியில் சில திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய துரைமுருகன் ஓப்பன் மைக்கில், ‘கட்சியிலும் ஆட்சியிலும் ஸ்டாலினுக்கு அடுத்து பவர்ஃபுல் ஆள் நான்தான். ஒழுங்கா வேலை பார்க்கலைன்னா எவனா இருந்தாலும் தீர்த்துக்கட்டிடுவேன்’ என்று சொல்லிவிட்டு மேடையில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனையும், மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரையும் பார்த்திருக்கிறார். வெலவெலத்துப்போன அதிகாரிகள், இப்படியா பொதுமேடையில் நாகரிகம் இல்லாமல் பேசுவது என்று முணுமுணுத்திருக்கிறார்கள்!”

மிஸ்டர் கழுகு: நிலுவைத் தொகை விவகாரம்... அடித்து பொய் பேசும் அண்ணாமலை!

“அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் அவ்வளவுதானா!’’

“விட மாட்டீரே... சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய மின் நிறுவனம் குறித்து அனைத்து விவரங்களையும் பா.ஜ.க தரப்பு டெல்லிக்கு அனுப்பிவிட்டது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் பெல் நிறுவனம், ‘தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்த அந்த ஒப்பந்தத்தை எங்களுக்குக் கொடுங்கள்... குறைந்த விலையிலேயே அந்தப் பணிகளை செய்துதருகிறோம்’ என்று கேட்டிருக்கிறதாம். இது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை அப்செட் ஆக்கியிருக்கிறது.’’

‘‘மடியில் கனம் இல்லையென்றால், மத்திய அரசுத்துறைக்கு டெண்டரைக் கொடுப்பதில் என்ன தயக்கம்... அது சரி, மீண்டும் ஆளுங்கட்சியுடன் இணக்கமாகிவிட்டதாமே அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம்?’’

‘‘அப்படித்தான் தகவல்கள் வருகின்றன. சென்னையின் மையப்பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறது அந்த நிறுவனம். இந்த ஹோட்டலை வாங்க ஏற்கெனவே இரண்டு நிறுவனங்கள் முட்டி மோதிய நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய அந்த நிறுவனமே டீலை சமர்த்தாக முடித்துவிட்டது. இந்த டீலிங்கில் ஒரு பங்கு ஆளும் தரப்பின் முக்கியப் பிரமுகர் ஒருவருக்கும் செல்வதால், ஆளும் தரப்புடனும் அந்த நிறுவனம் ராசியாகிவிட்டது என்கிறார்கள்!”

‘‘புரிகிறது... புரிகிறது!’’

‘‘டெல்லி தி.மு.க அலுவலகத் திறப்புவிழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கவிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதற்காக மார்ச் 31 அன்று பிரதமரிடம் நேரம் வாங்கியுள்ளார்கள். இந்தச் சந்திப்பில் தமிழகத்துக்குக் கொடுக்கவேண்டிய நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கவிருக்கிறார் முதல்வர்.’’

மிஸ்டர் கழுகு: நிலுவைத் தொகை விவகாரம்... அடித்து பொய் பேசும் அண்ணாமலை!

‘‘நிதி என்றதும்தான் நினைவுக்கு வருகிறது... பொய் சொல்வது யார் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பட்டிமன்றமே நடக்கிறதாமே?’’

‘‘அதை ஏன் கேட்கிறீர்... ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்னதற்கு, ‘தமிழக அரசுக்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், உண்மையை மறைத்து தமிழக அரசு பொய் சொல்கிறது’ என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிவருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் தி.மு.க-வினரோ, மார்ச் 16-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசியதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்... ‘மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடாக 96,756 ரூபாய் கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 53,661 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கு 6,733 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது’ என்று அவர் பேசியிருக்கிறார். மத்திய நிதியமைச்சரே ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து ஒப்புக்கொண்ட பிறகு, ‘உண்மையை மறைத்து, பொய் சொல்கிறார் அண்ணாமலை... ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று கமலாலயம் தரப்பிலிருந்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோல நூறு நாள் வேலைத் திட்டத்திலும் 40 சதவிகித கட்டுமானப் பணிகளுக்கான நிதியைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்திவைத்திருக்கிறது மத்திய அரசு” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். சுவைத்துப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

மிஸ்டர் கழுகு: நிலுவைத் தொகை விவகாரம்... அடித்து பொய் பேசும் அண்ணாமலை!

“சசிகலாவின் கணவர் ம.நடராசனிடம் பல வருடங்களாக கார்த்தி, பிரபு ஆகிய இருவர் உதவியாளர்களாக இருந்தனர். நடராசன் மறைவுக்குப் பிறகு இவர்கள் இருவரும் நடராசனின் சொத்துகள் சிலவற்றை பதுக்கிவிட்டதாகக் கூறி நடராசனின் சகோதரர்கள் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாம். அப்போது இவர்கள் இருவரிடமும் இளவரசியின் மகன் விவேக், ‘கவலைப்படாதீங்க. அத்தை உங்களைக் கைவிட மாட்டாங்க’ என்று நம்பிக்கை கொடுத்துள்ளார். அதன் பிறகும் நடராசன் சகோதரர்களின் நெருக்கடி நின்றபாடில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கணவரின் நினைவுநாள் அன்று அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை இருவரும் சந்திக்க முயன்றபோது, அவரும் இவர்களைக் கண்டுகொள்ளவில்லையாம். இதையடுத்து, அங்கிருந்த சில பிரமுகர்களோ, ‘அந்தம்மாவை நம்பி பிரயோஜனம் இல்லை... வேற வழியைப் பாருங்க’ என்று சொல்ல... விரக்தியில் இருக்கிறார்கள் முன்னாள் உதவியாளர்கள்!”

“பன்னீரின் மகன் ஜெயபிரதீப்பும் சசிகலாவைச் சந்தித்திருக்கிறாரே!”

“ஆமாம்... ஜெயலலிதாவின் வீட்டில் சமையலராக இருந்த ராஜம்மாள் மார்ச் 27 அன்று காலமானார். அவரது வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்த பன்னீரின் இளைய மகன் ஜெயபிரதீப்பும் சசிகலாவும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது பன்னீர் குறித்து ஜெயபிரதீப்பிடம் சசிகலா நலம் விசாரித்ததோடு, ‘ஆறுமுகசாமி ஆணையத்தில் உங்க அப்பா உண்மையைச் சொன்னதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இதை உங்க அப்பாகிட்ட சொல்லிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.”

‘‘புதுச்சேரியில் என்ன புகைச்சல்?’’

“வழக்கமான புகைச்சல்தான். புதுச்சேரியில் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே பஞ்சாயத்து மேலும் சூடுபிடித்திருக்கிறது. ‘முதல்வர் ரங்கசாமி எங்களை மதிப்பதில்லை. அரசு விழாக்களுக்குக்கூட அழைப்பது இல்லை... ரங்கசாமி தன்னிச்சையாக நடந்துகொள்கிறார். ஒப்பந்தப் பணிகளிலும் முக்கியத்துவம் தருவதில்லை’ என்று பா.ஜ.க தரப்பில் அந்தக் கட்சியின் புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் அழாத குறையாகப் புலம்பியிருக்கிறார்கள். ‘வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு நம் பலத்தைக் காட்டிவிட்டு பிறகு அவர்களைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஆறுதல் சொல்லியிருக்கிறாராம் சுரானா” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* புதுச்சேரியில் நடந்த தேசியக் கட்சியின் மகளிரணிச் செயற்குழுக் கூட்டத்தைக் காட்டியே தமிழகத்தின் முக்கியத் தொழிலதிபர்களிடம் பெரிய அளவுக்கு வசூல் வேட்டை நடந்ததாம். இது குறித்து டெல்லிக்குப் புகார் பறக்க... விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் மேலிடம்.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் எட்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த பதவிகளைப் பெற வி.ஐ.பி-க்கள் பலரும் சூட்கேஸ்களுடன் மேலிடத்தை முட்டி மோதிவருகிறார்கள்!

* அடுத்த ஆண்டு மத்தியில் ஓய்வுபெறவிருக்கும் தமிழக அரசின் முக்கிய அதிகாரி ஒருவர், மத்திய அரசின் யூ.பி.எஸ்.சி-யின் முக்கியப் பதவியைப் பிடிக்க இப்போதே காய்நகர்த்திவருகிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism