Published:Updated:

மிஸ்டர் கழுகு: சசிகலா பொதுச்செயலாளர்... பன்னீர் ஒருங்கிணைப்பாளர்...

ஸ்டாலின், மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மோடி

செங்கோட்டையன் அவைத்தலைவர்... வைத்திலிங்கம் அமைப்புச் செயலாளர் - பன்னீரின் பலே கணக்கு!

மிஸ்டர் கழுகு: சசிகலா பொதுச்செயலாளர்... பன்னீர் ஒருங்கிணைப்பாளர்...

செங்கோட்டையன் அவைத்தலைவர்... வைத்திலிங்கம் அமைப்புச் செயலாளர் - பன்னீரின் பலே கணக்கு!

Published:Updated:
ஸ்டாலின், மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மோடி

‘‘தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் தேதி என்கிறது தமிழக அரசு. மானியக் கோரிக்கை விவாதத்தின் நிகழ்ச்சி நிரலிலோ, ‘ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விடுமுறை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால், தமிழ்ப் புத்தாண்டாக எதை வைத்துக்கொள்வது என்று தி.மு.க-வினரே குழம்பித் தவிக்கிறார்கள்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக அவருக்கு ஜில்லென்று ஜிகர்தண்டா தர, ருசித்தபடியே செய்திகளைக் கொட்டத் தொடங்கினார்...

‘‘துபாயிலிருந்து சென்னை திரும்பிய மறுதினம் அதாவது மார்ச் 30-ம் தேதி இரவே டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். கூட்டத்தொடர் நடைபெறுவதால், 31-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திலேயே பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, ‘வரும் காலங்களில் ஜி.எஸ்.டி இழப்பீடு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய வெண்டும். நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பவை உள்ளிட்ட 14 முக்கியப் பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் அளித்ததுடன், நதிநீர்ப் பங்கீடு, இலங்கைத் தமிழர்கள் பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.’’

“தி.மு.க அலுவலகத் திறப்புவிழாவுக்கு அழைத்தாரா... இல்லையா?’’

“முதல்வர் டெல்லி செல்வதற்கு முன்பாகவே தி.மு.க எம்.பி-க்கள் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுவிட்டதால், ‘கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்’ என்று மட்டும் வலியுறுத்தியிருக்கிறார். ‘அன்றைய தேதியில் வேறு நிகழ்ச்சியில் பங்கெடுக்க இருப்பதால் கலந்துகொள்ள இயலாது’ என்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார்.’’

‘‘அடுத்தடுத்த சந்திப்புகளும் நடந்தனவே...’’

மிஸ்டர் கழுகு: சசிகலா பொதுச்செயலாளர்... பன்னீர் ஒருங்கிணைப்பாளர்...

‘‘ஆமாம். அந்தச் சந்திப்புகளுக்கும் காரணம் இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத்தில் `நீட்’டுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. அந்தக் கடிதம் உள்துறை அமைச்சகம் மூலமே குடியரசுத் தலைவருக்குச் செல்ல முடியும் என்பதால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார். அதேபோல பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, சென்னையில் அமையவிருக்கும் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்துவது குறித்தும் பேசியிருக்கிறார். ஆனால், இவர்கள் யாரும் தி.மு.க அலுவலகத் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையாம். பா.ஜ.க-வின் மூத்த தலைவர் பெயரில் தமிழில் வாழ்த்துக் கடிதம் ஒன்று மட்டும் அனுப்பவிருக்கிறார்களாம். அந்தக் கடிதத்தை ஏற்கெனவே தமிழக பா.ஜ.க தலைமைக்கு அனுப்பி, சரிபார்க்கவும் சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘துரைமுருகனின் துபாய் பயணம், விமான நிலையத்துடன் நின்றுவிட்டதே?’’

‘‘ஆமாம். அதுதான் தற்போது தி.மு,க வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. முதல்வர் துபாய் சென்ற மறுதினமே துரைமுருகனும் துபாய் எக்ஸ்போ செல்லத் திட்டமிட்டார். விசா கிடைக்க தாமதமானதால் அப்போது செல்ல முடியவில்லை. முதல்வர் சென்னை திரும்பிய பிறகு, துபாய் செல்ல முடிவெடுத்து டிக்கெட், விசா உள்ளிட்டவை தயார்செய்யப்பட்டன. 29-ம் தேதி காலை, சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கிளம்பத் தயாரானவரால், விசாவிலிருந்த சிறு குளறுபடியால் கிளம்ப முடியவில்லை. அதைச் சரிசெய்த பின்னர், மாலை ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் போடப்பட்டு விமான நிலையம் வந்து போர்டிங் போடப்பட்ட நிலையில், திடீரென பயணத்தை ரத்துசெய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவிட்டார். பயணம் ரத்துசெய்யப்பட்டதற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதே காரணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், ‘அப்பாவின் உடல்நிலை நன்றாக உள்ளது’ என்று அவரின் மகன் கதிர் ஆனந்தே விளக்கிவிட்டார்.’’

மிஸ்டர் கழுகு: சசிகலா பொதுச்செயலாளர்... பன்னீர் ஒருங்கிணைப்பாளர்...

‘‘வேறு என்ன காரணமாம்?’’

‘‘விமான நிலையத்தில் இருக்கும்போது அவருக்கு வந்த ஓர் அலைபேசி அழைப்புதான் காரணம் என்கிறார்கள். துரைமுருகனின் பயணம் ரத்தானதற்கு மறுநாள், ‘தமிழக அமைச்சர் ஒருவருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியதால், இந்தப் பயண ரத்துக்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது.”

“தொடர்பு இருக்கிறதா?”

“பா.ஜ.க-வினரிடம் விசாரித்தால், `உங்கள் சந்தேகத்தில் பாதி உண்மை உள்ளது. சம்மன் வெளியாகும்போது, யார் அந்த அமைச்சர் என்பது உங்களுக்குத் தெரியவரும்’ என்று கண்சிமிட்டுகிறார்கள்.’’

‘‘அதுசரி, வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா உச்ச நீதிமன்றத்திலும் ரத்துசெய்யப் பட்டுவிட்டதே...’’

‘‘ஆம்... ஏற்கெனவே இந்த மசோதாவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் பா.ம.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோரின் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘வன்னியர்களை மட்டும் தனிப் பிரிவாகக் கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. சாதியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியாது’ என்று குறிப்பிட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்து, வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ‘தேர்தலுக்காக இறுதி நேரத்தில் அ.தி.மு.க அரசு வலுவற்ற சட்டத்தை இயற்றியது. தி.மு.க அரசும் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை வைக்கவில்லை’ என்று பா.ம.க தரப்பு அதிருப்தியில் உள்ளது.’’

மிஸ்டர் கழுகு: சசிகலா பொதுச்செயலாளர்... பன்னீர் ஒருங்கிணைப்பாளர்...

‘‘எடப்பாடி, பன்னீர் பனிப்போருக்கு ஒரு முடிவே இல்லையா?’’

“இதே ஆதங்கம்தான் அ.தி.மு.க-வினர் மத்தியிலும் உள்ளது. கடந்த சில நாள்களாகவே தி.மு.க-வைத் தொடர்ந்து விமர்சித்து ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக பா.ஜ.க தன்னை முன்னிலைப்படுத்திவருகிறது என்ற பேச்சு அ.தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது. ‘இப்படியே போனால் பா.ஜ.க நம்மை விழுங்கிவிடும்’ என்று எடப்பாடிக்குச் சிலர் சுட்டிக்காட்ட... ‘தி.மு.க ஆட்சியின் சட்டம்- ஒழுங்குப் பிரச்னையை முன்வைத்து ஏப்ரல் 4-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தலாம்’ எனத் திட்டமிட்டு அதற்கான அறிவிப்புக்கு ஒப்புதல் வாங்க பன்னீரை அணுகியிருக்கிறார்கள். அதோடு, அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்ட உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பிலும் பன்னீரின் கையெழுத்து வாங்க அவரை அணுகியிருக்கிறது எடப்பாடி தரப்பு. ஆனால், அவற்றில் கையெழுத்திடாமல் பன்னீர் தவிர்த்திருக்கிறார். சசிகலா தொடர்ந்த பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 7-ம் தேதி வருவதால், அதற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான் பன்னீர் தரப்பின் எண்ணமாம். தளவாய் சுந்தரம், வைத்திலிங்கம் வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் பன்னீருடன் கைகோத்திருக்கிறாராம். இதில் கடுப்பாகி எடப்பாடி தரப்பு பொருமிக்கொண்டிருக்க... ‘சசிகலா பொதுச்செயலாளர், நான் ஒருங்கிணைப்பாளர், அண்ணன் செங்கோட்டையன் அவைத்தலைவர், வைத்திலிங்கம் அமைப்புச் செயலாளர்’ என இப்போதே பதவியைப் பங்குப் பிரித்துக் கொண்டிருக்கிறாராம் பன்னீர்.”

மிஸ்டர் கழுகு: சசிகலா பொதுச்செயலாளர்... பன்னீர் ஒருங்கிணைப்பாளர்...

‘‘மக்கள் நீதி மய்யத்துக்குள் என்ன சலசலப்பு?’’

‘‘கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குப் போய் இருபது நாள்களுக்கு மேலாகிவிட்டன. கட்சிப் பொறுப்பை மாநிலச் செயலாளர்கள் மூவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால், இவர்கள் தங்கள் இஷ்டத்துக்குச் செயல்படுவதாக கமலுக்குப் புகார் சென்றுள்ளது. ஜூம் காலில் கமல் பஞ்சாயத்து நடத்தியும், சுமுக முடிவு எட்டப்படவில்லையாம். இருக்கிற மூன்று மாநிலச் செயலாளர்களே இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மல்லுக்கட்டுகிறார்களாம்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னையில் பணியாற்றும் பின்னணிப் பாடகர் பெயரைக்கொண்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர், அங்கு பணியாற்றுபவர்களைக் கடுமையாக டார்ச்சர் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. அதிகாரியின் டார்ச்சர் காரணமாகத் தீயணைப்பு வீரர் ஒருவர் மாயமாகிவிட்டார். அதனால், அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மாயமான வீரர், அலுவலகத்தைத் துடைப்பத்தால் சுத்தம் செய்தது, பெயின்ட் அடித்தது ஆகியவை அங்குள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருப்பதால் அதிகாரிக்கு ‘சாதிரீதியான பாகுபாடு பார்த்ததாக’ச் சிக்கல் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது!

* தமிழக அரசு அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிரான ஆக்‌ஷனை மீண்டும் ஆரம்பிக்கப்போகிறதாம். இம்முறை தொழில்துறையைக் குறிவைத்து ஃபைல்களை ஆராய்ந்துவருகிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை. சமீபத்தில் குவாரி அதிபர் ஒருவர் வருமானவரி ரெய்டில் சிக்கினார். அவரிடம் கிடைத்த ஆவணங்களில் மாஜி அமைச்சர் குறித்த தகவலும் இடம்பெற்றிருந்ததாம். அந்த விவரங்களை வருமான வரித்துறையிடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டிருக்கிறது. விரைவில் ரெய்டு படலம் தொடங்கும் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism