Published:Updated:

மிஸ்டர் கழுகு: எஸ்கேப் ஆன ராகுல்... கால் கடுக்க நின்ற சோனியா... கடைசியாகப் பரிசு வாங்கிய கனிமொழி...

டெல்லி தி.மு.க அலுவலக திறப்புவிழா
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி தி.மு.க அலுவலக திறப்புவிழா

தி.மு.க டெல்லி டைரிக் குறிப்புகள்!

மிஸ்டர் கழுகு: எஸ்கேப் ஆன ராகுல்... கால் கடுக்க நின்ற சோனியா... கடைசியாகப் பரிசு வாங்கிய கனிமொழி...

தி.மு.க டெல்லி டைரிக் குறிப்புகள்!

Published:Updated:
டெல்லி தி.மு.க அலுவலக திறப்புவிழா
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி தி.மு.க அலுவலக திறப்புவிழா

வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வந்த கழுகாருக்கு, குளிர்ச்சியான கரும்பு ஜூஸ் கொடுத்து வரவேற்றோம். “டெல்லி தி.மு.க அலுவலகத் திறப்புவிழாத் தகவல்களை கேள்விப்பட்டீர்களா?” என்று நாம் கேட்க... ஜூஸை உறிஞ்சியபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“ஆமாம்... துபாய் பயணம் ஒருவகையில் சொதப்பல் என்றால், டெல்லி திறப்புவிழா இன்னொரு வகையில் சொதப்பல் ஆகியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே டெல்லி தி.மு.க அலுவலகக் கட்டுமானத்தைக் கவனித்துவந்த சபரீசன் திறப்பு விழாவின்போது மிஸ்ஸிங். ஏற்கெனவே துபாய்க்குக் குடும்பத்தோடு சென்று, சர்ச்சை கிளம்பிய நிலையில், மீண்டுமொரு சர்ச்சை வேண்டாம் என்று கருதி திறப்புவிழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டாராம் சபரீசன். இதை அவர் முன்கூட்டியே ஸ்டாலினிடம் சொல்ல... இறுதிக்கட்டத்தில் திறப்புவிழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின். டி.ஆர்.பாலுவும் உடனிருந்து கவனிப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ, ‘இரண்டு நாள்களை மட்டுமே வைத்துக்கொண்டு டெல்லியில் நான் என்ன செய்வது?’ என்று முனகியபடியே ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: எஸ்கேப் ஆன ராகுல்... கால் கடுக்க நின்ற சோனியா... கடைசியாகப் பரிசு வாங்கிய கனிமொழி...

“முதல் கோணல் என்று சொல்லும்... அதிமுக்கியப் பிரமுகரான ராகுல் காந்தியை நிகழ்ச்சியில் பார்க்க முடியவில்லையே!”

“ஸ்டாலின் ஒரு மாநிலத்தின் முதல்வராக, பிரதமர் மோடியைச் சந்தித்ததில் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் நட்டா உள்ளிட்ட பா.ஜ.க கட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டதை ராகுல் காந்தி ரசிக்கவில்லையாம். ஆனால், காங்கிரஸ் தரப்போ, ‘கடந்த பிப்ரவரி 28 அன்றுதான் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டுவிழாவுக்காக சென்னைக்கு வந்து சென்றார் ராகுல். அதனால்தான், திறப்புவிழாவுக்கு சோனியா மட்டும் போதும் என்று கட்சித் தலைமை முடிவு செய்துவிட்டது. தவிர, அன்றைய தினம் ராகுல் டெல்லியிலேயே இல்லை’ என்கிறது. சோனியாவுக்கு சில உடல்நிலை பாதிப்புகள் இருப்பதால், அவர் நிற்பதில் சிரமம் இருக்கிறது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பத்து நிமிடங்களுக்கு மேல் கால் கடுக்க நிற்கவைக்கப்பட்டிருக்கிறார் சோனியா. அடுத்து, தலைவர்கள் அனைவரும் ஆஜரானதும், அவர்களைத் தானே முன்வந்து அழைத்துச் செல்லாமல், சட்டென ரிப்பன் வெட்டக் கிளம்பிவிட்டார் ஸ்டாலின். பிறகு கனிமொழி மற்றும் சில எம்.பி-க்கள்தான் ஒருவழியாகச் சமாளித்து தலைவர்களை மேடைக்கு அழைத்து வந்துள்ளனர்.”

“அடப்பாவமே..!”

“அதன் பிறகு மேடையில் சோனியா, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ப.சிதம்பரம், திருமாவளவன், வைகோ ஆகிய தலைவர்களுக்கு சால்வையும், நினைவுப்பரிசும் ஸ்டாலின் வழங்கினார். இன்னொரு பக்கம் சொந்தக் கட்சியிலும் பொதுச்செயலாளர், பொருளாளருக்குப் பிறகு உதயநிதிக்கு நினைவுப்பரிசு கொடுத்திருக்கிறார்கள். அதன் பின்னரே மற்ற சீனியர் அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை கொடுக்கப்பட்டது. இதுவாவது பரவாயில்லை... முக்கியமானவர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு கொடுத்த பிறகு கடைசியாக கட்டட கட்டுமானத் தரப்பினருக்கு நினைவுப்பரிசு கொடுக்கும்போதுதான் கனிமொழிக்கும் கொடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் பலரையும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுத்தார் ஸ்டாலின். அப்போது ‘உ.பி-யில் காங்கிரஸுடன் சேர்ந்திருந்தால் நீங்கள் முதல்வராகியிருக்கலாம். வாய்ப்பை விட்டுவிட்டீர்கள்’ என்று அகிலேஷிடம் கூறிய திருமா, ‘காங்கிரஸ் தலைமையில் தேசிய, மாநிலக் கட்சிகள் இணைவதுதான் பா.ஜ.க-வை வீழ்த்த ஒரே வழி’ என்றும் பேசியிருக்கிறார். தேநீர் விருந்து முடிந்து சோனியா கிளம்பியதும், மற்ற தலைவர்களைக் கண்டுகொள்ளாமல் ஸ்டாலினும் கிளம்பிவிட்டார். தி.மு.க அமைச்சர்களும், எம்.பி-க்களும்தான் மற்ற தலைவர்களை வழியனுப்பிவைத்தார்கள்!”

மிஸ்டர் கழுகு: எஸ்கேப் ஆன ராகுல்... கால் கடுக்க நின்ற சோனியா... கடைசியாகப் பரிசு வாங்கிய கனிமொழி...

“திட்டமிடலில் ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்... சரி, டெல்லி நிகழ்ச்சியையொட்டி டி.ஆர்.பாலு மீதும் முணுமுணுப்பு எழுந்திருக்கிறதே?”

“அது ஒரு தனிக்கதை... நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக தி.மு.க எம்.பி-க்கள் அனைவரும் ‘பங்களிப்பை’ டி.ஆர்.பாலுவிடம் வழங்கியிருக்கிறார்கள். நிகழ்ச்சியை முடித்த கையோடு, முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் தன் வீட்டில் விருந்து கொடுத்த டி.ஆர்.பாலு, அப்போது தங்கக்காசைப் பரிசளித்துள்ளார். இதைத்தான், ‘எங்கள் பங்களிப்பை வைத்து எங்களுக்கே பரிசு கொடுத்திருக்கிறார் பாலு’ என்று நக்கல் அடிக்கிறார்கள் தி.மு.க எம்.பி-க்கள். அதேபோல, தனது செல்வாக்கை நிரூபிக்கிறேன் பேர்வழி என்கிற பெயரில் ஸ்டாலினை, அவர் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராகச் சந்திக்க அழைத்துச் சென்றதும் சர்ச்சையாகியிருக்கிறது!”

“தி.மு.க கதை போதும்... அ.தி.மு.க முகாமில் என்ன விசேஷம்?

“விசேஷமா? வழக்கம்போல பஞ்சாயத்துதான்! ஏப்ரல் 5-ம் தேதி தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்த பன்னீரிடம் கையெழுத்து வாங்குவதற்குள் எடப்பாடி தரப்புக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனால், இரண்டாம் கட்ட உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பில் கையெழுத்திட முரண்டு பிடிக்கிறாராம் பன்னீர். ‘சசிகலாவைக் கட்சியில் சேர்க்கிறீர்களோ, இல்லையோ... அவர் தொடர்பாக நான் பேசியபோதெல்லாம் எனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, `கட்சியின் முக்கியப் பொறுப்புகளை கொடுக்க மாட்டோம்’ என்ற உத்தரவாதத்தைக் கொடுங்கள்... அப்போதுதான் கையெழுத்து போடுவேன்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் பன்னீர். அதோடு, ஜூன் மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களில் ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகத்தை நியமிக்க எடப்பாடி விரும்புகிறார். ஆனால், அதில் ஒரு சீட்டை, தனது கோட்டாவாக பன்னீர் கேட்கிறார். இதனால் ஏக கடுப்பில் இருக்கிறது எடப்பாடி தரப்பு” என்ற கழுகாருக்கு வேர்க்கடலையைத் தட்டில் நிரப்பிக் கொடுத்தோம். கொறித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

மிஸ்டர் கழுகு: எஸ்கேப் ஆன ராகுல்... கால் கடுக்க நின்ற சோனியா... கடைசியாகப் பரிசு வாங்கிய கனிமொழி...

“கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழகத்தின் அனல்மின் நிலையங்களில் ஒரு மாதத்துக்குச் சேகரமாகும் சுமார் பத்து லட்சம் டன் நிலக்கரி சாம்பலை அள்ளுவதற்கான உரிமையை டன்னுக்கு 50 ரூபாய் கமிஷன் வாங்கிக்கொண்டு டெண்டர் விடுவது வழக்கமாக இருந்தது. அதன்படி கடந்த ஆட்சியின்போது 2021, பிப்ரவரி 3-ம் தேதி நிலக்கரி சாம்பலை அள்ளு வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. இதற்கு அப்போதே பலரும் டெண்டர் முன்வைப்புத் தொகை செலுத்திவிட்டார்கள். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பத்து மாதங்களாகியும் பழைய டெண்டரில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கேட்டால், டன்னுக்கு 150 ரூபாய் கமிஷன் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று கறார் காட்டுகிறார்கள்!”

“டீலிங் மேட்டர் இது ஒன்று மட்டும்தானா?”

“சொல்லாமல் போவேனா... தமிழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் 1,141 கால்நடை உதவி மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, 2020-ல் நடந்தது. இதில் ஒரு பணியிடத்துக்கு 15 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக அப்போதைய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தரப்பினர் மீது காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து 2021, பிப்ரவரி மாதம் 1,097 கால்நடை உதவி மருத்துவர்களுக்குப் பணி ஆணையும் வழங்கப்பட்டது. ஆணையை வழங்கிய பிறகும் பணியிடம் ஒதுக்காத நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட மாஜியுடன் நடந்த டீலிங்கில் இன்றைய பிரமுகருக்கு பாதித்தொகை கை மாறியதாகவும்... கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே பணி ஆணை வழங்க வேண்டும் என்றும் பேசி முடித்திருக்கிறார்கள். ஏற்கெனவே வசூலித்த தொகை போதாதென்று, இப்போது விரும்பிய இடத்தில் போஸ்ட்டிங் போட ஐந்து லட்டுகள் வரை ஃபிக்ஸ் செய்து பெட்டியை நிரப்புகிறார்கள். இது தவிர, 200 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளும் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதற்கு, தலைக்கு ஏழு லட்டுகளைக் கேட்கிறார்கள். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர்தான் லட்டுகளைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கிவருகிறார்” என்ற கழுகார், “பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 9-ம் தேதி சென்னை மாநகராட்சிக்கான முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம்... உமது நிருபரை ஃபாலோ செய்யச் சொல்லும்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னை வெள்ளை மாளிகையின் உச்ச அதிகாரியை எப்படியாவது அந்தப் பதவியிலிருந்து தூக்கிவிட வேண்டுமென்று பூங்காவன அதிகாரியும், தமிழ்க் கடவுள் அதிகாரியும் முட்டி மோதிவருகிறார்கள். சமீபத்தில் இருவரும், துறை அமைச்சரிடமும் அவரைப் பற்றி வகையாக தூபம் போட்டிருக்கிறார்கள்.

* சமீபத்தில் துபாய்க்குக் கிளம்பிய மூத்த அமைச்சர் பாதியிலேயே ரிட்டர்ன் ஆனது தெரிந்த விஷயம். இதில் தெரியாத விஷயம் என்னவென்றால், அப்போது அவருடன் பயணிக்க மணல் புள்ளி ஒருவரும் உடன் வந்து அவரும் ரிட்டர்ன் ஆகியிருக்கிறார். இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனித்துவருகிறது மத்திய உளவுப் பிரிவு!