Published:Updated:

மிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி?

தமிழகத்தில் ஏதேனும் பிரத்யேக முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளனவா?

பிரீமியம் ஸ்டோரி
இந்த முறை ஹேங் அவுட்ஸ் காலில் நம்மை அழைத்தார் கழுகார்... “நான் ஃபில்டர் காபி குடிக்கிறேன். உமக்குப் பிடித்ததை நீரே வீட்டில் போட்டுக்கொள்ளும்!” என்று நம்மிடம் ‘சியர்ஸ்’ காண்பித்தவரிடம் “ஏப்ரல் 14-க்குப் பிறகும் இதே நிலைமைதானா... நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்கிறார்களே?” என்று கேட்டோம்.

காபியை ருசித்துக்கொண்டே நமக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்...

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

“இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னும் உறுதியான எந்த முடிவையும் எடுக்கவில்லை. முக்கிய அதிகாரிகளுடனும் மூத்த அமைச்சர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்திக்கொண்டே இருக்கிறார். 8-ம் தேதி ஸ்கைப் வழியாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடக்கிறதல்லவா, அதிலும் இதுபற்றி விவாதிக்க உள்ளனர். ஊரடங்கை முழுமையாகத் தளர்த்தாமல் பகுதிப் பகுதியாகத் தளர்த்தலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்”

“பகுதிப் பகுதியாக என்றால்?”

“ ‘மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்பு இருக்கிறது. எங்கெல்லாம் பாதிப்பு அதிகளவில் இருக்கிறதோ... அங்கெல்லாம் ஊரடங்கைத் தளர்த்த வேண்டாம். பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளோடு ஊரடங்கைத் தளர்த்தலாம். கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டுவிடலாம். அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்புகளைத் துண்டித்தே வைத்திருக்கலாம்’ என ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்.”

“ஓஹோ... பிரதமர் என்ன முடிவு எடுத்திருக்கிறாராம்?”

“அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த வார இறுதியில் இதுகுறித்து தொலைக்காட்சியில் உரையாற்ற இருக்கிறாராம்.”

“தமிழகத்தில் ஏதேனும் பிரத்யேக முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளனவா?”

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

“திங்கள்கிழமை அன்று, தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சில நாள்களாக தேனியில் முகாமிட்டிருந்த துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன, தமிழகத்தில் தடையை நீடிப்பதா... வேண்டாமா என்பது பற்றியும் அப்போது பேசியிருக்கின்றனர்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி?

“என்ன முடிவு எடுத்தார்களாம்?”

“ ‘பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் முறையாகச் செல்கின்றனவா?’ என்று தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி-யிடம் கேட்ட முதல்வர், `ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை சரியாகத் தரச் சொல்லுங்கள். சில பகுதிகளில் பொருள்கள் தட்டுப்பாடு எனத் தகவல் வருவதை சரி செய்யுங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் செய்யப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்தும் கேட்டிருக்கிறார். ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு ஊரடங்கைத் தளர்த்தினால், நாம் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.”

“ஓஹோ!”

“10-ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா தொற்று எப்படி இருக்கிறது எனப் பார்த்துவிட்டு, அதற்குப் பிறகு தமிழகத்தில் என்ன மாதிரியான முடிவை எடுக்கலாம் என முடிவுசெய்துள்ளார்கள். ‘அதற்கு முன்பாக மத்திய அரசிடமும் ஆலோசனை செய்துகொள்ளலாம்’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். தமிழகத்திலும் முழு அளவில் ஊரடங்கை விலக்கிக்கொள்ளும் திட்டம் இப்போது வரை இல்லை என்கிறார்கள். குறிப்பாக, மாவட்ட எல்லைகளை மட்டும் சீல் வைத்துவிட்டு பொதுமக்களை நடமாட அனுமதிக்கலாம் என நினைக்கிறார்கள். ‘பலருக்கு 14 நாள்களுக்குப் பிறகுதான் பாதிப்பு இருப்பதே அறிய முடிகிறது. ஆகையால், பாதிப்பு உள்ள பகுதிகளை இந்த மாத இறுதி வரை சீல் செய்துவைத்திருப்பதே நல்லது’ என்று சுகாதாரத் துறை சொல்லியிருக்கிறது.”

“தமிழகத்தில் போதிய அளவு வென்டிலேட்டர் இல்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே?”

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

“வேலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசுக்குக் கொடுத்த ஓர் அறிக்கைதான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்கிறார்கள். `போதிய அளவு வென்டிலேட்டர் வசதி இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிமானால் சமாளிப்பது கடினம்’ என, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓர் அறிக்கையை அவர் கொடுத்திருக்கிறார். அதேபோல், ‘தமிழகத்தில் பல மாவட்டங்களில் தேவையான அளவுக்கு மாஸ்க்குகள்கூட இல்லையாம். இதனால் கடுப்பான முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எகிறிவிட்டார்’ என்ற தகவலும் கோட்டை வட்டாரத்தில் பரபரக்கிறது.”

“கொரோனா விவகாரத்தில் தனது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று, சத்தமில்லாமல் ஆய்வு நடத்திவிட்டாராமே முதல்வர்?”

“உண்மைதான். ‘கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, 1,000 ரூபாய் வழங்கியது மக்களிடம் இருந்த கொந்தளிப்பை அடக்கிவிட்டது’ என்று சொல்லியிருக்கின்றனர். ‘இதுபோன்ற நேரத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதே அரசுக்கு வெற்றிதான்’ என்று அந்த டீம் அறிக்கை கொடுத்துள்ளதாம். இது முதல்வருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.”

“எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் உரையாடி இருக்கிறாரே?”

“ம்! எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமரே தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அந்த வகையில்தான் தி.மு.க தலைவருக்கும் பேசியிருக்கிறார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் நடந்துள்ளன. அரசியல் ஒன்றும் பேசிக்கொள்ள வில்லையாம். ஏப்ரல் 8-ம் தேதியன்று நடக்கவுள்ள கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இயலாது என்றும், தனக்குப் பதிலாக டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.”

“ம்... தமிழகத்தின் நிதி நிலவரம் எப்படி இருக்கிறது?”

“தமிழக அரசின் நிதிநிலை ஏற்கெனவே மோசமாக இருந்துவந்தது. இப்போது கொரோனாவால் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம். அறிவித்த திட்டங்களைச் செயல் படுத்துவதில்கூட சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். மத்திய அரசு மனதுவைத்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் சொல்லி இருக்கின் றனர். ‘மாற்று ஏற்பாடு ஏதாவது செய்யுங்கள். மத்திய அரசிடமிருந்து பெரிதாக எதையும் இப்போது எதிர்பார்க்க முடியாது’ என்கிற யதார்த்தத்தைச் சொல்லியிருக்கிறார் முதல்வர்” என்ற கழுகார், சட்டென அழைப்பைத் துண்டித்தார்.

மிஸ்டர் கழுகு: மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு... விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி?

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத முன்னாள் அமைச்சர்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை பூர்வீகமாகக்கொண்ட தொழிலதிபர் ஒருவர், வெளிநாட்டிலிருந்து கடந்த வாரத்தில் தமிழகத்துக்கு வந்தார். 71 வயது நிரம்பிய அவர், சென்னை மண்ணடியில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு ஏப்ரல் 2-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின்போதே இறந்துவிட்டார். அவரின் உடல், கீழக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சரும் மருத்துவருமான மணிகண்டன், தன் ஆதரவாளர்கள் சிலருடன் அந்த நிகழ்வில் பங்கேற்றார்.

அந்தத் தொழிலதிபருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக அவரின் ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பிவைத்திருந்தது, ஸ்டான்லி மருத்துவமனை. அந்த ஆய்வு முடிவு, ஏப்ரல் 4-ம் தேதிதான் வந்திருக்கிறது. அதில், இறந்துபோன தொழிலதிபர் கொரோனா தொற்றுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. தொடர்ந்து கீழக்கரை, சின்னக்கடை தெருவுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்ததோடு, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு கொரோனோ தடுப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தி யுள்ளனர். ஆனால், மணிகண்டன் உட்பட அந்தத் தொழிலதிபரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் எவரையும் இதுவரை சோதனைக்கு உட்படுத்தவில்லை. அதனால், கீழக்கரைப் பகுதியினர் நோய்த்தொற்று அச்சத்தில் இருக்கின்றனர்.

ஊரடங்கில் நிகழ்ந்த மரணம்... நீதி கேட்க அச்சம்?

துரை கருப்பாயூரணியில் காவல் துறையினர் தாக்கியதில் அப்துல்ரகீம் என்பவர் மரணமடைந்ததாக அந்தப் பகுதி மக்கள் ஏப்ரல் 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். ஆனால், சில மணி நேரத்தில் ‘அவர் இயற்கையாக மரணம் அடைந்துவிட்டார்’ என்று அவர் குடும்பத்தினர் உடலை வாங்கிக்கொள்ளச் சம்மதித்தனர். `‘போலீஸ் தாக்கியதில் கீழே விழுந்துதான் அப்துல் ரகீம் இறந்தார்’’ என்று சொல்லும் சமூக ஆர்வலர்கள், “தற்போதுள்ள பதற்றமான சூழலில் நீதி கேட்பதால் எதுவும் நடக்காது என்று அவருடைய குடும்பத்தினர் பயப்படுகின்றனர். சென்னையில் இருக்கும் அவர் மகன் உடனே கிளம்பி வர முடியாத சூழல். `கடவுள் விதித்தது இதுதான் என மனதைத் தேற்றிக்கொண்டு, அவரை நல்லடக்கம் செய்துகொள்கிறோம்’ என்று கூறிவிட்டனர்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு