Published:Updated:

மிஸ்டர் கழுகு: என்னையும் கட்சியைவிட்டு நீக்குங்கள்! - ஏன் பொங்கினார் பன்னீர்?

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மும்பைக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கும் ஒரே சமயத்தில் பறந்திருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: என்னையும் கட்சியைவிட்டு நீக்குங்கள்! - ஏன் பொங்கினார் பன்னீர்?

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மும்பைக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கும் ஒரே சமயத்தில் பறந்திருக்கிறார்கள்.

Published:Updated:
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

கேபினுக்குள் என்ட்ரி கொடுத்த கழுகார், “ஏப்ரல் 6 அன்று சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் ஏகத்துக்கும் ரணகளக் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன...” என்று எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் உரையாடலைத் தொடங்கினார்...

“ஆரம்பத்தில் சுமுகமாக ஆரம்பித்த கூட்டம், நேரம் செல்லச் செல்லத்தான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இரண்டாம் கட்ட உட்கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், டி.வி நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க-வினர் பங்கேற்பது குறித்தும் ஆலோசனை நடத்துவதாகச் சொல்லித்தான் கூட்டம் போட்டிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது குறித்துப் பேச்சு திரும்பியிருக்கிறது... ‘தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் மேல் நிறைய புகார்கள் வருகின்றன. அவரை நீக்க வேண்டும்’ என்று அப்போது பன்னீர் பஞ்சாயத்தை ஆரம்பித்துவைத்திருக்கிறார். உடனே கே.பி.முனுசாமி, ‘அப்படியென்றால் தேனி மாவட்டச் செயலாளர் சையது கானையும் நீக்கிவிடலாமா?’ என்று சூடாக கேட்டிருக்கிறார். உடனே கொதித்துவிட்டார் பன்னீர்.”

மிஸ்டர் கழுகு: என்னையும் கட்சியைவிட்டு நீக்குங்கள்! - ஏன் பொங்கினார் பன்னீர்?

“ஓ... பன்னீருக்குக் கோபம்கூட வருமா?”

“இந்த நக்கல்தானே வேண்டாம் என்பது... ‘சையது கான் என் வீட்டில்தான் கூட்டம் போட்டார். அவரை நீக்க வேண்டுமென்றால், என்னையும் கட்சியைவிட்டு நீக்குங்கள்...’ என்று பன்னீர் பொங்கவும் கூட்டத்தில் உஷ்ணம் ஏறியிருக்கிறது. பன்னீருக்கு ஆதரவாகப் பேசிய மனோஜ் பாண்டியன், ‘பெங்களூரு புகழேந்தி எந்தக் கருத்தைச் சொன்னார் என்பதற்காக நீக்கினீர்களோ, அதே கருத்தைத்தான் சி.வி.சண்முகமும் சொன்னார். அவரை ஏன் நீக்கவில்லை?’ என்று அடுத்த வெடியை வீச... சி.வி.சண்முகம் பட்டென்று எழுந்து, ‘என்னைப் பற்றி தேவையில்லாமல் பேச வேண்டாம்... நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று எனக்குத் தெரியும்’ என்று எகிறியிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ‘யார் யாரோ என் மாவட்டத்தில் நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள்... அவர்கள் என் பேச்சைக் கேட்பதில்லை’ என்றிருக்கிறார். உடனே வேலுமணி, ‘ஏன் யாரோ என்று சொல்கிறீர்கள்... நேரடியாக என் பெயரைச் சொல்ல வேண்டியதுதானே!’ என்று கொதிக்க... பதிலுக்கு வைத்தி, “நீங்கள் மட்டும்தான் கட்சி என்று நினைக்கிறீர்களா? ஆளாளுக்கு நாட்டாமை செய்வதற்கு, பேசாமல் அந்தம்மாவே கட்சிக்கு வந்தால்கூட பரவாயில்லை’ என்று சத்தம் போட்டதும், எடப்பாடி ஜெர்க் ஆகிவிட்டார். அப்போது மீண்டும் எழுந்த சி.வி.சண்முகம் கடுமையாக வைத்தியைத் திட்ட ஆரம்பித்தார். இதையடுத்தே, ‘இப்படியொரு கூட்டத்துக்கு என்னை ஏன் கூப்பீட்டீங்க?’ என்று வைத்தி பாதியிலேயே கூட்டத்திலிருந்து கிளம்பிவிட்டார்.”

“அப்புறம்...”

“அப்புறம் என்ன... வழக்கமான சமாதானப் படலம்தான்... ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் போனில் சமாதானம் செய்த பிறகு மீண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார் வைத்தி. அதன் பிறகுதான் ‘மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 முதல் 24 வரை நடைபெறும்’ என்று அறிவித்திருக்கிறார்கள். இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும் ஒரு காமெடி நடந்துள்ளது. கூட்டத்தில் நிரந்தர அவைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக பேச்சு எழுந்தபோது, தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம், ‘அண்ணே கொஞ்சம் வெளியே உட்காருங்க’ என்று கூட்ட அறையிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்... ‘எம்.ஜி.ஆர் காலத்து கட்சிக்காரன், என்னையே ஒன்றரை மணி நேரம் வாசல்ல உட்காரவெச்சுட்டாங்க’ என்று புலம்பியிருக்கிறார் உசேன்!”

“இரட்டை இலைச் சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டு, ஏப்ரல் 7-ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாரே?”

“பாவம், அரசியல் விளையாட்டில் ஓர் உயிர் பறிபோயிருக்கிறது. கோபிநாத்தின் சீனியரான மோகன்ராஜ் என்பவர் அந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். தவிர மற்றொரு வழக்கில் மோகன்ராஜைக் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் டெல்லி போலீஸ் கைதுசெய்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததால், தனக்கும் நெருக்கடிகள் ஏற்படுமோ என்கிற மன அழுத்தத்தால்தான் கோபிநாத் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கோபிநாத்தின் செல்போனைக் கைப்பற்றிய போலீஸார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். அதைப் பருகியபடியே உரையாடலைத் தொடர்ந்தார் கழுகார்...

“பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மும்பைக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கும் ஒரே சமயத்தில் பறந்திருக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பிஹெச்.டி ஆய்வு மேற்கொள்கிறார் அண்ணாமலை. அதற்காகத்தான் அவர் மும்பைக்குச் சென்றாராம். ஆளுநரின் டெல்லி பயணத்தில் அரசியல் இல்லை என்று சொன்னாலும் விவகாரம் வேறு திசையிலும் பயணிக்கிறது... அதாவது, தமிழகத்தில் பல்கலைக்கழக விவகாரங்களைக் கவனிப்பதற்காக பிரசன்ன ராமசாமி என்பவரைத் தனது துணைச் செயலாளராக நியமித்திருக்கிறார் ஆளுநர். ‘மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் நிதி எவ்வளவு, அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்?’ என்று ஒவ்வொரு பல்கலைக்கழகப் பதிவாளரிடமும் அறிக்கை கேட்டிருக்கிறார் பிரசன்ன ராமசாமி. தவிர, மாதவரம் கால்நடைப் பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கும் முறைகேடு தொடர்பாகவும் ஆளுநருக்குச் சில கோப்புகள் வந்திருக்கின்றன. இவை பற்றியெல்லாம் பிரித்து மேய ஆரம்பித்துவிட்டார் ஆளுநர். இதையெல்லாம் டெல்லியுடன் கலந்து பேசத்தான் அவர் விமானம் ஏறியிருக்கிறார் என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.”

மனோஜ் பாண்டியன், சி.வி.சண்முகம், வைத்திலிங்கம், வேலுமணி, தமிழ்மகன் உசேன்
மனோஜ் பாண்டியன், சி.வி.சண்முகம், வைத்திலிங்கம், வேலுமணி, தமிழ்மகன் உசேன்

“பா.ஜ.க நிர்வாகிகளும் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்களே?”

“ம்... பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனும் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள். மாநிலக் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் அண்ணாமலை, தான் கைகாட்டுபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இது குறித்து மேலிடத்தில் புகார் தெரிவிக்கத்தான் அவர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.”

“கோட்டைத் தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா?”

“அவை இல்லாமலா! ஆளுங்கட்சியினர் கோட்டையின் சில அதிகாரிகள்மீது கடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு ஒத்துவராத அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘மானியக் கோரிக்கை முடியட்டும், பார்க்கலாம்’ என்று பதில் வந்ததாம். அநேகமாக மருத்துவம், உள்துறை, குடிநீர், நகராட்சி உள்ளிட்ட துறைகளில் மாற்றங்கள் இருக்கலாம். இன்னொரு பக்கம் நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான செந்தாமரை, நாகராஜ் இடையே ஈகோ போர் உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக செந்தாமரைக்கு எந்தப் பணியும் வழங்கப்படவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்ட சினிமா, நீர்ப்பாசனம் தொடர்பான பணிகளை வேறு அதிகாரிகளுக்கு நாகராஜ் கொடுத்துவருவதால், கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் செந்தாமரை. இது குறித்து அவர் வருவாய்த்துறை அமைச்சர், வருவாய்த்துறைச் செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்தச் சலனமும் இல்லை. அதேநேரம் நாகராஜ் தரப்பினரோ, ‘செந்தாமரை, மேலதிகாரியின் உத்தரவுகளை மதிப்பதில்லை. தன்னிச்சையாகச் செயல்படுகிறார்’ என்று புகார் வாசிக்கிறார்கள். விரைவில் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று பார்ப்போம்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* வேலுமணிக்கு வலதும் இடதுமாக இருந்த இருவரை நோக்கி விசாரணைக் கரங்கள் நீள்கின்றன. அவர்கள் இருவரும் நியூசிலாந்துக்கு அடிக்கடி பயணப்படுவதும், அங்கிருந்து சிங்கப்பூர் வழியாகத் திரும்பி வருவதுமாக இருக்கிறார்கள். விரைவில் இருவரும் வளைக்கப்படலாம் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை பட்சி!

* போலி மதிப்பெண் பட்டியல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. வடமாநில புரோக்கர்கள் உதவியுடன் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து மத்திய அரசுப் பணியில் 200 பேர் சேர்ந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. விரைவில் விவகாரம் வெடிக்கலாம்.

* மேற்கு மண்டல மூத்த ஐ.பி.எஸ் ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றிய ஜூனியர் ஐ.பி.எஸ் அதிகாரிமீது இளம்பெண் ஒருவர் கொடுத்த வில்லங்கப் புகார் கடிதத்தை மீடியாக்களிடம் வெளியிட்டார். இதையடுத்து, அந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியின் லீலைகளை வெளியிடத் தயாராகிவருகிறது எதிர் டீம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism