Published:Updated:

மிஸ்டர் கழுகு: அமித் ஷாவுடன் மிட்நைட் மீட்டிங்!

இரண்டாவது இடத்தில், தேர்தல் ஆணையராக இருக்கும் சுஷில் சந்திரா அடுத்த தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்கவிருக்கிறாராம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வியர்க்க விறுவிறுக்க வந்த கழுகாரை கூலாக்க புளூபெர்ரி கோலி சோடாவை உடைத்துக் கொடுத்தோம். சோடாவைப் பருகிக்கொண்டே, கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “கச்சிதமாக இருக்கிறது... அ.தி.மு.க முகாமில் நிலவும் குழப்பங்கள் தொடர்பாக நானும் ஒரு தகவல் சொல்கிறேன்...” என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘பன்னீரின் மகன் ரவீந்திரநாத் பா.ஜக தரப்பில் சில காய்நகர்த்தல்களைச் செய்துவருகிறார். பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் இருவரிடம் பேசிய ரவீந்திரநாத், ‘அ.தி.மு.க-வில் முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அப்பாவிடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவர் சசிகலா தரப்பினரைக் கட்சிக்குள் கொண்டுவந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்று ஏற்கெனவே உங்களிடம் சொல்லியிருந்தேன். ஆனால், நீங்கள் கேட்கவில்லை. எடப்பாடியிடம் அதிகாரத்தைக் கொடுத்தீர்கள். அவரோ தேர்தலின்போது, பா.ஜ.க-வால் நமது கூட்டணிக்கு பாரம் என்றே விமர்சித்துவந்தார். உங்களுக்கு ஒத்துழைப்பும் தரவில்லை. தேர்தல் கருத்துக்கணிப்புகளும் நமக்குச் சாதகமாக இல்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை... மீண்டும் அப்பாவிடம் கட்சியின் அதிகாரம் வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நமது பொது எதிரியான தி.மு.க-வை ஒரு கை பார்த்துவிடலாம்’ என்று தூபம் போட்டிருக்கிறார். பா.ஜ.க தரப்பிலோ, ‘தேர்தல் முடிவுகள் வரட்டும்... யோசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.”

“ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளால் தி.மு.க நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாமே?”

“உண்மைதான்... கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் மக்களுக்கு தி.மு.க-வினர் நலத்திட்ட உதவிகள் செய்தனர். அதற்கே மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏகப்பட்ட செலவுகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து ஐபேக் உத்தரவுப்படி மாவட்டம்தோறும் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களுக்கு ஏகத்துக்கும் செலவு எகிறியது. அடுத்து தேர்தல் வந்துவிட்டது... செலவுகள் பிய்த்துக்கொண்டு போய்விட்டன. இப்படி ஓவராகச் செலவழித்து தி.மு.க நிர்வாகிகள் பலரும் சோர்வுடன் இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில், ‘இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகியிருப்பதால், நாம் நலத்திட்ட உதவிகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்’ என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். மீண்டும் செலவை இழுத்துவிட்டுவிடுவாரோ எனக் கட்சியினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.’’

“வாக்களிக்க முடியாமல் கண் கலங்கினாராமே சசிகலா?”

“ஆமாம். தேர்தல் நாளன்று மிகவும் சோகமாகக் காணப்பட்டாராம் சசி. ‘2016 தேர்தலில் அக்கா இருந்தபோது ஓட்டுப் போட்டேன். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது சிறைச்சாலையில் இருந்தேன். 2021 சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடலாம் என்று ஆர்வமாக இருந்தேன். ஆனால், நான் தப்பித்தவறிக்கூட தேர்தலில் போட்டியிட்டுவிடக் கூடாது என்று சதி செய்து வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்கிவிட்டார்களே...’ என்று கண்கலங்கியிருக்கிறார்.”

“பெயர் நீக்கப்பட்ட விஷயம் அவருக்கு எப்போது தெரியுமாம்?”

“சசிகலாவின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் அனைத்தும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சிக்கிக்கொண்டன. அந்த வீட்டை அரசு கையகப்படுத்தியதால், அவற்றை வெளியில் எடுக்க முடியவில்லை. அவற்றின் ஜெராக்ஸ்கூட சசிகலாவிடம் இல்லையாம். வருமான வரித்துறை தொடர்பான வழக்குகள் அனைத்திலும் சசிகலா தன் நிரந்தர முகவரியாக போயஸ் கார்டன் வீட்டையும், தற்காலிக முகவரி என்று பெங்களூரு சிறைச்சாலையையும் குறிப்பிட்டு வந்தாராம். இந்த நிலையில், மார்ச் 16-ம் தேதியன்று திடீரென சசிகலாவுக்கு வாக்காளர் அட்டை நினைவுக்கு வந்திருக்கிறது. ஆன்லைனில் வாக்காளர் பட்டியலைப் பார்த்தபோது, அதில் அவரது பெயர் இல்லை. உடனே, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அவரும் பார்த்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயரைச் சேர்க்கச் சொல்லி, மார்ச் 17-ம் தேதியன்று தலைமைச் செயலகம் சென்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். வாக்காளர் பட்டியலில் புதியவர்களைச் சேர்க்க மார்ச் 9-ம் தேதியுடன் கெடு முடிந்துவிட்டதாக சாகு சொல்லியதால் வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஆனாலும், ‘எப்போது சசிகலா பெயரை நீக்கினார்கள்?’ என்கிற விவரத்தைத் தீவிரமாக விசாரித்துவருகிறது சசிகலா தரப்பு. பெயர் நீக்கம் செய்யப்படுவது தொடர்பான தகவலை சிறையில் இருந்த சசிகலாவுக்கு சட்டப்படி நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தியிருக்க வேண்டுமாம். அதைச் செய்யவில்லை என்பதுதான் அவர் தரப்பின் வாதம். வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியதுமே அங்கிருந்த சசிகலா உள்ளிட்ட 16 பேரின் பெயர்களை நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றம் போகவிருக்கிறாராம் சசிகலா.”

மிஸ்டர் கழுகு: அமித் ஷாவுடன் மிட்நைட் மீட்டிங்!

“தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ விரைவில் ஓய்வுபெறவிருக்கிறாராமே?”

“ஆமாம். ஏப்ரல் 12-ம் தேதியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இரண்டாவது இடத்தில், தேர்தல் ஆணையராக இருக்கும் சுஷில் சந்திரா அடுத்த தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்கவிருக்கிறாராம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியன்று இவர்தான் தலைமைப் பதவியில் இருக்கப்போகிறார் என்கிறார்கள். தேர்தல் கமிஷன் பதவிக்கு வரும் முன், மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக இவர் இருந்தபோதுதான், தமிழகத்தில் சில ரெய்டுகள் நடைபெற்றன. அதற்கு பச்சைக்கொடி காட்டியவர் சுஷில் சந்திராதான் என்கிறார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த ரெய்டுகளில் சிக்கிய ஆவணங்களைப் பரிசீலித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்போதே சொல்லிவருகிறாராம் சுஷில் சந்திரா.”

சுஷில் சந்திரா
சுஷில் சந்திரா

“பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்கிறீர்!”

“அமித் ஷா தமிழக தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு வந்தபோது சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது அவசரமாக முதல்வர் பழனிசாமி தரப்பிலிருந்து அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். இரவு 12 மணிக்கு மேல் தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கிறார் அமித் ஷா. கறுப்பு நிற காரில் முதல்வரும், அவரின் மகன் மிதுனும் ஹோட்டலுக்கு வந்து அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது எடப்பாடி தரப்பில், அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்குகள் விஷயத்தில் சிக்கல் எதுவும் வராமல் பார்த்துக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டதாம். கூடவே, சசிகலா தொடர்பாகவும் சில வேண்டுகோள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அமித் ஷா, புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தாராம்!”

மிஸ்டர் கழுகு: அமித் ஷாவுடன் மிட்நைட் மீட்டிங்!

“அமித் ஷாவை இன்னொரு முக்கியப் புள்ளியும் சந்தித்தாராமே?”

“தகவல் உமக்கும் வந்துவிட்டதா... பாஷ்யம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் அபிநவ் அதே இரவில் அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பைப் பற்றி அபிநவ் ‘அமித் ஜியிடம் என்ன ஆனாலும் தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது எனச் சொல்லியிருக்கிறேன்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல, அந்தத் தகவல் அப்படியே அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது. ஏற்கெனவே, பாஷ்யம் மீது கடுப்பில் இருந்த தி.மு.க தலைமை இன்னும் உஷ்ணமாகிவிட்டதாம். பாஷ்யம் நிறுவனத்தின் கோயம்பேடு கட்டுமான விவகாரம் பற்றி ஆளுநரிடம் தி.மு.க புகார் தருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்!”

“ஆளுநர் என்றதும் நினைவுக்கு வருகிறது... புதிய துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர்மீது சந்தேகம் கிளப்பியிருக்கிறதே தி.மு.க?”

“ஆமாம். காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்குப் புதிதாக துணைவேந்தர்களை நியமித்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தவிர, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்திருக்கிறது மத்திய அரசு. இதன் பின்னணி குறித்தே சந்தேகம் எழுப்பியிருக்கிறது தி.மு.க தரப்பு.”

கிரிஜா வைத்தியநாதன்
கிரிஜா வைத்தியநாதன்

“என்னவாம்...”

“தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு. ஆனால், தேர்தல் முடிந்தவுடனேயே இப்படி அவசர அவசரமாக துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதற்குப் பின்னணியில் வில்லங்கப் பரிவர்த்தனை எதுவும் இருக்கிறதோ என்பதுதான் தி.மு.க தரப்பின் சந்தேகம். ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோதே மாநில அரசிடம் ஆளுநர் ஆலோசிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் ஏகப்பட்ட முட்டல் மோதல்கள் ஏற்பட்டன. இந்தநிலையில், இப்போது அவசர நியமனங்கள் எதற்கு என்பதுதான் தி.மு.க-வின் கேள்வி.

“கன்னியாகுமரி காங்கிரஸில் புகைச்சல் என்கிறார்களே?”

தாரகை கட்பர்ட்
தாரகை கட்பர்ட்

“கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேஷ்குமார் மாற்றப்பட்டு, கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தாரகை கட்பர்ட் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கே தெரியாதாம். காங்கிரஸ் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலையிட்டு இதைச் செய்திருக்கிறார் என்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள். ‘தினேஷ் குண்டு ராவ் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவரை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஒரு டீம் டெல்லி சென்றிருக்கிறது” என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு