Published:Updated:

மிஸ்டர் கழுகு: வாரிசுக்கு எந்தத் துறை? - ஆழ்ந்த யோசனையில் ஸ்டாலின்!

உதயநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, ஸ்டாலின்

அ.தி.மு.க-வின் பலவீனம் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்’ என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறார் செங்கோட்டையன்.

மிஸ்டர் கழுகு: வாரிசுக்கு எந்தத் துறை? - ஆழ்ந்த யோசனையில் ஸ்டாலின்!

அ.தி.மு.க-வின் பலவீனம் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்’ என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறார் செங்கோட்டையன்.

Published:Updated:
உதயநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி, ஸ்டாலின்

கழுகார் உள்ளே நுழைந்ததும் தயாராகிக்கொண்டிருந்த கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டவர், “அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் விவகாரத்தில் என்னிடமும் ஒரு தகவல் இருக்கிறது... அதற்காக நான் பங்கெல்லாம் கேட்க மாட்டேன்” என்று சிரித்தபடியே உரையாடலைத் தொடங்கினார்...

“சென்னையில் தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் அசோக், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் பன்னீர் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர தி.நகர் சத்யா, பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, விருகை ரவி, ராஜேஷ் ஆகியோர் அடங்கிய ஐவர் அணி எடப்பாடி, பன்னீர் என இரண்டு பக்கமும் ஆதாயம் பார்க்கிறது. இந்த ஐவர் அணியைத் தன்பக்கம் வளைக்க பன்னீர் தரப்பு தீவிரம் காட்டிவருகிறது. அதற்காக, ‘நிர்வாகிகள் நியமனத்தில் உங்களுக்குச் சாதகமானவர்களை பகுதி மற்றும் வட்டச் செயலாளர்களாக நியமித்துக்கொள்ளலாம்’ என்று பன்னீர் தரப்பிலிருந்து ஐவர் அணிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தவிர திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி தன் இரண்டு மகன்களில் ஒருவரை பகுதிச் செயலாளராகவும், மற்றொருவரை வட்டச் செயலாளராகவும் நியமித்திருக்கிறார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோர் தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஆட்களாகப் பார்த்து நியமித்திருக்கிறார்கள்.”

“பங்கைப் பிரி என்பது இதுதானோ... கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவை விசாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றனவே?”

மிஸ்டர் கழுகு: வாரிசுக்கு எந்தத் துறை? - ஆழ்ந்த யோசனையில் ஸ்டாலின்!

“ஆமாம்... அந்தச் சம்பவத்தின்போது சசிகலா சிறையில் இருந்தாலும், கொடநாடு பங்களா சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. தவிர, ஜெயலலிதா ஒவ்வொரு முறை கொடநாடு வரும்போதும் உடன் சென்றவர் சசிகலா. இதன் அடிப்படையில் அந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக பங்களாவில் என்னென்ன பொருள்கள் இருந்தன, சம்பவத்துக்குப் பிறகு என்னென்ன பொருள்கள் காணாமல்போயிருக்கின்றன, ஆவணங்கள் ஏதேனும் தொலைந்துபோயினவா உள்ளிட்ட கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்படலாம் என்கிறார்கள்.”

“ம்ம்ம்... என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். சட்டப்பேரவையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதை தி.மு.க-வினரே வரவேற்றிருக்கிறார்களே... கவனித்தீரா?”

“கவனித்தேன். ‘அ.தி.மு.க-வின் பலவீனம் பா.ஜ.க-வுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்’ என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறார் செங்கோட்டையன். அதனால்தான், ‘தமிழ்நாட்டைத் திராவிட இயக்கங்கள்தான் ஆளும். மற்ற யாராலும் ஆள முடியாது’ என்று அவர் பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் இப்படிப் பேசியதற்காக தி.மு.க-வினர் மேஜையைத் தட்டி வரவேற்பு அளித்தாலும், எடப்பாடி அண்ட் கோவுக்கு உள்ளூர சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே பன்னீர், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் தனி ரூட்டில் செல்லும் நிலையில் இவர் ஏதும் தனி ரூட் எடுத்திருக்கிறாரா என்று ஆழ்ந்த யோசனையில் உள்ளது எடப்பாடி குரூப்.”

“வாரிசுக்கு முடிசூட்டும் விஷயத்தில் செனடாப் சாலை ஆழ்ந்த யோசனையில் இருக்கிறதாமே!”

“உதயநிதியைத்தானே சொல்கிறீர்கள்... மானியக் கோரிக்கை மசோதாக்கள் மீதான விவாதங்கள் முடிந்த பிறகு, தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓராண்டு கொண்டாட்டங்கள் மே மாதம் களைகட்டவிருக்கின்றன. அநேகமாக ஜூன் அல்லது ஜூலையில் உதயநிதிக்கு மகுடம் சூட்டப்படலாம் என்கிறார்கள். அதேசமயம், அவரது படங்களின் ஷூட்டிங் முடிவதற்காகவெல்லாம் காத்திருக்க முடியாது என்கிறதாம் திருமதி தரப்பு. இதையொட்டி உள்ளாட்சித்துறையை ஒதுக்க முதல்வர் தரப்பு நினைத்தாலும், ‘அந்தத் துறையில் மத்திய அரசின் நிதி அதிக அளவு புழங்குவதால், எதிர்காலத்தில் மத்திய விசாரணை ஏஜென்சிகளால் சிக்கல் ஏற்படலாம். எனவே, துறையை ஒதுக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்று சீனியர்கள் சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: வாரிசுக்கு எந்தத் துறை? - ஆழ்ந்த யோசனையில் ஸ்டாலின்!

“ஓ... இப்படியெல்லாம் யோசிக்கிறார்களா!”

“இருக்காதா பின்னே... விஷயத்தைக் கேளும். உள்ளாட்சிக்கு பதிலாக உயர்கல்வியைக் கொடுக்கலாம் என்று ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம் முதல்வர். அதேநேரம் சீனியர் அமைச்சர்கள் பலரும், ‘உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், கலைஞர் இருந்தபோது கட்சிக்குள் ஜனநாயகம் இருந்தது. ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்ட போதெல்லாம் வீரபாண்டி ஆறுமுகம், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட சீனியர்கள் தங்கள் விமர்சனங்களை நேரடியாக வைத்தனர். ஆனால், இப்போது மூத்த அமைச்சர்களே உதயநிதியைக் கண்டால் ஒதுங்கிப்போகும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அமைச்சரானால் அவரது அதிகாரம் இன்னும் அதிகரிக்குமே’ என்று முணுமுணுக்கிறார்கள்!”

“இங்கிருக்கும் முணுமுணுப்பு போதாதென்று தென் மாவட்டத்திலும் வாரிசு தொடர்பாக முணுமுணுப்பு எழுந்துள்ளதே?”

“உமக்கும் தகவல் வந்துவிட்டதா... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் கட்சிக்குள் ஏக ஆதிக்கத்தைச் செலுத்துகிறாராம். சமீபத்தில் அருப்புக்கோட்டையில் அவர் நடத்திய மக்கள் குறை தீர் முகாம் கட்சியினரிடையே சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. ‘கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பொறுப்பிலும் ரமேஷ் இல்லை. 2016-ல் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்ந்த ரமேஷ், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அப்பாவுடன் இணைந்துகொண்டார். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையிலும், போஸ்டர்களில் ‘இளைஞரணி’ என்ற வார்த்தையைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்கிறார். சீனியர்களையும் மதிப்பதில்லை... இப்படியே போனால் கட்சிக்காக உழைத்தவர்கள் தெருவில் நிற்கவேண்டியதுதான்’ என்று குமுறுகிறார்கள் கட்சி நிர்வாகிகள். இதுபோக, தன் தந்தை வகிக்கும் வருவாய்த்துறையிலும் ரமேஷின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்கள்.”

ரமேஷ்
ரமேஷ்

“தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்கிறார்களே?”

“தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன், சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன், ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர் பாட்ஷா ஆகியோர் மீது கட்சியினர் அதிருப்தியில் இருப்பதால் மானியக் கோரிக்கை விவாதம் முடிந்ததும், அவர்கள் அநேகமாக மாற்றப்படலாம்” என்ற கழுகாருக்கு சூடாக பாதாம் பாலைக் கொடுத்தோம். பாலைப் பருகியபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“சத்தியமூர்த்தி பவனிலும் கரைச்சல் உச்சத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது கட்சியின் தலைவர் அழகிரியே ஏக கடுப்பில் இருக்கிறார். அவரை சட்டமன்றப் பொறுப்புக்குக் கொண்டுவர தலைமை முடிவு செய்தபோதே அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு, கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு இருந்தாலும், பிரதிநிதித்துவ அடிப்படையில் செல்வப்பெருந்தகைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதிருந்தே தனது ஆதிக்கத்தைக் கட்சிக்குள் செலுத்திவருகிறாராம். இப்போது இளைஞரணித் தலைமைப் பொறுப்புக்கும் அவரின் ஆதரவாளர் லெனின்தான் வந்திருக்கிறார். இதையடுத்து, ‘தலைவரின் பேச்சைக்கூடக் கேட்காமல் மிரட்டும் தொனியில் பேசுகிறார். சமீபத்தில் அந்தமானில் கைதுசெய்யப்பட்ட ஓ.வி.ஆர் போன்ற பலரையும் இவர்தான் கட்சியில் சேர்த்துவருகிறார்’ என்ற அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன” என்ற கழுகார் “கடந்த இதழில் பல்கலைக்கழக முறைகேடுகளைக் கண்காணிக்க பிரசன்ன ராமசாமி என்பவரை ஆளுநர் நியமித்திருப்பதாகச் சொன்னேன் அல்லவா... இப்போது வரை அவருக்கு 112 புகார்கள் வந்திருக்கின்றன. உமது நிருபரை விசாரிக்கச் சொல்லும்!” என்றபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னையில் புகழ்பெற்ற கோயில் ஒன்றின் அறங்காவலர்குழுவின் பஞ்சாயத்து காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது. ஆனால், அதை சைக்கிளில் வலம்வரும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் எதிர்த்தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு கிடப்பில் போட்டிருக்கிறார்!

* 2018-19 காலகட்டத்தில் திருநெல்வேலியில் நடந்த ஆற்று மணல் திருட்டு தொடர்பாக, கனிமவளத்துறை உதவி இயக்குநர் சஃபியா என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த மணல் திருட்டு விவகாரத்தில், தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதியரின் பெயர்கள் அடிபடுவதால், சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் அனல் பறக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism