அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மிகப்பெரிய பதவி! - ஜெர்க் ஆன துரைமுருகன்...

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
துரைமுருகன்

சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்காதவர் களின் பட்டியலை அந்தக் கட்சித் தலைமை ஏற்கெனவே எடுத்துவிட்டது.

“இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று வாழ்த்து மழை பொழிந்தபடியே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு புதினா, இஞ்சி, நாட்டுச்சர்க்கரை கலந்த எலுமிச்சை ஜூஸ் கொடுத்தோம். “அருமை... அருமை” என்று பருகியபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: மிகப்பெரிய பதவி! - ஜெர்க் ஆன துரைமுருகன்...

“சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்காதவர் களின் பட்டியலை அந்தக் கட்சித் தலைமை ஏற்கெனவே எடுத்துவிட்டது. அதில், சில மாவட்டங்களில் நடவடிக்கையும் பாயத் தொடங்கிவிட்டது. மாவட்டங்களில் பணப்பட்டுவாடா சரியாக நடைபெற்றதா என்றும் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் விசாரித்து வருகிறார்கள். உதாரணத்துக்கு, தேர்தல் முடிந்த மறுநாளே களமிறங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தொகுதிப் பொறுப்பாளர்கள் முதல் பூத் கமிட்டியினர் வரை அனைவரையும் வரவழைத்து, ‘வார்டு தோறும் எவ்வளவு பேருக்குப் பணம் வழங்கினோம், எவ்வளவு தூரம் அது போய்ச் சேர்ந்தது?’ என்று விசாரணை நடத்த ஆரம்பித்தார். அப்போது நிர்வாகிகள் பணம் கொடுத்த விவரங்களைக் காட்டினார்கள். பட்டுவாடா சரியாக நடக்காதது பற்றித் தனக்கு வந்த சில ரகசியத் தகவல்களைச் சொல்லி விளக்கம் கேட்டார் அமைச்சர். அதற்கு நிர்வாகிகளிடம் பதில் இல்லை. ‘எங்கே, எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். பல பகுதிகளுக்குப் பணம் போய்ச் சேரவில்லை என்று எனக்கே மக்கள் போன் போட்டுச் சொல்லிவிட்டார்கள். உங்களில் எத்தனை பேர் புது பைக், கார் புக் செய்திருக்கிறீர்கள் என்கிற விவரமும் என்னிடம் இருக்கிறது. ஒழுங்கு மரியாதையாக நீங்கள் அமுக்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுங்கள்... இல்லையென்றால், மே 2-ம் தேதிக்குப் பிறகு கட்சித் தலைமை வேறு சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் அமைச்சர்.”

மிஸ்டர் கழுகு: மிகப்பெரிய பதவி! - ஜெர்க் ஆன துரைமுருகன்...

“தி.மு.க-விலும் விசாரணை நடக்கிறதாமே?”

“ஆமாம். தி.மு.க மேலிடத்திலிருந்தும் மாவட்டவாரியாக தேர்தலின்போது தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள், கொடுத்த பணத்தை அமுக்கியவர்கள் பட்டியல் கேட்கப்பட்டிருக்கிறதாம். கட்சிக்கும், கட்சி வேட்பாளர்களுக்கும் துரோகம் செய்தவர்களை வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தூக்கியெறிய ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாராம். ‘கட்சிக்கு துரோகம் செய்தவர்கள்மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நான் எடுக்கப்போகும் நடவடிக்கைக்குப் பிறகு, கட்சி புத்துணர்வுடன் இயங்கும்’ என்று ஸ்டாலின் பேசிவருவதை அறிந்து, தேர்தலின்போது சுணக்கம் காட்டியவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.”

“தி.மு.க-வில் அமைச்சரவைப் பட்டியல் விவகாரம் பரபரப்பாகப் பேசப்படுகிறதே?”

மிஸ்டர் கழுகு: மிகப்பெரிய பதவி! - ஜெர்க் ஆன துரைமுருகன்...

“ஆமாம். ‘அமைச்சர்கள் பட்டியல் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டு, கிச்சன் கேபினெட்டின் அஞ்சறைப் பெட்டியில் பத்திரமாகப் பூட்டிவைக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள விவரங்களை அறிய சீனியர்கள் சிலர் கிச்சனை முற்றுகையிட்டுவருகிறார்கள்’ என்று ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். ஆனாலும், சில விவரங்கள் கசியத் தொடங்கியுள்ளன. தற்போது அந்தப் பட்டியலில் 31 பேர் இருக்கிறார்களாம். அதில் தனது பெயர் இல்லை என்று வந்த தகவலால் பதறிப்போன கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், கொரோனா சிகிச்சையில் இருந்தபடியே ஸ்டாலினுக்கு போனைப் போட்டு, ‘என்னங்க தலைவரே... ஏதேதோ கேள்விப்படுறேன்... மினிஸ்டர் லிஸ்ட்டுல என் பேர் இல்லைங்கிறாங்க... எனக்கு ரொம்ப அசிங்கமா போயிடும்ப்பா’ என்கிறரீதியில் பேசினாராம். ஸ்டாலினோ பொறுமையாக, ‘என்னங்க அண்ணே இப்படிக் கேட்டுட்டீங்க... உங்களைப் போய் கைவிடுவேனா? உங்களுக்கு மிகப்பெரிய பதவி காத்திருக்கிறது’ என்று சொன்னாராம். இதைக் கேட்டு மேலும் ஜெர்க் ஆன துரைமுருகன் அப்போது ஸ்டாலினிடம் எதையும் வெளிக்காட்டாவிட்டாலும் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘சபாநாயகர் பதவியைக் கொடுத்து ஓரங்கட்டப் பார்க்குறாங்கப்பா’ என்று புலம்பிவருகிறாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவாலயத்தில் நடந்த மாதிரி சட்டசபைக் கூட்டத்தில் சபாநாயகராக அமரவைக்கப்பட்டவர், கடந்த சட்டமன்றத்தில் தி.மு.க கொறடாவாக இருந்த சக்கரபாணி. ‘அவர்தான் இம்முறை சபாநாயகர்’ என்றும் இன்னொரு பக்கம் பேச்சு ஓடுகிறது. எல்லாம் ஸ்டாலினுக்கே வெளிச்சம்.”

“கால்நடைத்துறையில் என்ன கலாட்டா?”

“அதுவா? தமிழகத்தில் உதவி கால்நடை மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், புதிதாக 1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்காக எட்டு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை‌ 800 பேரிடம் வசூல் வேட்டை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலர் ஒருவர் மற்றும் புரோக்கர்கள் சிலர் இந்த மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்களாம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதும் உதவி கால்நடை மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், ஆட்சி மாற்றம் வந்தால் தங்களுக்கு வேலை கிடைக்குமோ... கிடைக்காதோ என்கிற அச்சத்தில், ‘எங்களுக்கு வேலை வேண்டாம். கொடுத்த காசைத் திருப்பிக் கொடுத்தாலே போதும்’ எனக் கேட்டு பெண் அலுவலரை நச்சரித்துவருகின்றனராம். ‘பணத்தை அமைச்சருக்குக் கொடுத்துட்டேன்... அதிகாரிகளுக்குக் கொடுத்துட்டேன்’ என்று அந்தப் பெண் அதிகாரி மழுப்பிவருகிறாராம். விவகாரம் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை!”

“லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல... கொடுப்பதும் குற்றமல்லவா!”

“ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தலமலை செல்லும் வழியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இந்த வழியில் பொதுமக்கள் செல்வதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதே வனப்பகுதியில் ஏராளமான சட்டவிரோத ரிசார்ட்டுகள் முளைத்துள்ளன. இந்த ரிசார்ட்டுகளுக்கு வரும் டூரிஸ்ட்கள் கரன்சியை நீட்டினால் வனத்துறையினர் செக்போஸ்ட்டைத் திறந்துவிட்டு சலாம் அடிக்கிறார்கள். இப்படி ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகள் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன. மேல்மட்ட அதிகாரிகள் வரை கரன்சி பாய்வதால், இந்த விவகாரத்தை யாருமே கண்டுகொள்வதில்லையாம்.”

“பணம் ஃபாரஸ்ட் வரை பாய்கிறது என்று சொல்லும்!”

“வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் போத்திராஜ் என்பவர் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆரம்பநிலையில் இடைக்கால தடைவிதிக்க மறுத்ததுடன், தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இட ஒதுக்கீடு தொடர்பாக கட்சியினரிடமோ, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியோ முதல்வர் விவாதிக்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் கடைசி நேரத்தில் முதல்வர் இதை திடீரென அறிவிப்பாக வெளியிட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்களால் இதைத் தடுக்க முடியாமல், இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆதரவாக டேபிளைத் தட்டி வரவேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தேர்தல் பிரசாரத்துக்காகச் சொந்த மாவட்டங்களுக்குச் சென்ற பிறகுதான் இதன் வீரியம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இதன் பின்னணியில்தான் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றிருக்கிறது!”

மிஸ்டர் கழுகு: மிகப்பெரிய பதவி! - ஜெர்க் ஆன துரைமுருகன்...

“நேரடியாக விஷயத்துக்கு வாரும்...”

“இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருப்பவர் `சீர்மரபினர் சங்கம்’ என்ற அமைப்பில் உள்ளவராம். இவர் உச்ச நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்பு இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தச் சங்கத்துக்கு ஆளுங்கட்சியின் ‘இனிஷியல்’ மனிதர் ஒருவர்தான் பின்னாலிருந்து உதவிவருகிறாராம். முதல்வர் எடப்பாடி மீதுள்ள கோபத்தை இப்படித் தணித்துக்கொள்கிறாராம் அந்த மனிதர்...” என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

*****

வைத்திலிங்கம் - மா.சேகர்
வைத்திலிங்கம் - மா.சேகர்

அ.ம.மு.க-வுக்கு உதவிய அமைச்சர்?

ஒரத்தநாடு தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட மா.சேகர், அ.தி.மு.க வேட்பாளர் வைத்திலிங்கத்தின் பரம அரசியல் எதிரி. ஜெயித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், தொகுதியில் பணமழையைப் பொழிந்தார் வைத்திலிங்கம். அவருக்குச் சற்றும் சளைக்காமல் சேகரும் செலவு செய்தார். இதைப் பார்த்த பலரும், “இவருக்கு எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வந்தது?” என்று புருவம் உயர்த்தினார்கள். இது பற்றிக் கிசுகிசுக்கும் கட்சியினரோ, “வைத்திலிங்கம் தோற்க வேண்டும் என்பதற்காகவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்தான் சேகருக்கு பண உதவி செய்தார்... எல்லாம் கட்சி உள்ளடி வேலைகள்தான்” என்கிறார்கள்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

‘என் தந்தைதான் அடுத்த வீட்டு வசதித்துறை அமைச்சர். சென்னைக்கு அருகில் சாட்டிலைட் டவுன் அமைப்பதற்கான திட்டங்கள் கைவசம் இருக்கின்றன. எங்களை நீங்கள் கவனித்துக்கொண்டால் உங்களுக்கு அனுகூலமாக இருப்போம்’ என்று சென்னையிலுள்ள பிரபல பில்டர்களிடம், தி.மு.க-வின் ‘வசதியான’ வேட்பாளரின் வாரிசு பிரமுகர் டீல் பேசிவருகிறாராம்.

தென் மாவட்டத்தில் தி.மு.க தனது கூட்டணிக் கட்சி ஒன்றுக்குத் தொகுதி தேர்தல் செலவுகளுக்காக இரண்டு பெரிய ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்திருக்கிறது. அதில், 12 ‘எல்’ அளவுக்கு ஸ்வீட்களைக் காணவில்லையாம். இதை தி.மு.க தலைமையிடம் கூட்டணிக் கட்சித் தலைவர் முறையிட, விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.