மிஸ்டர் கழுகு: நேருக்கு நேர்! - விஜய் விவகாரத்தில் அதிகாரிகளை வறுத்தெடுத்த முதல்வர்!

சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலினும் விஜய்யும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட காட்சி வீடியோவாக வெளியாகி வைரலானது
“இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்’ என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு சூடாக டீயைக் கொடுத்தோம். “வேண்டாம்” என்றவரிடம், “ஆளுநரின் டீ பார்ட்டியை தி.மு.க புறக்கணித்ததைப்போலவே நீரும் வேண்டாம் என்கிறீரே!” என்று கிண்டலாகக் கேட்டோம். “நான் வீட்டிலிருந்து சுடச்சுட சர்க்கரைப் பொங்கலும், உளுந்து வடையும் எடுத்து வந்திருக்கிறேன். அதை அனைவரும் உண்ட பிறகு டீ அருந்துவோம்” என்று புன்னகைத்தவர், தான் கொண்டுவந்ததைப் பரிமாறியபடியே உரையாடலைத் தொடங்கினார்...
“தி.மு.க-வில் நடக்கவிருக்கும் உட்கட்சித் தேர்தல் பற்றி அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் கட்சித் தலைவர் ஸ்டாலின். அப்போது சீனியர்கள் சிலர், ‘ஏற்கெனவே கட்சிப் பதவியில் இருப்பவர்களுக்கே மீண்டும் பொறுப்பு வழங்கலாம்’ என்று பீடிகை போட்டிருக்கிறார்கள். நீண்ட யோசனைக்குப் பிறகு ஸ்டாலின், ‘இளைஞரணியில் இருப்பவர்களுக்கு அதிக அளவு கட்சிப் பொறுப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி கேட்கிறார்’ என்று சொல்ல... சீனியர்கள் முகத்தில் ஈயாடவில்லையாம். சில நிமிடங்களுக்குப் பிறகு மெளனத்தை உடைத்த துரைமுருகன் மெதுவாக, ‘உட்கட்சித் தேர்தலை முறையாக நாம் நடத்த வேண்டும். அதைக் கண்காணிக்க துணைப் பொதுச் செயலாளர்கள் தலைமையில் மண்டலத்துக்கு ஒரு கமிட்டியைப் போட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ஸ்டாலின் மெதுவாகத் தலையை அசைத்தாலும், மெளனத்தை மட்டுமே பதிலாகத் தந்தார் என்கிறார்கள்!”
“பாவம்... யார் சொல்வதைத்தான் அவர் கேட்பார்... நடிகர் விஜய்யுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்த வீடியோ ஒன்று சர்ச்சையாகியிருக்கிறதே?”
“சமீபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலினும் விஜய்யும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட காட்சி வீடியோவாக வெளியாகி வைரலானது. இந்த நிகழ்வு நடந்த பிறகு வீட்டுக்கு வந்த முதல்வர், ‘நான் வரும் நேரம் பார்த்து, விஜய் எப்படி அங்கு வந்தார், எனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை?’ என்று அதிகாரிகளை வறுத்தெடுத்துவிட்டாராம். திருமண மேடையில் முதல்வர் இருக்கும்போதே, ‘தளபதி விஜய் வாழ்க...’ என்ற கோஷம் அதிகமாக ஒலித்திருக்கிறது. இதில் ஸ்டாலின் கொஞ்சம் அப்செட்டாம். அதனாலேயே இந்த டோஸ் என்கிறார்கள்.”
“அரசியல் என்றால் அனைத்தையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். மூத்த அமைச்சர் ஒருவரை மாற்றியே ஆக வேண்டும் என்று வாரிசு ஒற்றைக் காலில் நிற்கிறாராமே?”
“அப்படித்தான் சொல்கிறார்கள்... வாரிசுக்கும் அந்த இனிஷியல் அமைச்சருக்கும் பிரச்னை முட்டிக்கொண்டிருக்கிறது. வாரிசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு டெண்டர் விவகாரத்தை அந்த அமைச்சர் கிடப்பில் போட்டிருக்கிறார். இதனால் கடுப்பான வாரிசு, அந்த அமைச்சரிடமிருக்கும் இரண்டு துறைகளில் ஒன்றை வேறொருவருக்குக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவருகிறார். இது பற்றி அந்த அமைச்சர் தரப்பிலிருந்து மாப்பிள்ளையிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லையாம். இதையடுத்து ‘இந்தக் குடும்பத்துக்காக உழைத்ததற்கு, எனக்கு இதுவும் வேண்டும்... இன்னமும் வேண்டும்’ என்று புலம்பிவருகிறார் அமைச்சர்!”
“மேயர்களுக்கு பாலபாடம் எடுத்திருக்கிறாரே முதல்வர்!”
“ஆமாம்... மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின், ‘நிதியை கவனமாகக் கையாள வேண்டும்’ என்று தொடங்கி நீண்ட அட்வைஸ் கொடுத்திருக்கிறார். உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழல் நடந்துவிடக் கூடாது என்பதைத்தான் ‘நிதியை கவனமாகக் கையாள வேண்டும்’ என்று முதல்வர் குறிப்பால் உணர்த்தியதாகச் சொல்கிறார்கள். தவிர, மேயர்கள் மற்றும் பெண் பிரதிநிதிகள் சில விஷயங்களில் சொதப்புவதாக முதல்வருக்குத் தகவல் செல்லவும்தான் இந்தப் பயிற்சி முகாமுக்கே உத்தரவிட்டாராம் முதல்வர்...”

“ஓஹோ...”
“சமீபத்தில் நடந்த சென்னை பட்ஜெட் கூட்டத்தில் தொடக்க உரையை மட்டுமே படித்த மேயர் பிரியா, கூட்டத்தை நடத்தும் பொறுப்பை துணை மேயருக்கு வழங்கினார். நிர்வாக விவகாரங்களிலும் துணை மேயரையே முன்னிலைப்படுத்துகிறார். பல உறுப்பினர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு நடைமுறைகள் எதுவும் புரியவில்லை. வார்டு பிரச்னைகளுக்காகப் பெண் உறுப்பினர்களுக்கு போன் அடித்தால், அவர்கள் குடும்பத்து ஆண்கள்தான் போனை எடுக்கிறார்கள். அதிகாரிகள் சொல்லிக் கொடுப்பதையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லையாம். இப்படிப் பல்வேறு புகார்கள் முதல்வர் காதுக்குச் சென்றதால்தான் முதல்வரே நேரில் வந்து பாடம் எடுத்திருக்கிறார்.”
“திருத்தணியிலிருந்து கரைச்சல் சத்தம் அதிகம் கேட்கிறதே?”
“திருத்தணியில் பெரிய இடத்து குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆசிபெற்ற மாவட்ட நிர்வாகி மீதான கரைச்சல்தான்... கடந்த சில மாதங்களில் பினாமி பெயர்களில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துவிட்டாராம் அந்த நிர்வாகி. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்குக்கூட பணம் கேட்டு ஏழைகளை நச்சரிக்கிறாராம். தொகுதி எம்.எல்.ஏ-க்களுக்குச் செல்லவேண்டிய விவகாரங்களிலும் மனிதர் புகுந்து விளையாடுவதால் திருத்தணி, திருவள்ளூர் தொகுதியிலிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் உட்பட கட்சியின் சீனியர்களே கடுப்பாகி, அறிவாலயத்துக்குப் புகார்களை அனுப்பியிருக்கிறார்கள்!”
“எம்.எல்.ஏ-க்களின் பங்கில் கைவைத்துவிட்டார் என்று சொல்லும்... தி.மு.க-வில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ரேஸ் தொடங்கிவிட்டதே!”
“ஆமாம். தி.மு.க-வில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க-வில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. இப்போது இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தி.மு.க-வுக்கு நான்கு உறுப்பினர்கள் பதவி கிடைக்கும். இவர்களில் தி.மு.க-வில்
டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகியோருக்கு மீண்டும் ஜாக்பாட் அடிக்கலாம் என்கிறார்கள். மீதமிருக்கும் இரண்டு பதவிகளுக்கு ஆர்.எஸ்.பாரதி, கார்த்திகேய சிவசேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் முட்டி மோதுகிறார்களாம்.”
“ஒரே தி.மு.க புராணமாக இருக்கிறதே... அ.தி.மு.க-வில் நிகழ்வுகள் ஏதுமில்லையா?”
“பெரிதாக எதுவும் நடக்கவில்லை. வழக்கம்போல பன்னீர், எடப்பாடியிடம் சரண்டராகியிருக்கிறார். உட்கட்சித் தேர்தலில் சரி பாதி பங்கு கேட்டு பிரச்னை செய்த பன்னீர் இப்போது, மாநிலம் முழுவதும் எடப்பாடி சார்புடைய பழைய நிர்வாகிகளே பதவியில் தொடர்வதற்குச் சம்மதித்துவிட்டாராம்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்கிற தீர்ப்புக்குப் பிறகே பன்னீரிடம் இப்படியொரு மனமாற்றம் என்கிறார்கள்.”
“ஒரு மனிதர் எத்தனை முறைதான் பல்டி அடிப்பார்... கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி-க்களுக்கான சிறப்பு கோட்டா ரத்து செய்யப்பட்டிருக்கிறதே?”

“ஆமாம்... நாடு முழுவதும் 750 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு 10 சீட்டுகள் வீதம் மொத்தம் 7,500 இடங்கள் சிபாரிசின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. இவை போக, மத்திய கல்வித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்களுக்கு மட்டுமே நாடு முழுவதும் 8,000 சீட்டுகள் கோட்டா உள்ளதாம். இது பற்றி கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெரிய விவாதமே நடந்திருக்கிறது. அப்போது ‘ஒவ்வொரு எம்.பி-க்கும் 50 சீட்டுகள் கொடுங்கள்; இல்லையெனில் கோட்டாவே வேண்டாம்’ என்று பல எம்.பி-க்களும் கோரஸாகச் சொல்ல, தற்போது சிறப்பு கோட்டாவையே தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது மத்திய அரசு” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை நீட்டினோம். ருசித்துப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...
“செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் குழுவுக்குத் துணை ஆணையர் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான துணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான தாரேஸ் அகமதுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களை இருட்டடிப்பு செய்யும் வகையில், தற்போது தமிழக சுகாதாரத்துறையில் இயக்குநர் பொறுப்பிலிருக்கும் தாரேஸ் அகமதுவுக்கு விளையாட்டுத்துறையில் கூடுதல் பொறுப்பு அளிக்கவேண்டிய அவசியம் என்ன என்று முணுமுணுக்கிறார்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இந்த முணுமுணுப்புகளையெல்லாம் தாண்டி, ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்கவேண்டிய பொறுப்பு தாரேஸ் அகமதுவுக்குக் கூடுதல் சுமையாகியிருக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.
கழுகார் எக்ஸ்க்ளூசிவ்
தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் நீலகிரியில் முகாமிட்டிருக்கிறார். அவருடன் சில எம்.எல்.ஏ-க்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் சென்றிருக்கிறார்கள். குடும்ப முதலீடுகள் தொடர்பாக முகாம் என்கிறார்கள்!
சென்னையின் மையப்பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரை அடுத்து, போலீஸார் அங்கு சோதனைக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது விடுதியை நடத்தியவர் போனைப் போட்டு போலீஸாரிடம் கொடுக்க, எதிர்முனையில் சென்னையின் அன்பான பிரமுகர் பேசினாராம். இதையடுத்து சத்தமில்லாமல் திரும்பியதாம் போலீஸ்!
தமிழகத்தைச் சேர்ந்த அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, டெல்லியில் பதவியை எதிர்பார்த்து காய்நகர்த்திய நிலையில், தற்போது தமிழகத்தில் காலியாகவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவியை எதிர்பார்த்து காய்நகர்த்துகிறார்!