Published:Updated:

மிஸ்டர் கழுகு: பட்டியல் லீக்... பதற்றத்தில் கிச்சன் கேபினெட்!

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

அ.ம.மு.க பல தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்குக் குடைச்சலைக் கொடுத்தாலும், சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்குள் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொண்ட தகவல் தற்போது கசிந்திருக்கிறது

மிஸ்டர் கழுகு: பட்டியல் லீக்... பதற்றத்தில் கிச்சன் கேபினெட்!

அ.ம.மு.க பல தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்குக் குடைச்சலைக் கொடுத்தாலும், சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்குள் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொண்ட தகவல் தற்போது கசிந்திருக்கிறது

Published:Updated:
துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

கோடை மழையில் நனைந்தபடியே கூலாக வந்த கழுகார், ‘‘திடீர் மழை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், கொரோனா பரவல் பயம் காட்டுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தொடங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்றார். நாம் கொடுத்த சூடான இஞ்சி டீயைக் குடித்துக்கொண்டே செய்திகளுக்குள் புகுந்தார்.

‘‘அ.ம.மு.க பல தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்குக் குடைச்சலைக் கொடுத்தாலும், சில தொகுதிகளில் வேட்பாளர்களுக்குள் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொண்ட தகவல் தற்போது கசிந்திருக்கிறது. சென்னையில் அ.தி.மு.க கோட்டையாக இருக்கும் ஒரு முக்கியத் தொகுதியில், பெரும்பான்மையாக வசிக்கும் சமூகத்தைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ-தான் அந்தக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அ.ம.மு.க சார்பில் போட்டியிடுபவரும் அதே சமூகம் என்பதால், வாக்குகள் பிரிந்து தோல்வி ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிய அ.தி.மு.க வேட்பாளர், அ.ம.மு.க வேட்பாளரை நன்கு கவனித்துவிட்டாராம். அவருக்கு மட்டுமன்றி, அந்தத் தொகுதிக்குட்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக கவனிப்பு நடந்திருக்கிறது. கடைசி ஐந்து நாள்கள் அ.ம.மு.க வேட்பாளரும், கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லையாம்.”

‘‘அப்புறம்?’’

‘‘இந்தக் கூத்து தெரியாமல், பூத் ஏஜென்ட்கள் அந்த வேட்பாளருக்கு போன் செய்து, பூத் செலவுக்குப் பணம் கேட்டிருக்கிறார்கள். வேட்பாளரோ, ‘தலைமை ஒத்த பைசா கொடுக்கலை... கட்சிக்கு விசுவாசமாக இருக்கணும்னா பூத்துல உட்காருங்க... செலவுக்கு என்கிட்ட கேட்காதீங்க’ என்று ஒரே போடாகப் போட்டார். இதை செல்போனில் ரெக்கார்டு செய்த தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கசியவிட்டுள்ளனர். டி.டி.வி.தினகரன் வரை விவகாரம் சென்று, விசாரணை நடக்கிறதாம். சென்னை மட்டுமன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும், தென் மண்டலத்தில் இன்னும் சில தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்களிடம் அ.ம.மு.க வேட்பாளர்கள் விலைபோய்விட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.’’

மிஸ்டர் கழுகு: பட்டியல் லீக்... பதற்றத்தில் கிச்சன் கேபினெட்!
மிஸ்டர் கழுகு: பட்டியல் லீக்... பதற்றத்தில் கிச்சன் கேபினெட்!

‘‘தி.மு.க அமைச்சரவை உத்தேசப் பட்டியல் ஒன்று உலாவருகிறதே!’’

‘‘ஆமாம்... துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சியின் சீனியர்களுடன் சேகர்பாபு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், டாக்டர் எழிலன், ரேகா ப்ரியதர்ஷினி, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இருக்கின்றன. துறைவாரியாகப் பட்டியல் வெளியாகியிருப்பதால், பட்டியலில் இடம்பெற்றுள்ள பலரும் இப்போதே ‘எனக்கு அந்தத் துறை வேண்டாம்; இந்தத் துறையை மாற்றிக் கொடுங்கள்’ என்று கட்சித் தலைமையிடம் தூதுவிட்டுக்கொண்டிருக்கிறார்களாம். கட்டுமானத்துறையில் கோலோச்சும் ஒரு வேட்பாளரோ, ‘கிச்சன் பிரமுகர் எனக்கு வீட்டு வசதித்துறையைக் கன்ஃபர்ம் செய்துவிட்டார்; இனி தொழிலில் நம்மை அடித்துக்கொள்ள ஆளில்லை’ என்று நண்பர்களிடம் சொல்லிவருகிறாராம். தலைமையோ, ‘பட்டியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை... போய் வேலையைப் பாருங்கள்’ என்று கடுகடுத்திருக்கிறதாம்!”

“கிச்சன் கேபினெட்டின் ரியாக்‌ஷன் என்னவோ?”

“பட்டியல் முழுக்க முழுக்க உண்மை இல்லை என்றாலும் இப்படியெல்லாம் தகவல் கசிவது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்ற டென்ஷனில் இருக்கிறது கிச்சன் கேபினெட். இப்போதே செனடாப் ரோடு இல்லத்துக்குக் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வந்து பட்டியல் தொடர்பாக வாக்குவாதம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஒரு நபர்தான் இப்படியான பட்டியல் உலாவருவதற்கும் காரணம் என்ற முணுமுணுப்பும் சத்தமாகக் கேட்கிறதாம். இதையடுத்து, உறவுகள் இருவரும் முறுக்கிக்கொண்டு உலாவருகிறார்கள். இவர்கள் கொடுக்கும் தலைவலி தாங்க முடியாமல், மனைவியுடன் சென்னையை விட்டுக் கிளம்பலாம் என முடிவெடுத்து, டூர் திட்டம் தயாரித்திருக்கிறாராம் ஸ்டாலின்.’’

மிஸ்டர் கழுகு: பட்டியல் லீக்... பதற்றத்தில் கிச்சன் கேபினெட்!
மிஸ்டர் கழுகு: பட்டியல் லீக்... பதற்றத்தில் கிச்சன் கேபினெட்!

‘‘அ.தி.மு.க-விலும் இதே பேச்சுதான் ஓடுகிறதுபோல?’’

‘‘ஆமாம். திருச்சி அ.தி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், தான் செல்லும் இடமெல்லாம், ‘எனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கவிருக்கிறார்கள்’ என்று சொல்லிவருகி றாராம். முன்னாள் எம்.பி ப.குமார் ஒருபடி மேலே போய், ‘நான் வெற்றிபெற்றால் நிச்சயம் எனக்கு உள்ளாட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கிடைக்கவிருக்கிறது. எனக்காக வேலை பார்த்தவர்கள் எல்லோருக்கும் நல்ல காலம் பிறக்கப்போகிறது’ என்று கூறிவருகிறாராம்.’’

‘‘வேலுமணி மீது எடப்பாடியிடம் சிலர் புகார் வாசித்தார்களாமே?”

‘‘ஆமாம், வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் சிலர், ‘பல்வேறு மாவட்டங்களில் வேலுமணி ஆதிக்கம் செலுத்தியதால்தான் நமக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது’ என்று புகார் வாசித்திருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட வேல்முருகனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதற்காக, சமீபத்தில் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட பண்ருட்டி சிட்டிங் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் தொடர்பான விவகாரம் வெடித்தபோதுதான், வேலுமணி மீதான பிரச்னையும் வெடித்திருக்கிறது. சத்யா பன்னீர்செல்வத்துக்கு பக்கபலமாக இருந்தது வேலுமணிதானாம். கடைசியில் ஓ.பி.எஸ் தலையிட்டுத்தான் சத்யாவைக் கட்சியைவிட்டு நீக்குவதற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.”

‘‘ஹரி நாடார் பற்றி ஏதோ தகவல் ஓடுகிறதே!”

‘‘தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் பனங்காட்டுப்படை கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய ஹரி நாடாருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்த ஆலங்குளம் இளைஞர் ஒருவருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அந்த இளைஞர்கள் கத்தி, அரிவாளுடன் அந்த இளைஞரின் வீட்டுக்கே வந்து மிரட்டியிருக்கிறார்கள். பயந்துபோன அந்த இளைஞர், ஹரி நாடாருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார். ஹரி நாடாரோ, ‘அப்படியா... அப்போ நீங்க 10 நாளுக்கு தலைமறைவா இருந்துக்கங்க தம்பி...’ என்று அறிவுரை சொன்னாராம். இதைக் கேள்விப்பட்ட இளைஞரின் பெற்றோரும் உறவினர்களும், ‘இவங்களை நம்பி ஏமாறாதீங்கன்னு சொன்னதைக் கேட்டீங்களா...’ என்று கிண்டல் செய்கிறார்களாம்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

*****

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* ஏற்கெனவே தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிக்கு தி.மு.க கொடுத்த ஸ்வீட் பாக்ஸில் 12 ‘எல்’ அளவுக்கு ஸ்வீட்களைக் காணவில்லை என்று சொல்லியிருந்தோம். இப்போது அதே தென் மாவட்டத்தில் மற்றொரு கூட்டணிக் கட்சி போட்டியிட்ட இரு தொகுதிகளுக்குக் கொடுத்த ஸ்வீட் பாக்ஸிலும் சிலபல ஸ்வீட்களைக் காணவில்லை என்று அறிவாலயத்துக்குப் புகார் சென்றிருக்கிறது. சம்பந்தப்பட்ட கூட்டணியின் வேட்பாளர்களே முகத்தில் ‘மலர்ச்சி’ இல்லாமல் தங்கள் கட்சித் தலைவர் மூலம் இந்தப் புகாரை அறிவாலயத்துக்குக் கொண்டு சென்றார்கள் என்கிறார்கள்.

*தமிழகத்தில் தங்களுக்குக் குறைந்த தொகுதிகள் தருவதற்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என்ற கடுப்பில் இருக்கிறது காங்கிரஸ். ‘ஒரு எம்.பி-க்கு மூன்று தொகுதிகள்’ என பி.கே கொடுத்த ஃபார்முலாபடி கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கியது தி.மு.க. கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் 6 பெற்றது இப்படித்தான். ‘இதே கணக்கில் காங்கிரஸுக்கு 24’ என்றது தி.மு.க. அழுது புரண்டு 25 வாங்கினார்கள் கதர்க் கட்சியினர். இப்போது அதே பிரசாந்த் கிஷோருடன் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்காக ஒப்பந்தம் போட்டிருக்கிறார். தமிழக தேர்தல் விவகாரங்களை கவனித்த காங்கிரஸ் டெல்லி தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார். ‘தமிழக காங்கிரஸை கொஞ்சம் கனிவுடன் அணுகியிருக்கலாமோ’ என இப்போது ஃபீல் பண்ணுகிறார் பி.கே.

மிஸ்டர் கழுகு: பட்டியல் லீக்... பதற்றத்தில் கிச்சன் கேபினெட்!

ஷங்கருக்கு சிக்கல்!

ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகத் திட்டம். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றுள்ளது ‘லைகா’ நிறுவனம். ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில்தான், ‘எங்கள் படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை இயக்கத் தடைவிதிக்க வேண்டும்’ என்று ‘அந்நியன்’ இந்தி ரீமேக்குக்குத் தடை கேட்டு, நீதிமன்றத்தை நாடியிருக்கிறது லைகா. இதேபோல், ‘மறைந்த எழுத்தாளர் சுஜாதா ‘அந்நியன்’ படத்துக்கு எழுதிய கதையின் உரிமம் என்னிடம் உள்ளது. அதனால், என் அனுமதியின்றி இந்தியில் ரீமேக் செய்வது சட்டவிரோதம்’ என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன். ஆனால், ‘கதை என்னுடையதுதான்’ என்று விளக்கமளித்திருக்கிறார் ஷங்கர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism