Published:Updated:

மிஸ்டர் கழுகு: இளையராஜா அரசியல்! - பா.ஜ.க-வின் அடுத்த அஸ்திரம் ரெடி

இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
இளையராஜா

பா.ஜ.க சார்பில் இளையராஜாவுக்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: இளையராஜா அரசியல்! - பா.ஜ.க-வின் அடுத்த அஸ்திரம் ரெடி

பா.ஜ.க சார்பில் இளையராஜாவுக்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
இளையராஜா

“இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியைப் புகழ்ந்ததை அடுத்து அவருக்கு பா.ஜ.க தரப்பில் ஏகோபித்த ஆதரவு அதிகரித்திருப்பதை கவனித்தீரா?” என்று கேள்விக்கணையை வீசியபடியே என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், “அது மட்டுமா... `இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதையும் கவனித்தோம்...” என்று பதில் சொல்லிவிட்டு, அவருக்கு சூடான இஞ்சி டீயைக் கொடுத்தோம். டீயைப் பருகியபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

மிஸ்டர் கழுகு: இளையராஜா அரசியல்! - பா.ஜ.க-வின் அடுத்த அஸ்திரம் ரெடி

“புளூ கிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்கிற நிறுவனம் வெளியிட்ட `அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ள இளையராஜா, ‘அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தது கடும் சர்ச்சையாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் பலரும் இளையராஜாவுக்கு எதிர்வினையாற்ற... பதிலுக்கு ‘இளையராஜாவை விமர்சிப்பது ஜனநாயகம் இல்லை’ என்று பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார். தெலங்கானா ஆளுநர் தமிழிசையும், ‘தன் கருத்தைச் சொல்ல இளையராஜாவுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.”

“ஓஹோ...”

“அது மட்டுமல்ல... பா.ஜ.க சார்பில் இளையராஜாவுக்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கவிருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. குடியரசுத் தலைவரையும் வரவழைக்க மூவ்கள் ஆரம்பித்துவிட்டன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அண்ணாமலையும், கலைப்பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராமும் கவனித்துவருகிறார்கள். சமூகரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தவே இளையராஜா அரசியலை பா.ஜ.க-வினர் கையிலெடுத்திருக்கிறார்கள் என்கின்றனர் இதன் உள் விவரமறிந்தவர்கள்!”

மிஸ்டர் கழுகு: இளையராஜா அரசியல்! - பா.ஜ.க-வின் அடுத்த அஸ்திரம் ரெடி

“பா.ஜ.க-வினரின் ரஜினி அரசியல், திருவள்ளுவர் அரசியல், வேல் அரசியல்... வரிசையில் இளையராஜா அரசியல் என்று சொல்லும்! ‘பீஸ்ட்’ பட விவகாரத்தில் உதயநிதியின் நிறுவனம், தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுப்பதாக முணுமுணுப்புகள் கேட்கின்றனவே?”

“ஆமாம்... ‘பீஸ்ட்’, ‘கே.ஜி.எஃப்’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாள்களில் வெளியான நிலையில், ‘பீஸ்ட்’ படத்தைவிட ‘கே.ஜி.எஃப்’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரவே... தியேட்டர் உரிமையாளர்கள் அந்தப் படத்தின் காட்சிகளை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ‘பீஸ்ட்’ பட விநியோக உரிமையைப் பெற்றிருக்கும் உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனத்தினர் தியேட்டர் அதிபர்களின் இந்த முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டதோடு, அதிக சீட்கள் உள்ள தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு ‘பீஸ்ட்’ படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். கோலிவுட்டின் முக்கியத் திரைப்படங்களின் விநியோக உரிமையை வாரிசின் நிறுவனம் கையில் வைத்திருப்பதால், எதற்கு வம்பு என்று தியேட்டர் உரிமையாளர்களும் மறுபேச்சுப் பேசவில்லை. சில உரிமையாளர்கள் மட்டும் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காலையில் ஒரு ஷோ மட்டும் ‘கே.ஜி.எஃப்’ படத்தைத் திரையிட்டுக்கொள்ள அனுமதி பெற்றிருக்கிறார்கள்...”

“ம்ம்ம்... 2006-11 தி.மு.க ஆட்சிக் காலகட்டம் நினைவுக்கு வருகிறது. முதல்வர் வெளிநாடு செல்லவிருக்கிறாராமே?”

“ஆமாம். வரும் ஜூலை மாதம் அமெரிக்கா செல்லவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கவே இந்தப் பயணம் என்கிறார்கள். அப்போது அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினர் நடத்தும் விழாவில் அவர் கலந்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த முறை இதர குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல், மனைவி துர்காவுடன் மட்டுமே செல்வார் என்கிறார்கள். துபாய் மற்றும் டெல்லி பயணங்களில் மொத்தக் குடும்பத்தினரையும் அள்ளிக்கொண்டு சென்றதால் ஏற்பட்ட சர்ச்சைகளால்தான் இப்படியொரு முடிவாம். ஸ்டாலினின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு வாரிசின் பட்டாபிஷேகம் நடக்கலாம். நான் ஏற்கெனவே உம்மிடம் சொல்லியிருந்தபடி உதயநிதிக்கு பள்ளிக்கல்வித் துறையை ஒதுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது அந்தத் துறையைக் கையில் வைத்திருக்கும் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு மின்சாரத்துறை வழங்கப்படலாம். செந்தில் பாலாஜியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மட்டும் இருக்கும். பள்ளிக்கல்வித்துறையில் அதிக அளவில் பணியாளர்கள் இருப்பதால், நிர்வாகரீதியாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதோடு மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய துறை என்பதால், அடுத்த தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்தே உதயநிதிக்கு இந்தப் பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறது செனடாப் சாலையின் பாதாம் மரத்திலிருக்கும் பட்சி!”

மிஸ்டர் கழுகு: இளையராஜா அரசியல்! - பா.ஜ.க-வின் அடுத்த அஸ்திரம் ரெடி

“அடேங்கப்பா... இன்பநிதி வரைக்கும் இப்போதே யோசித்து வைத்திருப்பார்கள்போல... அதிருக்கட்டும், வட தமிழகத்தில் பா.ம.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே உரசல் தொடங்கியிருக்கிறதே?”

“அதை ஏன் கேட்கிறீர்கள்... வன்னியர் இட ஒதுக்கீடு விஷயத்தைக் காரணம் காட்டி தி.மு.க-வுடன் பா.ம.க நெருக்கம் காட்டுவதை அ.தி.மு.க ரசிக்கவில்லை. அதனால், வட தமிழகத்தில் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் பா.ம.க நிர்வாகிகளை வலைவீசிப் பிடித்துவருகிறது எடப்பாடி அண்ட் கோ. ஏற்கெனவே, பா.ஜ.க-வினர் ஒருபக்கம் வன்னியர் சமூகத்தினரை வளைக்கும் நோக்கில், பா.ம.க-வினரைத் தங்கள் கட்சிக்கு இழுத்து சேதாரம் செய்துவரும் நிலையில், இப்போது அ.தி.மு.க-வும் ஆட்களை ஹைஜாக் செய்வது ‘டாக்டர்களை’ கொதிக்கவைத்துள்ளது. விரைவில் தைலாபுரம் தோட்டத்திலிருந்து அணுகுண்டு சத்தம் கேட்கலாம்...”

“அது அணுகுண்டா, ஊசி வெடியா என்பது வெடித்த பிறகுதான் தெரியும்... தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’-வில் அவரது துறையினரே சிக்கியிருக்கிறார்கள்போல...”

“கொடுமையிலும் கொடுமை அது. சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சாவில் ஒரு கிலோவை திருடிய ரயில்வே காவலர் சக்திவேல் மற்றும் சைபர் க்ரைம் பிரிவு காவலர் செல்வக்குமார் ஆகியோர் அதை கஞ்சா வியாபாரி திலீப்குமார் என்பவரிடம் கொடுத்து விற்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தகவலை மோப்பம் பிடித்த அயனாவரம் போலீஸார் இருவரையும் கைதுசெய்திருக்கிறார்கள். இது தொடர்பாக நடந்த விசாரணையில் காவல்துறை நெட்வொர்க்கிலேயே கஞ்சா பிசினஸ் கனஜோராக நடப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, பரங்கிமலை காவல் மாவட்டத்தில் இந்த கஞ்சா நெட்வொர்க் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறதாம்” என்ற கழுகாருக்கு கேரட் மைசூர் பாவைக் கொடுத்தோம்... அதில் ஒரு விள்ளலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் மீது ஏக கடுப்பில் இருக்கிறார்கள் உள்ளூர் பா.ஜ.க-வினர். தங்களுக்கு வாரியங்களைத் தராமல் இழுத்தடிக்கும் முதல்வர் ரங்கசாமியுடன் தமிழிசை இணக்கமான போக்கில் செயல்படுவதுதான் அதற்குக் காரணமாம். அதனால் எப்படியாவது தமிழிசையை மாற்ற வேண்டும் என்று டெல்லிக்கு போன் மீது போன் போட்டுவருகிறார்கள். ஆனால், டெல்லி தலைமை இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத நிலையில், நாக்பூருக்கு புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார்கள். ஒருவேளை தமிழிசை புதுச்சேரியிலிருந்து வழியனுப்பப்படலாம்... அதேசமயம் புதுச்சேரிதான் தனது சாய்ஸ் என்று மேலிடத்தில் கூறிவருகிறாராம் தமிழிசை” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்!

*******

துண்டுச்சீட்டு நீட்டிய துணைவேந்தர்... டென்ஷனான ஆளுநர்!

கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்றாண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஏப்ரல் 18 அன்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக முதல்நாளே சென்றுவிட்டார் தமிழக ஆளுநர் ரவி. பட்டமளிப்பு விழா நடைபெறும் தினத்தன்று காலை, பல்கலைக்கழகத்தின் துறைகளை ஆளுநர் பார்வையிடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் எழுதி துண்டுச்சீட்டை ஆளுநரிடம் கொடுத்த துணைவேந்தர் கதிரேசன், அந்தத் துறைகளை மட்டும் பார்வையிடும்படி கூறியிருக்கிறார். அதைக் கேட்டு டென்ஷனான ஆளுநர், “நான் எங்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்கிறீர்களா?” என்று வெடித்திருக்கிறார். இதற்கிடையே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவருமே ஆளுநரைப் புறக்கணிக்கும் வகையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை!

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* சமீபத்தில் சென்னையில் சசிகலா, திவாகரன், பாஸ்கரன் மூவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். குடும்ப இணைப்பு தொடர்பாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஃபைனான்ஸ் பஞ்சாயத்தே பிரதானமாக இருந்ததாம்!

* வருகிற ராஜ்ய சபா தேர்தலில் ஜனாதிபதி தரப்பில் நியமன எம்.பி-க்கள் சிலர் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த இருவருக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism