Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடி பற்றி என்ன சொன்னார் சசிகலா? - தொடரும் கொடநாடு விசாரணை...

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தலை நடத்தி, மே மாதத்துக்குள் அதற்கான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்

மிஸ்டர் கழுகு: எடப்பாடி பற்றி என்ன சொன்னார் சசிகலா? - தொடரும் கொடநாடு விசாரணை...

அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தலை நடத்தி, மே மாதத்துக்குள் அதற்கான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

சரியான நேரத்தில் ஸ்வீட் பாக்ஸுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். நாம் நக்கலாக உதட்டைப் பிதுக்கியதைப் பார்த்தவர், “உமது மனவோட்டம் புரிகிறது... உள்ளே லட்டு மட்டும்தான் இருக்கிறது... அதுவும் நீங்கள் வெளியிட்ட கட்டுரையால் ஒரு குடும்பத்துக்கு நிதியுதவி கிடைத்திருக்கிறது... அதற்குத்தான் ஸ்வீட்” என்று லட்டை நமக்கு ஊட்டிய கழுகார், உரையாடலைத் தொடர்ந்தார்...

“10.04.22 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘நீதியும் கிடைக்கவில்லை... நிதியும் கிடைக்கவில்லை... 20 ஆண்டுகளாகப் போராடும் தி.மு.க தொண்டரின் குடும்பம்’ என்ற தலைப்பில், கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அதைக் கண்டித்துப் போராடிய தொண்டர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் இறந்தது பற்றிய கட்டுரையை வெளியிட்டிருந்தீர் அல்லவா... அந்தக் கட்டுரைக்காக பெரம்பூர் எம்.எல்.ஏ

ஆர்.டி.சேகரிடம் விளக்கம் கேட்டபோது ‘நேரில் வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருந்தார். அதன்படி அந்தக் குடும்பத்தினர் ஆர்.டி.சேகரைச் சந்தித்தனர். அவர் இந்த விஷயத்தை உதயநிதியிடம் சொல்லியிருக்கிறார். ஏப்ரல் 20-ம் தேதி அந்தக் குடும்பத்தினரை வரவழைத்த உதயநிதி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். மேலும், ‘வேறு உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள்’ என்று கூறி அனுப்பிவைத்திருக்கிறார். இதில் இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லிக்கொள்கிறேன்... 2001-ம் ஆண்டு மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட்டது. 20 ஆண்டுகள் கடந்துவிட்டதால், வட்டியோடு சேர்த்து பல லட்சம் ரூபாயைத் தமிழக அரசு கொடுத்தாக வேண்டும். முதல்வர் இதையும் பரிசீலித்து தக்க நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும் என்பதே அந்தக் குடும்பத்தினரின் வேண்டுகோளாக இருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி பற்றி என்ன சொன்னார் சசிகலா? - தொடரும் கொடநாடு விசாரணை...

“நீர் சொல்லிவிட்டீர் அல்லவா... கண்டிப்பாகக் கிடைத்துவிடும்!”

“ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தின் மீது கூட்டுறவு வங்கியில் கடன் மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியிருக்கிறது. அவர் தன் குடும்பத்தினருடன் இணைந்து, கூட்டுறவு வங்கியில் சுமார் 65 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அவரின் குடும்பத்திலுள்ள ஒன்பது நபர்களின் பெயர்களில் விவசாய பயிர்க்கடன் மற்றும் விவசாய நகைக்கடன்களைப் பெற ஆவணங்கள், முத்திரை, கையெழுத்து என எல்லாவற்றையும் போலியாகத் தயார்செய்து கடன் பெற்றிருக்கிறார் என்பதே புகாரின் சாராம்சம். இதையடுத்து, பரமக்குடி சரக கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர், இது குறித்து சென்னை வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 2020-ம் ஆண்டே புகார் அளித்திருந்தார். ஆனால், முத்துராமலிங்கம் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தன்மீது நடவடிக்கை எடுக்காதபடி பார்த்துக்கொண்டாராம். இப்போது மொத்த ஆவணங்களும் லீக் ஆகிவிட்டதால், விரைவில் எஃப்.ஐ.ஆர் பதியப்படும் என்று தெரிகிறது.”

“என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்... அ.தி.மு.க முகாமில் சலசலப்பு சத்தம் கேட்கிறதே?”

“அ.தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தலை நடத்தி, மே மாதத்துக்குள் அதற்கான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தலில் பெரும்பாலும் இப்போது பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளையே தொடரச் சொல்லிவிட்டார்கள். அதிக புகார்களுக்கு உள்ளானவர்களை மட்டும்தான் மாற்றுகிறார்கள். அப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியச் செயலாளர் டாக்டர் பிரவீன் குமார் என்பவர், அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமார், 500-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழகத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டிருக்கிறார். பன்னீர் தர்மயுத்தம் நடத்தியபோது, தனது அரசு மருத்துவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பன்னீருடன் இணைந்தவர் என்பதால், ஒன்றியச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்தார் பன்னீர் என்பது கூடுதல் தகவல். வழக்கம்போல இந்த விஷயத்திலும் தனது ஆதரவாளரைக் கழற்றிவிட்டிருக்கிறார் பன்னீர். உட்கட்சித் தேர்தல் ஏப்ரல் 24 அன்று முடிவதால், இதுபோல மேலும் சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.”

“மறுபடியும் ஆளுநர் டெல்லி சென்றிருக்கிறாரே?”

“ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடியைத் தூக்கி எறிந்த விவகாரத்தால் அவர் கடும் அப்செட் என்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்த மறுதினமே ஆளுநர் டெல்லிக்குக் கிளம்பும் முடிவை எடுத்ததுதான் பலரது புருவத்தையும் உயர்த்தவைத்திருக்கிறது. கடந்த வாரம் டெல்லியில் முகாமிட்டிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்திருந்தார். இப்போது அடுத்த சில நாள்களிலேயே ஆளுநரும் அமித் ஷாவின் சந்திப்புக்கு நேரம் கேட்டிருக்கிறார். நேரம் கிடைக்கும் பட்சத்தில் தருமபுரம் ஆதீனம் நிகழ்வுக்குச் சென்றபோது தனது கான்வாயில் நடந்த விவகாரங்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் நடந்துவரும் விவகாரங்களைப் பற்றியும் ஆளுநர் அவரிடம் சொல்ல வாய்ப்பிருக்கிறது.”

“இந்த மோதல் எங்கு சென்று முடியப்போகிறதோ! கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் போலீஸ் விசாரித்திருக்கிறதே?”

“அதிலும் ஒன்றை கவனிக்க வேண்டும். மற்றவர்களையெல்லாம் தங்கள் இடத்துக்கு வரவழைத்து விசாரித்த போலீஸார், சசிகலாவை மட்டும் அவரது சென்னை வீட்டுக்கே சென்று விசாரித்திருக்கிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தால், ‘சசிகலா, அவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி வெளியூர் வர இயலாது என்று கேட்டுக்கொண்டதால் அவரது இருப்பிடத்துக்கே சென்று விசாரித்தோம்’ என்கிறார்கள். முதல்நாள் விசாரணையின்போதே போலீஸார் சுமார் 100 கேள்விகளை சசிகலாவிடம் கேட்டார்களாம்... ‘கொள்ளை நடந்தவுடன், உங்களுக்கு யார் முதலில் தகவல் சொன்னது, பங்களாவில் என்னென்ன பொருள்கள், ஆவணங்கள் வைத்திருந்தீர்கள், அவற்றில் என்னென்ன காணாமல்போயின, உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?’ உள்ளிட்ட கேள்விகளை அடுக்கியிருக்கிறது போலீஸ்.”

“ம்ம்ம்... என்ன பதில் சொன்னாராம்?”

“ஏற்கெனவே தயாராக இருந்ததால், கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொன்னாராம்... ‘கொடநாடு சம்பவத்தின்போது நான் சிறையில் இருந்தேன். அதனால், எனக்கு எதுவும் தெரியாது. தவிர, இப்போது வரை நான் அங்கு செல்லவில்லை என்பதால் கொள்ளைபோன பொருள்கள், ஆவணங்கள் பற்றியும் எனக்குத் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா என்று காவல்துறை தரப்பில் கேட்டதாகத் தகவல்... அப்போது சசிகலா, சில வெயிட்டான விஷயங்களைக் கூறியிருக்கிறார் என்று கண்சிமிட்டுகிறது காவல்துறை! விசாரணை மேலும் தொடர வாய்ப்பு இருக்கிறது” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயைக் கொடுத்தோம். அதைப் பருகியபடியே உரையாடலைத் தொடர்ந்தார் கழுகார்...

“அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே பிரசாந்த் கிஷோருடன் கை கோத்திருக்கும் காங்கிரஸ், இந்தியாவிலுள்ள மாநிலங்களை ஆறு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐபேக் சார்பில் ஒரு பொறுப்பாளரோடு, கட்சி சார்பிலும் ஒரு பொறுப்பாளரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்துக்கு அ.தி.மு.க-விலிருந்து விலகிய ஐடி விங் புள்ளி ஒருவரை நியமிக்கப் பரிசீலித்துவருகிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி பற்றி என்ன சொன்னார் சசிகலா? - தொடரும் கொடநாடு விசாரணை...

“ஓஹோ!”

“அகில இந்திய தலைமை இப்படி ஒரு கணக்கில் இருக்க... தமிழக காங்கிரஸ் தலைமையோ, மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடத்தை பெற்றுவிட, தவியாய் தவிக்கிறார்களாம். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க அளித்திருந்த வாக்குறுதியின்படி ஒரு எம்.பி சீட் கிடைக்கும் என்று கதர்ச் சட்டையினர் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக தி.மு.க-விடம் ப.சிதம்பரம் ஒரு சேனலிலும், கே.எஸ்.அழகிரி ஒரு சேனலிலும் மோதுகிறார்கள். போதாக்குறைக்கு முன்னாள் தலைவர் தங்க பாலுவும் முயற்சி செய்கிறார். தி.மு.க தரப்பிலோ... மூன்று தரப்பினரிடமும் முழுதாகக் காது கொடுத்து மட்டும் கேட்டுக்கொண்டார்களாம்!”

“ `கேளு... யார்கிட்ட கேட்குறீங்க... அண்ணன்கிட்டதானே... நல்லா கேளு...’ என்று வடிவேலு பாணியில் கேட்டிருப்பார்கள்போல... கொடுக்கிறார்களா, கழற்றிவிடுகிறார்களா என்று பார்ப்போம்...”

“உமக்கு நக்கல் அதிகம்தான்... கடைசியாக ஒரு தகவலைச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். வள்ளியூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக முத்துக்கிருஷ்ணன் என்பவர் சபாநாயகர் அப்பாவு சிபாரிசில் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு செக் மோசடி வழக்கில் ஒரு வருடம் சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தியிருக்கிறது மதுரை உயர் நீதிமன்றக் கிளை. இதையடுத்து, கட்சித் தலைமையிலிருந்து அப்பாவுவை அழைத்துக் கடிந்துகொண்டார்களாம்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்!

*****

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, `தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக மூடுவோம்’ என்று சொன்னது தி.மு.க. சொன்னபடி கடைகளை மூடவில்லை என்பதல்ல விஷயம்... ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் மதுபான ஆலைகள் போதாதென்று, புதிதாக ஓர் ஆலையைத் தொடங்குவதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கியிருக்கின்றன. கடவுள் பெயர்கொண்ட கல்வித் தந்தைதான் அந்த ஆலைக்கான அனுமதியைக் கேட்டிருக்கிறார். தூங்கா நகரில் 300 ஏக்கர் பரப்பளவில் மதுபான ஆலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘மேலிடத்துக்கும்’ இதில் பங்கு இருக்கிறது என்கிறார்கள்!

* சமீபத்தில் கடற்கரை சாலையில் ‘அண்ணன்’ குடியேறிய வீட்டின் மாத வாடகை இரண்டு லட்சம் ரூபாயாம். கனிமப்புள்ளி ஒருவர்தான், தன்மீது அண்ணனின் கோபப் பார்வை விழுந்துவிடக் கூடாது என்று கனிவோடு இந்த வாடகையைச் செலுத்துவதாகச் சொல்லியிருக்கிறாராம்!

* உணவுத்துறையில் கோலோச்சிய அந்த நிறுவனத்தைப் பற்றி அடிக்கடி தகவல் வெளியிட்டுவந்தது அமைப்பு ஒன்று. இவர்களின் தொடர் தொந்தரவைத் தாங்க முடியாத உணவு நிறுவனம், ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்தியதில் ஐந்து பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள் என டீலிங் முடிந்துள்ளது. ஆனால், அந்த ஸ்வீட் பாக்ஸ்கள் அந்த அமைப்புக்குச் சென்று சேரவில்லையாம். டீலிங்கை முடித்துக் கொடுத்த ஒருவரே மொத்தத்தையும் சுருட்டிவிட்டார் என்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism