அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “பலர் என்னிடம் சரணடைவார்கள்!”

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

பெங்களூரு சிறையில் சசிகலா நம்பிக்கை

ஹேங்அவுட்ஸ் மீட்டில் நம்மை அழைத்த கழுகாரிடம், ‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டணியால் தமிழக அரசு கஜானாவில் 800 கோடி ரூபாய் அளவுக்கு ஆபத்து என்று சொன்னீரே... அது என்னவாயிற்று?’’ என்று கேட்டோம்.

‘‘வெளியில் பேசப்படும் 800 கோடி என்பது உண்மையல்ல. அதில் பாதித்தொகைதான், அதுவும் தமிழக அரசுடனான ஒப்பந்தப்படிதான் அதைக் கேட்பதாகவும் அந்த மின்சார தயாரிப்பு நிறுவனத் தரப்பில் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் தி.மு.க தரப்பில் இதுகுறித்து அறிக்கை வெளியிட ஏற்பாடு நடக்கிறதாம். மின்சாரத் துறையில் இதுபோல அதிகாரிகள் கூட்டணியில் வேறு ஏதாவது மூவ் நடக்கிறதா என்று ஆளும் தரப்பு தீவிரமாக விசாரிப்பதாகவும் தகவல்.’’

‘‘தி.மு.க-வைச் சேர்ந்த பொள்ளாச்சி எம்.பி-யான‌ சண்முகசுந்தரம் பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாயிருக்கிறதே...’’

“ஆமாம். அமைச்சர் சொன்ன தகவலை மறுத்துள்ள சண்முகசுந்தரம், ‘எனக்கோ என் குடும்பத்தினருக்கோ கொரோனா பாதிப்பு இல்லை. டெல்லியில் இருந்து வந்ததால், நானாகவே சென்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில், நெகட்டிவ் என்று வந்தது. அப்படி இருந்தும், 14 நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நிலவரம் இப்படியிருக்க அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறியிருக்கிறார்’ என்று கொந்தளித்திருக்கிறார்.’’

‘‘பொள்ளாச்சி எம்.எல்.ஏ-வான‌ ஜெயராமனின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாயிருக்கிறதாமே?’’

சண்முகசுந்தரம் - பொள்ளாச்சி ஜெயராமன்
சண்முகசுந்தரம் - பொள்ளாச்சி ஜெயராமன்

‘‘ஆமாம்... அதனால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டதில் எல்லோருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்டது. ஆனாலும் ஜெயராமனை 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால், அவர் வழக்கம்போல பொதுவெளிக்கு வந்து தன் பணிகளைத் தொடர்கிறார். இதனால், ‘ தி.மு.க-வுக்கு ஒரு சட்டம், அ.தி.மு.க-வுக்கு ஒரு சட்டமா?’ என்று பொள்ளாச்சி உடன்பிறப்புகள் கொந்தளிக்கின்றனர்.

‘‘டெல்லியிலும இதே நிலை உள்ளதாமே?’’

‘‘ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரிந்த 100 தொழிலாளர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய விமான போக்குவரத்துத்துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி யிருப்பதால், அந்த அலுவலகமும் கண்காணிப்புக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. பல அமைச்சர்கள் அலுவலகம் வருவதையே தவிர்த்து விட்டார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருமாதமாக வீட்டில் முடங்கி விட்டார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லியிருக் கிறார்களாம்.’’

பதிவுத்துறை அலுவலகத்தில்
பதிவுத்துறை அலுவலகத்தில்

‘‘மத்திய அமைச்சரவை கூட்டத்தில் என்ன பேசப்பட்டதாம்?’’

‘‘பெருநிறுவனங் களுக்கு நிதியுதவி அளிப்பது பற்றி பேசப்பட்டிருக்கிறது. ‘மக்களுக்கே நிதியுதவி செய்ய முடியாத நிலையில் கம்பெனிகளுக்கு உதவி செய்தால் நம்மீது கடும் விமர்சனம் எழும். ஏற்கெனவே கார்ப்ரேட்களுக்கு ஆதரவாக நம் அரசு இருப்பதாகப் பேசுகிறார்கள்’ என்று சொல்லி மறுத்துவிட்டாராம் பிரதமர். அதற்குப் பிறகுதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவப் பணியாள‌ர்களுக்கு ஐம்பது லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவது என்று முடிவெடுத்துவிட்டு, கூட்டத்தை முடித்திருக்கிறார்கள்.’’

‘‘கொரோனா ஊரடங்கில் பத்திரப்பதிவு அலுவலகத்தைத் திறந்ததற்கு ஏதாவது காரணமிருக்கிறதா?’’

‘‘கொதித்துக்கிடக்கிறார்கள் பதிவுத்துறை அலுவலர்கள். இந்த நேரத்தில் பதிவுத்துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டதற்கு வேறு ஒரு பின்னணி இருக்கிறதாம். ஆட்சியாளர்களின் பினாமிகளாக இருப்பவர்கள், ஏற்கெனவே அட்வான்ஸ் கொடுத்து பேசி வைத்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்த கொரோனா காலத்தில் கிரையம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில், சொத்தை கையில் வைத்துள்ளவர்களின் பணத்தேவையைப் பயன்படுத்தி குறைந்த விலையில் கிரையம் செய்துவிடலாம் என்று நினைத்துதான் பதிவுத்துறை அலுவலகத்தைத் திறந்துள்ளதாகச் சொல்கிறாரகள்.’’

‘‘அடக்கொடுமையே!’’

‘‘ ‘பத்திரப்பதிவு செய்யும்போது விரல் ரேகை வைக்க வேண்டும்; மாஸ்க்கை கழற்றி ஆள் அடையாளம் பார்க்க வேண்டும். இதன் மூலமும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று பதிவுத்துறை அலுவலர் சங்கத்தினர் விளக்கியும் மேலிடத்தில் ஒப்புக்கொள்ளவில்லையாம்.’’

‘‘சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்படுவதாக பேச்சு எழுந்துள்ளதே?’’

சசிகலா
சசிகலா

‘‘இரண்டு அதிகாரிகள் நியமனம்தான் இதற்குக் காரணம். சசிகலா குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான பாலச்சந்திரனை தமிழக அரசுத் தேர்வாணையத்தின் தலைவராக நியமித்தார்கள். அதேபோல அந்தக் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யரை தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவராக நியமித்துள்ளார்கள்.’’

‘‘சோ.அய்யரும் அவ்வளவு நெருக்கமானவரா?’’

‘‘மது விற்பனையை அரசு ஏற்பதாக ஜெயலலிதா அறிவித்ததும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக முதலில் நியமிக்கப்பட்டவர் இவர்தான். இவருடைய ஆலோசனையில்தான் மிடாஸ் மதுபான ஆலை துவக்கப்பட்டதாகவே ஒரு தகவல் உண்டு. எதிர்காலத்தில் சசிகலாவுக்கும் தங்களுக்கும் இடையே இவர்கள் தொடர்பு பாலமாக இருப்பதற்காகத்தான் எடப்பாடி தரப்பு இவர்களை நியமித்துள்ளதாக பேசப்படுகிறது.’’

எடப்பாடியுடன் விஜயபாஸ்கர்
எடப்பாடியுடன் விஜயபாஸ்கர்

‘‘சரி சிறையில் எப்படி இருக்கிறார் சசிகலா?’’

‘‘நன்றாக இருக்கிறாராம். தன்னைச் சந்திக்க வரும் நெருக்கமானவர்களிடம், ‘மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்ய வேண்டாம்’ என்று கேட்டுகொள்பவர், ‘எல்லாவற்றையும் நான் அமைதியாக வேடிக்கை பார்க்கிறேன். நான் வெளியே வந்ததும் பலர் என்னிடம் சரணடைவார்கள்’ என்கிறாராம். குடும்பத்தினர், கட்சியினர் பலரும் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதுபற்றி சமீபத்திய சந்திப்புகளில் ரொம்பவும் கோபமாக வெளிப்படுத்துகிறாராம்.’’

‘‘பிரதமருக்கு காட்டமாகக் கடிதம் எழுதிய கமல் என்ன செய்கிறார்?’’

‘‘அந்தக் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்கு பிறகு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அவர் அறிவித்தார். ஆனால் கொரோனா விழிப்புணர்வுப் பாடலை மூத்த இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களை வைத்து மொபைல் போன் மூலமே உருவாக்கியிருக்கிறார். தனிமைப்படுத்திக் கொண்டாரா இல்லை பாடல் தயாரித்தாரா என்று கிண்டலடிக்கிறார்கள் நெட்டிசன்கள்.’’

‘‘ஊரடங்கு தமிழகத்தில் நீடிக்குமோ?’’

‘‘வாய்ப்புண்டு. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில நகரங்கள் முழுமையான ஊரடங்கைக் கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது கட்டத்துக்குச் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய உளவுத்துறை நோட் போட்டுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு இதுபற்றி முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீண்டநேரம் பேசியுள்ளார். இருவருக்கும் இருந்த பிணக்கு இப்போது குறைந்துவிட்டது என்கிறார்கள்.’’

‘’ஓஹோ!’’

‘‘கடந்த 25.12.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘2000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி’ என்ற தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். தமிழகத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணிக்கான 2,000 கோடி ரூபாய் ஒப்பந்தப்புள்ளியைப் பெற இரண்டு பெரிய நிறுவனங்களிடையே நடக்கும் கடும்போட்டி அப்போது நடந்தது. அதில் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கிய ஒரு நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த டெண்டரையும் வழங்க ஆளும் தரப்பு முடிவு செய்திருந்தது. அதற்கு ஒத்துழைக்காத மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆளும்தரப்பிலிருந்து அழுத்தம் வந்தது பற்றியும் இந்த டெண்டருக்காக ஆளும்கட்சி பெரும்புள்ளி ஒருவருக்கு 14 சதவிகிதம் வரை கமிஷன் பேசி சரிக்கட்டிவிட்டார்களாம் என்றும் நாம் எழுதியிருந்தோம்.’’

‘‘ஆமாம்... நாம் குறிப்பிட்ட அந்த அதிகாரி, தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு என்பது அவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்ததும் உறுதியாகி விட்டதே... அவரும் மாற்றப்பட்டு, விருப்ப ஓய்வும் வாங்கிப்போய்விட்டாரே... அதற்கென்ன இப்போது?’’

‘‘நாம் ஏற்கெனவே கணித்ததைப் போலவே, சில நாள்களுக்கு இந்த விஷயத்தை ஆறப்போட்டு விட்டு, கொரோனா ஊரடங்கில் எல்லோருடைய கவனமும் திரும்பியிருக்கும் நேரத்தில் ஏப்ரல்

15-ம் தேதியன்று இந்த டெண்டரில் சட்ட விரோதமாக மாற்றங்களைச் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் கிளப்பியிருக்கிறது. ‘சட்ட விரோதமாக இந்த மாற்றங்களைச் செய்துள்ள தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவேண்டும். முறைகேட்டுக்கு காரணமான அரசு அதிகாரிகள், நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்ற வழக்குகள் தொடர வேண்டும்’ என்றும் கோரி யிருக்கிறது அறப்போர் இயக்கம். கொரோனா விவகாரம் முடிந்தால் இந்த விவகாரம் சூடுபிடிக்கும்’’ என்ற கழுகார் சட்டென்று டாட்டா காட்டி திரையிலிருந்து மறைந்தார்.