Published:Updated:

மிஸ்டர் கழுகு: நெருக்கத்தில் மோடி-ஸ்டாலின்... வருத்தத்தில் கதர்ச் சட்டை!

மோடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி, ஸ்டாலின்

‘பா.ஜ.க-வினர் மனதைக் குளிர்விக்கும் வகையில் போலீஸார் செயல்படுவது கண்டத்துக்குரியது’ என்று சீறியிருக்கிறார் அழகிரி.

மிஸ்டர் கழுகு: நெருக்கத்தில் மோடி-ஸ்டாலின்... வருத்தத்தில் கதர்ச் சட்டை!

‘பா.ஜ.க-வினர் மனதைக் குளிர்விக்கும் வகையில் போலீஸார் செயல்படுவது கண்டத்துக்குரியது’ என்று சீறியிருக்கிறார் அழகிரி.

Published:Updated:
மோடி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
மோடி, ஸ்டாலின்

“அசத்திவிட்டார்கள்...” என்று புன்முறுவலோடு என்ட்ரி கொடுத்தார் கழுகார். “ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவைச் சொல்கிறீரா?” என்றபடி மசாலா பாலை நீட்டினோம். “ஆம்... கண்கவர் கலைநிகழ்ச்சிகள், தமிழர் வரலாற்றை 3டி தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தியது மட்டுமல்ல... ஒவ்வொரு நாட்டு அணியினரையும் அரசுப் பள்ளி மாணவர்களைக்கொண்டு வழிநடத்தி அறிமுகப்படுத்தியவிதம், உண்மையிலேயே நெகிழவைத்துவிட்டது. சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் முகம் பிரகாசமாகியிருக்கிறது” என்று உணர்ச்சிவசப்பட்டபடி மசாலா பாலைப் பருகியவர், உரையாடலைத் தொடர்ந்தார்.

“அகமதாபாத்திலிருந்தே லேட்டாகக் கிளம்பிய பிரதமர் மோடி, 25 நிமிடங்கள் தாமதமாகத்தான் சென்னை வந்தடைந்தார். அவருக்காகக் காத்திருக்காமல் திட்டமிட்டபடி ஒலிம்பியாட் விழா நிகழ்ச்சிகளைத் தொடங்கிவிட்டது தமிழ்நாடு அரசு. விழா தொடங்கிவிட்டதால், பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்குச் செல்லாத முதல்வர், நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் வரவேற்றார். விழா மேடையில் மோடியும் ஸ்டாலினும் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக்கொண்டவிதமும், நண்பர்களைப்போல தொட்டுப் பேசி குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டதும் தி.மு.க-வினரிடம் வியப்பை ஏற்படுத்தியது. உச்சமாக, விழா முடிந்த கையோடு ‘எப்போதும்போல் ஆச்சரியமூட்டி அன்பைப் பொழிந்துள்ள சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்!’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்தார் மோடி. இது பலரது கண்களை உறுத்தியும்விட்டது. குறிப்பாக, கதர்க் கட்சிக்காரர்கள் கண்களில் அனல்.”

மிஸ்டர் கழுகு: நெருக்கத்தில் மோடி-ஸ்டாலின்... வருத்தத்தில் கதர்ச் சட்டை!

“கவனித்தோம். காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முதன்முறையாக தி.மு.க அரசை கடுமையாகச் சாடியிருக்கிறாரே?”

“காரணம் இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் - பா.ஜ.க மோதல் உச்சத்தை எட்டியிருப்பதால், மோடி பங்கேற்கும் ஒலிம்பியாட் நிகழ்ச்சியையே புறக்கணித்திருந்தது காங்கிரஸ். இந்த நேரத்தில் போட்டிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில், மோடியின் படம் இடம்பெறாததைக் கண்டித்து, அந்த பேனர்கள் மீதே மோடி படத்தை ஒட்டியது தமிழ்நாடு பா.ஜ.க. ‘தமிழ்நாடு அரசின் செலவில்தானே ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது... பிரதமர் படத்தை ஏன் வைக்க வேண்டும்?’ என தி.மு.க-வினர்கூட கண்டிக்க வில்லை. ஆனால், பெரியார் திராவிடர் கழகத் தைச் சேர்ந்தவர்கள், பேனரில் ஒட்டப்பட்ட மோடியின் படத்துக்கு கறுப்பு பெயின்ட் அடித்த னர். உடனே, அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். பா.ஜ.க-வினரை விட்டுவிட்டு இவர்களை மட் டும் கைதுசெய்ததைத்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டித்திருக்கிறார்.

“டெல்லி கலைஞர் அறிவாலயத் திறப்புவிழா வுக்கு, பா.ஜ.க தலைவர்களுக்கு தி.மு.க அழைப்பு விடுத்தபோதுகூட அமைதி காத்த அழகிரி, இப்போது கொதித்திருப்பது ஆச்சர்யம்தான்.”

“உள்ளாட்சித் தேர்தலில் குறைவான எண்ணிக்கையில் தி.மு.க சீட் ஒதுக்கியபோதுகூடப் பேசவில்லை. இப்போது, ‘பா.ஜ.க-வினர் மனதைக் குளிர்விக்கும் வகையில் போலீஸார் செயல்படுவது கண்டத்துக்குரியது’ என்று சீறியிருக்கிறார் அழகிரி. மறைமுகமாக, ‘முதல்வர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை பா.ஜ.க-வுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது’ என்றிருக்கிறார். கூடவே, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரை வீட்டுக்காவலில் வைத்ததும் அவருடைய கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள். ‘பா.ஜ.க-வுடன் தி.மு.க மறைமுகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதோ...’ என்கிற சந்தேகம் கதர்க் கட்சிக்கு வர ஆரம்பித்துவிட்டதாம். டெல்லியில், பா.ஜ.க தலைவர்களுடன் டி.ஆர்.பாலு நெருங்கி உறவாடுவதும், மருமகன் அவ்வப்போது டெல்லியில் சில முக்கியஸ்தர்களைப் பார்ப்பதும் காங்கிரஸ் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது என்கிறார்கள். ஆனால், ‘எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாமா... சாதாரண போட்டோ விஷயத்தையே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுபோய், தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைச் சொல்ல வைத்துவிட்டார்கள் பா.ஜ.க-வினர்’ என்பது தி.மு.க-வினரின் புலம்பலாக இருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: நெருக்கத்தில் மோடி-ஸ்டாலின்... வருத்தத்தில் கதர்ச் சட்டை!

“அதுவும் சரிதான். மோடி - இ.பி.எஸ் சந்திப்பில் ஏதேனும் விஷேசம் உண்டா?”

“பிரதமர் மோடியை, விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலில் பிரதமரைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்குத்தான், எடப்பாடி தரப்பு முயன்றிருக்கிறது. அது கைகூடவில்லை. ஒருகட்டத்தில், ‘மோடி நம்மைச் சந்திக்க விரும்பினால் செல்வோம். நாமாக இதற்கு மேல் எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம் எடப்பாடி. இன்னொரு பக்கம், பன்னீர்செல்வமும் ஒரு பத்திரிகையாளர் மூலமாகப் பிரதமரின் நேரத்துக்கு பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறார். ஆனால், ஜூலை 28-ம் தேதி மாலை வரை அ.தி.மு.க தலைவர்கள் யாருக்கும் பிரதமர் நேரம் வழங்கவில்லை.”

“பன்னீர் அணியும் தனி அலுவலகம் திறக்கிறார்கள்போல...”

“ஆம்... மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகளையும் அறிவித்துவருகிறார் ஓ.பன்னீர்செல்வம். விரைவில், வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து அழைப்பு விடுத்து நடத்திய பொதுக்குழுதான் செல்லும் என்கிற விதியைக் கையிலெடுத்து, தேர்தல் ஆணையத்தில் முறையிடவும் முடிவுசெய்திருக்கிறார். அதனால்தான், வேக வேகமாகக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை அமர்த்தியிருக்கிறார். தலைமைக் கழகத்தின் சாவி எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், மயிலாப்பூர் உட்லேண்ட்ஸ் ஓட்டலில்தான் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கண்டிப்பாக ஒரு அலுவலகம் தேவை என்பதால், சென்னை மந்தைவெளியில் கட்சி அலுவலகத்துக்கான கட்டடமும் பார்த்து முடிவுசெய்துவிட்டார்களாம்.”

“எனினும், முக்கியமான ஒன்றை இழக்கப்போகிறாரே பன்னீர்?”

“எதைப் பற்றிக் கேட்கிறீர் என்பது புரிகிறது... தேவர் தங்கக்கவசம்தானே... பசும்பொன் நினைவிடத்திலுள்ள தேவர்சிலைக்கு அணிவிப்பதற்காக ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கவசம், கிரீடம் ஆகியவை மதுரையிலுள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா வங்கி’ லாக்கரில் வைக்கப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம்தான் இதுவரை கையெழுத்திட்டு எடுத்து அணிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது எடப்பாடியால் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனையே அதிகாரபூர்வ காப்பாளராக வங்கி ஏற்றுக்கொண்டிருப்பதால், இந்த வருடம் அவரிடம்தான் கவசம் ஒப்படைக்கப்படுமாம். அக்டோபர் 30-ம் தேதி வருகிறது தேவர் குருபூஜை. அதற்குள் காட்சிகள் மாறிவிடாதா என்று ஏங்குகிறது ஓ.பி.எஸ் தரப்பு” என்ற கழுகார், டேபிளில் இருந்த குட்டி சமோசாக்களை ருசி பார்த்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“கள்ளக்குறிச்சி சம்பவத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி-க்களின் செயல்பாடு, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களைச் சேகரித்த உளவுத்துறை அதை விரைவில் அரசுக்குச் சமர்ப்பிக்கவிருக்கிறது. அதன் அடிப்படையில் சர்ச்சைக்குரிய மாவட்ட எஸ்.பி-க்கள் சீக்கிரமே இடமாற்றம் செய்யப்படலாம். வேடிக்கை என்னவென்றால், கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட அந்த மாவட்ட முன்னாள் எஸ்.பி செல்வக்குமாருக்கு பதவி வழங்க அவசர அவசரமாக ஃபைல் மூவ் ஆகிக்கொண்டிருக்கிறதாம்” என்ற கழுகார்,

“பொதுப்பணித்துறையில் சென்னை மண்டலம் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதற்குத் தனியாக தலைமைப் பொறியாளர் பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. பெரிய இடத்து சர்ச்சையொன்றில் சிக்கிய பொறியாளர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஓர் அமைச்சரின் சிபாரிசில் மீண்டும் சென்னைக்கே மாறுதலாகி வந்திருக்கிறார். இடம் மாற்றத்துக்கே ‘மூன்று ஸ்வீட் பாக்ஸ்’ கைமாறியதாகப் பேச்சு எழுந்தது. புதிய பதவி முக்கியமானது என்பதால், அட்வான்ஸாக ‘5 ஸ்வீட் பாக்ஸ்’களைக் கொடுத்து புக் செய்துவைத்திருக்கிறாராம் அந்த சர்ச்சை அதிகாரி. இவரின் சிஷ்யர்தான் துறை அமைச்சரின் வலதுகரமாக இருக்கிறார் என்பதால், ‘அடுத்த தலைமை இன்ஜினீயர் நான்தான்’ என்று இப்போதே அவர் தனக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்களிடம் வசூல்வேட்டையில் இறங்கிவிட்டாராம்” என்றபடி சிறகை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டு ஏழு மாதங்களாகியும் இதுவரை முழுவீச்சில் செயல்படவில்லையாம். சைபர் க்ரைம் பிரிவிலேயே கம்ப்யூட்டரும் இல்லை, தொழில்நுட்பம் தெரிந்த அதிகாரிகளும் இல்லை என்று புலம்புகிறார்கள் காவல்துறையினர்.

* சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை கவனிக்கும் முக்கிய அதிகாரி, இந்த மாதத்தோடு ஓய்வுபெறுகிறார். கோடிகள் புரளும் இடமென்பதால், காலியாகும் அவரிடத்தைப் பிடிக்க போட்டா போட்டி நடக்கிறது.