Published:Updated:

மிஸ்டர் கழுகு: மீண்டும் பொதுக்குழு வழக்கு... அ.தி.மு.க-வில் திக்... திக்... திக்..!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

. ‘தேவர் சமுதாய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் தென் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து ஓ.பி.எஸ்., சசிகலா இருவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்

மிஸ்டர் கழுகு: மீண்டும் பொதுக்குழு வழக்கு... அ.தி.மு.க-வில் திக்... திக்... திக்..!

. ‘தேவர் சமுதாய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் தென் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து ஓ.பி.எஸ்., சசிகலா இருவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

சத்தமில்லாமல் என்ட்ரி கொடுத்த கழுகார், நம் அருகே இருந்த நாளிதழ்களை எடுத்து, தன்னருகே வைத்துக்கொண்டார். “அ.தி.மு.க பெயர்ப் பலகையை ஜெயக்குமார் தன்னருகே எடுத்து வைத்துக்கொண்ட காட்சியைப் பார்த்தீராக்கும்?” என்று கிண்டலடித்தபடி தேங்காய் பன்னைக் கொடுத்தோம். அதைப் பதம் பார்த்துக்கொண்டே செய்திக்குள் நுழைந்தார் கழுகார்...

“அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தலாம் என்று, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு எதிராக, ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது அல்லவா... அந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி, ‘இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். அந்த உத்தரவில், `பொதுக்குழு நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால், தீர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு தனி நீதிபதி அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இதை ஏற்க முடியாது’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக, பொதுக்குழு நடத்த, தனி நீதிபதி கொடுத்த தீர்ப்புக்கு எதிராகவும், தங்களுக்குச் சாதகமாகவும்தான் தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. ஒருவேளை தனி நீதிபதி உத்தரவு ரத்துசெய்யப்பட்டால், பொதுக்குழுவே செல்லாததாகிவிடும். ஒற்றைத் தலைமைக்கு முன்பிருந்த நிலை வந்துவிடும் என்பதால், பதற்றத்தோடு இருக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.”

மிஸ்டர் கழுகு: மீண்டும் பொதுக்குழு வழக்கு... அ.தி.மு.க-வில் திக்... திக்... திக்..!

“தேவர் சமூக அமைப்புகள் கடிதம் எழுதியிருப்பதாகச் சொன்னார்களே...”

“ஆம். ‘தேவர் சமுதாய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் தென் மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து ஓ.பி.எஸ்., சசிகலா இருவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில், ‘இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. ஓ.பி.எஸ் தரப்பும்கூட சசிகலாவும் தினகரனும் தன்னுடன் இணைந்தால் இன்னும் வீரியமாகப் போராடலாம் என்றே கருதுகிறது. இந்தக் கடிதத்தின் பின்னாலும் ஓ.பி.எஸ் தரப்பின் கைங்கர்யம் இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை வீட்டுக்கே போய் சந்தித்த சசிகலா, ‘ஓ.பி.எஸ் மட்டுமல்ல, அ.தி.மு.க-வில் உள்ள எல்லோரும் இணைந்து ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்’ என்று இந்தக் கடிதத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: மீண்டும் பொதுக்குழு வழக்கு... அ.தி.மு.க-வில் திக்... திக்... திக்..!


“தி.மு.க-விலும் ஏதோ கடிதப் பிரச்னை ஓடுகிறதுபோல...”

“ஆமாம். நீலகிரி தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் முபாரக்குக்கு எதிராகக் கட்சிக்குள் கலகம் வெடித்திருக்கிறது. அவரை மாவட்டப் பொறுப்பிலிருந்து நீக்கச் சொல்லி, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் அறிவாலயத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தின் நகல் நமக்கும் கிடைத்தது. அதில், ‘தனது ஆறு வருடப் பதவிக்காலத்தில் வெறும் நான்கு முறை மட்டுமே மாவட்டக் கழகக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முபாரக். 60 சதவிகிதம் பேர் அவருக்கு எதிராக இருக்கிறோம். தி.மு.க-வுக்குச் சாதகமான கூடலூர் தொகுதி இவர் பொறுப்பேற்ற பின்னர்தான், அ.தி.மு.க வசமானது’ என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்கள். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முடிவு செய்திருக்கிறாராம். ‘தள்ளாத வயதில் முருகனைச் சமாளிப்பாரா முபாரக்?’ என்பதே அறிவாலயத்தில் புகாரளித்தவர்களின் கேள்வியாக இருக்கிறது.”

“ஓஹோ...”

“தி.மு.க உட்கட்சித் தேர்தல் தொடர்பாக இன்னொரு தகவல் இருக்கிறது, சொல்கிறேன் கேளும். நெல்லையில் தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப், மாநகர் மாவட்டச் செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆதரவாளர்களுக்கு இடையே பிரச்னை நீடிப்பதால் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது. சமீபத்தில் இரு தரப்பையும் அழைத்த அறிவாலயம், அப்துல் வஹாப் தரப்புக்கு 70 சதவிகிதப் பொறுப்புகளும், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தரப்புக்கு 30 சதவிகிதப் பொறுப்புகளும் கொடுப்பதாகச் சொல்லியிருக் கிறது. இதில் லட்சுமணன் தரப்புக்கு கடும் அதிருப்தி. தி.மு.க-வில் நிலவும் இந்த கோஷ்டி மோதலை உன்னிப்பாக கவனித்துவரும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., அதிருப்தி கோஷ்டியினரை பா.ஜ.க பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.”

மிஸ்டர் கழுகு: மீண்டும் பொதுக்குழு வழக்கு... அ.தி.மு.க-வில் திக்... திக்... திக்..!


“உலகம் சுற்றும் வாலிபர் கண்காணிக்கப் படுகிறாராமே...”

“எதைப் பற்றிக் கேட்கிறீர் என்பது புரிகிறது... மேலிடத்து மாப்பிள்ளை விவகாரம்தானே... அவர் மாதத்தில் பாதி நாள்கள் ஊரிலேயே இருப்ப தில்லையாம். ஜெனிவா, லண்டன், சிட்னி எனப் பறந்துகொண்டேயிருக்கிறார். அவரின் வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு அவர் சந்திக்கும் பிரமுகர்கள், முதலீடுகள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்துவைக்க தனி டீம் அமைத்திருக்கிறார்கள் மத்தியில் ஆள்கிறவர்கள். தூதரகம், உளவு அமைப்புகள் போன்றவற்றின் மூலமும் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றனவாம். அப்படி லண்டன், பிரிஸ்பேனிலிருந்து சேகரிக்கப் பட்ட சில ஆவணங்கள் டெல்லிக்கு வந்துவிட்ட தாகவும் சொல்கிறார்கள்” என்ற கழுகாருக்கு லெமன் டீயைக் கொடுத்தோம். உறிஞ்சியபடியே செய்திகளைத் தொடர்ந்தார்...

“நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 75 இடங்களில் தேசியக்கொடியுடன்கூடிய தியாகச் சுவர் அமைக்கும் பணி நடந்துவருகிறதல்லவா... அதில் சாவர்க்கர் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டுமென்று நாக்பூரிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறதாம். அதன்படி புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் 100 அடி உயரம்கொண்ட தியாகச் சுவரில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளின் பெயர்ப் பலகைகள் பதிக்கப்பட்டுவருகின்றன. அதில் சாவர்க்கர் பெயர்ப் பலகையைப் பதித்தார் பொறுப்பு ஆளுநர் தமிழிசை. அவ்வளவுதான்... காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழிசை, ‘சாவர்க்கர் ஒன்றும் கள்ளக்கடத்தல் செய்துவிட்டுச் சிறைக்குச் சென்றவரில்லை. அவரும் சுதந்திரப் போராட்டத் தியாகிதான்’ என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசிவருகிறார். `எப்படியும் ஆ.என்.ரவியைவிட சிறப்பாகச் செயல்படுவதாக மேலிடத்தில் பெயர் வாங்கிவிட வேண்டும்’ என்று துடிக்கிறார் தமிழிசை என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.”

“ஜூ.வி சுட்டிக்காட்டிய பள்ளிக்கு விசிட் அடித்திருக்கிறாரே அன்பில்?”

மிஸ்டர் கழுகு: மீண்டும் பொதுக்குழு வழக்கு... அ.தி.மு.க-வில் திக்... திக்... திக்..!

“ஆமாம். ஏற்காடு மலைப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகள் பழுதடைந்த நிலையில் இருப்பது குறித்து கடந்த ஜூ.வி இதழில், ‘இடியும் நிலையில் பள்ளிக்கூடங்கள்... இல்லம் தேடிவரும் ஆசிரியர்கள்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தீர் அல்லவா... கடைகளில் ஜூ.வி வெளியான அன்றைய தினமே புளியங்கடை பள்ளிக்கூடத்துக்கு நேரில் போய் ஆய்வுசெய்திருக்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். உடனடியாக செங்காடு, புளியங்கடை, வீராணம் பகுதியிலுள்ள பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்ட அவர், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக 75 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கிறார். ‘ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம்’ என்று தனது இணையதளப் பக்கங்களிலும் பெருமையுடன் பதிவிட்டிருக்கிறார் அமைச்சர்” என்று கிளம்பத் தயாரான கழுகாருக்கு ஒரு போன் வந்தது. பரபரப்பானவரை நிறுத்தி, “என்ன செய்தி?” என்றோம்.

“டெல்லியில் பிரதமருடன் தமிழ்நாட்டு முக்கியப் பிரமுகரின் சந்திப்பு நிகழப்போகிறது” என்றவரை வலுக்கட்டாயமாக நிறுத்தி, “யார்?” என்று கேட்டோம். “அவர் ஒரு உச்ச நடிகர். அதற்குமேல் கேட்க வேண்டாம். சந்திப்பு நிகழட்டும், விவரங்களைப் பிறகு சொல்கிறேன்’’ என்றபடியே சிறகை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* குளுகுளு மாவட்டத்தில், ‘வில்’லுக்குப் புகழ் பெற்றவரின் பெயரைக்கொண்ட அ.தி.மு.க புள்ளி அவர். முந்தைய ஆட்சியின்போது, அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் வாங்கினாராம். பணத்தைத் திருப்பிக் கேட்டு தினம்தோறும் பலர் இவரது வீட்டுக்குப் படையெடுக்கிறார்கள். அண்மையில், இளைஞர் ஒருவர் விரக்தியில் தீக்குளிக்க முயல... பதறிப்போனவர், ‘சொத்தை வித்தாவது பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுறேன்’ என்று சமாதானம் பேசி அனுப்பியிருக்கிறாராம்.

* ஆளுங்கட்சி தலைமையகத்தில் செல்வாக்குள்ள ஒருவரின் மேற்பார்வையில், தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது. ஆந்திராவிலிருந்து மணல் கொண்டுவரப்படுவதாக போலி பில்களையும் கூடவே கொண்டுவருகிறார்களாம். அதிகாரிகள் மட்டுமின்றி ஓர் அமைச்சரும் இதற்கு உடந்தையாம்.