Published:Updated:

மிஸ்டர் கழுகு: குடும்பத்திலிருந்தே ஒதுக்கிட்டாங்க... புலம்பலில் மாறன் பிரதர்ஸ்!

தயாநிதி மாறன்
பிரீமியம் ஸ்டோரி
தயாநிதி மாறன்

தூத்துக்குடியில் கவர்ன்மென்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் கட்டுவதற்கான டெண்டர் விவகாரம்தான். தொகை பெரிது என்பதால் போட்டியும் கடுமையாக இருக்கிறது.

மிஸ்டர் கழுகு: குடும்பத்திலிருந்தே ஒதுக்கிட்டாங்க... புலம்பலில் மாறன் பிரதர்ஸ்!

தூத்துக்குடியில் கவர்ன்மென்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் கட்டுவதற்கான டெண்டர் விவகாரம்தான். தொகை பெரிது என்பதால் போட்டியும் கடுமையாக இருக்கிறது.

Published:Updated:
தயாநிதி மாறன்
பிரீமியம் ஸ்டோரி
தயாநிதி மாறன்

“அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடியுடன் மோதும் ஓ.பி.எஸ்., கூடவே நீதிமன்றத்துடனும் மோத ஆரம்பித்திருக்கிறார்” என்றபடி என்ட்ரியான கழுகார், நேரடியாகச் செய்திக்குள் நுழைந்தார்.

“அடுத்தது என்ன என்று தெரியாமல் அ.தி.மு.க-வில் இரு அணிகளும் அடக்கி வாசிக்கும் நேரத்தில், தனது பலத்தைக் காட்டத் திட்டமிட்டிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். அதற்காகவே எடப்பாடி தரப்பு பொதுக்குழு நடத்திய அதே வானகரம் வாரு மண்டபத்தில் அ.ம.மு.க செயற்குழு, பொதுக்குழு நடக்கும் என்று அறிவித்தாராம். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி தொண்டர்களையும் அழைத்துவரச் சொன்னதுடன், ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் டார்கெட்டும் ஃபிக்ஸ் பண்ணியிருக்கிறாராம். இந்த பொதுக்குழுவுக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து பலர் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று நம்புகிறார் தினகரன். இது ஒருபுறமிருக்க, ‘பா.ஜ.க-வுடன் கூட்டணியா?’ என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ‘நீங்கள் நினைப்பதுகூட நடக்க வாய்ப்பிருக்கிறது’ என்று சமீபத்தில் பதில் சொல்லியிருந்தார் தினகரன். எனவே, பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்தும் பொதுக்குழுவில் பேசப்படலாம் என்கிறார்கள்.”

“சீரியஸாக காமெடி செய்வதில் தினகரனை மிஞ்ச ஆளில்லை... டெண்டர் விவகாரங்கள் பேசுபொருளாகி யிருக்கின்றனவே என்ன செய்தி?”

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

“தூத்துக்குடியில் கவர்ன்மென்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் கட்டுவதற்கான டெண்டர் விவகாரம்தான். தொகை பெரிது என்பதால் போட்டியும் கடுமையாக இருக்கிறது. வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய நாமக்கல் நிறுவனம் ஒன்றும், வேறொரு பெயரில் முட்டி மோதுகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளரான ஹோட்டல் அதிபர் ஒருவரும் வலைவீசிப் பார்க்கிறார். இதற்கிடையே, தி.மு.க-வைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் களுக்குத்தான் இந்த டெண்டரைக் கொடுக்க வேண்டுமென தி.மு.க குடும்பப் பெண் பிரமுகரிடமிருந்து வேறு பரிந்துரை வந்திருக்கிறது. ஆனால், ‘பழைய ஆட்கள்தான் கரெக்டாக கட்டிங் கொடுப்பார்கள். புதியவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் வரும்படி வருமா?’ எனக் கட்டையைப் போடுகிறாராம் துறைக்குப் பொறுப்பானவர். ‘தேர்தலுக்குச் செலவு செஞ்சதெல்லாம் நாங்க... எங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, டெண்டரை மட்டும் அ.தி.மு.க-காரங்களுக்குக் கொடுக்கிறீங்களா?’ என தி.மு.க-வினர் கொந்தளிக்கிறார்கள். இதேபோல் டெல்டா மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டும் டெண்டரை எடுப்பதற்கும், சர்ச்சைக்குரிய நாமக்கல் நிறுவனம் முயல்கிறதாம். ஏற்கெனவே சிறிது, பெரிது வித்தியாசமில்லாமல் எல்லாம் அ.தி.மு.க காலத்து ஆட்களுக்கே கொடுக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. இப்போது விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.”

“ஓஹோ...”

“இன்னொரு கூத்தும் நடக்கிறது. டெல்டா மாவட்டமொன்றில், டெண்டர் எடுத்த மாவட்டப் புள்ளிக்கும், துறை அமைச்சருக்குமே ‘லட்டுகளை’ப் பகிர்ந்துகொள்வதில் முரண்பாடு ஏற்பட்டு, முட்டிக்கொண்டதாம். இதனால், பணிகளைத் தொடங்க முடியாமல் கிடப்பில் போட்டு விட்டார்களாம்” என்ற கழுகாருக்கு வறுத்த வேர்க்கடலையைக் கொடுத்தோம். கடலையைக் கொறித்தபடி செய்திகளைத் தொடர்ந்தார்...

“மாறன் சகோதரர்கள், செனடாப் சாலைமீது ஏக வருத்தத்தில் இருக்கிறார்களாம். அதிலும் எம்.பி-யாக இருக்கும் தயாநிதிமாறன் தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னைக்கு வந்திருந்தபோது, மரியாதைக்குக்கூட என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை. நானாகத் தெரிந்துகொண்டுதான் வரவேற்கச் சென்றேன். முக்கியமான டெல்லி விவகாரங்கள் குறித்து என்னுடன் கலந்தாலோசிப்பதும் இல்லை. டி.ஆர்.பாலு வைப்பதே சட்டம் என்றாகிவிட்டது. பல விஷயங்களில், குடும்பத்தைவிட்டே ஒதுக்கியது போல எங்களிடம் நடந்துகொள்கிறார்கள்’ என்று புலம்பித் தீர்க்கிறாராம்.”

“அப்படியா... ஒலிம்பியாட் செய்தி ஏதேனும்...”

“அதெல்லாம் சிறப்பாகத்தான் நடக்கிறது. போலீஸார்தான் பாவம். கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் தொடங்கி மாமல்லபுரம் வரை சாலையின் இருபுறமும் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். வேகாத வெயிலில் நிற்கும் போலீஸாருக்கு உணவும் குடிநீரும்கூட கொடுக்கப்படவில்லையாம். கிடைக்கும் படிக்காசில் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்களாம். ‘எல்லாத்தையும் அடக்கிட்டு நிக்கணும். நிக்கிற இடத்தைவிட்டு நகரக் கூடாது’ என்று சில உயரதிகாரிகள் மனிதாபிமானமே இல்லாமல் திட்டவும் செய்கிறார்களாம்.”

“அநியாயம்...”

“நிதி நிறுவன மோசடிப் புகாரில் சிக்கிய ‘சிவன்’ பெயர்கொண்ட பிரமுகரை, சமீபத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து, மத்திய சென்னையிலுள்ள காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். திடீரென மேலிடத்திலிருந்து போனில் பேசியவர்கள், சம்பந்தப்பட்டவர் மீதான புகாரைக் கிடப்பில் போடச் சொல்லியிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அந்த ‘சிவன்’ பிரமுகரும், ஆட்சி மேலிடப் பிரமுகரும் ஒருகாலத்தில் ஒரே நீச்சல்குளத்தில் ஒன்றாகக் குளிக்கும் அளவுக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலிடத்தின் வருமானத்தைக் கையாளும் அளவுக்கு செல்வாக்கோடு இருந்திருக்கிறார் அந்த ‘சிவன்’ பிரமுகர். அந்தப் பழக்கம் காரணமாகத்தான் விடச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதற்குள்ளாகவே அவர் ரிமாண்ட் செய்யப்பட்டுவிட்டார்.”

“இன்னொரு நிதி நிறுவனமும் சிக்கலில் மாட்டியிருக்கிறதே...”

“உமக்கும் தகவல் வந்துவிட்டதோ... ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே, ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பற்றியும் அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருந்தது உளவுத்துறை. ஆனால் அந்த நிதி நிறுவனத்தில் அரசியல் கட்சியினர், காவல்துறை உயரதிகாரிகள், தொழிலதிபர்களின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டிருப்பதால் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யலாமா, வேண்டாமா என்ற யோசனையிலேயே காவல்துறையினர் காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ‘அந்த நிதி நிறுவனம் மூலம், தான் 18 கோடி ரூபாய் இழந்திருப்பதால் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக நிதி நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய உத்தரவிட்டிருக்கிறது” என்ற கழுகார்...

“சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர காவல் பகுதிகளில் போலீஸாரின் ஆசியோடு பாலியல் தொழில் நடப்பதாகக் கடந்த 3.8.2022-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் ‘சிங்காரி சென்னை’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தீர்கள் அல்லவா... அதற்கு உடனடி ஆக்‌ஷன் எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். சமூக விரோத கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு மாதம்தோறும் ‘லட்டு’களைப் பெற்றுவந்த காவல்துறை அதிகாரிகள் பட்டியலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள 38 அதிகாரிகள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்போகிறதாம் டி.ஜி.பி அலுவலகம்” என்றபடி ஜெட்டாகப் பறந்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* மயிலாடுதுறை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 1-ம் தேதி நடந்தபோது, மக்கள் வந்து காத்திருக்க, ஆட்சியர் வரவேயில்லையாம். ‘கலெக்டர் எங்கே?’ என்று குரலெழுப்பிய மக்களைச் சமாளித்து, டி.ஆர்.ஓ கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார். அப்படி ஆட்சியர் எங்குதான் சென்றார் என்று விசாரித்தால், திருவெண்காட்டிலுள்ள திருமதி முதல்வர் வீட்டில் நடந்த கூட்டத்துக்குப் போயிருந்தாராம் கலெக்டர்.

* பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டத்தில் பங்கேற்காமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாரிசு எம்.பி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்கள் இரண்டு பேர் ஒதுங்கியிருந்தார்கள். அது சோனியா காந்தியின் கவனத்துக்குப் போனது. உடனே, சோனியா காந்தி நாடாளுமன்ற மையப்பகுதிக்குச் சென்று போராட்டத்தில் கலந்துகொண்டார். அதைப் பார்த்துவிட்டு இந்த இரு எம்.பி-க்களும் மையப்பகுதிக்குச் சென்றனர். அப்போது, ‘இங்கேயே இருங்கள்’ என்று அவர்களுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டிருக்கிறார். சீமான் விட்டு செல்லப்பிள்ளைகள்போல!