Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்ட மெகா பிளான்! - கலக்கத்தில் மணல் புள்ளிகள்...

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

மணல் விவகாரத்தில் ‘வாரி’ குவித்துவிட வேண்டும் என்பதில் சிலர் குறியாக இருக்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்ட மெகா பிளான்! - கலக்கத்தில் மணல் புள்ளிகள்...

மணல் விவகாரத்தில் ‘வாரி’ குவித்துவிட வேண்டும் என்பதில் சிலர் குறியாக இருக்கிறார்கள்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

கையில் ஐபேட், மணிக்கட்டில் ஐவாட்ச் என கலக்கலாக என்ட்ரி கொடுத்த கழுகார், “தமிழக அரசு டிஜிட்டல் முறையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். அதனால்தான், நானும் அப்டேட்டாக வந்துவிட்டேன்” என்றவர், ஐபேடை ஆன் செய்தபடியே உரையாடலைத் தொடங்கினார்.

“ஆகஸ்ட் 15, தி.மு.க ஆட்சியமைத்த நூறாவது நாள். அன்று சுதந்திரதினம் என்பதால் கோட்டையில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின். இதனால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் முதல்வர். 100-வது நாளுக்கு முன்பாகவே ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட தகுதியுள்ள அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல... தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன சில வாக்குறுதிகளை பட்ஜெட்டில் அறிவித்த பிறகே கோட்டையில் கொடியேற்ற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் முதல்வர்.”

“அறிவாலயம் உற்சாகத்தில் இருக்கிறது என்று சொல்லும்!”

“ஆமாம். முதல்வரின் இந்தத் திட்டத்தால்தான் ஆகஸ்ட் 13-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படுகிறது. தமிழக அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதை வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டால், பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் எகிற முடியாது என்று ஆளும்தரப்பு கணக்கு போடுகிறது. தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், வேளாண்மைத்துறைக்கான தனி பட்ஜெட்டை அந்தத் துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் டிஜிட்டலில் முறையில் தாக்கல் செய்கிறார்களாம். இதற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனி டேப் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்ட மெகா பிளான்! - கலக்கத்தில் மணல் புள்ளிகள்...

“மய்யத் தலைவர் வருத்தத்தில் இருக்கிறாராமே?”

“கோவை தெற்குத் தொகுதியில் தோல்வி அடைந்திருந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக ஆகஸ்ட் 1-ம் தேதி கோவை சென்றார் கமல். மக்களுக்கு நன்றி சொல்லும் ஊர்வலத்துக்காக, கட்சியின் நிர்வாகிகள் கோவை கலெக்டரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். கொரோனா விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி கலெக்டர் மறுத்துவிட்டதால், ஆகஸ்ட் 2-ம் தேதி கமலே கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அவரிடம் பேசினார். அப்போதும் அனுமதி கிடைக்காததால், மறுநாள் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார் கமல். இதுதான் கமலின் வருத்தத்துக்குக் காரணம் என்கிறார்கள்!”

“மணல் புள்ளிகள் சிலர் கலக்கத்தில் இருக்கிறார்கள்போல...”

“மணல் விவகாரத்தில் ‘வாரி’ குவித்துவிட வேண்டும் என்பதில் சிலர் குறியாக இருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் அரசுக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். இதனால், மணல் வரத்துக்கு மாற்றுவழி உண்டா என்று முதல்வர் தரப்பில் விசாரித்திருக்கிறார்கள். அப்போது, ‘மணலை ஏற்றுமதி செய்யும் 63 நாடுகளிடமிருந்து மத்திய அரசின் ‘டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ (டி.சி.ஐ) மூலம் இறக்குமதி செய்துகொள்ளலாம்’ என்று டெல்லியிலிருந்து சிலர் சொல்லியிருக்கிறார்கள். இது தொடர்பாக மாநில பொதுப்பணித்துறை டி.சி.ஐ-யை அணுகினால், அவர்களே இறக்குமதி செய்து தருவார்கள். சமீபத்தில் புதுச்சேரி அரசும் இது தொடர்பான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறதாம். தொடர்ந்து தமிழகமும் அதே பாணியைப் பின்பற்றத் திட்டமிட்டிருப்பதால், மணல் புள்ளிகள் சிலர் கலக்கத்தில் இருக்கிறார்கள்!”

“ஜனாதிபதியின் ஊட்டி பயணம் எப்படி இருந்ததாம்?”

“கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்துவைத்த கையோடு மனைவி, மகளுடன் ஊட்டிக்குச் சென்ற ஜனாதிபதி மூன்று நாள்கள் அங்கு தங்கினார். அவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துதரும் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று நாள்கள் ஊட்டியில் முகாமிட்ட அமைச்சர், ஒருபக்கம் ஜனாதிபதிக்குத் தேவையானவற்றை கவனமாகச் செய்து கொடுத்ததுடன், ரிலாக்ஸாக முதுமலை, மாயாறு, தெப்பக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் டிரெக்கிங் சென்றாராம். ‘தேர்தல் ஆரம்பிச்சதுல இருந்து ரெஸ்ட் இல்லாம ஓடிக்கிட்டிருக்கோம். ஜனாதிபதி புண்ணியத்துல உடலையும் மனசையும் ரிலாக்ஸ் ஆக்கிக்கிட்டோம்ப்பா’ என்று உடன் சென்றவர்களிடம் மனம் திறந்திருக்கிறார் அமைச்சர்!”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்ட மெகா பிளான்! - கலக்கத்தில் மணல் புள்ளிகள்...

“டெல்லியில் பன்னீர் பவ்யம் காட்டிய கதை தெரியுமா?”

“உமக்கும் அந்தத் தகவல் வந்துவிட்டதா... சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தரப்பினரை சந்தித்துப் பேசினார் பன்னீர். அப்போது வருமான வரித்துறை வழக்கு ஒன்றில் தனது பெயர் இருப்பதைச் சுட்டிக்காட்டியவர், தன்மீது கரிசனம் காட்டும்படி கேட்டுக்கொண்டாராம். பன்னீரின் பவ்யத்தைப் பார்த்து பரிதாபப்பட்டவர்கள், அவரை வழக்கிலிருந்து கழற்றிவிடும்படி வருமான வரித்துறையினருக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள். லேட்டாக இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட எடப்பாடி டெல்லியின் குட் புக்கில் மீண்டும் பன்னீர் இணைந்துவிட்டாரோ என்று அப்செட்டில் இருக்கிறாராம்.”

“ஸ்டாலினின் சாட்டை சுற்றிச் சுழல்கிறதே!”

“அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளர் கட்டம் கட்டப்பட்டதைத்தானே சொல்கிறீர்கள்... அமைச்சர்கள் மட்டுமன்றி, அவர்களின் உதவியாளர்களையும் வைத்த கண் வாங்காமல் கண்காணித்துவருகிறது உளவுப் பிரிவு. அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கே தெரியாமல் அவரின் உதவியாளர் காளிதாஸ் என்பவர் சில டீலிங்குகளைச் செய்தது தெரியவந்ததாம். இதையடுத்தே, அவரைப் பதவியிலிருந்து தூக்கியடித்திருக்கிறது முதல்வர் அலுவலகம். இவர், ஏற்கெனவே கொங்கு மண்டலத்தின் பவர்ஃபுல் முன்னாள் அமைச்சருக்கும் ஆல் இன் ஆலாக இருந்தவராம். `அவரை எப்படி உதவியாளராக வைத்தீர்கள்?’ என பெரியகருப்பனையும் கண்டித்துள்ளது தலைமை. இப்போது காளிதாஸ் பொறுப்புக்கு இனிஷியல் அமைச்சர் சிபாரிசில் ஒருவரை நியமித்திருக்கிறது முதல்வர் அலுவலகம்.”

“இதே வேகத்தை அனைத்து விஷயங்களிலும் காட்டினால் சரிதான்!”

“ம்க்கும்... அதுதான் இல்லை என்கிறார்கள் கோட்டைத் தரப்பில். மற்றோர் அமைச்சரும் சர்ச்சையில் சிக்கிய நபரையே தன் தனி உதவியாளர்களில் ஒருவராக வைத்திருக்கிறார். ஏற்கெனவே சுகாதாரத்துறையை கவனித்த அமைச்சருக்கு வலதுகரமாக விளங்கிய முருகனின் பெயரைக் கொண்ட நபர்தான் அவர். இப்போது ‘பவரான’ துறையின் அமைச்சரிடம் சரணடைந்து, ‘கணக்கு பிள்ளை வேலையைக் கச்சிதமாக முடித்துத் தருகிறேன்’ என்று சொல்லி கல்லாகட்டும் வேலையைத் தொடங்கிவிட்டாராம். இவர்மீது வருமான வரித்துறை வழக்கு இருப்பது தெரிந்தும், அமைச்சர் எதற்காக இவரைச் சேர்த்துக்கொண்டார் என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.”

“எப்போது வேண்டுமானாலும் பீஸைப் பிடுங்கிவிடுவார்கள் என்கிற பயம் இல்லாமல் போய்விட்டது.”

“உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் ஆகஸ்ட் 5-ம் தேதி மாலை மறைந்துவிட்டார். மதுசூதனனுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அ.தி.மு.க தலைவர்கள், அடுத்தகட்டமாக அவைத்தலைவர் பதவியை யாருக்கு வழங்கலாம் என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது பன்னீர் தரப்பினர், ‘மதுசூதனன் எங்க அணியைச் சேர்ந்தவர்’ என்று உரிமைக்குரல் உயர்த்தியிருக்கிறார்கள். இதையடுத்து, பன்னீரை சமாதானப்படுத்தும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறாராம் எடப்பாடி” என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்ட மெகா பிளான்! - கலக்கத்தில் மணல் புள்ளிகள்...

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர், தனக்கு நெருக்கமானவர்களிடம் கேபிள் டி.வி ஏரியா உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி கல்லாகட்ட ஆரம்பித்திருக்கிறாராம். ஆளுங்கட்சிக்காரர்கள் உரிமம் கேட்டு விண்ணப்பித்தால், அவர்களின் எதிரணியினரை வைத்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்க வைக்கிறாராம். பிறகு, அந்தப் புகாரையே காரணமாகக் காட்டி உரிமம் கிடைக்கவிடாமல் உயர் பொறுப்பில் இருப்பவர் தடுப்பதாகப் புலம்பித் தீர்க்கிறார்கள் ஆளும் தரப்பு கரைவேட்டிகள்!

* கொங்கு நகரம் ஒன்றின் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், ‘தொழிலதிபர்கள் தொடர்பான புகார்களை யாரும் வாங்கக் கூடாது; விசாரணை நடத்தவும் கூடாது; எதுவாக இருந்தாலும் என்னிடம் அனுப்புங்கள்’ என்று கண்டிஷனாகச் சொல்லிவிட்டாராம். ‘ஆனாலும் இவ்வளவு ஆசை கூடாது’ என்று புலம்புகிறார்கள் அந்த மாவட்டத்தின் காக்கிகள்!

கோலோச்சும் மூன்றெழுத்து நிறுவனம்!

முன்னாள் கொங்கு அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமாக இருந்த மூன்றெழுத்து நிறுவனம், இப்போதும் கோட்டை வட்டாரத்தில் செல்வாக்குடன் வலம்வருகிறது. மத்திய மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் சகோதரர், கோவையை மையமாகக் கொண்டுதான் தொழில் செய்கிறார். அந்த நிறுவனமும் கோவை என்பதால், அமைச்சரின் சகோதரருடன் சத்தமில்லாமல் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார்களாம். இந்த முறை வேறு நிறுவனத்தின் பெயரில் ஒப்பந்தங்களை அள்ளிக்கொடுக்க முடிவாகியிருக்கிறது என்கிறார்கள்!“

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism