Published:Updated:

மிஸ்டர் கழுகு: “டொக்கு டொக்குன்னு நெஞ்சைப் பதறடிக்குது சார்!”

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

முதல்வரிடம் கெஞ்சிய தி.மு.க மூத்த தலைவர்

மிஸ்டர் கழுகு: “டொக்கு டொக்குன்னு நெஞ்சைப் பதறடிக்குது சார்!”

முதல்வரிடம் கெஞ்சிய தி.மு.க மூத்த தலைவர்

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
“தமிழக அரசியல் களைகட்ட ஆரம்பித்துவிட்டதே!” என்றபடி வந்தார் கழுகார். “கு.க.செல்வம் கொளுத்திப் போட்ட வெடி சரசரவென வெடிக்கிறதோ?” என்றபடி, வாழையிலையில் சுடச்சுட கேரட் அல்வாவை நீட்டினோம். அல்வாவை வாயில் போட்டுக்கொண்ட கழுகார், அதே சூட்டுடன் செய்திகளைக் கொட்டினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தி.மு.க-விலுள்ள வன்னியர், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பா.ஜ.க இழுக்க ஆரம்பித்திருப்பதை, சில மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தேன். நான்கு பேர்கொண்ட ஆர்.எஸ்.எஸ் அணி இதற்காகக் களத்தில் இறங்கியிருப்பதையும் சொல்லியிருந்தேன். அதுதான் இப்போது நடக்கிறது. தி.மு.க-வின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ-வான கு.க.செல்வம், திடீரென டெல்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்திருப்பது தமிழக அரசியலை தகிக்கவைத்துவிட்டது. ஸ்டாலின் குடும்பத்துக்கு கு.க.செல்வம் எவ்வளவு நெருக்கமானவர் என்பது ஊரறிந்த விஷயம். அவர் இப்படி மாறுவார் என்று பா.ஜ.க தலைவர்களே நினைக்கவில்லையாம். சரியான நேரத்தில் காய்நகர்த்தி கு.க.செல்வத்தை காவித்துண்டு போடவைத்துள்ளார் வி.பி.துரைசாமி.”

“ஓஹோ...”

“சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருக்கான ரேஸ் நடந்து கொண்டிருந்தபோதே கு.க.செல்வத்தை அழைத்த ஸ்டாலின், ‘பொறுப்புக்குழு போடலாம்னு இருக்கேன்யா. உன்னைத் தலைவராகவும், ராஜா அன்பழகன் உள்ளிட்டவங்களை உறுப்பினர் களாகவும் நியமிக்க முடிவு செஞ்சிருக்கேன்’ என்றாராம். இதில் கொஞ்சம் உற்சாகமாக இருந்துள்ளார் செல்வம். ஆனால், திடீரென உதயநிதி தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டு சிற்றரசுவை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்துவிட்டனர். இந்த நியமனத்தை டி.வி-யில் பார்த்துத்தான் செல்வம் தெரிந்துகொண்டாராம். பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் இல்லை என்பதையும் சூசகமாகத் தெரிந்துகொண்டிருக்கிறார். இந்தக் கோபத்தில்தான் அறிவாலயம் செல்வதைத் தவிர்த்துள்ளார். தி.மு.க-வினர் போன் செய்தால்கூட எடுக்கவில்லையாம்.”

மிஸ்டர் கழுகு: “டொக்கு டொக்குன்னு நெஞ்சைப் பதறடிக்குது சார்!”

“சரிதான்...”

“கு.க.செல்வத்துக்குச் சொந்தமாக மதுரவாயலில் இடம் ஒன்று உள்ளது. அந்த இடத்தில் சில சிக்கல்கள் இருப்பதால், விற்க முடியாமல் தவித்தாராம். அந்த நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில் ‘கல்வித்தந்தை’ ஒருவரிடம் அந்த இடத்தைக் கொடுத்து பெரும் தொகை ஒன்றையும் செல்வம் பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளது ‘கல்வித்தந்தை’த் தரப்பு. அதைக் கொடுக்க முடியாமல், இடத்தையும் விற்க முடியாமல் செல்வம் திண்டாடியுள்ளார். அந்தக் ‘கல்வித்தந்தை’ பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர். கு.க-வின் மனதைக் கரைத்ததில், அவரது பங்கும் இருக்கிறது என்கிறார்கள்!”

“சரி, டெல்லி சென்றவரிடம் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா என்ன சொன்னாராம்?”

“கு.க.செல்வத்துடன் பா.ஜ.க தலைவர் எல்.முருகன், வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர் அரங்க நாயகத்தின் மருமகன் எம்.என்.ராஜா ஆகியோர் டெல்லி சென்றனர். நட்டாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘இப்போது பா.ஜ.க-வில் இணைந்து, பதவியைப் பறிகொடுக்க வேண்டாம். அங்கே இருந்துகொண்டே தி.மு.க-வுக்குக் குடைச்சல் கொடுங்கள். தேவைப்படும்போது பா.ஜ.க-வில் இணையலாம்’ என்று சொல்லப்பட்டதாம். நட்டாவின் நம்பர் 7, மோதிலால் நேரு மார்க் இல்லத்தில் அவர்களின் சந்திப்பு நடந்த அதேசமயத்தில், செனடாப் சாலையிலுள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திலும் ஓர் ஆலோசனை நடந்துள்ளது.”

“ஓஹோ... அங்கே என்ன பேசினார்களாம்?”

“அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின், ‘கட்சியிலிருந்து செல்வத்தை நீக்கிவிடலாமா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு துரைமுருகன், ‘கட்சியிலிருந்து நீக்கினால் நேராக பா.ஜ.க-வில் இணைந்துவிடுவார். அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கலாம்’ என்று தடுத்துவிட்டாராம். மறுநாள் விளக்க நோட்டீஸ் அனுப்பிவிட்டு, கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் கழற்றிவிட்டனர்” என்ற கழுகார், இரண்டு இஞ்சி ‘டீ’க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு செய்தியைத் தொடர்ந்தார்.

“தி.மு.க-வில் ஆன்மிகப்புள்ளி ஒருவரும், பகுத்தறிவு பகலவன் ஒருவரும் ஒன்றாகச் சேர்ந்து பிரதமரைக் கடந்த வாரம் சந்தித்ததாக ஒரு செய்தி பரவியது. ஆனால், ஆன்மிகப்புள்ளி தரப்பில் அதை மறுத்தனர். விசாரித்தால் விவகாரம் வேறு மாதிரியாகத் திரும்புகிறது. பக்கத்து தீவு தேசத்தில் ஆலை ஒன்றை ஆன்மிகப்புள்ளி பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கவுள்ளாராம். அந்த ஆலையை சீன நிறுவனத்திடம் மாற்ற அந்த நாட்டின் ‘சகோதரர்கள்’ தரப்பு நினைக்கிறதாம். இதைச் சரிச்கட்ட வேண்டிய நெருக்கடி ஒருபுறமும், நிலுவையிலுள்ள வழக்குகள் மறுபுறமும் நெருக்க ஆன்மிகப்புள்ளி மூச்சுவிட முடியாமல் தவிக்கிறார். இதையெல்லாம் கணக்குப்போட்டு அவரையும் வளைப்பதற்குக் காய்நகர்த்த ஆரம்பித்துள்ளது பா.ஜ.க.”

ஸ்டாலின்
ஸ்டாலின்

“பெரிய இடத்து விவகாரமாக இருக்கும் போலிருக்கிறதே!”

“இன்னும் இருக்கிறது கேளும்... அந்த ஆன்மிகப்புள்ளி தமிழகத்தில் பிரமாண்டமான கடவுள் சிலை ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். இது பா.ஜ.க தரப்புக்கும் தெரியும். ‘ராமர் கோயில் கட்டும் பா.ஜ.க-வை நீங்கள் ஆதரிக்க வேண்டும். உங்களுக்கு வேண்டியதை நாங்கள் செய்கிறோம்’ என்று சென்டிமென்ட்டாகக் கொக்கி போடுகிறார்களாம். இவரை வளைப்பதன் மூலம் வட மாவட்டங்களில் தி.மு.க-வுக்கு ‘ஷாக்’ கொடுக்கத் திட்டமிடுகிறது பா.ஜ.க. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலுள்ள மூன்று தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. வரும் வாரங்களில் அரசியல் தீபாவளி களைகட்டும்” என்று கழுகார் சொல்லி முடிக்கவும், கமகமக்க மசால் வடையுடன் இஞ்சி ‘டீ’ வந்து சேர்ந்தது. டீயை உறிஞ்சிய கழுகார், “தி.மு.க மூத்த தலைவர் ஒருவர்மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரிசனத்தைக் கூறுகிறேன். பெயர் கேட்காதீர்!” என்றபடி தொடர்ந்தார்.

“சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது அந்தத் தலைவரின் பங்களா. அவர் பங்களாவுக்கு நேர் பின்னால் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ‘பாட்மின்டன்’ கோர்ட் அமைந்திருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தென் சென்னை எம்.பி-யான டி.ஆர்.பாலுவின் தொகுதி நிதியில் கட்டப்பட்ட அந்த கோர்ட், சில ஆண்டுகளாகக் கேட்பாரற்று மூடப்பட்டிருந்தது. தற்போது அதைப் புதுப் பித்துள்ளனர். பாட்மின்டன் கோர்ட் மீண்டும் திறக்கப்பட்டால் தன் வீட்டுக்குச் சத்தம் கேட்கும் என்று அதைத் திறக்கவிடாமல் கட்டையைப் போடுகிறாராம். சமீபத்தில் முதல்வர் தரப்பை தொடர்புகொண்ட அந்தத் தலைவர், தனக்கே உரிய நக்கல் பாணியில், ‘வீட்டுக்குள்ள இருந்தாக்கூட, இவனுங்க பாட்மின்டன் விளையாடுறது `டொக்கு... டொக்கு’னு நெஞ்சைப் பதறடிக்குது சார். வயசான காலத்துல ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா என்னா பண்றது சொல்லுங்க. அதைத் திறக்க வேண்டாம்னு சொல்லிடுங் களேன்’ என்று கெஞ்சியுள்ளார். இதையடுத்து பல லட்ச ரூபாயில் ஒப்பந்த அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட அந்த பாட்மின்டன் கோர்ட் மூடப்பட்டிருக்கிறதாம். அத்துடன் சேர்த்து அந்தத் தலைவர் வீட்டுக்கு அருகில் சிறப்பு குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுவரும் பூங்காவையும் இழுத்துமூட வேலைகள் நடக்கின்றனவாம். இவரது எடப்பாடி தொடர்பு குறித்து தி.மு.க தலைமையில் புகார் எழுப்பத் தயாராகி வருகிறார்களாம் இவரின் அரசியல் எதிரிகள்!”

“சரிதான்...”

“கிளம்ப எழுந்த கழுகார், “சென்னை மேற்கு மாவட்டத்தில் பொறுப்பிலிருந்த ஒருவர் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று சி.ஐ.டி காலனியை அணுகினாராம். அதற்கு, ‘உங்களைவிட கட்சியில சீனியர்ஸ் இருக்காங்க. கட்சியில அவங்களுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பாங்க’ என்று கோரிக்கையை சி.ஐ.டி காலனி நிராகரித்துள்ளது. தற்போது சீனியர்கள் அனைவரையும் ஓரம் கட்டிவிட்டு, மாவட்டப் பொறுப்பாளர் பதவியை சிற்றரசுவுக்கு கொடுத்த காரணத்தால், ‘பதவியைப் பெற்ற நபர் என்னைவிட என்ன சீனியரா?’ என்று அந்த நபர் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘நஞ்சு’ முருகேசன் சிறையில் அடைப்பு

நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்

சிறுமியை பாலியல்ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டு, மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 5-ம் தேதி மருத்துவமனையிலிருந்து நாஞ்சில் முருகேசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism