Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆளுநருக்கு அடுத்த செக்... துணைவேந்தர்களை கையிலெடுக்கும் ஸ்டாலின்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடியால் அமைக்கப்பட்ட, ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்சவ்’ குழுவில் ரஜினியும் இடம்பெற்றிருக்கிறார்

மிஸ்டர் கழுகு: ஆளுநருக்கு அடுத்த செக்... துணைவேந்தர்களை கையிலெடுக்கும் ஸ்டாலின்!

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடியால் அமைக்கப்பட்ட, ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்சவ்’ குழுவில் ரஜினியும் இடம்பெற்றிருக்கிறார்

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

அலுவலகம் வந்த கழுகாரைச் சர்க்கரைப் பொங்கல் கொடுத்து வரவேற்றபடி, “நீர் சுட்டிக்காட்டினாலும் காட்டினீர்... அமைதிப் பேரணியில் தயாநிதி மாறனையும், கனிமொழியையும் அருகிலேயே வைத்துக்கொண்டாரே ஸ்டாலின், கவனித்தீரா..?” என்றோம். பெரிதாக அலட்டிக்கொள்ளாத கழுகார், “நம் கடமையைச் செய்கிறோம்... அவ்வளவுதான்” என்றவாறே உரையாடலைத் தொடங்கினார்.

“தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மீதான வருமான வரித்துறை சோதனையில், கணக்கில் வராத 200 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. 26 கோடி ரூபாய் ரொக்கத்தையும், மூன்று கிலோ தங்க நகைகளையும்கூட அள்ளியிருக்கிறார்கள். இந்தச் சோதனை முதல்வர் குடும்பத்துக்குள்ளும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறதாம். இந்த விவகாரத்தை ஒட்டிய உரையாடலின் போது, சினிமாவைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு, அரசியலில் கூடுதல் ஆர்வம் காட்டுமாறு உதயநிதிக்கு ஸ்டாலின் ‘அட்வைஸ்’ செய்ததாகச் சொல்கிறார்கள்.”

“ ‘இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறாரே உதயநிதி?!”

“அதுவா... நடிகர் அமீர் கான் நடித்த ‘லால் சிங் சத்தா’ திரைப் படத்தைத் தமிழில் வெளியிடுவது ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான். ‘இந்தியை எதிர்த்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க போராடிவரும் நிலையில், தலைவரின் மகனே இந்திப் படத்தை வாங்கி வெளியிடுவதா?’ என்று விமர்சனம் எழுந்தது. சென்னையில் நடந்த பட புரொமோஷன் விழாவில், இது பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்க, ‘எந்த மொழியைக் கற்றுக்கொள்வதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. மொழித் திணிப்பைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்’ என்று சமாளித்திருக்கிறார் உதயநிதி. அவரது இந்த விளக்கம் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: ஆளுநருக்கு அடுத்த செக்... துணைவேந்தர்களை கையிலெடுக்கும் ஸ்டாலின்!

“ஆளுநர் ரவியை ரஜினி சந்தித்ததன் நோக்கம் என்னவாம்?”

“நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடியால் அமைக்கப்பட்ட, ‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்சவ்’ குழுவில் ரஜினியும் இடம்பெற்றிருக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற அந்தக் குழுவின் நிகழ்ச்சியொன்றில் ரஜினிகாந்த் கலந்துகொண்டபோது, அங்கிருந்த முக்கியஸ்தர்களிடம் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆன்மிகச் செயல்பாடுகளைப் பற்றி ரஜினிகாந்த் புகழ்ந்து பேசினாராம். இதைக் கேள்விப்பட்ட ஆர்.என்.ரவி ரஜினி-யைச் சந்திக்க விரும்பி, அடுத்த நாளே அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 8-ம் தேதி காலையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ரஜினியை, வாசலில் வந்து வரவேற்றிருக்கிறார் ஆளுநர்.”

“அப்படியென்ன பேசினார்களாம் இருவரும்?”

“சொல்கிறேன்... இந்தச் சந்திப்பிலும் ஆளுநரை ரஜினி புகழ, நெகிழ்ந்தே போய்விட்டா ராம் ரவி. ‘நீங்கள் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக் கும்... இப்பக்கூட உங்க வாய்ஸுக்கு மதிப்பிருக்கு... யோசிங்க’ என்று ஆளுநர் சொல்ல, தன் ஸ்டைலில் சிரிப்பையே பதிலாக்கியிருக்கிறார் ரஜினி. ஆன்மிகம், தமிழ்நாட்டு அரசியல், சுதந்திர தினக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, ‘சினிமா தயாரிப்பு, வெளியீட்டில் சிலரின் டாமினேஷன்’ பற்றியும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். டாமினேஷன் என்று சொன்னது வாரிசுப் புள்ளியை மனதில்வைத்துத்தான் என்றும் சிலர் சொல்கிறார்கள்.”

“வாங்காத கடனுக்கு வட்டி செலுத்தச் சொல்லியிருக்கிறதாமே கூட்டுறவு வங்கி?”

“தி.மு.க ஆட்சி அதிகாரத்துக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகியிருந்தாலும், கூட்டுறவு நிர்வாகங்கள் இன்றளவும் அ.தி.மு.க-வினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில், கடனே வாங்காத பலருக்கு, ‘வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு’ அதிர்ச்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய கூட்டுறவு வங்கி. கடுப்பான வணிகர்கள், விவசாயிகள் பலர் மத்திய வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக் கிறார்கள். என்னவென்று விசாரித்தால், கடன் பெற்றுத் தருவதாக நூற்றுக்கணக்கானோரிடம் விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு, ஒரு கோடி ரூபாய் வரை கையாடல் செய்திருக்கிறாராம் நீலகிரி அ.தி.மு.க முக்கிய நிர்வாகியும்‌, கூட்டுறவு சங்க முக்கியப் பொறுப்பாளருமான ஒருவர். இதற்குக் கூட்டுறவு வங்கி ஊழியர்களும் உடந்தையாம். இந்த மோசடி குறித்து இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தை ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் கையில் எடுத்திருப்பதால், அவர்களிடமும் ‘டீல்’ பேசிவருகிறாராம்‌ அந்த அ.தி.மு.க புள்ளி” என்ற கழுகாருக்கு இஞ்சி டீ கொடுத்தோம். அதைக் குடித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார்...

மிஸ்டர் கழுகு: ஆளுநருக்கு அடுத்த செக்... துணைவேந்தர்களை கையிலெடுக்கும் ஸ்டாலின்!

“ஆகஸ்ட் 3-ம் தேதி ஈரோட்டுக்குச் சென்ற தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஆடிப்பெருக்கு விழாவில் கலந்துகொண்டதுடன், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நிகழ்ச்சிக்கும் வர வேண்டும் என ஆளுநருக்கு வெவ்வேறு சமூகப் பிரமுகர்கள் அழைப்பு விடுத்து வருகிறார்களாம். அதற்கு ஆளுநர் தரப்பிலும் ஓ.கே சொல்லப்பட்டிருக்கிறதாம்.”

“தமிழ்நாட்டை வலம் வரப்போகிறார் ரவி என்று சொல்லும். சரி, அ.ம.மு.க-வில் என்ன நடக்கிறது?”

“அ.ம.மு.க பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வானகரம் வாரு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. வழக்கம் போல இந்த முறையும் ‘கை’ விரித்துவிட்டாராம் தினகரன். அதனால், பொதுக்குழுவுக்கு ‘யார் பணத்தைச் செலவு செய்வது?’ என்ற கேள்வி பூதாகரமாக எழுந்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைந்தது ஒரு ‘லட்டாவது’ கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம் பொதுக்குழு நிகழ்ச்சிப் பொறுப்பாளர். ‘ஏற்கெனவே, கட்சிக்குச் செலவு செய்த சிலர் ‘அட்ரஸ்’ இல்லாமல் போன நிலையில், பணத்துக்கு நாங்கள் எங்கே போவோம்?’ என்று மா.செ-க்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.”

“அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு...”

“தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள மணிமங்கலம் காவல் நிலையத்தில் விபசார புரோக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஜூஸ் கடை நடத்துவதாக வெளியில் காட்டிக்கொண்டு, வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவந்திருக்கிறார். பெரும்புள்ளிகள்தான் அவரின் வாடிக்கை யாளர்களாம். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அரசியல் வாரிசுகளோடும் அவர் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுபோன போலீஸாரிடம், ‘இந்த வழக்கை புரோக்கரோடு முடித்துவிடுங்கள். மேற்கொண்டு எதுவும் விசாரிக்க வேண்டாம்’ என்று மேலிடத் திலிருந்தே சொல்லிவிட்டார்களாம்” என்ற கழுகார்...

“தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சட்டப்படி ஆளுநரே வேந்தராக இருப்பதால், அவரின் கட்டுப்பாட்டிலேயே சில துணை வேந்தர்கள் இருந்துவருகிறார்கள். கடந்த ஏப்ரலில் தமிழ்நாட்டுத் துணைவேந்தர்களின் மாநாட்டை ஊட்டியில் தன்னிச்சையாக நடத்தினார் ஆளுநர். அதே நாளில், தமிழ்நாட்டிலுள்ள 13 பல்கலைக் கழகங்களிலும் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார் முதல்வர் ஸ்டாலின். அந்த சட்ட மசோதாவுக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இந்தச் சூழலில் வரும் 17-ம் தேதி சென்னையில் துணைவேந்தர்கள் கூட்டத்தை நடத்துகிறது அரசு. துணைவேந்தர்களை ஆளுநர் பிடியிலிருந்து மீட்பதே இதன் நோக்கம் என்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதுடன், ஆளுநர் பேசிவரும் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கை பற்றிப் பேசப்போகிறாராம்” என்றபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* தென்மாவட்டத்துக்குச் சமீபத்தில் சென்ற மேலிடத்து மாப்பிள்ளை தரப்பு, 300 ஏக்கரில் காற்றாலை டீல் ஒன்றை ஓ.கே செய்திருக்கிறது.

* செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முடிந்த பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அளவில் பெரிய மாற்றமிருக்கும் என்கிறார்கள். சில துறைகளில் சீனியர் அமைச்சர்களுக்கும், செயலாளர்களுக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் அந்த அதிகாரிகளும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.

* கொங்கு மண்டலத்திலிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் பூதாகரமாக வெடிக்கப்போகிறதாம். அவரால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இளம்பெண், விரைவில் மீடியாவைச் சந்தித்து அந்த ஐ.பி.எஸ் அதிகாரி பற்றிய ரகசியங்களையெல்லாம் வெளியிடப்போகிறாராம்.