Published:Updated:

மிஸ்டர் கழுகு: மூன்று முன்னாள் மாண்புமிகுக்களுக்குக் குறி!

கொடநாடு
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு

மீண்டும் தோண்டப்படும் கொடநாடு வழக்கு...

மிஸ்டர் கழுகு: மூன்று முன்னாள் மாண்புமிகுக்களுக்குக் குறி!

மீண்டும் தோண்டப்படும் கொடநாடு வழக்கு...

Published:Updated:
கொடநாடு
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு

கழுகார் உள்ளே நுழைந்ததும் இளநீர் புட்டிங்கை கோப்பையில் நீட்டினோம். ருசித்துப் பருகியபடியே, ‘‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை தி.மு.க பக்கம் கொண்டு வருவதற்காக அந்தக் கட்சி மெனக்கெட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பா.ஜ.க அவர்களைக் கொத்திக்கொண்டு போகத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுத்து, தி.மு.க-வுக்குப் போட்டி பா.ஜ.க-தான் என்பதை நிலைநிறுத்தும் அஜெண்டா இதுதானாம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஒருபக்கம் டெல்லியில் பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சரும் உடுமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான உடுமலை ராதாகிருஷ்ணன் ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டிருந்திருக்கிறார். அவரை தி.மு.க-வுக்குக் கொண்டுவர செந்தில் பாலாஜி டீம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில்தான், உடுமலை கடந்த வாரமே தன் மகனுடன் டெல்லிக்குச் சென்று, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவைச் சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக உடுமலை இருந்தபோது, வெங்கைய நாயுடு மத்திய வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தார். அப்போதே இருவருக்கும் நல்ல பரிச்சயம் என்பதால், வெங்கைய நாயுடுவைச் சந்தித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம் உடுமலை. அவர் சேனல் வழியாகவே, பா.ஜ.க-வின் மற்ற சீனியர் நிர்வாகிகளையும் சந்தித்திருக்கிறார்.’’

‘‘என்னதான் திட்டமாம்?’’

‘‘எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது முதலில் கைவைத்தவர்கள், அடுத்ததாக ராஜேந்திர பாலாஜியை நெருங்குகிறார்களாம். அதற்கடுத்து தங்கள் பக்கம் வந்துவிடுவார்களோ என்று இரண்டாம் கட்ட முன்னாள் அமைச்சர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இதுதான் உடுமலையின் யோசனைக்கும் காரணம். ஆனாலும், மற்ற முன்னாள் அமைச்சர்கள்போல உடுமலை மீது நேரடியாகக் கைவைக்க எந்தவோர் ஆதாரமும் இல்லையாம். உடுமலையின் பெரும்பான்மையான சொத்துகளும் சேலத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரில்தான் இருக்கின்றனவாம். கடந்த ஆட்சியில் ஒரு மேட்டரை முடித்து, அதில் ஏதேனும் லம்ப்பாகத் தேறினால், ‘சேலத்துக்குக் கொடுத்து அனுப்புப்பா’ என்பாராம். சேலம் என்றதும் எடப்பாடியாருக்குத்தான் கொடுக்கிறாரோ என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், சென்றதெல்லாம் வேறு இடம்.’’

மிஸ்டர் கழுகு: மூன்று முன்னாள் மாண்புமிகுக்களுக்குக் குறி!

‘‘அடேங்கப்பா, விவரமானவர்தான்போல!’’

‘‘கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கை தி.மு.க அரசு மீண்டும் தூசுதட்டப் போவதாகத் தகவல் கிளம்பியுள்ளது. கடந்த ஆட்சியில் முக்கியமான இடத்திலிருந்த மூன்று முன்னாள் மாண்புமிகுக்கள் பற்றிய தகவல்களை எடுக்கத்தான் அந்தச் சம்பவமே அரங்கேற்றப்பட்டது என்று ஆட்சி மேலிடத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் தனிப்படை அமைத்து, அந்த வழக்கை ஆரம்பத்திலிருந்து தோண்டித் துருவ நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது தி.மு.க அரசு. இதனால், எடப்பாடி உட்பட மூன்று முன்னாள் மாண்புமிகுக்களும் கலக்கத்தில் இருக்கிறார்களாம்!’’

‘‘உளவுத்துறை உயரதிகாரி மீது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் கடுப்பில் இருக்கிறாராமே!’’

‘‘அதற்கென்ன செய்ய முடியும்... அவரவர் டூட்டியை அவரவர் செய்ய வேண்டாமா? உளவுத்துறையினர் முன்னாள் உச்ச அமைச்சர் ஒருவர் தொடர்பான தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருந்தபோது, சென்னையில் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் சத்தமில்லாமல் பஞ்சாயத்து செய்யப்பட்டு, அந்த முன்னாள் மாண்புமிகு தரப்புக்கு தாரைவார்க்கப் பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதில் பஞ்சாயத்து செய்துகொடுத்தவர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் பதவியிலிருந்த இனிஷியல் போலீஸ் அதிகாரிதானாம். இவற்றை யெல்லாம் உளவுத்துறை மோப்பம் பிடித்து முதல்வருக்கு நோட் போட்டு அனுப்பிவிட்டதாம். இதுதான் அந்த உயரதிகாரிமீது முன்னாள் அமைச்சரின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: மூன்று முன்னாள் மாண்புமிகுக்களுக்குக் குறி!

“ஓஹோ...’’

‘‘சமீபநாள்களாக காவல்துறை இடமாற்றத்தில் ஏகத்துக்கும் வைட்டமின் ‘ப’ விளையாடியிருப்பதாக முதல்வருக்கு விஷயம் சென்றுள்ளது. தலைமை அலுவலகத்திலிருக்கும் இரண்டெழுத்து பெயர் கொண்டவர்தான் இதற்குக் காரணம் என்று முதல்வருக்குத் தகவல் பாஸாகியிருக்கிறது. அதனால், டி.ஜி.பி-யையும், உள்துறைச் செயலாளரையும் அழைத்த முதல்வர், ‘இனி போலீஸ் டிரான்ஸ்ஃபர் எதையும் எனது ஒப்புதலின்றி செயல்படுத்தக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார்’’ என்ற கழுகாருக்கு வறுத்த வேர்க்கடலையைத் தட்டில் நிரப்பிக் கொடுத்தோம். கொறித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

‘‘தலைமைச் செயலகத்தில் ஒரு துறையின் செக்‌ஷனில் பணிபுரிபவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வேறு செக்‌ஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே துறையில், ஒரே செக்‌ஷனில் சிலர் பணியாற்றிவருகிறார்கள். இது குறித்த புகார் முதல்வர் அலுவலகம் வரை எட்டியுள்ளது. விரைவில் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதல்வர் அலுவலகக் கதவைத் தட்டியிருக்கிறார்கள் தலைமைச் செயலகத்தின் ஊழியர்கள் சிலர்.”

‘‘திருச்செங்கோட்டில் நடந்த ஊழல் விவகாரத்தில் நடந்த சங்கதி ஆச்சர்யமாக இருக்கிறதே!”

மிஸ்டர் கழுகு: மூன்று முன்னாள் மாண்புமிகுக்களுக்குக் குறி!

‘‘தகவல் உமக்கும் வந்துவிட்டதுபோல... கடந்த ஆட்சியில் திருச்செங்கோடு பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 840 வீடுகள் கட்டப்பட்டன. அரசு அதிகாரிகள் தரப்பில் 545 வீடுகளுக்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் 215 பேர் தங்கள் வீடுகளை உறுதிசெய்து பணத்தையும் கட்டிவிட்டபோதும், இதுவரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை. பணம் கட்டியவர்களிடம் 15,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை வசூலித்திருக்கிறார்கள். இது குறித்த தகவல் திருச்செங்கோடு எம்.எல்.ஏ-வும், கொ.ம.தே.க தலைவருமான ஈஸ்வரன் காதுக்குச் செல்லவே, பயனாளிகளையும் அரசு அதிகாரிகளையும் மீடியா முன்பு நிறுத்தி, லஞ்ச விவகாரத்தை அம்பலப்படுத்தப்போவதாக அறிவித்தார். உடனே, லஞ்சப் பணம் மொத்தமும் இரவோடு இரவாக சம்பந்தப்பட்டவர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி அவரது எம்.எல்.ஏ அலுவலகத்தில்வைத்து கூட்டத்தைக் கூட்டியவர், ‘யார் யார் பணம் கொடுத்தீர்கள்... யார் யாருக்குப் பணம் திரும்பி வந்தது?’ என்று கைதூக்கச் சொல்லியிருக்கிறார். அத்துடன், ‘யாருக்காவது பணம் திரும்பி வரவில்லை யென்றால், என்னிடம் ரகசியமாகச் சொல்லுங்கள்’ என்று கூறி அதிரவைத்திருக்கிறார். தற்போது, உளவுத்துறையினரும் லஞ்ச ஒழிப்புத்துறையினரும் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். விரைவில், லஞ்சம் வாங்கியவர்கள்மீது நடவடிக்கை பாயலாம்.’’

மிஸ்டர் கழுகு: மூன்று முன்னாள் மாண்புமிகுக்களுக்குக் குறி!

‘‘வேலூர் தி.மு.க அலுவலகத்தில் அடிதடியாமே!’’

‘‘விசாரித்தேன்... வேலூர் தி.மு.க மாநகரச் செயலாளராகவும், தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருப்பவர் கார்த்திகேயன். எ.வ.வேலு ஆதரவாளரான இவருக்கும், பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் எப்போதுமே ஆகாது. ஆகஸ்ட் 7-ம் தேதி, வேலூரில் நடந்த கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சியில், பொதுச்செயலாளரை மதிக்காமல் சர்வாதிகாரிபோலச் செயல்படுவதாகக் கூறி, எம்.எல்.ஏ கார்த்திகேயனின் சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்துள்ளனர் துரைமுருகனின் ஆதரவாளர்கள். பதிலுக்கு கார்த்திகேயனும் எதிர்த்து அடிக்க, தி.மு.க அலுவலகமே ரணகளமானது. மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார்தான் இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்திருக்கிறார். விரைவில் கட்சித் தலைமையில் பஞ்சாயத்து களைகட்டும் என்று தெரிகிறது.”

“நடக்கட்டும்... நடக்கட்டும்!”

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால், அங்கு சில அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறது தி.மு.க. ஏற்கெனவே மாவட்டச் செயலாளராக இருந்த தென்றல் செல்வராஜ் விடுவிக்கப்பட்டு, கடந்த தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட வரதராஜன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கோவையில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், ஒரு மாவட்டச் செயலாளருக்கு இரு தொகுதிகள் என ஐந்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். தற்போது இதை மூன்று மாவட்டங்களாகச் சுருக்கிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறது கட்சித் தலைமை. இதன்படி, ஒரு மாவட்டச் செயலாளருக்கு நான்கு தொகுதிகளும், மீதமுள்ள இரு மாவட்டச் செயலாளர்களுக்கு தலா மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்படுமாம். இதற்காக வார்டுவாரியாக ஆய்வு நடத்திவருகிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் 600 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவர்களைக் கைது நடவடிக்கையிலிருந்து தப்பவைக்க காவல்துறையின் மேலிருந்து கீழ்மட்டம் வரை ஆறு `சி’ வரை கைமாறியதாம். இதையடுத்தே, உயரதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டாராம். விரைவில் இந்த விவகாரத்தில் பூகம்பம் வெடிக்கலாம் என்கிறார்கள்!

 அல்வா மாவட்டத்திலிருந்து அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ச்சியாக தி.மு.க-வில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரும் அறிவாலயத்தில் அடைக்கலமாவார் என்கிறார்கள்!

 சென்னை மாதவரம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘ராஜ’ அதிகாரி ஒருவரும், முன்னாள் கரைவேட்டியும் நெருக்கம். இந்த நெருக்கத்தில் சிலபல சித்து விளையாட்டுகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். கரைவேட்டியை வளைக்க தீவிரமாகியிருக்கும் அரசு, தற்போது ‘ராஜ’ அதிகாரியை நெருங்குகிறதாம். பதற்றமடைந்த அதிகாரி, பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்கும், வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்கும் ஒரு பெரிய ஸ்வீட் பாக்ஸுடன் கோட்டையில் வலம்வருகிறாராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism