அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: பண்ணை வீட்டில் ரகசிய சந்திப்பு...

முதல்வர் காலில் விழுந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி...
பிரீமியம் ஸ்டோரி
News
முதல்வர் காலில் விழுந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி...

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் திவாகரன்!

“சேலத்தில் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறதே...’’ - தலையைச் சிலுப்பிக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “யாரைச் சொல்கிறீர்?’’ கேள்வியுடன் கோதுமை அடையை நீட்டினோம். தேங்காய் சட்னியுடன் சுவைத்து மகிழ்ந்தவர், “வட மாவட்ட முக்கியப் பிரமுகர் ஒருவர் 300 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைக் கட்டிவருகிறார். அதற்கு அனுமதி பெறுவது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்திருக்கிறார். எதிர்முகாமைச் சேர்ந்தவர் என்றாலும், அவரிடம் கரிசனமாகவே பேசி அனுப்பியிருக்கிறார் முதல்வர்’’என்றபடி செய்திக்குள் தாவினார்.

“ஆளும் தரப்புக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனம் ஒன்று சிக்கலில் இருக்கிறது. ரியல் எஸ்டேட்டில் கோலோச்சும் அந்த நிறுவனத்தில் ஆளும் தரப்பின் ‘அமைதிப் பிரமுகர்’ ஏகத்துக்கும் முதலீடு செய்திருக்கிறாராம். இதைப் பார்த்துவிட்டு, அதே நிறுவனத்தில் ஆட்சி மேலிட பிரமுகர்களில் ஒருவரும் பல கோடிகளை முதலீடு செய்துள்ளாராம். வளைகுடா நாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று விரைவில் தமிழகத்தில் கடைவிரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் சில பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதை எதிர்க்கட்சித் தரப்பு மோப்பம் பிடித்துவிட்டதாம். வளைகுடா நிறுவனம் மூலமாக, ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கரன்ஸிகளை மாற்றி, தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள ஆளும் தரப்பு திட்டமிட்டிருந்தது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை முடக்கிவிட்டால், ஆளும்கட்சிக்கும் பணநெருக்கடி வரும் என நினைக்கிறது எதிர்க்கட்சி. இந்த விவகாரமும் விரைவில் வெடிக்கலாம்.”

திவாகரன்
திவாகரன்

“ஓஹோ... வேறு செய்திகள் உள்ளனவா?”

“அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து மண்டலவாரியாக ரிப்போர்ட் எடுக்கும்படி அந்தக் கட்சியின் ஐ.டி விங்குக்கு அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம். அந்த ரிப்போர்ட்டை உளவுத்துறையிடம் அளித்து கிராஸ் செக் செய்யவும் முடிவெடுத்துள்ளது ஆட்சித் தலைமை. மைனஸ் மார்க் வாங்கும் மாவட்டச் செயலாளர்களுக்கு ‘சீட்’ கொடுப்பதில்லை என்ற முடிவுடன் களம் இறங்கியிருக்கிறது ராயப்பேட்டை அலுவலகம்.”

“முதல்வரின் தென் மாவட்டச் சுற்றுப்பயணத்தில் சுவாரஸ்யங்கள் ஏதேனும்..?”

“கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஆகஸ்ட் 7-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை சென்றிருந்தார். ஆய்வை முடித்துவிட்டு காரில் ஏறச் சென்ற எடப்பாடியை வழிமறித்து, முன்னாள் மேயர் புவனேஸ்வரி காலில் விழுந்தார். ‘கட்சியில் எனக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை. என்னைவிட ஜூனியர்கள் பலரும் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னாள் மேயராக இருந்தபோதிலும், மகளிர் அணியில்கூட எந்தப் பொறுப்பும் கிடைக்காமல் இருக்கிறேன்’ என்று புலம்பித் தீர்த்தாராம். ‘சீக்கிரம் நல்ல பொறுப்பு கொடுக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாராம் எடப்பாடி.”

முதல்வர் காலில் விழுந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி...
முதல்வர் காலில் விழுந்த முன்னாள் மேயர் புவனேஸ்வரி...

“ம்ம்...”

“பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சதன் பிரபாகருக்கு எம்.எல்.ஏ வாய்ப்பை வழங்கிய அ.தி.மு.க., பரமக்குடி ஒன்றியச் செயலாளர் பதவியை முத்தையாவுக்கு வழங்கியது. இருவரும் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆதங்கத்தில் இருக்கிறார்கள். இதைச் சமாளிக்க, பரமக்குடி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, கிழக்கு ஒன்றியச் செயலாளர் பதவியை முக்குலத்தோர் சமூகத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அதைத் தடுக்க சதன் பிரபாகர் முயல்வதாகப் புகார் எழுந்துள்ளது. இரு தரப்பிலும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளார்கள். தேர்தல் காலத்தில் எழுந்துள்ள இந்தச் சமுதாயரீதியிலான கருத்து மோதல்கள்

அ.தி.மு.க தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.”

“சரிதான்... பெரிய கருப்பனுக்கு எதிராகவும் போஸ்டர் முளைத் துள்ளதாமே?”

“ஆமாம். சமீபத்தில் காளையார்கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளர் மார்த்தாண்டன், காளையார்கோவில் முன்னாள் வடக்கு ஒன்றியச் செயலாளர் மேப்பல் சக்தி, சாக்கோட்டை முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.முத்துராமலிங்கம் ஆகியோர் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டனர். இதன் பின்னணியில் மாவட்டச் செயலாளரான பெரிய கருப்பன் இருப்பதாகக் கூறி, காளையார்கோவிலில் கண்டனப் போராட்டமே நடந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பெரிய கருப்பனின் ‘வில்லங்கமான’ வீடியோ ஒன்று வைரலானது. அந்தக் காட்சிகளை போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர். இதைச் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர் புகாரும் அளித்துள்ளனர்.”

ஜெய் ஆனந்த்
ஜெய் ஆனந்த்

“ஓஹோ...”

“வேலூர் மாவட்டத்தில் லாட்டரி சீட், `நெம்பர் விளையாட்டு’ எனக் கூறப்படும் ‘காட்டன் சூதாட்டம்’ அமோகமாக நடக்கின்றன. மாவட்டத்துக்கே தலைமையிடம் ‘குடியாத்தம்’ என்கிறார்கள். இந்தச் சூதாட்டத்தில் சிக்கி 300, 400 ரூபாய் என அன்றாடம் உழைத்த காசை பறிகொடுக்கும் தினக்கூலிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். இந்தச் சூதாட்ட மாஃபியாக்களை வழிநடத்துவது தி.மு.க மாவட்ட மாணவர் அணியைச் சேர்ந்த ஒருவர்தானாம். போலீஸுக்கு கட்டிங் ஒழுங்காகப் போய்விடுவதால், அந்தப் பிரமுகருக்கு ராஜ உபசரிப்பு கொடுக்கிறார்களாம். ‘எம்.எல்.ஏ கனவில் மிதக்கும் அந்தப் பிரமுகரைத் தட்டிவைக்கவில்லையென்றால், வேலூரில் தி.மு.க தேறுவது கஷ்டம்’ எனக் கட்சியின் சீனியர்களே முணுமுணுக்கிறார்கள்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“மன்னார்குடி அருகேயுள்ள ரிஷியூரில் சசிகலா தம்பி திவாகரனுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணல் ராமச்சந்திரன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி.குமார், திவகாரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் கடந்த வாரம், இந்தப் பண்ணை வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார்களாம். திவாகரன் சார்பாக ஜெய் ஆனந்த் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார்கள். அப்போது, மணல் எடுக்கும் விவகாரத்தில் அரசுத் தரப்பில் காட்டப்பட்டுவரும் கெடுபிடிகள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். இதை முதல்வர் தரப்புக்கும் கொண்டுசெல்ல முடிவுசெய்யப் பட்டதாம். சசிகலாவின் விடுதலை குறித்தும் இந்த ரகசிய சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாம். இதையெல்லாம் வைத்து, ‘அண்ணன் திவாகரன், டெல்டா அ.தி.மு.க-வில் அதிகார மையமாக மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார்’ என்று பழையபடி கம்பு சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள் திவாகரனின் ஆள்கள்’’ என்றபடி சிறகுகள் விரித்தார்.

சாத்தான்குளம் எஸ்.ஐ மரணம்!

பால்துரை -  மங்கையர்திலகம்
பால்துரை - மங்கையர்திலகம்

சாத்தான்குளம் போலீஸார் மீதான இரட்டைக் கொலை வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் சிறப்பு உதவி ஆய்வாளரான பால்துரையை சி.பி.ஐ விசாரிக்கும்போதே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வேறு சில நோய்கள் இருந்ததால், கை கால்கள் செயலிழந்தன. இதனால், ‘என் கணவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்க்க உதவுங்கள்’ என்று பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி மனுக்கொடுத்தார். ‘தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும்’ என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பால்துரையின் உடல்நிலை மோசமாகி, மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் ஆகஸ்ட் 10-ம் தேதி அதிகாலை பால்துரை மரணமடைந்தார்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் கை செயலிழந்து போயிருப்பதால், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.