அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: கண்கள் பனித்தன... இதயம் இனித்தது! - பின்னணியில் பா.ஜ.க?

சபரீசன், உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
சபரீசன், உதயநிதி

பன்னீர்செல்வத்துடன் எதிர்காலத்தில் கைகோக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், எடப்பாடியுடன் சமரசம் செய்துகொள் ளும் எண்ணம் துளியும் இல்லை’ என்று சொல்லி யிருக்கிறார்

“கண்கள் பனித்தன... இதயம் இனித்தது! ” என்றவாறே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “என்ன... கருணாநிதி டயலாக்கைச் சொல்கிறீர்?” என்றோம். “காரணம் இருக்கிறது” என்றபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“நீண்டகாலத்துக்குப் பிறகு, மு.க.அழகிரியின் குடும்பமும், முதல்வர் ஸ்டாலினின் குடும்பமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவுவிழாவில், உதயநிதி, சபரீசனுடன் ஒன்றாக அமர்ந்து அளவளாவியிருக்கிறார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ வெளியிடும் அமீர் கானின் படத்துக்கான சிறப்புக் காட்சியையும் இரு குடும்பத்தினரும் சேர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்கள்.”

“ஏன் இந்த திடீர்ப் பாசம்?”

“காரணம் இருக்கிறது. 2014-ல் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து, மு.க.ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துவந்தார் அழகிரி. கடந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வார்கள் என்று பெரிதாக நம்பி ஏமாந்துபோனார். அவரைத் தன் பக்கம் இழுப்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க செய்தபோதும், அது நடக்கவில்லை. ஸ்டாலின் பதவியேற்பு விழா உட்பட அனைத்தையும் அழகிரி குடும்பம் புறக்கணித்துவந்த நிலையில், இப்போது அவர்கள் ஒன்றிணைந்ததற்கு சபரீசனின் முயற்சியே காரணமாம். 2024 தேர்தலையொட்டி, அழகிரியைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க மீண்டும் இறங்கிவிடக் கூடாது என்பதாலேயே, அவரின் குடும்பத்தை அரவணைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாம். கருணாநிதி இருந்தபோதே, கட்சியைவிட்டு நீக்கியதும் அழகிரி சென்னைக்கு வந்து முதலில் முறையிட்டது ரஜினியிடம்தான். 2024 தேர்தலுக்காக ரஜினியை வைத்து சில வேலைகளை பா.ஜ.க செய்யக்கூடும் என்ற தகவலும், இந்த திடீர்ப் பாசத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.”

“ஆனால், ரஜினி போட்டு உடைத்துவிட்டாரே...”

“கவனித்தேன்... ‘ஒரு மாநிலத்தின் ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாக, தான் பொறுப்பேற்றிருக்கும் மாநிலத்தின் ஆக்டிவ் அரசியலில் ஆளுநர் ஈடுபடக் கூடாது’ என்பது சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளில் ஒன்று. இப்படிப்பட்ட நிலையில், ‘ஆளுநருடன் அரசியல் பேசினேன்’ என்று ரஜினி ‘ஓப்பன் டாக்’ விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது. ‘அரசியல் பேச ஆளுநர் மாளிகை என்ன கட்சி அலுவலகமா?’ என்று பலரும் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘இப்படிச் சொதப்பிவிட்டாரே?’ என்று ஆளுநர் ரவியும் அப்செட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: கண்கள் பனித்தன... இதயம் இனித்தது! - பின்னணியில் பா.ஜ.க?

“அது சரி... ‘சர்வாதிகாரியாக மாறுவேன்’ என்று மீண்டும் சீறியிருக்கிறாரே முதல்வர்?”

“அவர் இப்படி முழங்குவது இது மூன்றாவது முறை! எனினும், போதை ஒழிப்பில் முதல்வர் சீரியஸ் டோனில்தான் இருக்கிறார். அதனால்தான், ‘ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் களுக்குத் தெரியாமல் போதைப்பொருள் விற்க முடியுமா... கிராம் கணக்கில் விற்பவர்களைக் கைதுசெய்து என்னிடம் கணக்கு காட்டாதீர்கள். மெயின் சப்ளையர்களை குண்டாஸில் கைதுசெய்யுங்கள். அவர்களின் சொத்துகளை முடக்குங்கள்’ என்று போதை ஒழிப்பு தொடர்பாக நடந்த கலெக்டர்கள், எஸ்.பி-க்கள் கூட்டத்தில் கடுமையாகப் பேசியிருக்கிறார் முதல்வர். போதைப்பொருள் விற்பனைக் குத் துணைபோகும் காவல் அதிகாரிகளின் பதவியைப் பறித்து, அவர்களைக் கைதுசெய்யவும் உத்தரவிட்டிருக் கிறாராம். கூட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க்கைப் பாராட்டவும் தவறவில்லை அவர்.”

“ம்... நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளின் ‘டெண்டர்கள்’ கோவையில்தான் இறுதி செய்யப்படுகின்றனவாமே..?”

“என் காதுக்கும் வந்தது. ‘ஜெயமான’ அந்தப் பிரமுகர்தான் துறைக்கு ‘மந்திரி’போல பவனிவருகிறார் என்கிறார்கள். கோவை பீளமேட்டிலுள்ள தன் அலுவலகத்தில்வைத்து, இந்த இரண்டு துறைகளிலும் பல முக்கிய முடிவுகளை அவர்தான் எடுக்கிறாராம். அ.தி.மு.க ஆட்சியில் வேலுமணியுடன் நெருக்கமாக இருந்தவர்தான் இவர். ‘தி.மு.க ஆட்சியில் கோவை ராமநாதபுரத்தில் இரண்டு நகைக் கடைகளைப் புதிதாகத் திறந்துவிட்டார். திருப்பூர், அவிநாசியில் அடுத்தடுத்த நகைக்கடைகளைத் திறப்பதற்கு இடம் பார்க்கிறார். சென்னைக்கு ‘ஜெயம்’ பிரமுகர் வரும்போதெல்லாம், அமைச்சரின் கார் அவரை வரவேற்கப் போய்விடுகிறது. துறையில் அவர் செய்யும் உருட்டல், மிரட்டல்களையெல்லாம் பார்த்தால், சில சமயங்களில் ‘யார் மந்திரி என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது’ என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள்.”

“அட...”

“இதற்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி... போக்குவரத்துத் துறையிலும் புதிதாக ஒரு ‘பவர் புரோக்கர்’ முளைத்திருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியிலேயே கோலோச்சியவர்தான் அந்த ‘வீரமான முனிவர்.’ பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது, ‘முனிவர்’ பிரமுகர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இவர் கைகாட்டியவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட கதையெல்லாம் இருக்கின்றன. உயர்கல்வி, சுகாதாரத்துறைகளில் நாமக்கல் நிறுவனம் ஒன்றுக்குச் சாதகமாகப் பல விஷயங்களை முடித்துக்கொடுத்தார். அவரைத்தான் தற்போது போக்குவரத்துத்துறைக்கு ‘பவர் ஏஜென்ட்’டாக நியமித்திருக்கிறதாம் மேலிடம். ‘முனிவர்’ பிரமுகரின் தொல்லை பொறுக்க முடியாமல் தவியாய்த் தவிக்கிறார்களாம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.”

“ஓ.பி.எஸ்-ஸுடன் கைகோக்கத் தயார் என்று டி.டி.வி.தினகரன் சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் தினகரன், ‘பன்னீர்செல்வத்துடன் எதிர்காலத்தில் கைகோக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், எடப்பாடியுடன் சமரசம் செய்துகொள் ளும் எண்ணம் துளியும் இல்லை’ என்று சொல்லி யிருக்கிறார். ஏற்கெனவே, சுற்றுப்பயணத்துக்காக தினகரன் தேனிக்குச் சென்றபோது, ஓ.பி.எஸ் அணி மாவட்டச் செயலாளர் சையதுகான், ஓ.பி.எஸ் சார்பில் அவரைச் சந்தித்துப் பேசியிருந்தார். இன்னொரு பக்கம், சசிகலா, பன்னீர்செல்வம் சந்திப்பும் நடந்திருக்கிறதாம். ஓ.பி.எஸ்-ஸுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் பொதுக் குழுவிலும் விவாதிக்கப்படும் என்கிறார்கள் அ.ம.மு.க-வினர்” என்ற கழுகாருக்கு ரோஸ்மில்க் கொடுத்தோம். உறிஞ்சியபடி செய்திகளைத் தொடர்ந்தார்.

“வேலூர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக முன்னரே பல புகார்கள் வந்தும்கூட, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கோட்டைவிட்டது உமக்குத் தெரியும். இது தொடர்பான கட்டுரைகள் ஜூ.வி இதழில் தொடர்ந்து வெளியான நிலையிலும், பொருளா தாரக் குற்றப்பிரிவினர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். கடைசியில், சுருட்டிய பல்லாயிரம் கோடி ரூபாயை ஹவாலா மூலம் வெளிநாட்டுக்குப் பரிவர்த்தனை செய்துவிட்டு, உரிமையாளர்களான லட்சுமி நாராயணன் சகோதரர்களும் ஓட்டம் பிடித்துவிட்டார்கள். உரிய நேரத்தில் கைது செய்யாமல், அவர்கள் இருவரையும் தப்பவிட்டதற்கு ஆளுங்கட்சி மேலிடப் பிரமுகரின் பின்னணிதான் காரணம்.”

“ஓஹோ...”

“மலை மாவட்டம் ஒன்றில் பழங்குடி மக்களுக்குத் தொகுப்பு வீடுகள் ‘அலாட்’ ஆகியிருக்கின்றன. ‘3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த வீடுகளைப் பெற, பயனாளிகள் முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று வனத்துறை அதிகாரி ஒருவரும், டெண்டர் எடுத்திருப்பவரும் கூட்டுச் சேர்ந்து வசூலித்துவருகிறார்களாம். வீடு கிடைக்காது என்ற பயத்தில் அப்பாவிப் பழங்குடி மக்கள், ஆடு மாடுகளை விற்றுப் பணம் கொடுத்துக்கொண் டிருக்கிறார்களாம். அதோடு, ‘வீடு கட்டுவதற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் நீங்களே மணலை அள்ளிக்கொண்டு வர வேண்டும்’ என்று பழங்குடிப் பயனாளிகளைச் சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபடுத்திவருகிறார்களாம் அந்த இருவரும்” என்ற கழுகார்...

“மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, ரேஷ்மி சுக்லா. முந்தைய சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட இவர், அதைப் பதிவுசெய்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸிடம் கொடுத் திருக்கிறார். அதைக்கொண்டு, அப்போது சிவசேனா கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார் தேவேந்திர பட்னாவிஸ். சட்ட விரோதமாக போனை ஒட்டுக்கேட்டது தொடர்பாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரேஷ்மி சுக்லா மீது மும்பை கொலாபா போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், ரேஷ்மி சுக்லா மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் விழிக்கிறது மும்பை காவல்துறை. அவரை இயக்கியதே பா.ஜ.க-தான் என்பதாலேயே, இப்படிச் செய்கிறதாம் மத்திய அரசு” என்றபடி விருட்டெனப் பறந்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* கடந்த ஆட்சியில் செய்தித்துறையில் கோலோச்சிய ‘அழகு’ பிரமுகருக்கு சிக்கல் வரவிருக்கிறதாம். பெரிய அளவில் நடந்த முறைகேடு ஒன்றை லஞ்ச ஒழிப்புத்துறை தோண்டி எடுத்திருக்கிறது.

* சென்னையில் பணியாற்றிய ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தங்கச் சர்ச்சையில் சிக்கி மருத்துவ விடுப்பில் சென்றார். மீண்டும் பணிக்குத் திரும்பவிருக்கும் அவரை ‘டம்மி’ பதவியில் பணியமர்த்த முடிவு செய்திருக்கிறார்கள்.