Published:Updated:

மிஸ்டர் கழுகு: “சொதப்பிவிடக் கூடாது!” - அமைச்சர்களுக்கு ஸ்டாலின் ஹோம்வொர்க்....

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

செந்தில் பாலாஜியை முடக்குவதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கிறாராம் தமிழக பா.ஜ.க தலைவர்.

மிஸ்டர் கழுகு: “சொதப்பிவிடக் கூடாது!” - அமைச்சர்களுக்கு ஸ்டாலின் ஹோம்வொர்க்....

செந்தில் பாலாஜியை முடக்குவதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கிறாராம் தமிழக பா.ஜ.க தலைவர்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

காதில் இயர்பட்ஸை மாட்டிக்கொண்டு என்ட்ரி கொடுத்த கழுகாரை, ஆவிபறக்க ஃபில்டர் காபி கொடுத்து வரவேற்றோம். “ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் தி.மு.க ஆட்சியின் 100 நாள்கள் நிறைவடைகின்றன. இந்த 100 நாள்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து, ‘யார் பதவி காலியாகப்போகிறதோ?’ என்று கலக்கத்தில் இருக்கிறார்கள் அமைச்சர்கள்!” என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“ஆட்சி அமைத்த 50 நாள்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றிய ரிப்போர்ட் ஒன்றை உளவுத்துறை கொடுத்தது. பிறகு 75 நாள்கள் செயல்பாடுகள் பற்றிய ரிப்போர்ட்டும் முதல்வர் டேபிளுக்குச் சென்றது. அதைத் தொடந்து தற்போது நூறு நாள்கள் செயல்பாடுகள் பற்றிய ரிப்போர்ட் செல்லவிருக்கிறது.”

“அப்படியென்றால் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?”

“அநேகமாக இருக்கலாம் அல்லது சிலரது துறைகள் பிரித்து பங்கிடப்படலாம் என்கிறார்கள். புதிய அமைச்சர்கள் சிலர் முதல்வரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்களாம். அவர்களை மாற்றிவிடலாமா என்றும் யோசிக்கிறாராம் ஸ்டாலின். அதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சர்கள் விவகாரத்தில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்கிறது சித்தரஞ்சன் சாலை பட்சி!”

மிஸ்டர் கழுகு: “சொதப்பிவிடக் கூடாது!” - அமைச்சர்களுக்கு ஸ்டாலின் ஹோம்வொர்க்....

“அதையும் பார்க்கத்தானே போகிறோம்!”

“கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர்மீது ஏராளமான புகார்கள் குவிந்துவருகின்றன. இதைச் சாக்காக வைத்து, கொங்கு மண்டலப் பொறுப்பைக் கைப்பற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி காய்நகர்த்துகிறாராம். தகவல் கேள்விப்பட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சிலர், ‘கட்சிக்கு வந்தவுடனேயே பசையான இலாகாவையும் வாங்கிக்கிட்டு, இப்போ வளமான ஏரியாவையும் வளைக்கப் பார்க்குறரா?’ என்று கொந்தளிக்கிறார்கள்.”

“ஓஹோ...”

“இதற்கிடையே செந்தில் பாலாஜியை முடக்குவதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கிறாராம் தமிழக பா.ஜ.க தலைவர். வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த வழக்கு நீதிமன்றத்தில் சுமுகமாகத் தீர்க்கப்பட்டாலும் பிரச்னை முடிந்தபாடில்லை... அந்த விவகாரத்தில் பணம் கையாளப்பட்டது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது ‘முறைகேடான பணப் பரிமாற்ற’ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு ஒன்றை சமீபத்தில் பதிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை. இந்த வழக்கின் மூலமாக செந்தில் பாலாஜியை முடக்கும் வேலையைப் பார்த்துவருகிறாராம் தமிழக பா.ஜ.க தலைவர். செந்தில் பாலாஜியை முடக்கினால், கொங்கு மண்டலத்தில் தன்னுடைய வளர்ச்சிக்குத் தடையேதும் இருக்காது என்பதே அந்த பா.ஜ.க தலைவரின் கணக்காம்!”

“கத்தி போய் வால் வந்துவிட்டது என்று சொல்லும்!”

“தி.மு.க-வின் அதிகார மையமாக இருக்கும் ஒருவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் வசூல் வேட்டையாடிய தகவல் இப்போது கசிந்திருக்கிறது. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரிடமும், முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஒருவரிடமும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். பணத்தை நேரடியாக வாங்காமல் அவர் நடத்திவரும் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் செலுத்தச் சொன்னாராம். எம்.எல்.ஏ கனவில் இருவரும் வட்டிக்குக் கடன் வாங்கி பணத்தைச் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால், தொகுதியோ காங்கிரஸ் வசம் போய்விட்டது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் இப்போது அறிவாலயக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்ற கழுகாருக்கு அச்சு முறுக்கை அள்ளிக் கொடுத்தோம். கொறித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார்...

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி மேலிடம் தீவிரம் காட்டுகிறதாம். தங்களது பிரதான அரசியல் எதிரியான பா.ஜ.க-வுக்குக் கடுமையாக பதிலடி கொடுக்கும் வகையில் சுறுசுறுப்பான தலைவராக இருக்க வேண்டுமென்று டெல்லி தலைமை விரும்புகிறது என்கிறார்கள். கார்த்தி சிதம்பரம், கரூர் ஜோதிமணி, செல்லக்குமார் எல்லாம் இதற்கான லாபியில் இறங்க... ‘நானே தொடருவேன்’ என்று நாற்காலியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறாராம் கே.எஸ்.அழகிரி.”

மிஸ்டர் கழுகு: “சொதப்பிவிடக் கூடாது!” - அமைச்சர்களுக்கு ஸ்டாலின் ஹோம்வொர்க்....

“அமைச்சர்களை ஹோம்வொர்க் செய்யச் சொல்லியிருக்கிறதாமே முதல்வர் அலுவலகம்?”

“ஆமாம்... ஆகஸ்ட் 13-ம் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 23-ம் தேதியிலிருந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கவிருக்கின்றன. இதில் எதிர்க்கட்சியினர் கேள்விகள் கேட்கும்போது அமைச்சர்கள் யாரும் சொதப்பிவிடக் கூடாது; சரியான தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் பதிலளித்து எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார் முதல்வர். அதனால், பத்து நாள்கள் இடைவெளியில் துறைவாரியான விஷயங்களையும் புள்ளிவிவரங்களையும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயார் செய்யும்படி முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பறந்திருக்கிறதாம்!”

“அமைச்சர்கள் நோட்டும் கையுமாகக் குறிப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்!”

“வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்த அன்று மாலை முதல்வரைச் சந்தித்திருக்கிறார் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி கந்தசாமி. முதல்வரிடம் அவர், ‘பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை’ என்று சொல்ல... டென்ஷனான ஸ்டாலின், ‘அறுபது இடங்களில் ரெய்டு நடத்தி ஒன்றுமே இல்லை என்று சொல்லத்தான் வந்தீர்களா?’ என்று சீறினாராம். உடனே கந்தசாமி, ‘இல்லையில்லை... பெரிதாகச் சிக்காவிட்டாலும் இப்போது கிடைத்துள்ள சில ஆவணங்களைவைத்தே வேலுமணியைக் கைதுசெய்யலாம்’ என்று சில பாயின்ட்டுகளை அடுக்கிய பிறகே அமைதியானாராம் முதல்வர்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: “சொதப்பிவிடக் கூடாது!” - அமைச்சர்களுக்கு ஸ்டாலின் ஹோம்வொர்க்....

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!


ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், தன்னாட்சி பெற்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். கடந்த ஆட்சியில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களின் பங்களாக்களில் இவருக்கும் ஒன்று ஒதுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, `வேறு வீடு தருகிறோம். இந்த வீட்டை அமைச்சருக்கு விட்டுக்கொடுங்கள்’ என்று கேட்டதற்குக் கடுகாக வெடித்து கதவைச் சாத்திக்கொண்டாராம் அந்த அதிகாரி!

வேலுமணி தொடர்புடைய அறுபது இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டாலும், அவருக்கு நெருக்கமான கல்லூரி அதிபரின் இடத்தில் மட்டும் கைவைக்கவில்லை லஞ்ச ஒழிப்புத்துறை. ‘என்ன மர்மமோ...’ என்று பொங்குகிறார்கள் கொங்கு மண்டல உடன்பிறப்புகள்!