Published:Updated:

மிஸ்டர் கழுகு: யாருமே ஓட்டுப் போடலை... எப்படியோ ஜெயிச்சுட்டேன்! - துரைமுருகன் ஓப்பன் டாக்...

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

போன முறை ஓட்டுப் போட்டீங்க... நான் ஜெயிக்கவுமில்லை, மந்திரியும் ஆகலை. இந்த முறை நீங்க யாருமே ஓட்டுப் போடலை. ஆனாலும், நான் ஜெயிச்சு மந்திரி ஆகிட்டேன்

மிஸ்டர் கழுகு: யாருமே ஓட்டுப் போடலை... எப்படியோ ஜெயிச்சுட்டேன்! - துரைமுருகன் ஓப்பன் டாக்...

போன முறை ஓட்டுப் போட்டீங்க... நான் ஜெயிக்கவுமில்லை, மந்திரியும் ஆகலை. இந்த முறை நீங்க யாருமே ஓட்டுப் போடலை. ஆனாலும், நான் ஜெயிச்சு மந்திரி ஆகிட்டேன்

Published:Updated:
துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

கழுகார் உள்ளே நுழைந்ததும், புளூபெர்ரி கோலி சோடாவை உடைத்துக் கொடுத்தோம். வாங்கிப் பருகியபடியே “ம்ம்ம்... ஆரம்பிக்கலாமா?” என்ற தோரணையுடன் தொடங்கிய கழுகாரிடம், “சசிகலா சத்தமில்லாமல் சில வேலைகள் செய்கிறாராமே?” என்று கேள்விக்கணையைத் தொடுத்தோம்.

‘‘ஆமாம்... உடல்நிலை சரியில்லாமலிருந்த மதுசூதனனைப் பார்க்க சசிகலா சென்ற விஷயம் அனைவரும் அறிந்ததுதான். அப்போது, ‘மருத்துவச் செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்’ என்று மதுசூதனின் உறவினர்களிடம் சசிகலா உத்தரவாதம் கொடுத்திருந்தாராம். எடப்பாடி தரப்புக்கும் இந்த விஷயம் செல்லவே... ‘நானிருக்கிறேன்... கவலைப்படாதீர்கள்’ என்றாராம் எடப்பாடி. இதையடுத்து, சசிகலா தரப்புக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கையைப் பிசைகிறார்களாம் மதுவின் உறவினர்கள்.’’

‘‘நல்ல போட்டிதான்!’’

மிஸ்டர் கழுகு: யாருமே ஓட்டுப் போடலை... எப்படியோ ஜெயிச்சுட்டேன்! - துரைமுருகன் ஓப்பன் டாக்...

‘‘இதுவும் சசிகலா விவகாரம்தான். இளவரசியின் அண்ணன் அண்ணாதுரை ஜூலை 24-ம் தேதி மறைந்துவிட்டார். மருத்துவமனையிலிருந்த அண்ணாதுரையை அன்று காலையில்தான் சசிகலாவும் இளவரசியும் சென்று பார்த்திருக்கிறார்கள். இறுதி அஞ்சலிக்காக அண்ணாதுரையின் உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஜூலை 25-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இளவரசி, அவரின் மகன் விவேக் உள்ளிட்டோர் பெருகவாழ்ந்தானுக்குச் சென்றார்கள். அப்போது சசிகலாவும் அங்கு வந்திருப்பதாகத் தகவல் பரவ, அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்கள் பலர் சசிகலாவைப் பார்ப்பதற்காக பெருகவாழ்ந்தானை முற்றுகையிட்டுள்ளார்கள். ‘சின்னம்மா இங்கு வரவில்லை’ என்று சொல்லி அவர்களைச் சமாளிப்பதற்குள் அண்ணாதுரையின் குடும்பத்தினர் படாதபாடுபட்டிருக்கிறார்கள்.’’

‘‘ஐ.பி.எஸ் ஒருவர் குடும்பம் சகிதமாகக் கோயிலுக்குச் சென்றது சர்ச்சையாகிவிட்டதாமே?’’

‘‘பாலியல் விவகாரத்தில் சிக்கிய முருகன் ஐ.பி.எஸ் குறித்துத்தானே கேட்கிறீர்கள்... ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ள முருகன் தன் குடும்பத்தினர் சகிதம், ஜூன் 24-ம் தேதி மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் ஆடி பௌர்ணமி பூஜைக்குச் சென்றிருந்தார். அவருக்கு மதுரை எஸ்.பி பாஸ்கரன், தென்மண்டல ஐ.ஜி அன்பு ஆகியோர் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ‘கோயில் திருவிழாக்களில் மக்களுக்கு அனுமதியில்லை’ என்று அரசு அறிவித்துள்ள நிலையில், முருகன் மட்டுமல்லாமல் அன்பு, பாஸ்கரன் ஆகிய அதிகாரிகளும் தங்கள் குடும்பத்தினருடன் இந்த பூஜையில் பங்கேற்றது சர்ச்சையாகியிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: யாருமே ஓட்டுப் போடலை... எப்படியோ ஜெயிச்சுட்டேன்! - துரைமுருகன் ஓப்பன் டாக்...

‘‘நகைச்சுவை நாயகர் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வார்போலிருக்கிறதே!”

‘‘தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனைத்தான் சொல்கிறீர்கள் என்பது புரிகிறது. ஜூலை 25-ம் தேதி காட்பாடி அருகே கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ‘போன முறை ஓட்டுப் போட்டீங்க... நான் ஜெயிக்கவுமில்லை, மந்திரியும் ஆகலை. இந்த முறை நீங்க யாருமே ஓட்டுப் போடலை. ஆனாலும், நான் ஜெயிச்சு மந்திரி ஆகிட்டேன். எப்படியோ ஜெயிச்சுட்டேன், அதையெல்லாம் இங்கே சொல்ல முடியாது. நீங்க ஓட்டுப் போடலைன்னாலும், உங்களுக்காக நான் நிறைய செய்ய ஆசைப்படுறேன்’ என்று போட்டு உடைத்துவிட்டார்.’’

‘‘ம்ம்க்கும்... ஏற்கெனவே அவர் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது... இப்போது இது வேறா!’’

‘‘பிரபல விவசாய சங்கத் தலைவர் ஒருவர் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் போராட்டம் நடத்தத் தயாரானார். நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துப்போக ரயில் டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், தமிழக அரசுக்கு எங்கிருந்து பிரஷர் வந்ததென்று தெரியவில்லை... திடீரென்று காவல்துறையினர் அந்தத் தலைவரிடமிருந்து ரயில் டிக்கெட்டுகளைப் பறிமுதல் செய்துவிட்டார்களாம். மேலும், மீசைக்கார அமைச்சர் ஒருவரும் விவசாய சங்கத் தலைவருக்கு போனைப் போட்டு கடுகடுத்தாராம். ‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில்கூட இவ்வளவு கெடுபிடி காட்டியதில்லையே...’ என நொந்துபோயிருக்கிறார் மனிதர்.’’

‘‘ரெய்டு ஒருபுறம்... பேரம் மறுபுறம் என்று பேச்சு அடிபடுகிறதே!’’

‘‘முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரின் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர்மீது கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது அவருக்கு ஆல் இன் ஆலாக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஒருவர்தான் செயல்பட்டிருக்கிறார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அவர் தி.மு.க-வுக்கு விசுவாசியாகிவிட்டாராம். அதனாலேயே அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல... ஏற்கெனவே ஸ்மார்ட் ஆர்.சி புத்தகம் இவரது நிறுவனத்திலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டுவரும் நிலையில், வாகனங்களுக்கான ஸ்டிக்கர், வேகக் கட்டுப்பாட்டு கருவிகளையும் இவரிடமிருந்தே வாங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவும் வந்திருக்கிறதாம்.’’

‘‘ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதுபோல!’’

‘‘தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் ஏ.வி.வெங்கடாசலம். எடப்பாடி முகாமுக்கு வேண்டப்பட்டவர் என்று கருதப்படும் அவர், அந்தப் பதவியிலிருப்பதை ஆளும் தரப்பு ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், சமீபத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வெங்கடாசலத்துக்கு அழைப்பு இல்லை. டென்ஷனான வெங்கடாசலம், ‘என்னைத் தூக்குறதுக்கு பிளான் பண்றாங்க... எப்படி தூக்குறாங்கனு பார்க்குறேன்’ என்று பொருமிக்கொண்டிருக்கிறாராம்.’’

மிஸ்டர் கழுகு: யாருமே ஓட்டுப் போடலை... எப்படியோ ஜெயிச்சுட்டேன்! - துரைமுருகன் ஓப்பன் டாக்...

‘‘சரிதான்!’’

‘‘கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறையில் அதிகாரிகள் இடமாற்றங்களுக்கு லட்சங்களில் வசூலித்தார்கள். இந்தமுறை அதற்கு இடமளிக்கக் கூடாது; கலந்தாய்வு மூலம்தான் இடமாற்றம் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதற்கேற்ப சில நாள்களுக்கு முன்பு சென்னை சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர், துறையின் மூத்த அதிகாரியைக் கையில் போட்டுக்கொண்டு இந்தப் பணியிட மாற்றங்களைச் செயல்படுத்தவிடாமல் கட்டையைப் போடுகிறார்களாம்.’’

‘‘சமயபுரத்தில் சர்ச்சை ஒன்று சதிராடுகிறதே?”

‘‘ஆமாம்... சமயபுரம் கோயில் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக வைத்திருக்கும் கருங்கல் மற்றும் சிமென்ட் மூட்டைகளைத் தனது காரில் எடுத்துச் சென்றாராம். பிரச்னை பூதாகரமாக வெடித்ததும், சத்தமில்லாமல் எடுத்த இடத்திலேயே பொருள்களைக் கொண்டுவந்து போட்டிருக்கிறார். இந்தநிலையில்தான், சமீபத்தில் ஆட்சி மேலிடப்புள்ளி ஒருவரின் பிறந்தநாளுக்காக கோயிலில் சிறப்பு பூஜை நடத்தி பிரசாதத்தை அனுப்பியிருக்கிறார். மேலும், மாவட்டத்தின் ஜூனியர் புள்ளியை நெருங்கவும் அவர் தூதுவிட்டுவருகிறாராம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

 சொந்த ஊருக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வந்தார் அந்த மாஜி அமைச்சர். அவரைப் பார்த்ததும் பழைய பாசத்தில் குழைந்தபடி ஓடிச் சென்று பெட்டியைத் தூக்கிக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார் எஸ்.ஐ ஒருவர். மாஜியை வழியனுப்பிவைத்துவிட்டு வாசலுக்கு வந்தவரிடம், ‘வெயிட்டிங் லிஸ்ட்’ ஆர்டரைக் கொடுத்திருக்கிறார்கள். பெட்டி தூக்கியவர், இப்போது புலம்பிவருகிறாராம்.

கடந்த ஆட்சியில், நிலவு பிரமுகர் ஒருவர்தான் கொங்கு அமைச்சருக்கு ஆல் இன் ஆலாக இருந்தார். இவரால் வாங்கப்படும் சொத்துகள் பலவும் ‘போர்வேல்’ பிரமுகர் ஒருவரின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டனவாம். அந்தவகையில் சென்னை, கோயம்பேடு அருகே அரசுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டிருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தோண்டி எடுத்திருக்கிறார்கள். விரைவில் மூவரையும் கூண்டோடு வளைக்க ஸ்கெட் போட்டுவருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை!

செய்தித்துறைக்குள் உளவுத்துறை!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்த எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக செய்திப் பிரிவில் கோலோச்சிய அம்பலவாணன், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் பவர்ஃபுல் பதவியான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் பி.ஆர்.ஓ., ஏ.பி.ஆர்.ஓ-க்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், சிலர்மீது பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாகவும் அதிகாரிகள் புலம்புகிறார்கள். குறிப்பாக, முன்னாள் கூடுதல் இயக்குநர் எழிலழகனின் உத்தரவுப்படியே இவர் நடந்துகொள்கிறார் என்று துறையின் அமைச்சரிடமும் சிலர் புலம்பியிருக்கிறார்கள். விவகாரம் மேலிடம் வரை சென்றதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செய்தித்துறையில் பணியாற்றும் பி.ஆர்.ஓ மற்றும் ஏ.பி.ஆர்.ஓ-க்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தர உளவுத்துறைக்கு உத்தரவு பறந்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism