Published:Updated:

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க -வை தூங்கவிடாத தூங்காநகர் ரகசியம்! - முழு அரசியல்வாதியாக மாறிய பி.டி.ஆர்...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

டெல்லியிலிருந்து அப்படியோர் உத்தரவு வந்ததாகத்தான் சொல்கிறார்கள். ‘அ.தி.மு.க பிரிந்துகிடப்பதால், தி.மு.க-வுக்குத்தான் லாபம்.

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க -வை தூங்கவிடாத தூங்காநகர் ரகசியம்! - முழு அரசியல்வாதியாக மாறிய பி.டி.ஆர்...

டெல்லியிலிருந்து அப்படியோர் உத்தரவு வந்ததாகத்தான் சொல்கிறார்கள். ‘அ.தி.மு.க பிரிந்துகிடப்பதால், தி.மு.க-வுக்குத்தான் லாபம்.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

“நிஜமான பொதுவுடைமைவாதி என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டார்...” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “தோழர் நல்லகண்ணுவைச் சொல்கிறீரா?” என்றோம். “ஆமாம். ‘தகைசால் தமிழர்’ விருதுக்காகத் தனக்கு அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் காசோலையுடன், தன் சொந்தப் பணம் 5 ஆயிரத்தைச் சேர்த்து, மொத்தப் பணத்தையும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கே வழங்கியிருக்கிறார் இரா.நல்லகண்ணு” என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“மதுரை முழுக்க, ‘சொல்லி அடித்துவிட்டார் பி.டி.ஆர்’ என்கிற பேச்சுதான் ஓடுகிறது. ஆகஸ்ட் 13-ம் தேதி, மதுரை விமான நிலையத்தில் மறைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது எழுந்த பிரச்னையில், பி.டி.ஆரின் கார்மீது பா.ஜ.க-வினர் செருப்பு வீசித் தாக்கினார்கள் அல்லவா... அந்தப் பிரச்னையில் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களெல்லாம் வெறும் கண்டன அறிக்கையோடு அமைதியாகிவிட்ட நிலையில், இதை கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டாராம் பி.டி.ஆர். ஊடகங்களிடம் அடக்கி வாசித்தாலும், ‘இன்று இரவுக்குள் பா.ஜ.க-வுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுப்பேன்’ என்று தன் ஆதரவாளர்களிடம் அழுத்தமாகக் கூறியிருக்கிறார். பி.டி.ஆரின் எண்ண வோட்டத்தைப் புரிந்துகொண்டவர்கள், ‘நீங்க கவலைப்படாதீங்க, பா.ஜ.க-காரங்க நொந்துபோற மாதிரி செஞ்சு காட்டுவோம்’ என்று சொல்லி, டாக்டர் சரவணனின் உறவினரும், தொழிலதிபருமான ஒருவர் மூலம் சரவணன் தரப்பிடம் பேசியிருக்கிறார்கள். அப்போது, ‘கட்சிக்காரர்கள் மட்டுமல்ல... முதல்வரும் ரொம்ப கோபமா இருக்கார். பேசாம சரவணன், பி.டி.ஆர் வீட்டுக்கு நேரில் வந்து வருத்தம் தெரிவிக்கட்டும். அதுதான் நல்லது’ என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். அன்று மாலையில்கூட, ‘பி.டி.ஆர் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் போட்டியிடத் தயாரா?’ என்று சவால்விட்டுக் கொண்டிருந்த சரவணன், இந்த நெருக்கடியால்தான் நள்ளிரவில் பி.டி.ஆர் பங்களாவுக்கு வந்து சேர்ந்தாராம்.”

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க -வை தூங்கவிடாத தூங்காநகர்  ரகசியம்! - முழு அரசியல்வாதியாக மாறிய பி.டி.ஆர்...

“ஓஹோ...”

“பா.ஜ.க தரப்பில் ஒரு திட்டத்தோடு பிரச்னை செய்ய, அதுவே அவர்களுக்கு ‘பூமராங்’ ஆகியிருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது காலையில் பா.ஜ.க-வில் சேர்ந்து, மாலையில் அக்கட்சி வேட்பாளரானவர் சரவணன். அதே ஸ்பீடில் மீண்டும் தி.மு.க பக்கம் சாய்ந்திருக்கிறார். சரவணனின் திடீர் எக்ஸிட்டை அண்ணாமலையால் ஜீரணிக்க முடியவில்லையாம். பெரியவீட்டுப் பிள்ளை, மெத்தப் படித்தவர், சாஃப்ட் கேரக்டர், நிதி நிர்வாகம் தவிர வேறொன்றும் தெரியாது என்று பி.டி.ஆர் பற்றிப் பலர் எண்ணியிருந்த வேளையில், அவருக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பக்கா ‘மதுரை அரசியல்வாதி’ இப்போது முழுமையாக வெளியே வந்திருக்கிறார் என்கிறார்கள்.”

“ம்... முதல்வரின் டெல்லி விசிட் பற்றிய தகவல் ஏதேனும்...”

“இருக்கிறது. அரசியல்ரீதியாக பா.ஜ.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தபோதிலும், அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை மத்திய பா.ஜ.க அரசுடன் இணக்கத்தையே விரும்புகிறது தி.மு.க. அதனால்தான், புதிதாகத் தேர்வாகியிருக்கிற குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைச் சந்திக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. பிரதமருடனான சந்திப்பில், உடல்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவுக்கு நேரில் வந்து அழைக்க முடியாவிட்டாலும் வந்து சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவிக்கவிருக்கிறாராம் முதல்வர். தவிர, ‘தமிழ்நாடு அரசுக்கும் டெல்லிக்கும் இடையே போதிய இணைப்பு இல்லை. நாம் இவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டியதில்லை’ என்கிற எண்ணம் சில ஐ.ஏ.எஸ் உயரதிகாரிகளிடம் வரத் தொடங்கிவிட்டதாம். அந்த பிம்பத்தை உடைப்பதற்கும் முதல்வரின் இந்த டெல்லி விசிட் உதவும் என்று நம்புகிறது தி.மு.க.”

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க -வை தூங்கவிடாத தூங்காநகர்  ரகசியம்! - முழு அரசியல்வாதியாக மாறிய பி.டி.ஆர்...

“பன்னீர் - எடப்பாடி இடையே மீண்டும் காம்ப்ரமைஸ் செய்துவைக்க டெல்லி முயல்வதாகச் சொல்வது உண்மையா?

“டெல்லியிலிருந்து அப்படியோர் உத்தரவு வந்ததாகத்தான் சொல்கிறார்கள். ‘அ.தி.மு.க பிரிந்துகிடப்பதால், தி.மு.க-வுக்குத்தான் லாபம். இப்படியே சென்றால் 2024-ல் நிலைமை மோசமாகிவிடும். அதனால், சமரசம் செய்துகொள்ளும் வழியைப் பாருங்கள்’ என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்-ஸிடம் டெல்லி தரப்பிலிருந்து பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஓ.பி.எஸ் தரப்பில் இந்த யோசனையை வரவேற்றிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி தரப்போ அதை அடியோடு நிராகரித்துவிட்டதாம். 2022-லிருந்து மறுபடியும் 2017-க்குப் பின்னிழுக்கும் முயற்சியாகவே அதைப் பார்க்கிறதாம் எடப்பாடி தரப்பு. சுதந்திர தினத்தையொட்டி ராஜ்பவனில் நடந்த தேநீர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடிக்கும், துணைத் தலைவர் என்ற முறையில் பன்னீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், எங்கே வித்யாசாகர் பாணியில் இருவர் கையையும் பிடித்துச் சேர்த்து வைத்துவிடுவாரோ ஆளுநர் ரவி என்று பயந்துதான், தேநீர் விருந்தையே புறக்கணித்துவிட்டாராம் எடப்பாடி.”

“அது சரி... தலைமை அலுவலக சாவி கிடைத்தும், எடப்பாடி ஏன் இன்னும் அங்கு போகவில்லை?”

மிஸ்டர் கழுகு: பா.ஜ.க -வை தூங்கவிடாத தூங்காநகர்  ரகசியம்! - முழு அரசியல்வாதியாக மாறிய பி.டி.ஆர்...

“சாவி ஒப்படைக்கப்பட்டபோதும், ஆகஸ்ட் 20-ம் தேதி வரை அலுவலகத்துக்கு யாரும் வரக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால்தான், எடப்பாடியால் இன்னும் தலைமை அலுவலகத்துக்குச் செல்ல முடியவில்லை. 20-ம் தேதிக்குப் பிறகு அலுவலகம் செல்ல எடப்பாடி தரப்பு ஆயத்தமாகிவருகிறது. ‘பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, தலைமை அலுவலகத்தை விட்டுவிடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருக்கிறது எடப்பாடி தரப்பு. அங்கே நிர்வாகிகள் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கும் எடப்பாடி, அதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவும் போட்டிருக்கிறாராம்” என்று நிறுத்திய கழுகாரிடம் மசாலா கடலையை நீட்டினோம். அதைக் கொறித்தபடியே, அடுத்த செய்திக்குத் தாவினார்.

“தீயணைப்புத்துறையில் பணியாற்றும் மல்லிகை பெயரைக்கொண்ட அதிகாரி ஒருவர், லைசென்ஸ் கொடுப்பதற்கான சீல் உள்ளிட்ட அனைத்து தஸ்தாவேஜுகளையும் தன்னுடைய வாகனத்தில் எடுத்துக்கொண்டே ஆய்வுக்குச் செல்கிறாராம். ‘டீல் ஓகே’ என்றால் ஸ்பாட் டிலேயே லைசென்ஸ் கொடுத்துவிடுகிறாராம். ‘நோ டீல்’ என்றால் இழுத்தடிப்பு சம்பவங்கள் நடக்கின்றனவாம். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.”

“ம்... நாமக்கல் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே?”

“பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்த பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடந்த இந்த ரெய்டில், கிரிப்டோகரன்சி முதலீடு, 1.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், 1.680 கிலோ தங்க நகைகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமானவர். இது போதாதா... பாஸ்கர் மூலமாக தங்கமணிக்கு செக் வைக்கப் பார்க்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. அதற்காக அங்கு கிடைத்த ஆவணங்களையெல்லாம் துருவித் துருவி ஆராய்கிறார்களாம்” என்ற கழுகார்,

“வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, ஆகஸ்ட் 13-ம் தேதி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதாக அறிக்கை வெளியானது. பொருளாதாரக் குற்றப்பிரிவின் பிடியில் சிக்கியிருக்கும் நிதி நிறுவனம் தொடர்பான சர்ச்சையைத்தான் இதற்கான பின்னணியாகச் சொல்கிறார்கள். அவருக்குப் பக்கபலமாக இருந்த அதிகாரியின் ‘ஆசி’யும் இம்முறை ஆனி விஜயாவுக்குக் கிடைக்கவில்லையாம்” என்றபடி பறந்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* பணிவானவருக்கான செலவுகளையெல்லாம் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் பெயர்கொண்ட பிரமுகர்தான் பார்த்துக்கொள்கிறாராம். விரைவில் நடைபெறவிருக்கும் கோவைக் கூட்டத்தை சக்சஸ் செய்வதற்காக மூன்று ‘ஸ்வீட் பாக்ஸ்’ கொடுத்திருப்பதாகத் தகவல்.

* சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி விரைவில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், அந்தப் பதவியைக் கைப்பற்ற, ஆளுங்கட்சியின் தலைமையிடத்துக்குத் தூதுவிட்டிருக்கிறாராம் ஜெயமான ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர். ஆனால், இதுவரை கிரீன் சிக்னல் கிடைக்கவில்லையாம்.

* டெல்டா மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறை பெண் அதிகாரிமீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். அது தொடர்பான ரிப்போர்ட் டி.ஜி.பி அலுவலகம் வரை போய்விட்டதால், விரைவில் அவருக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.