Published:Updated:

மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் நடந்த சமாதானப் படலம்!

வேலுமணிக்கு அடுத்த சிக்கல் தொடங்கியிருக்கிறதாம். தமிழகம் முழுக்க ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தப் பணிகளை பல்வேறு நிறுவனங்கள் செய்தன.

பிரீமியம் ஸ்டோரி
‘‘அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானும்டா...’’ - ‘உழைப்பாளி’ படப்பாடலை முணுமுணுத்த படியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “என்ன, பாட்டெல்லாம் பலமாக இருக்கிறது!’’ என்றபடியே அவருக்கு ஐஸ் டீயை கப்பில் நிரப்பிக் கொடுத்தோம். ருசித்துப் பருகியபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘எல்லாம் அ.தி.மு.க-வில் இரட்டையர் களுக்குள் நடக்கும் பஞ்சாயத்துதான். எடப்பாடி - பன்னீர் இடையே அவ்வப்போது முட்டல் மோதல்கள் வருவது வாடிக்கைதான். ஆனால், ஆகஸ்ட் 12-ம் தேதி நடந்த வாய்த்தகராறு, ‘வாய்க்கா’ தகராறு ரேஞ்சுக்கு முற்றியிருக்கிறது. இருவரும் கட்டி உருளாதது ஒன்றுதான் குறை என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்!”

‘‘ஸ்ஸ்ஸ்... இந்தமுறை என்ன பிரச்னையாம்?’’

‘‘எடப்பாடி, பன்னீர், வேலுமணி மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருந்த அந்த அறையில், வேலுமணிதான் பேச்சை ஆரம்பித்திருக்கிறார். ‘எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுல ரெய்டு நடந்தப்ப ரெண்டு பேருமே பேட்டி கொடுத்தீங்க, போராட்டமெல்லாம் நடத்துனீங்க. ஆனா, என் வீட்டுல ரெய்டு நடந்தப்ப அறிக்கை மட்டும்தான் விட்டீங்க... அதுலயும் உப்பு சப்பு எதுவுமில்லை’ என்று வெடித்தாராம். அப்போது எடப்பாடி, ‘வேலுமணிக்கு ஆதரவா திரும்பவும் ஒரு ஸ்ட்ராங்கான அறிக்கையை வெளியிடலாம்’ என்று சொல்ல ஆத்திரமடைந்த பன்னீர், ‘அதெல்லாம் முடியாது... ஆட்சியில இருந்தப்ப நீங்க மட்டும் சேர்ந்துக்கிட்டு குரூப்பிசம் செஞ்சீங்க... அதனால உங்களைக் குறிவெச்சு தாக்குறாங்க. உங்க பிரச்னையை நீங்கதான் பார்த்துக்கணும். இதுக்கு மேல எல்லாம் காரசாரமா அறிக்கை கொடுக்க முடியாது’ என்று பதில் வெடியை வீசியிருக்கிறார். இதைக் கேட்டு எடப்பாடி எகிற... பதிலுக்கு பன்னீர் பாய... வார்த்தைகள் முற்றி ஒரு கட்டத்தில் இருவரும் விருட்டெனத் தனித்தனியாக வெளியேறி விட்டார்கள்.”

மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் நடந்த சமாதானப் படலம்!

‘‘அப்புறம்..?’’

‘‘அப்புறமென்ன... அப்புறம்... வழக்கம்போல இருவரையும் சமாதானப்படுத்த முன்னாள் மாண்புமிகுக்களின் குழு இருவரது வீடுகளுக்கும் படையெடுத்து ஒருவழியாக நள்ளிரவில் சமாதானப்படுத்திவிட்டார்களாம். அதனால்தான், மறுநாள் ஆகஸ்ட் 13-ம் தேதி நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கட்சியைக் கைப்பற்ற சசிகலா காத்திருக்கும் காலகட்டத்தில் இப்படி அடிக்கடி இருவரும் மோதிக்கொள்வது நல்லதில்லை என்று வருத்தப்படுகிறார்கள் சில சீனியர் நிர்வாகிகள்!”

‘‘அ.தி.மு.க-வையும் பஞ்சாயத்தையும் இனி பிரிக்க முடியாதோ?’’

‘‘இதுவும் அ.தி.மு.க செய்திதான். வேலுமணிக்கு அடுத்த சிக்கல் தொடங்கியிருக்கிறதாம். தமிழகம் முழுக்க ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தப் பணிகளை பல்வேறு நிறுவனங்கள் செய்தன. அவற்றில் ஒரு நிறுவனத்தின் மீதுதான் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றிருக்கிறது. அந்த நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பங்குதாரர் பொறுப்புகளில் வேலுமணியின் ரத்த உறவுகள் இருப்பதாகச் சொல்லும் அந்தப் புகாரில், ‘அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் ரத்த சொந்தங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என்ற விதிமுறையை வேலுமணி மீறியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.’’

‘‘பெரும் தொகை ஒன்று காவல்துறை வாகனத்தின் பாதுகாப்புடன் எல்லை தாண்டியதாமே?”

மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் நடந்த சமாதானப் படலம்!

‘‘உமக்கும் தகவல் வந்துவிட்டதா? தனது இரு துறைகளிலும் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களை சமீபத்தில் சென்னைக்கு அழைத்துப் பேசியிருக்கிறார் அந்த இனிஷியல் அமைச்சர். ‘ஏற்கெனவே நான் சொன்னதுதான்... கடந்த ஆட்சியில எடுத்த வேலைகளுக்கு 10 பர்சன்ட் கமிஷனை கொடுத்துடுங்க...’ என்றிருக்கிறார். அப்போது ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், ‘அண்ணே... 10 பர்சன்ட் கொடுத்தா, கம்பெனிக்கு கட்டுப்படி ஆகாது... அஞ்சு வாங்கிக்கோங்க’ என்று சொல்ல... அரை மனதுடன் இதற்கு அந்த அமைச்சர் சம்மதித்திருக்கிறார். அடுத்த நிமிடமே, ‘யார் என்னென்ன டெண்டர்களை எடுத்திருக்கீங்கன்னு பட்டியல் இருக்கு’ என்று ஒரு பேப்பரை நீட்டியவர், ஒரு வாரத்துக்குள் அந்தப் பணத்தை வெளி மாநிலங்கள் உட்பட சில இடங்களில் செட்டில் செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அதைக் கணக்கு போட்டுப் பார்த்தபோது கமிஷன் மட்டுமே 235 கோடி ரூபாய் வந்ததாம்!”

“அடேங்கப்பா!”

‘‘அவர் சொன்னபடி ஒரு வாரத்தில் 235 கோடி ரூபாயை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களிலும் குறிப்பிட்ட ஒன்பது இடங்களில் செட்டில் செய்திருக்கிறார்கள். இதில் ஹைலைட்டான விஷயம், கொங்கு மண்டலத்திலுள்ள கான்ட்ராக்டர் ஒருவர் பணத்தை ரெடி செய்துவிட்டதாக போன் செய்து சொன்னவுடனேயே, அவர் வீட்டின் முன்பு போலீஸ் வாகனம் வந்திருக்கிறது. போலீஸ் பாதுகாப்புடன் அவர் கிருஷ்ணகிரி தாண்டி ஆந்திராவுக்குச் சென்று பணத்தை செட்டில் செய்துவிட்டு வந்திருக்கிறார். இந்த நெட்வொர்க்கைப் பார்த்து அந்த கான்ட்ராக்டர் வெலவெலத்துவிட்டாராம்!’’

மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் நடந்த சமாதானப் படலம்!

‘‘மதுரை ஆதீனத்தின் மறைவுக்குப் பிறகும் மடத்துக்குள் சர்ச்சைகள் ஓயவில்லையாமே?’’

‘‘தமிழகத்திலேயே அதிக சொத்துள்ள மடங்களில் இதுவும் ஒன்று. ‘மடத்துக்கு எவ்வளவு சொத்துகள், எங்கெங்கு உள்ளன, யாரெல்லாம் குத்தகைக்கு எடுத்துள்ளனர், மடத்தின் வருவாய் எவ்வளவு, மடத்துக்குச் சொந்தமான கடைகள் எத்தனை இருக்கின்றன, கடைகளின் வாடகைப் பணத்தை நிர்வகிப்பது யார்?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்கள் தினசரி மடத்துக்கு வந்து செல்லும் பக்தர்கள். அதேபோல் மடத்துக்கு வரும் காணிக்கை யாருடைய பொறுப்பில் இருக்கிறது என்பதும் தெரியவில்லையாம். இவற்றையெல்லாம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆதீனம் சரிசெய்ய வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.’’

‘‘எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்று தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறதாமே?’’

‘‘சமீபத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை உயரதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, ‘முன்பு தமிழக அரசு வெளியிடும் பெரும்பாலான அரசாணைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். சொற்ப அளவில் மட்டுமே தமிழில் அரசாணைகள் வெளியிடப்பட்டன. இனி வெளியிடும் அனைத்து அரசாணைகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இது மேலிடத்து உத்தரவு’ என்று சொல்லியிருக்கிறார்கள்... தமிழ் வாழ்க” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்!

மிஸ்டர் கழுகு: நள்ளிரவில் நடந்த சமாதானப் படலம்!

மக்கள் ஆசி யாத்திரை!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சமீபத்தில் ‘மக்கள் ஆசி யாத்திரை’யைத் தொடங்கியிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் கணிசமாக இருக்கும் அருந்ததியர் சமூக மக்களின் ஆதரவைக் குறிவைத்தே இந்த யாத்திரை திட்டமிடப்பட்டிருக்கிறதாம். கோவை காமராஜபுரத்தில் அந்தச் சமூகத்தினர் அதிகமாக வசிப்பதால்தான் அங்கிருந்தே யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார் முருகன். தொடக்க விழாவில் பேசிய முருகனும், ‘‘சுதந்திரம் பெற்று 75 ஆண்டுக்காலத்தில் முதன்முறையாக செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனை மத்திய அமைச்சராக்கியிருக்கிறது மோடி அரசு’’ என்று தழுதழுத்திருக்கிறார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

ஆழ்வார்பேட்டை கட்சியிலிருந்து தேனாம்பேட்டை கட்சிக்குத் தாவிய அந்தப் பெண், கட்சியின் சுற்றுச்சூழல் அணியில் முக்கியப் பதவியை எதிர்பார்த்து ‘வீரமான’ பிரமுகருக்குத் தூதுவிட்டிருக்கிறாராம். “இப்பதான் கட்சிக்கு வந்திருக்காங்க... அதுக்குள்ள ஆசையைப் பாரு” என்று முறுக்கிக்கொள்கிறார்கள் அந்த அணியின் சீனியர் நிர்வாகிகள்.

சென்னையின் நெரிசலான ஏரியா ஒன்றில் அடுக்குமாடி வாகன நிறுத்தகத்தில் பார்க்கிங் கட்டண வசூல் ஒப்பந்தத்தை சேலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று எடுத்திருந்தது. அதற்காக, அப்போதைய மாண்புமிகு ஒருவரை முறைப்படி கவனித்திருக்கிறார்கள். ஆட்சி மாறியதும், அந்த ஒப்பந்தம் தனக்கு வேண்டும் என ‘ராஜ’ புள்ளி கேட்க, பழைய கட்சிப் பாசத்தில் ஒப்பந்தத்தை கைமாற்றித் தர சொல்லியிருக்கிறதாம் முன்னாள் மாண்புமிகு தரப்பு. ஆனால், சேலம் நிறுவனத்திடம் கமிஷனாக வாங்கிய தொகையை மட்டும் கொடுக்காமல் கம்பிநீட்டிவருகிறாராம் அந்த முன்னாள் மாண்புமிகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு