Published:Updated:

மிஸ்டர் கழுகு: “வேலூர் ரகசியம்!” - செல்லூர் ராஜூவைச் சுற்றும் சர்ச்சை...

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ

பொதுவாகவே தமிழக அரசியல் கட்சிகளுக்கு ‘மதுரை சென்டிமென்ட்’ உண்டு. இதற்கு எம்.ஜி.ஆர் தொடங்கி கமல் வரை உதாரணங்களை அடுக்கலாம்.

மிஸ்டர் கழுகு: “வேலூர் ரகசியம்!” - செல்லூர் ராஜூவைச் சுற்றும் சர்ச்சை...

பொதுவாகவே தமிழக அரசியல் கட்சிகளுக்கு ‘மதுரை சென்டிமென்ட்’ உண்டு. இதற்கு எம்.ஜி.ஆர் தொடங்கி கமல் வரை உதாரணங்களை அடுக்கலாம்.

Published:Updated:
செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ
“காலம்தான் எத்தனை கொடியது... நல்லவர்களெல்லாம் நம்மைவிட்டு மறைகிறார்கள்” - கரகரத்த குரலில் சோகத்தை உதிர்த்தபடியே நுழைந்தார் கழுகார். “மக்கள் டாக்டர் திருவேங்கடத்தின் மறைவைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாமும் அமைதியானோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆமாம். சென்னை வியாசர்பாடியில் 40 ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தவர் திருவேங்கடம். கொரோனா சிகிச்சைக்கு லட்சம் லட்சமாக பில் போடும் மருத்துவமனைகளுக்கு மத்தியில், மருத்துவச் சேவையை மக்கள் சேவையாக ஆற்றியவர். 70 வயதான திருவேங்கடம் உடல்நலக்குறைவால் மறைந்தது அடித்தட்டு மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்று நெக்குருகினார்.

“சுதந்திர தினத்தில் அமைச்சர்கள் சமாதான ஓட்டப்பந்தயம் நடத்தியிருக்கிறார்களே?” என்று கழுகாரை ரூட் மாற்றினோம்.

“உமது நிருபர் இதுகுறித்து விரிவாகக் கூறியிருக்கிறாரே... அதில் இல்லாத சில தகவல்களை மட்டும் சொல்கிறேன். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னைச் சமாதானப்படுத்திய அமைச்சர்களிடம் ‘அணிகள் இணைப்பு நேரத்தில் பொதுப்பணித் துறையைத் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து என் இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தீர்கள். இவையெல்லாம் என்னவாயிற்று?’ என்று மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறார். ஒருவழியாகச் சமாதானப்படுத்தி பன்னீரிடம் அறிக்கையில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.”

“ஓஹோ...”

“வேலூரில் ஆகஸ்ட் 14-ம் தேதி, கூட்டுறவுத்துறையின் ஆய்வுக்கூட்டத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சென்றிருந்தார். அந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, தி.மு.க தலைவர் ஸ்டாலினை ‘தமாஸ் பீஸு’ என்று கிண்டலடித்தார். இதில் கடுப்பான தி.மு.க தரப்பினர், ‘செல்லூர் ராஜூ மாதம் ஒருநாள் வேலூர் வந்துசெல்லும் ரகசியத்தை நாங்கள் உடைக்கட்டுமா?’ என்று மிரட்டலாகக் கேட்கிறார்கள். வேலூர் அருகே அம்முண்டியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரின் இதயத்துக்கு நெருக்கமானவராம். ‘அந்த இதயக்கிளியைப் பார்க்கத்தான் அமைச்சர் அடிக்கடி வேலூர் வருகிறார். இனியும் எங்கள் தலைவரை வம்புக்கு இழுத்தால் பல ரகசியங்கள் அம்பலமாகும்’ என்கிறது வேலூர்

தி.மு.க தரப்பு. ஆனால் அமைச்சர் தரப்போ, ‘காழ்ப்புணர்ச்சியால்தான் இப்படிக் கற்பனையான அவதூறுகளைப் பரப்புகிறார்கள்; அதில் எள்ளளவும் உண்மை இல்லை’ என்கிறது. வேலூரில் இப்போது இதுதான் ஹாட் டாபிக்!”

“சரிதான்!”

மிஸ்டர் கழுகு: “வேலூர் ரகசியம்!” - செல்லூர் ராஜூவைச் சுற்றும் சர்ச்சை...

“தே.மு.தி.க கிச்சன் கேபினெட் பிரமுகருடன் தி.மு.க வாரிசு ஒருவர் சென்னையில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்கெனவே கூறியிருந்தேன். அதில் அப்டேட் தகவல் சொல்கிறேன். வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி விஜயகாந்த்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படு கிறது. சமீபத்தில் அது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘நீங்க எதிர்பார்க்கிற கூட்டணி சீக்கிரம் அமையும். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்’ என்று ஆறுதல் கூறினாராம். தயாநிதி மாறன், சபரீசன் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததாலேயே இந்த ஆறுதல் அறிவிப்பு என்று கூறப்படுகிறது. கூட்டணி முடிவாகிவிட்டால் நவம்பர் மாதமே அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, தேர்தல் பணிகளைத் தொடங்க கேப்டன் தரப்பு முடிவெடுத்திருக்கிறதாம்” என்ற கழுகாருக்குச் சூடாக இஞ்சி டீயை நீட்டினோம்.

டீயை பருகியவர், “பா.ஜ.க தலைவர் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் இருக்கிறார் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன். இதை வாய்ப்பாக நினைக்கும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகள் அவருக்கு நூல்விட்டு பார்த்தன. ஆனால், மனிதர் சிக்கவில்லையாம். இதற்குக் காரணம் பா.ஜ.க மேலிடத்திலிருந்து வந்த எச்சரிக்கை என்கிறார்கள். டெல்லியிலிருந்து பேசிய சிலர், ‘வெளி மாநிலங்கள்வரை ஹோட்டல் பிசினஸில் கொடிக்கட்டி பறக்கிறீர்கள். எந்நேரமும் உங்களைக் குறிவைத்து வருமானவரித் துறையினர் ரெய்டுக்கு வரலாம்’ என்று மிரட்டல் தொனியில் கூறினார்களாம்.”

“இதற்கு நயினாரின் ரியாக்‌ஷன் என்னவாம்?”

“அப்படியே ஜெர்க் ஆன நயினார், ‘பதவியின்மீது எனக்கு ஆசை இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்ப்பது மட்டுமே என் நோக்கம்’ என்று அந்தர் பல்டி அடித்து சரண்டர் ஆகிவிட்டாராம். பழைய ‘கழக’ நண்பர்கள் இவருக்கு போன் செய்தால்கூட ஷாக் அடித்ததுபோல மிரள்கிறாராம்!’’

“ரஜினியை முன்வைத்து ‘மதுரை சென்டிமென்ட்’ ஒன்று வலம்வருகிறதாமே?”

“உங்களுக்கும் அந்தத் தகவல் வந்துவிட்டதா... பொதுவாகவே தமிழக அரசியல் கட்சிகளுக்கு ‘மதுரை சென்டிமென்ட்’ உண்டு. இதற்கு எம்.ஜி.ஆர் தொடங்கி கமல் வரை உதாரணங்களை அடுக்கலாம். அந்த வகையில் ரஜினியும் 2020, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்துவிட்டு, ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை வழிபடத் திட்டமிட்டிருந்தார். அதன் பிறகே ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கலாம் என்று நினைத்திருந்தாராம் ரஜினி. ஆனால், கடந்த மார்ச் மாதமே கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. ‘ஏற்கெனவே தலைவர் ரொம்ப லேட்... இதில் கொரோனா வேறு சதி செய்கிறது. இனி எப்போது விடியும் என்று தெரியவில்லை’ என்று புலம்புகிறார்கள் ரஜினி மன்ற நிர்வாகிகள்.’’

‘‘அட போங்கப்பா... இதையே கேட்டுக் கேட்டு காது வலித்ததுதான் மிச்சம்... வேறு ஏதேனும்?”

“கோவை தி.மு.க-வில் இதற்கு முன்பு கோவை மாநகர் கிழக்கு, மாநகர் மேற்கு, புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு என்று நான்கு மாவட்டங்கள் இருந்தன. அதைத் தற்போது ஐந்தாகப் பிரித்து, ஒரு மாவட்டத்துக்கு இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளரான முத்துசாமியைத் தூக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு பையா கவுண்டர் நியமிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து, பையா கவுண்டரை கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க வேட்பாளராக இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்களாம்.”

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

“ம்க்கும்!”

“கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 71 வார்டுகள் மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் சிங்காநல்லூர் எம்.எல்.ஏ-வுமான கார்த்திக்கின் கட்டுப்பாட்டில் இருந்தன. தற்போது அவருக்கு சிங்காநல்லூர், கோவை தெற்குத் தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதிக்கு எஸ்.எம்.சாமி என்பவரின் பெயர் அடிபடுவதால், கார்த்திக் தரப்பினர் புகைச்சலில் இருக்கிறார்கள். அதேபோல, தென்றல் செல்வராஜ் பொறுப்புவகித்த கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக கோவை கிழக்கு மாவட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். புதிய மாவட்டத்துக்கு மருதமலை சேனாதிபதியை நியமித்துள்ளார்கள். கிணத்துக்கடவு தொகுதியை சேனாதிபதி குறிவைத்திருப்பதால், சீனியர்கள் சிலர் புகைச்சலில் இருக்கிறார்கள்” என்றபடி சிறகுகள் விரித்தார் கழுகார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மரம் நடுவதற்காக நான்கு குழிகள் வெட்டப் பட்டிருந்தன. முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் மரம் நட்டுவிட்டுப் புறப்பட்டனர். அவர்களுடன் எம்.பி வைத்திலிங்கமும் கிளம்ப ஆயத்தமானார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், “சார்... உங்களுக்கும் ஒரு குழி வெட்டி வெச்சிருக்கு!” என்று அழைக்கவும், மனிதர் வெலவெலத்துப் போய்விட்டார். பத்திரிகையாளரைத் திரும்பி உற்றுப் பார்த்தவர், “யோவ், நான் இன்னும் கொஞ்ச நாள் வாழணும்னு நினைக்கறேன்யா...” என்று கூறிவிட்டு மரத்தை நடாமலேயே எஸ்கேப் ஆனார் வைத்தி!

* பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. முதன்முறையாக பெரும்பிடுகு முத்தரையர் படத்தையும் வைத்து அஞ்சலி செலுத்தினர் பா.ஜ.க-வினர். தி.மு.க மற்றும் அ.தி.மு.க மீது அதிருப்தியில் உள்ள முத்தரையர் வாக்குகளை வளைப்பதற்காக இந்த அஞ்சலி என்கிறார்கள்!

* ‘சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின், கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை’ என்று சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

* கொங்கு மண்டல தி.மு.க-வில் மூத்தவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமிக்கு ‘முக்கியப் பொறுப்பு’ வழங்க அறிவாலயம் முடிவெடுத் திருக்கிறதாம். கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொம்புசீவ இந்த பழனிசாமி களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism