Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஊர் திரும்பிய ஸ்டாலின்... ஆளுநர் வைத்த செக்!

பொன்முடி, ஆளுநர் ரவி
பிரீமியம் ஸ்டோரி
பொன்முடி, ஆளுநர் ரவி

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தமிழ்நாட்டில் தடை இருக்கிறது. ஆனாலும், பல மாவட்டங்களில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது மறைமுகமாக நடக்கத்தான் செய்கிறது

மிஸ்டர் கழுகு: ஊர் திரும்பிய ஸ்டாலின்... ஆளுநர் வைத்த செக்!

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தமிழ்நாட்டில் தடை இருக்கிறது. ஆனாலும், பல மாவட்டங்களில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது மறைமுகமாக நடக்கத்தான் செய்கிறது

Published:Updated:
பொன்முடி, ஆளுநர் ரவி
பிரீமியம் ஸ்டோரி
பொன்முடி, ஆளுநர் ரவி

‘சிவாஜி’ படத்தில் ரஜினி, பட்டிமன்றம் ராஜா இடையேயான ‘வாங்க பழகலாம்’ காமெடிக் காட்சியை மொபைலில் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த வேளையில் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்-ஸையும், ராஜா இடத்தில் எடப்பாடியையும் கற்பனை செய்து பாரும்...” என்று கண்ணடித்தார். “அவர் சீரியஸாகப் பேசியதை இப்படி காமெடியாக்கிவிட்டீரே...” என்றபடியே சமோசாக்களை நீட்டினோம். அவற்றை ருசித்தபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“இவ்வளவு அமளி துமளிக்கிடையே, சசிகலாவின் 68-வது பிறந்தநாளையொட்டி அவரை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பன்னீர். சசிகலா குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அதேநாளில் பதிலளித்த பன்னீர்செல்வம், ‘அம்மா காலத்தில் இந்த இயக்கத்துக்குத் தூணாக இருந்து உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்துக் கொண்டு கழகம் வெற்றி நடைபோடும். யாராக இருந்தாலும் என்பதில் சின்னம்மாவும், டி.டி.வி.தினகரனும் அடங்குவார்கள்’ என்று அழைப்பும் விடுத்திருக்கிறார். சசிகலா தொடர்ந்த பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், இதுநாள் வரை ‘பொதுச்செயலாளர்’ என்கிற லெட்டர் பேடிலேயே அறிக்கை வெளியிட்டுவருகிறார் சசிகலா. எனவே, நேரடியாக ஓ.பி.எஸ்-ஸுடன் இணைவது சாத்தியம்தானா என்று தெரிய வில்லை. டி.டி.வி.தினகரன் தரப்பு பன்னீருடன் கைகோக்கத் தயார் என்றாலும், பன்னீருக்குக் கீழே இருப்பதைத் துளியும் விரும்பவில்லை என்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ஊர் திரும்பிய ஸ்டாலின்... ஆளுநர் வைத்த செக்!

அ.தி.மு.க வழக்கு பற்றிய கவர் ஸ்டோரியைப் புரட்டிப் பார்த்த கழுகாரிடம், “பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்ததில் விசேஷம் ஏதுமிருந்தால் சொல்லும்...” என்றோம்.“அந்தச் சந்திப்பே விசேஷம்தானே... 20 நிமிடங்கள் நீடித்த பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முழுக்க முழுக்க அலுவல் சார்ந்தது என்றாலும், ‘எப்போது வேண்டுமானாலும் மாநிலத்தின் நலன் தொடர்பாக என்னுடன் பேசுங்கள்’ என்று பிரதமர் உத்தரவாதம் அளித்திருப்பது ஆளும் தி.மு.க-வுக்கு உற்சாகம் தந்திருக்கிறதாம். டெல்லி பயணத்துக்கு முன்பே, ‘மத்திய அரசுடன் மாநில அரசு உறவுகொள்ளுமே தவிர, தி.மு.க-வுடன் பா.ஜ.க குறைந்தபட்ச சமரசம்கூட செய்துகொள்ளாது’ என்று திருமாவளவன் மணிவிழாவில் உறுதி கொடுத்து விட்டுத்தான் ஸ்டாலின் டெல்லிக்கு விமானம் ஏறினார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றி விட்டார். ஆனால், அவர் திரும்பியதும் ஆளுநர் இப்படி ‘செக்’ வைப்பார் என்று தி.மு.க-வினர் எதிர்பார்க்கவேயில்லை.”

“மூன்று புதிய துணைவேந்தர் நியமனம் பற்றிச் சொல்கிறீரா?”

“ஆம். தமிழ்நாடு அரசின் கீழுள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவைக் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றி, ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது தி.மு.க அரசு. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கா விட்டாலும், குறைந்தபட்சம் இந்த விஷயத்தில் அடக்கியாவது வாசிப்பார் ஆளுநர் என்பது ஆளும் தரப்பின் கணக்கு. ஆனால், ஆளுநர் எகிறியடித்திருக்கிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து, மீண்டும் மிரட்டியிருக்கிறார் ஆளுநர் ரவி. இந்த நியமனங் கள் குறித்தும் வழக்கம்போல அரசுக்கு எந்தத் தகவலையும் ஆளுநர் மாளிகை தெரிவிக்க வில்லையாம். அடுத்ததாக, காலியாக இருக்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கும் புதிய துணைவேந்தரை நியமிக்கப்போகிறாராம் ஆளுநர். இந்த விஷயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிதான் ரொம்பவே அப்செட் என்கிறார்கள்.”

“நாகப்பட்டினம் தி.மு.க-வில் என்ன சலசலப்பு?”

“சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தமிழ்நாட்டில் தடை இருக்கிறது. ஆனாலும், பல மாவட்டங்களில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது மறைமுகமாக நடக்கத்தான் செய்கிறது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் இப்படிப் பயன்படுத்துவதற்கு, நாகை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கெளதமன் தரப்பிலிருந்து முட்டுக்கட்டை போடப்படுகிறதாம். இந்த விவகாரத்தில் கெளதமனும், அவரின் தம்பி மோகன்தாஸும் மீனவர் அமைப்புகளுடன் மல்லுக்கட்டுவதால், விவகாரம் பெரிதாகியிருக்கிறது.”

“தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரான அவர், இப்படிச் செய்வதில் என்ன பிரச்னை இருக்கிறது?”

“அவர் பணியைச் செய்வதில் பிரச்னையில்லை. அதைச் சொல்லி, ‘பலன்களை’ எதிர்பார்ப்பதுதான் பிரச்னை. விவகாரம் சீரியஸாவதைத் தொடர்ந்து, ‘மீனவர் அமைப்புகளுடன் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாமே’ என்று கெளதமனிடம் பேசிப் பார்த்திருக்கிறார் நாகை வடக்கு மாவட் டப் பொறுப்பாளர் நிவேதா முருகன். ஆனால், கெளதமன் இறங்கிவரவில்லையாம். இதுதான் தி.மு.க-வினரின் பொருமலுக்குக் காரணம்.”

“அமைச்சர் சேகர் பாபு மீது பிற அமைச்சர்கள், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ‘அப்செட்’ என்கிறார்களே?”

“அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் சம்பந்தமான டிரான்ஸ்ஃபர்களுக்கு பரிந்துரைக் கடிதம் வந்தால், ‘உங்க மாவட்டத்துல அந்த எம்.எல்.ஏ-வும் கேட்டிருக்கிறார். காங்கிரஸ்காரர்களும் கேட்கறாங்க. நீங்க ரெண்டு டிரான்ஸ்ஃபர் எடுத்துக்கோங்க. மீதியை நான் அவங்களுக்குக் கொடுத்துடுறேன்’ என்று மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாராம் சேகர் பாபு. ‘எங்க மாவட்டத்துல அவர் உள்ளடி அரசியல் பண்ற மாதிரி, அவரோட சென்னை கிழக்கு மாவட்டத்துல அவருக்கு எதிரா இருக்கும் பரந்தாமன், தாயகம் கவிக்கு நாங்க முக்கியத்துவம் கொடுத்தால், சேகர் பாபு சும்மா இருப்பாரா?’ என்று கொந்தளிக் கிறார்கள் மற்ற அமைச்சர்கள்” என்ற கழுகாருக்கு சூடான லெமன் டீ கொடுத்தோம். அதை ரசித்துக் குடித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“சுதந்திர தினத்தன்று ராஜ்பவனில் நடந்த ‘டீ பார்ட்டி’யில் அமைச்சர்களுக்குள்ளேயே உரசல் அரங்கேறியிருக்கிறது. கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு அருகே வந்த அமைச் சர் செந்தில் பாலாஜி, ‘அப்புறம்ணே, எப்படிப் போகுது...’ என்று குசலம் விசாரித்திருக்கிறார். உட்கார நாற்காலியிருந்தும் அந்த நாற்காலியில் கைவைத்துக்கொண்டு அவரை அமரவிடாமல் நிற்கவைத்தே பேசி அனுப்பிவிட்டார்களாம் சீனியர்கள். செந்தில் பாலாஜியை பொன்முடி திரும்பிக்கூட பார்க்கவில்லையாம். ‘பசையுள்ள இலாகாக்களை செந்தில் பாலாஜி வைத்திருப்பது ஏற்கெனவே பொருமல்தான். அவருக்குத் தலைமை கொடுக்கும் முக்கியத்துவம் சீனியர் களுக்குப் பிடிக்கவில்லை. அந்தக் கோபத்தில்தான் நிற்கவைத்து அனுப்பியிருக்கிறார்கள்’ என்கிறது கட்சி வட்டாரம்.”

அமல்ராஜ்
அமல்ராஜ்
மிஸ்டர் கழுகு: ஊர் திரும்பிய ஸ்டாலின்... ஆளுநர் வைத்த செக்!

“ஓ...”

“மதுரை சரவணனைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர்களும் கட்சியைவிட்டுக் கிளம்பும் எண்ணத்தில் இருக்கிறார் களாம். இதற்கு அரசியல், சித்தாந்தக் காரணங்கள் ஏதுமில்லை. கட்சிக்குச் செலவு செய்யச் சொல்லி, பா.ஜ.க-வில் கொடுக்கப் படும் பொருளாதார நெருக்கடிதான் முக்கியக் காரணம் என்கிறார்கள்” என்ற கழுகார்…

“சென்னையில் வங்கிக் கொள்ளைச் சம்பவத் தில் மீட்கப்பட்ட 31 கிலோ நகைகளில், 3.5 கிலோ தங்கம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டிலிருந்து மீட்கப் பட்டது. அந்த இன்ஸ்பெக்டரும் கொள்ளை வழக்கில் கைதான சந்தோஷ் என்பவரும் உறவினர்கள். காதும் காதும் வைத்ததுபோல இன்ஸ்பெக்டரைக் காப்பாற்ற ஒரு டீம் முயன்றதையடுத்து தனிப்படையிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், இந்தத் தகவலைக் கசியவிட்டிருக்கிறார். இன்ஸ்பெக்டரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட பின்னணி இதுதான்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* சென்னை நீலாங்கரை ஏரியாவில், வார்டு கவுன்சிலரின் தந்தை ஒருவர் செய்யும் அடாவடி தாங்கவில்லையாம். வார்டுக்குள் வரும் நிறுவனங்களையெல்லாம் ‘எட்டி’ உதைக்காத குறையாக மிரட்டி வசூல் வேட்டையாடுகிறாராம்.

* தமிழ்நாட்டிலேயே அந்த சீனியர் அமைச்சரின் துறையில்தான் கமிஷன் சதவிகிதம் உச்சத்தில் இருக்கிறதாம். அவருக்கு 12, அதிகாரிகளுக்கு 12, ஏஜென்ட்டுகளுக்கு 4 என மொத்தம் 28 சதவிகிதத்தில் நடக்கிறது கமிஷன் வசூல்.

* கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலாளராக இருந்த ஜவஹர், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த மாறுதலுக்குப் பின்னணியில் அதே துறையின் பெரிய அதிகாரி இருப்பதாகச் சொல்கிறது கோட்டை வட்டாரம்.

* ராஜ்பவன் டீ பார்ட்டியில், முதன்மையானவரின் உதவியாளர் பக்கத்தில் உட்கார்ந்து நீண்டநேரம் காதோரம் பேசினாராம், ‘வீடியோ’ போடும் காவல்துறை உச்ச அதிகாரி ஒருவர். ‘உதவியாளர் என்ன உள்துறைச் செயலாளரா, அவரிடம் நெடுநேரம் பேச என்ன இருக்கிறது?’ என்று பொருமுகிறது சீனியர் காக்கிகள் வட்டாரம்.