Published:Updated:

மிஸ்டர் கழுகு: சரவெடி ஸ்டாலின்! - வெலவெலத்த அமைச்சர்கள்...

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஆகஸ்ட் 18-ம் தேதி, சட்டமன்றத்துக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தபோது, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மட்டும் கறுப்பு பேட்ஜ் அணியவில்லை.

மிஸ்டர் கழுகு: சரவெடி ஸ்டாலின்! - வெலவெலத்த அமைச்சர்கள்...

ஆகஸ்ட் 18-ம் தேதி, சட்டமன்றத்துக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தபோது, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மட்டும் கறுப்பு பேட்ஜ் அணியவில்லை.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

செல்போனில்டாம் அண்ட் ஜெர்ரி’ கார்ட்டூனைப் பார்த்துச் சிரித்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘தமிழக அரசியலும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரிதான் செல்கிறது. தி.மு.க துரத்துவதும், அ.தி.மு.க எகிறுவதுமாக இனி கண்ணாமூச்சி விளையாட்டுகளுக்குப் பஞ்சமிருக்காது” என்ற கழுகாருக்கு சூடான பாதாம் பாலை நீட்டியபடியே, ‘‘கொடநாடு வழக்கை மீண்டும் தூசுதட்டுகிறார்கள். எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மூவருக்குச் சிக்கல் என்று ஏற்கெனவே நீர் சொன்னதுதான் நடந்துவருகிறது’’ என்று பாராட்டினோம். பாராட்டைக் கண்டுகொள்ளாதவராக உரையாடலைத் தொடங்கினார் கழுகார்.

‘‘முடிந்துபோன கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னைச் சேர்க்க சதி நடப்பதாகப் பொங்கும் எடப்பாடி, ஆகஸ்ட் 18-ம் தேதி பன்னீர் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சென்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்திருக்கிறார். ‘கொடநாடு விவகாரத்தில் எங்களைச் சிக்கவைக்க சதி நடக்கிறது; டெல்லியில் பேசி விஷயத்தை ஆஃப் செய்ய வேண்டும்’ என்று புலம்பினாராம். பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர் பதில் எதுவும் சொல்லவில்லையாம்.’’

மிஸ்டர் கழுகு: சரவெடி ஸ்டாலின்! - வெலவெலத்த அமைச்சர்கள்...

“இருவரும் இப்படி இணைந்தே சென்றாலும், கட்சியில் தனி ஆவர்த்தனம் செய்யவும் பன்னீர் தயாராகிறார் என்கிறார்களே..?”

“தெரிந்த விஷயம்தானே... ஆகஸ்ட் 18-ம் தேதி, சட்டமன்றத்துக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தபோது, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மட்டும் கறுப்பு பேட்ஜ் அணியவில்லை. அதோடு தன் சகாக்களிடம், ‘எடப்பாடி ஏன் இவ்வளவு பதற்றப்படறாரு? அவங்க கேஸ் போட்டா போடட்டுமே... வழக்கை நீதிமன்றத்துல சந்திச்சுக்கலாம். தேவையில்லாம பிரச்னையை சீரியஸாக்கிட்டார்’ என்று சொல்லியிருக்கிறார் பன்னீர். இந்த வழக்கில் அடுத்தடுத்து நடக்கப்போகும் சம்பவங்களால், கட்சி மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று மனக்கணக்கு போடுகிறாராம் பன்னீர். அதனாலேயே, இந்த விவகாரத்தில் பன்னீர் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க முடிவெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.”

‘‘குடிசை மாற்று வாரிய குடியிருப்புக் கட்டட விவகாரம் விஸ்வரூபமெடுக்கிறதே?’’

‘‘ஆமாம்... தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கான டெண்டரை எடுத்திருந்த நாமக்கல் நிறுவனம், முன்னாள் முதல்வர் எடப்பாடி தரப்புக்கு நெருக்கமானதாம். கடந்த 2017, பிப்ரவரியில் கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூடியிருந்தபோது, ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக 32 எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் அளித்ததில் இந்த நிறுவனத்துக்கும் பங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குப் பிரதிபலனாக, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 4,200 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர்கள் வாரி வழங்கப்பட்டனவாம். தற்போதைய பிரச்னையை அடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசனும், சேகர் பாபுவும் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். முறைகேடு உறுதிப்படுத்தப்பட்டால், கடந்த ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தை வைத்திருந்த பன்னீருக்குச் சிக்கல் வரும் என்கிறார்கள்.’’

‘‘கமலாலயத்தில் அதிருப்தி நெடி தூக்கலாக வீசுகிறதுபோல!”

‘‘பா.ஜ.க மாநிலத் தலைவர் மீதுதானே சொல்கிறீர்கள்... தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்தபோது, மாற்றுக்கட்சி நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள், முன்னாள் தாதாக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கட்சியில் சேர்த்தார். ஆனால், தற்போதைய தலைவரிடம் அந்த வேகம் இல்லை என்கிற அதிருப்தி, கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவரை பா.ஜ.க-வில் இணைப்பதற்கான முயற்சி சமீபத்தில் நடந்திருக்கிறது. அப்போது, அவர்கள் மீதிருக்கும் வழக்குகள், புகார்கள் குறித்து மாநிலத் தலைவருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. கூடவே, அ.தி.மு.க தரப்பிலிருந்தும் ‘அவர்களைச் சேர்க்கக் கூடாது’ என்று அழுத்தம் போனதாம். இதையடுத்து, அவர்களைச் சேர்க்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டாராம். இதையெல்லாம் முன்வைத்துத்தான் அவர்மீதான அதிருப்திக் குரல்கள் கமலாலயத்தில் எழுந்துள்ளன.”

‘‘ஆளுங்கட்சிக்குள்ளும் சரவெடி சத்தம் கேட்கிறதே?’’

‘‘உமக்கும் அந்தச் சத்தம் கேட்டுவிட்டதா... சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு, அமைச்சர்கள் சிலரிடமிருந்து சில துறைகளை மாற்றும் முடிவில் இருக்கிறாராம் முதல்வர். சிலரைக் கழற்றிவிடவும் பேச்சு அடிபடுகிறது. ஊரக வளர்ச்சித்துறையை வைத்திருக்கும் பெரியகருப்பன், பால்வளத்தை வைத்திருக்கும் ஆவடி நாசர் ஆகியோரின் செயல்பாடுகளில் முதல்வருக்கு திருப்தி இல்லையாம். இருவரையும் நேரடியாகவே கூப்பிட்டு வெடித்திருக்கிறார். ஸ்டாலினின் அறையில் சரவெடிச் சத்தம் கேட்டு, வேறு சில அமைச்சர்களும் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: சரவெடி ஸ்டாலின்! - வெலவெலத்த அமைச்சர்கள்...

‘‘சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நாள்களை திடீரென்று குறைத்துவிட்டார்களே?’’

‘‘உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துத்தான் அப்படி செய்ததாகச் சொல்கிறார்கள். அதேசமயம், வேறொரு தகவலும் ஓடுகிறது. ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15-க்குள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அதற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடலாமா?’ என்று கோட்டையில் ஆலோசனை நடந்திருக்கிறது. ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தலுடன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் சேர்த்து நடத்தும் எண்ணம் ஆளும் தரப்பிடம் இருக்கிறதாம். அந்தக் காரணத்தையே நீதிமன்றத்தில் சொல்லி கூடுதல் கால அவகாசம் கேட்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.’’

‘‘ஓஹோ...’’

‘‘இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை முழுமையாக நடத்தி முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட ஆளும் தரப்பு திட்டமிட்டிருக்கிறது. வெள்ளை அறிக்கையில் சொன்னதுபோல வரி ஏற்றம் செய்ய வேண்டிய நிலையில்தான் தமிழக நிதிநிலை இருக்கிறதாம். அதை முதல்வரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் நிதியமைச்சர். ‘உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று முதல்வர் சொன்னதாலேயே, இடைக்கால பட்ஜெட்டில் வரி ஏற்றம் எதுவும் இல்லையாம்.’’

‘‘இன்னொரு தமிழக அமைச்சருக்கு எதிராகவும் அஸ்திரம் தயாராகிவருகிறது என்கிறார்களே?”

மிஸ்டர் கழுகு: சரவெடி ஸ்டாலின்! - வெலவெலத்த அமைச்சர்கள்...

‘‘மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் உட்பட அவரின் குடும்பத்தினர் ஏழு பேர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. ‘வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்’ என்று தூத்துக்குடி நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை என அனிதா தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில்தான், மத்திய அரசின் அமலாக்கத்துறை, அனிதா உள்ளிட்ட ஏழு பேருக்கும் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருக்கிறது. விரைவில் இந்த விவகாரமும் பெரிதாக வெடிக்கலாம்.’’

‘‘ரெய்டுக்கு பிறகும்கூட கொங்கு மண்டல அ.தி.மு.க-வினர் உற்சாகமாக இருக்கிறார்களே!”

‘‘உள்ளாட்சித் தேர்தலையொட்டி களமிறங்கப்போகும் கரன்ஸிதான் உற்சாகத்துக்குக் காரணமாம். கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று தி.மு.க-வுக்குத் தண்ணிகாட்டிய அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலுக்கும் ‘வளமான’ திட்டத்தைப் போட்டிருக்கிறது. ஒவ்வொரு வார்டுக்கும் மேயர் பதவிக்கு நிற்பவர் 20 லட்ச ரூபாய், தொகுதி எம்.எல்.ஏ 10 லட்ச ரூபாய், வேலுமணி தரப்பில் 10 லட்ச ரூபாய் என்று உபயம் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இது தவிர, வார்டில் நிற்கும் வேட்பாளர் 20 லட்ச ரூபாய் செலவுசெய்ய வேண்டுமாம். இதைக் கேள்விப்பட்டு உள்ளூர் உடன்பிறப்புகளே திகைத்துப்போயிருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

நெகிழ்ச்சியில் தியாகி!

தென்காசி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமான தியாகி லட்சுமிகாந்தன் பாரதியை கௌரவிக்காமல் விட்டுவிட்டார். இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், தியாகி லட்சுமிகாந்தனிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். பதறிப்போன ஆட்சியர், உடனடியாக தியாகியின் வீட்டுக்கே சென்று அவரை கௌரவித்திருக்கிறார்.

மிஸ்டர் கழுகு: சரவெடி ஸ்டாலின்! - வெலவெலத்த அமைச்சர்கள்...

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* முன்னாள் மாஜிக்கள் பலரும் ரெய்டு பயத்திலிருக்க... சுத்தத்தை கவனித்தவர் மட்டும் தெம்பாக உலாவருகிறாராம். மத்திய மண்டலத்தின் இளைய மாண்புமிகுவிடம் சரணடைந்த பிறகே இந்த தைரியம் என்கிறார்கள்!

* வட மாவட்ட அமைச்சர் ஒருவரிடம் உயரதிகாரி பதவி நியமனம் தொடர்பாக மாப்பிள்ளை தரப்பிலிருந்து மூவ் செய்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் இல்லாததால், கடுப்பான மாப்பிள்ளை தரப்பு அமைச்சரிடம், `முடிஞ்சா பண்ணுங்க. முடியலைன்னா நானே பாத்துக்குறேன்’ என்று சீற... ‘முடி முடி’ என்று பிடித்ததில் அப்செட்டில் இருக்கிறாராம் அமைச்சர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism