Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜாதகம் சரியில்லை! - ஸ்டாலினுக்குத் தடைபோட்ட கிச்சன்...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத் துக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புக்கு கட்சி ரீதியான செயல்பாடுகள் மட்டும் காரணமில்லையாம்.

மிஸ்டர் கழுகு: ஜாதகம் சரியில்லை! - ஸ்டாலினுக்குத் தடைபோட்ட கிச்சன்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத் துக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புக்கு கட்சி ரீதியான செயல்பாடுகள் மட்டும் காரணமில்லையாம்.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
சிறகுகள் சடசடக்கும் ஓசை. முந்திரி அல்வாவுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “அன்பில் மகேஷின் அட்ராஸிட்டி குறித்து உமது நிருபர் படை எழுதியிருந்த செய்திக்கு தி.மு.க-வில் ஏக ரெஸ்பான்ஸ். அதற்காக எனது சிறிய ட்ரீட்” என்றபடி அல்வாவைச் சுடச்சுடப் பரிமாறியவர், அவரும் சுவைத்தபடி செய்திக்குள் தாவினார்.

“முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத் துக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புக்கு கட்சி ரீதியான செயல்பாடுகள் மட்டும் காரணமில்லையாம். தனது வீட்டுவசதித் துறையில் முதல்வரின் பெயரைச் சொல்லி ஏகப்பட்ட தலையீடுகள் நடப்பதாக நெருக்கமானவர் களிடம் புலம்பியிருக்கிறார் பன்னீர். சமீபத்தில், சென்னை அருகே சுமார் நூறு ஏக்கர் இடத்துக்கு ஒப்புதல் வழங்கச் சொல்லி ஒரு கோப்பு வந்துள்ளது. அதில் சில சிக்கல்கள் இருந்ததால், அதை நிறுத்தப் பார்த்தாராம் பன்னீர். ஆனால், முடியவில்லை. ‘எனது துறையில்கூட என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. பிறகு எதற்கு இந்தத் துணை முதல்வர் பதவி?’ என்று பொங்கியிருக்கிறார்.”

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்


“இருக்காதா பின்னே!”

“அதேநேரம், `சுறுசுறுப்பாக ஒரு காரியம் செய்திருக்கிறார்’ என்கிறார்கள் சி.எம்.டி.ஏ பணியாளர்கள். கட்டடம் கட்டி முடித்துவிட்டு, சி.எம்.டி.ஏ-வின் ‘கம்ப்ளீஷன்’ சான்றிதழுக்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். இப்படிக் குவிந்திருந்த சுமார் இரண்டாயிரம் கோப்புகளை ஒரே மூச்சில் க்ளியர் செய்துவிட்டாராம் பன்னீர்.”

“இத்தனை நாள்கள் பெண்டிங் போட்டுவிட்டு, கடைசி நேரத்தில் வேலை பார்த்திருக்கிறார்... இதிலென்ன சுறுசுறுப்பு வேண்டிக்கிடக்கிறது?”

“ `கூடிய விரைவில் அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும்’ என்று அமைச்சர் வேலுமணி, தங்கமணி டீம் பன்னீருக்கு அழுத்தம் கொடுக்கிறார்களாம். ஆனால், விட்டுக்கொடுக்கும் மனநிலையில் பன்னீர் இல்லை. கட்சி விதிகளின்படி, பொதுக்குழு கூட்ட வேண்டுமெனில், எடப்பாடியுடன் பன்னீரும் கையெழுத்து போட்டு அறிக்கை வெளியிட வேண்டும். ஒருவேளை பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டால், பன்னீர் கையெழுத்து போடுவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.”

ஸ்டாலின்
ஸ்டாலின்


“ம்ம்...”

“அ.தி.மு.க-வில் அமைப்புரீதியாகப் பிரிக்கப்படாமல் உள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. அதன் மாவட்டச் செயலாளராக பி.கே.வைரமுத்து இருக்கிறார். மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தெற்கை அவருக்குக் கொடுத்துவிட்டு, வடக்கை தான் எடுத்துக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காய் நகர்த்துகிறாராம். ஆனால், வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானுக்குத்தான் வழங்க வேண்டும் என்று பன்னீர் தரப்பு பிடிவாதம் பிடிக்கிறதாம். இடையே, அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களும் மாவட்டப் பொறுப்புக்கு மல்லுக்கட்டுகிறார்கள். இதில் விஜயபாஸ்கர் கடும் அப்செட் என்கிறார்கள்.”

“சரிதான்... தி.மு.க செய்திகள் ஏதேனும் உண்டா?”

“தி.மு.க-வில் கட்சி அமைப்புரீதியாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று அறிவிக்க முடிவுசெய்துள்ளார்கள். சில மாவட்டங்களுக்கு அறிவிப்பும் வந்துவிட்டது. மற்ற மாவட்டங்களைப் பிரிக்கும் வேலைகள் மும்முரமாகியிருக்கின்றன. இந்த மாற்றத்துக்கு சில மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். ‘எதிர்க்கட்சியாக இத்தனை ஆண்டுகள் ஒரு மாவட்டத்தைக் கட்டிக்காத்து செலவு செய்திருக்கிறோம். ஆட்சிக்கு வரும் நேரத்தில் அதைப் பிடுங்குவது நியாயமா?’ என்று பொங்குகிறார்கள். கட்சித் தலைமையோ, ‘தேர்தல் யுக்தியில் இதுவும் ஒன்று’ என்று சமாளிக்கிறதாம்.”

சசிகலா
சசிகலா


“ஓஹோ!”

“இன்னொரு தகவலும் பரபரப்பாக ஓடுகிறது... ‘உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டாம்; வாரிசு அரசியல் என்று விமர்சனம் எழும்’ என ஐபேக் தரப்பில் ஆலோசனை சொல்லப்பட்டதாம். இதைக் கட்சித் தலைமை கிச்சன் கேபினெட்டிடம் விவாதிக்க... வீடு அல்லோல கல்லோலப் பட்டுவிட்டது என்கிறார்கள். கூடவே, ‘ஜாதகம் சரியில்லை; நீங்கள் அமைதியாக இருங்கள்!’ என்று வந்த அட்வைஸுடன் ‘ஆறு மாதத் திட்டம்’ ஒன்றும் அவரிடம் சொல்லப்பட்டதாம். இதில் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்!”

“கழகங்களில் கலகம் தொடர்கிறது என்று சொல்லும்!”

“தமிழகத் தலைமைச் செயலாளரான சண்முகம், ஓய்வு பெற்ற பிறகு மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பில் இருக்கிறார். இவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பை அளிக்க முதல்வர் தரப்பு விரும்புகிறது. அதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அதை அனுப்ப விருக்கிறார்கள். இதில் கடுப்பாகியுள்ள சில சீனியர் அதிகாரிகள், பழைய ஃபைல்களைத் தூசுதட்டி எடுத்து, சண்முகத்துக்கு எதிராகக் காய்நகர்த்த ஆரம்பித்துள்ளார்களாம்.”

“சசிகலாவின் விடுதலை விவகாரம் எந்த அளவில் உள்ளது?”

“கர்நாடக மாநில அரசுத் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. கடந்த வாரம் கர்நாடக சிறைத்துறை சார்பில் சசிகலா சிறையிலிருந்த நாள்கள் மற்றும் அவருக்குத் தரப்பட வேண்டிய சலுகைகள் குறித்து ஒரு ஃபைல் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கணக்கில் சில குழப்பங்கள் எழுந்ததால், ஆலோசனை கேட்டு அதை மாநில அரசுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ‘முழுச் சலுகைகளையும் சசிகலாவுக்கு அளித்தால், அவர் ஆகஸ்ட் மாதம் இறுதியிலேயே விடுதலையாகலாம்’ என்று அந்த ஃபைலில் நோட் போட்டுள்ளார்களாம்.”

கமல் ஹாசன்
கமல் ஹாசன்


“மக்கள் நீதி மய்யத்தில் ஏதோ புகைச்சலாமே?” கேள்வியுடன் கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம்.

அதைப் பருகிக்கொண்டே, “ஈரோடு சாமியார் ஒருவர் மூலமாக மக்கள் நீதி மய்யத்தின் பிரமுகர் ஒருவர் அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல அமைச்சர்களுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது, ‘கமலுக்குத் துணை முதல்வர் பதவி வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம். விஷயத்தைக் கேள்விப்பட்ட கமல் அதிர்ச்சியடைந்துவிட்டார் என்கிறார்கள். நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியவர், ‘தேர்தலில் ஒருபோதும் பொருந்தாக் கூட்டணியை அமைக்க மாட்டேன். நிர்வாகிகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டால் கட்சியைக் கலைத்துவிடுவேன்’ என்று கடுமையாக டோஸ் விட்டிருக்கிறார்.”

“ம்ம்...”

சண்முகம்
சண்முகம்


“தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடிய அதிகாரம் கொண்டவர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள். கடந்த மே 14-ம் தேதி எட்டு கண்காணிப்புப் பொறியாளர்களுக்குப் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் யாரும் புது இடங்களுக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை இறுதிசெய்யக்கூடியவர்கள் இந்த எட்டுப் பேர்தான். ‘ஒப்பந்தங்கள் அனைத்தையும் இறுதிசெய்துவிட்டுத்தான், புதிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்’ என்று அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்கிறதாம்” என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

  • சிவகங்கை மாவட்ட அமைச்சரான ஜி.பாஸ்கரனின் மகன் கருணாகரன், தன் அப்பாவின் தொகுதியான சிவகங்கைத் தொகுதிக்கு குறிவைத்து காய்நகர்த்துகிறாராம். “அப்பாவுக்கு இனி சீட் வேண்டாம். அவர் ஓய்வு எடுக்கட்டும்” என மேலிடத்தில் அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தகவல்!

    டெல்டாவைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு விதவிதமாகச் சாப்பாடு கொடுத்து கவனித்துள்ளனர். இதில் கண்கலங்கியவர், ‘வீட்டுல இருந்தாக்கூட வாய்க்கு ருசியா இப்படிச் சாப்பாடு கிடைக்காது’ என்று நெக்குருகிப்போனாராம். ஒருகட்டத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவெடுத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அப்போது, “இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போறேனே...” என்று சொன்னவர், 10 நாள்கள் தங்கியிருந்து அதன் பிறகே டிஸ்சார்ஜ் ஆனாராம்!

    வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ரஜினியை, கடந்த பிப்ரவரி மாதமே மறு பரிசோதனைக்கு அழைத்துள்ளது சம்பந்தப்பட்ட மருத்துவமனை. ஆனால், கொரோனா பரவ ஆரம்பித்ததால் பயணத்தை ஒத்திப்போட்டார் ரஜினி. ஆறு மாதங்கள் கடந்தநிலையில், மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடக்கிறது.

    சசிகலா ஆதரவு அமைச்சர்களைக் கண்காணித்து, அவர்களின் பினாமி சொத்துகளைப் பட்டியல் எடுக்கச் சொல்லி மாநில உளவுத்துறைக்கு உத்தரவு பறந்துள்ளது. கடலோர மாவட்டம் ஒன்றில் ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ சீட் மறுக்கப்பட்ட ஒருவருக்கு விசுவாசத்தின் அடிப்படையில் சீட் அளித்து, அமைச்சர் பொறுப்பும் அளித்தார் சசிகலா. அந்த அமைச்சரின் பினாமி சொத்துக் கணக்கை உளவுத்துறை சமர்ப்பித்தபோது தலைமையே மலைத்துவிட்டதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism