Published:Updated:

மிஸ்டர் கழுகு: குதிரைப் பேரம் ஸ்டார்ட்ஸ்... ஆள்பிடிக்கும் ஓ.பி.எஸ்... அடக்கி வாசிக்கும் இ.பி.எஸ்!

ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!

பொதுக்குழு, பொதுக்கூட்டம், சுற்றுப் பயணம் என தடாலடியாக இறங்கியதன் பின்விளைவைத்தான் இப்போது நீங்கள் அனுபவித்துவருகிறீர்கள்’ என்று எடப்பாடிக்கு ஆலோசனை வழங்கும் முன்னாள் நீதிபதி கடுகடுத்தாராம்

மிஸ்டர் கழுகு: குதிரைப் பேரம் ஸ்டார்ட்ஸ்... ஆள்பிடிக்கும் ஓ.பி.எஸ்... அடக்கி வாசிக்கும் இ.பி.எஸ்!

பொதுக்குழு, பொதுக்கூட்டம், சுற்றுப் பயணம் என தடாலடியாக இறங்கியதன் பின்விளைவைத்தான் இப்போது நீங்கள் அனுபவித்துவருகிறீர்கள்’ என்று எடப்பாடிக்கு ஆலோசனை வழங்கும் முன்னாள் நீதிபதி கடுகடுத்தாராம்

Published:Updated:
ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ஓ.பி.எஸ்... இ.பி.எஸ்!

“மறைந்திருந்தபடி மக்களைக் குருவியைச் சுடுவதுபோல் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள் போலீஸார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகியிருக்கிறது” என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை அறிக்கைதானே... எப்படிக் கசிந்ததாம் அந்த அறிக்கை?” என்று கேட்டோம்.

“கசியவில்லை, கசியவிடப்பட்டது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். அறிக்கையில் இடம்பெற்றவை பெரும்பாலும் வெளிவந்துவிட்டன... வெளிவராத சிலவற்றை மட்டும் சொல்கிறேன். ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டப்போகிறது, அன்றைய தினம் பெரிய அளவிலான போராட்டத்துக்கு மக்கள் தயாராகிறார்கள்’ என்று மாவட்ட நிர்வாகத்தை ‘வார்ன்’ செய்திருக்கிறது உளவுத்துறை. ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்கள் கவனம் செலுத்தியிருந்தால் விஷயம் இவ்வளவு பெரிதாகியிருக்காது என்றும் அறிக்கையில் கடும் விமர்சனம் வைக்கப் பட்டிருக்கிறதாம். இது ஒருபுறமிருக்க... இன்னோர் அறிக்கையும் விரைவில் கசியும் என்கிறார்கள்.”

“அது என்ன அறிக்கை?”

“ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் கமிஷன் கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டது அல்லவா... ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெறும் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட 11 மாநகர்களுக்கும் நேரில் சென்று விசாரித்து, அதன் அறிக்கையை ஆகஸ்ட் 20-ம் தேதி முதல்வரிடம் சமர்ப்பித்தார் டேவிதார். அந்த அறிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி முறையாகச் செலவு செய்யப்படவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டிக்கு லாயக்கற்ற இடங்களைத் தேர்வுசெய்து அங்கு தேவையின்றி செலவுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், ஒதுக்கப்பட்ட நிதிக்கும், நடந்த பணிகளுக்கும் இடையே பல நூறு கோடி இடைவெளி இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி மீதும் வெளிப்படையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருப்பதால், தி.மு.க அரசு இதையும் கசியவிட நேரம் பார்த்துக் காத்திருக்கிறதாம்.”

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

“அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை வேகமெடுக்கிறதுபோல?”

“ஆமாம், சட்டவிரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டில், அவர்மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு இருந்த தடையை, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விலக்கியது. இதைத் தொடர்ந்தே, அந்த வழக்கு வேகமெடுத் திருக்கிறது. ‘விரைவிலேயே அனிதா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அப்படி நடந்தால், தார்மிக அடிப்படையில் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டியிருக்கும். ‘அனிதாவின் அமைச்சர் பொறுப்பு பறிபோனால், எங்களுக்குப் பதவி கொடுங்கள்’ எனத் தென்மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இப்போதே துண்டு போட்டிருக் கிறார்களாம்” என்ற கழுகாருக்கு சமோசாவும், பாதாம் பாலும் கொடுத்தோம். சுவைத்துவிட்டு, அ.தி.மு.க செய்திக்குத் தாவினார்.

“பா.ஜ.க மாநில நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டுகிறாராம் வைத்திலிங்கம். அதற்கு ஏற்றாற்போல தமிழ்நாடு பா.ஜ.க-வின் ஒரு பிரிவினர், இ.பி.எஸ் குறித்த தவறான தகவல்களாகச் சொல்லி டெல்லி தலைமைக்கு தூபம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நிலைமை கைமீறிப்போவதால், எடப்பாடி தரப்பிலும் ‘மேலே’ பேசியிருக்கிறார்களாம். ஆனால், ‘யாருக்கு சப்போர்ட் செய்வது என்று இப்போதே முடிவெடுக்க வேண்டாம். தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ என்பதே பா.ஜ.க-வின் மனநிலையாக இருக்கிறது.”

மிஸ்டர் கழுகு: குதிரைப் பேரம் ஸ்டார்ட்ஸ்... ஆள்பிடிக்கும் ஓ.பி.எஸ்... அடக்கி வாசிக்கும் இ.பி.எஸ்!

“ஓஹோ...”

“இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிசாமி பக்கமிருக்கும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்களை ஓ.பி.எஸ் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். இதுவரை 13 மாவட்டச் செயலாளர்களிடம் பேசியிருக்கிறாராம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், ‘எடப்பாடியோட இருக்கணும்கறது எங்க விருப்பமில்லைண்ணே. சில நிதி நெருக்கடி இருக்குது. அதையெல்லாம் சரிசெஞ்சுட்டா, தெம்பா உங்க பக்கம் வந்துடுவோம்’ என்று ‘டீல்’ பேசியிருக்கிறார். பன்னீர் தரப்புக்கு நிதியுதவி செய்ய சசிகலா தரப்பு தயாராவதால், சீக்கிரமே குதிரைப் பேரம் நடத்தி ஆள்பிடிக்கும் காட்சிகள் ஆரம்பமாகும் என்கிறது ராயப்பேட்டை வட்டாரம்.”

“எடப்பாடி தரப்பினர் அநியாயத்துக்கு அமைதியாக இருக்கிறார்களே...”

“ `பொதுக்குழு, பொதுக்கூட்டம், சுற்றுப் பயணம் என தடாலடியாக இறங்கியதன் பின்விளைவைத்தான் இப்போது நீங்கள் அனுபவித்துவருகிறீர்கள்’ என்று எடப்பாடிக்கு ஆலோசனை வழங்கும் முன்னாள் நீதிபதி கடுகடுத்தாராம். எனவே, ‘பொதுக்குழு தொடர்பான வழக்கு முடியும் வரை யாரும் வாயைத் திறக்கக் கூடாது’ என்று கறார் உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம் எடப்பாடி. அதுதான் அந்த முகாமின் அமைதிக்குக் காரணம். அதேபோல, நிர்வாகிகள் ஓ.பி.எஸ் பக்கம் தாவி விடாமல் தடுக்கும் பணியை ஆர்.பி.உதயகுமாரிடமும், வழக்கு தொடர்பான வேலைகளை வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பிடமும் ஒப்படைத்திருக்கிறார் எடப்பாடி” என்ற கழுகார்...

மிஸ்டர் கழுகு: குதிரைப் பேரம் ஸ்டார்ட்ஸ்... ஆள்பிடிக்கும் ஓ.பி.எஸ்... அடக்கி வாசிக்கும் இ.பி.எஸ்!

“ ‘விக்ரம்’ படம் மெகா ஹிட் அடித்ததன் குஷியில், கட்சிக் கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என்று வேகம் காட்டிய கமல்ஹாசன், இப்போது புதிய மேக்கப் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவுக்குப் போய்விட்டார். சென்னைக்குத் திரும்பிய பிறகு, இம்மாத இறுதியிலாவது சுற்றுப்பயணத்தைத் தொடங்கலாம் என்று திட்டமிட்ட நிர்வாகிகளுக்கு, இன்னும் ‘கிரீன்’ சிக்னல் கிடைக்கவில்லை. ஊர் திரும்பியதும் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால், மீண்டும் சைலன்ட் மோடுக்கு சென்றிருக்கிறது கமல் கட்சி...” என்றபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* தனியாக வாழும் ‘அருவி’ மாவட்ட ஐ.பி.எஸ் அதிகாரி, தன் பர்சனல் வேலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு போலீஸ்காரரை ஆர்டர்லியாக வைத்திருக்கிறாராம். கோபக்காரரான இவர், ஒரு நாள் இரவு, பால் இல்லையென்று ஆர்டர்லிக் காவலரை ஓங்கி அறைந்துவிட்டாராம்.

* பன்னீர் தரப்பு சந்திப்புகளெல்லாம் இப்போதைக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரின் மருமகன் அலுவலகத்தில் வைத்துத்தான் நடக்கின்றன. இந்தச் சந்திப்புகளை ஓ.பி.எஸ்-ஸின் மருமகன் காசி, மகன் ரவீந்திரநாத் ஆகியோரே ஒருங்கிணைக்கிறார்களாம்.

* சென்னை தி.நகர் தொழிலதிபர் சரவணன் கடத்தல் வழக்கில் கோவையைச் சேர்ந்த சிறைக் காவலர் நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சிறைத்துறை அதிகாரியின் வாரிசு ஒருவரும் கோவையிலிருந்து வந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், மூன்று லட்டுகள் கொடுத்து தன் மகன் சிறைக்குச் செல்லாமல் தற்காத்துக்கொண்டாராம் அந்தச் சிறை அதிகாரி.