Published:Updated:

மிஸ்டர் கழுகு: முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்... கண்கலங்கிய துரைமுருகன்!

துரைமுருகன், ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன், ஸ்டாலின்

மானியக் கோரிக்கை மீது முதல்வர் உரையாற்றிய போதுதான், தன்மீது பாராட்டு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற விவரமே துரைமுருகனுக்குத் தெரிந்திருக்கிறது

மிஸ்டர் கழுகு: முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்... கண்கலங்கிய துரைமுருகன்!

மானியக் கோரிக்கை மீது முதல்வர் உரையாற்றிய போதுதான், தன்மீது பாராட்டு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற விவரமே துரைமுருகனுக்குத் தெரிந்திருக்கிறது

Published:Updated:
துரைமுருகன், ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன், ஸ்டாலின்

லேப்டாப்பில் முழ்கியிருந்த கழுகாருக்குப் பின்னால் சென்று சத்தமில்லாமல் அமர்ந்தோம்... நொடிகளில் அலட்டிக்கொள்ளாமல், “முன்னால் வந்து அமருங்கள்” என்றவரிடம், “இப்படித்தான் இரண்டு தலைவர்கள் சத்தமில்லாமல் சந்தித்துக்கொண்டார்களாமே?’’ என்ற கேள்வியை வீசிவிட்டு, சூடான பாதாம் பாலை வரவழைத்துக் கொடுத்தோம். பாலைப் பருகியபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்... கண்கலங்கிய துரைமுருகன்!

‘‘ஆமாம். உதயநிதி ஸ்டாலினை, டி.டி.வி.தினகரன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாகச் சொல்கிறார்கள். தினகரனின் மகள் ஜெயஹரணிக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் வரும் செப்டம்பர் 16-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அந்தத் திருமண அழைப்புக்கான சந்திப்பாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். ஆனால், ‘பகைவனானாலும் வீடு தேடிச் சென்று பத்திரிகை கொடுப்பதுதான் முறை. சந்திப்பு நடந்ததாகச் சொல்லப்படுவதோ ஹோட்டலில். எனவே கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நடந்த சில உள் விஷயங்களையும், அதில் எடப்பாடி தரப்பினரின் ரோல் என்ன என்பதையும் அந்தச் சந்திப்பில் தினகரன் சொல்லியிருக்கலாம் என்கிறார்கள்!”

‘‘தமிழக பா.ஜ.க-வில் மாற்றங்கள் நடக்கப்போகின்றனவாமே!’’

“அப்படித்தான் சொல்கிறார்கள். புதிய தலைவராகப் பொறுப்பேற்றவர், சீனியர்களாக இருந்தும் கட்சிப் பணியாற்றாதவர்களுக்கு கல்தா கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கெனவே பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் ஓரங்கட்டப்பட்ட நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை ஓரங்கட்டும் வேலை நடக்கிறது என்கிறார்கள். அதேசமயம் ஹெச்.ராஜாவுக்கும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் மத்திய அரசின் பதவிகளில் ஒன்றைக் கொடுத்து, அரசியலுக்கு விடைகொடுக்கும் திட்டமும் இருக்கிறதாம். விரைவில் அறிவிப்பும் வரலாம்.’’

‘‘துரைமுருகனுக்கு சட்டமன்றத்தில் நடந்த பாராட்டை கவனித்தீரா?’’

மிஸ்டர் கழுகு: முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்... கண்கலங்கிய துரைமுருகன்!

‘‘ம்ம்ம்... கவனித்தேன், கவனித்தேன். துரைமுருகனின் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை முதல் மசோதாவாக ஆகஸ்ட் 23 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிகழ்வுக்கு முன்பாக முதல்வரைச் சந்தித்திருக்கிறார் துரைமுருகன். அப்போது, ‘உங்களுக்கு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது’ என்று முதல்வர் சொல்ல, துரைமுருகனும் ஒன்றும் புரியாமல் அவைக்குள் சென்று அமர்ந்திருக்கிறார். மானியக் கோரிக்கை மீது முதல்வர் உரையாற்றிய போதுதான், தன்மீது பாராட்டு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற விவரமே துரைமுருகனுக்குத் தெரிந்திருக்கிறது. முதன்முறையாக 1971-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டு, இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. துரைமுருகனின் பொன்விழா குறித்துப் பிற கட்சித் தலைவர்களும் பாராட்டிப் பேசியது, அவரை நெகிழச் செய்துவிட்டது. இறுதியாக அவர் நன்றி தெரிவித்துப் பேசும்போது, கண்ணீர்மல்க உருக்கமான உரையை நிகழ்த்தி பேரவையை நிசப்தமாக்கிவிட்டார்.’’

‘‘ஆனால், மற்றொரு தி.மு.க உறுப்பினரின் பேச்சு முணுமுணுப்பை ஏற்படுத்திவிட்டதாமே?’’

‘‘உதயநிதியின் முதல் பேச்சு பற்றித்தானே சொல்கிறீர்? அரை மணி நேரத்தைத் தாண்டியும் நீண்ட அவரது உரையில் முத்தாய்ப்பாக எந்தக் கருத்துமே இல்லை என்று உடன்பிறப்புகளே ‘உச்’ கொட்டுகிறார்கள். நன்றி சொல்லும் படலமே பல நிமிடங்கள் நீண்டிருக்கிறது. தவிர, உரையில் ஒரு வேகம் இல்லாமல், எழுதிக்கொண்டு வந்த பேப்பரை வாசித்து முடித்திருக்கிறார். சட்டமன்றத்தில் ஜொலிக்க அவருக்கு நிறைய பயிற்சிகள் வேண்டும் என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.’’

‘‘விழுப்புரத்தில் தி.மு.க கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பூதாகரமாகிறதே...’’

‘‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் பேனர் விழுந்து சுப எனும் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதே போன்றதொரு சம்பவம்தான் விழுப்புரத்தில் நடந்திருக்கிறது. விழுப்புரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக தி.மு.க கட்சிக்கொடி நடும் பணியில், 13 வயது சிறுவன் ஒருவனை ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிறுவன் கொடிக்கம்பத்தை நடுவதற்கு கம்பத்தை மேலே உயர்த்தியபோது, மின்சாரக் கம்பியில் உரசி மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கிறான். காவல்துறையினர் இதை சந்தேக மரணம் என்றே வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பிரச்னை மேலும் பூதாகரமாகாமல் இருக்க, குடும்பத்துக்குத் தேவையானதைச் செய்வதாகக் கூறி, சிறுவனின் பெற்றோரை வாயடைக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறதாம். இதற்கிடையே, ‘பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதை எனது கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்’ என்று கட்சியினருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.’’

மிஸ்டர் கழுகு: முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்... கண்கலங்கிய துரைமுருகன்!

‘‘கட்சியினர் அதை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறார்களா என்று பார்ப்போம்!’’

‘‘இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது புதுச்சேரி பா.ஜ.க. தேர்தலுக்கு முன்பு கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ-வாகி அமைச்சர்களானவர்கள் ஓரணியாகவும், மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றோர் அணியாகவும் செயல்பட்டுவருகிறார்கள். ராஜ்யசபா சீட் யாருக்கு என்பதில் பா.ஜ.க-வுக்கும் என்.ஆர் காங்கிரஸுக்கும் கடும் போட்டி நிலவிவரும் நிலையில், எப்படியாவது ராஜ்யசபா எம்.பி-யாகிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் சாமிநாதன். இந்தநிலையில்தான், புதுச்சேரி காவல்துறையில் காவலர் பணியிடங்களை நிரப்ப தலா 5 லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டை நடந்ததாம். இதுதான் தக்க தருணம் என்று நினைத்த சாமிநாதன், ‘வேலைவாய்ப்புகள் பெற்றுத்தருவதாகச் சொல்பவர்களிடம் ஏமாந்தால், அதற்கு பா.ஜ.க பொறுப்பாகாது. கட்சி நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு லஞ்சம் கேட்பவர்கள் குறித்துப் புகார் அளியுங்கள்’ என்று அறிக்கை வெளியிட்டு, எதிரணிக்கு செக் வைத்திருக்கிறார்.’’

‘‘ராஜ்யசபா வேட்பாளராக எம்.எம்.அப்துல்லாவை முன்னிறுத்தியிருக்கிறதே தி.மு.க?”

‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அந்தப் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார் எம்.எம். அப்துல்லா. சி.ஏ.ஏ போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, இவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம் என்று உதயநிதி கேட்டிருக்கிறார். அப்போது தட்டிப்போன வாய்ப்பு இப்போது கைகூடியிருக்கிறது என்கிறார்கள்.’’

‘‘திருப்பதி கோயிலின் சென்னைப் பதவியை முன்வைத்து தமிழகத்தில் ஒரு லாபி ஓடுகிறதுபோல?’’

‘‘ஆமாம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில் ஆலோசனைக்குழுத் தலைவர் பதவிகளுக்கு எப்போதும் கடும் போட்டி நிலவும். தற்போது சென்னை ஆலோசனைக்குழுத் தலைவர் பதவியைப் பெறுவதில் மணல் மனிதருக்கும், பா.ஜ.க பிரமுகர் ஒருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில், ‘சென்னையில் அந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதியிலேயே பா.ஜ.க பிரமுகர் ‘பப்’பை நடத்திக்கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார்’ என்று ஒரு ரிப்போர்ட் தேவஸ்தான போர்டுக்கு சென்றுள்ளதாம். ‘ரிப்போர்ட்டை அனுப்பியதே மணல் பிரமுகர் டீம்தான்’ என்று கொதிப்பில் இருக்கிறது பா.ஜ.க பிரமுகர் தரப்பு’’ என்ற கழுகார் இந்த இதழுக்காகத் தயாராகிக்கொண்டிருந்த கவர் ஸ்டோரியில் பார்வையை ஓட்டினார்.

அவரிடம், ‘‘கொடநாடு அப்டேட் எதுவும் இருக்கிறதா?’’ என்ற கேள்வியை வீசினோம்... ‘‘ஆமாம், மர வியாபாரியும், அ.தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளருமான சஜ்ஜீவன், அவரின் சகோதரர் சுனில் தொடர்புடைய தகவல்களை சயான் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கலாம் என்று வெளியாகும் தகவல்களால் கூடலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயசீலனும் கலக்கத்தில் இருக்கிறாராம். ஜெயசீலனுக்கு சீட் வாங்கிக் கொடுத்தது முதல் தேர்தல் செலவுகளை ஏற்று அவரை எம்.எல்.ஏ ஆக்கியது வரை எல்லாமே சஜ்ஜீவன்தான். போதாக்குறைக்கு அவரே ஆபீஸ் போட்டுக்கொடுத்து, ரிப்பன் வெட்டி அதை திறந்தும் வைத்திருக்கிறார். இப்போது கொடநாடு வழக்கில் சஜ்ஜீவன் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்திருப்பதால், வெலவெலத்துப் போயிருக்கிறார் ஜெயசீலன்’’ என்ற கழுகார்,

‘‘பச்சையப்பா அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குப் பணம் வசூலிப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணை மேலும் விரிவடைவதால் வசூலில் ஈடுபட்ட இன்னும் சிலர் ஆடிப்போயிருக்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

******

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* கொடநாடு விவகாரம் தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நீண்ட பேட்டி கொடுத்திருக்கிறாராம் சசிகலா. அது ஒளிபரப்பாகும் போது பல உண்மைகள் உடையும் என்கிறார்கள்.

* நிலக்கரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் சொன்ன கணக்கெல்லாம் கம்மிதானாம். ‘300 சி’யைத் தாண்டுகிறதாம் முறைகேடு. ‘முன்னாள் மாண்புமிகுவின் தகிடுதத்தமே இது’ என்று ஆதாரங்களை அடுக்கியிருக்கிறார்கள் அதிகாரிகள்.