Published:Updated:

மிஸ்டர் கழுகு: சாட்டை எடுக்கும் திரிபாதி!

திரிபாதி
பிரீமியம் ஸ்டோரி
திரிபாதி

கலக்கத்தில் தென் மாவட்ட காக்கிகள்...

மிஸ்டர் கழுகு: சாட்டை எடுக்கும் திரிபாதி!

கலக்கத்தில் தென் மாவட்ட காக்கிகள்...

Published:Updated:
திரிபாதி
பிரீமியம் ஸ்டோரி
திரிபாதி

“ஒதுங்கச் சொல்லிவிட்டார்களாமே?”- சிறகுகளைச் சிலுப்பியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். “அன்பில் மகேஷைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?” - பதில் கேள்வியுடன் பக்கோடாவைப் பரிமாறினோம். “ஆம், உமது செய்தியின் எதிரொலியாக, ‘உங்க மாவட்ட அரசியலை மட்டும் பாருங்க...’ என மகேஷிடம் கடுகடுத்துவிட்டதாம் கட்சித் தலைமை” என்ற கழுகார் செய்திகளுக்குத் தாவினார்.

‘‘சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்களாக வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் இருவருமே வன்னியர் சமூகத்தினர் இல்லை. ஏற்கெனவே பொன்முடி, மஸ்தான் என வன்னியர் அல்லாதவர்களே வட மாவட்டங்களில் கோலோச்சுகிறார்கள். இதனால், இந்தப் புதிய நியமனம் வன்னியர்கள் இடையே மேலும் புகைச்சலை உருவாக்கியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று ஸ்டாலின் பேசினார். அப்போது பா.ம.க நிறுவனரான ராமதாஸ், ‘முதலில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க-வில் வன்னியர்களுக்கு ஒதுக்கீடு கொடுத்துவிட்டு, உள் ஒதுக்கீடு பற்றிப் பேசவும்’ என்று பதிலடி கொடுத்தார். இந்தநிலையில் மீண்டும், ‘ `வன்னியர்களை தி.மு.க புறக்கணிக்கிறது’ என்று ராமதாஸ் பிரசாரம் செய்தால், தி.மு.க அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?’ என்று புலம்புகிறார்கள் வடமாவட்ட உடன்பிறப்புகள்.”

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

“ஓஹோ!”

“தி.மு.க இளைஞரணிச் செயலாளரான உதயநிதி, ‘இளைஞரணி மற்றும் ஐ.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் சரியாகப் பணியாற்றுவதில்லை’ என்கிற கவலையில் இருக்கிறாராம். இதற்காக, தொகுதிக்கு ஒரு மேற்பார்வையாளரை நியமித்து, அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடர்பாக வீடியோ கால் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதைக் கேட்டதும், ‘என்னிடம் ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை, கட்சிப் பதவியில் இருப்பவர்களைக் கண்காணிக்க வெளியாட்களை நியமிப்பீர்களா?’ என்று ஸ்டாலின் கொந்தளித்துவிட்டாராம். இதனால், உதயநிதி கடும் அப்செட் என்கிறார்கள்!”

“ம்ம்... பா.ஜ.க-வில் ஏதோ மூவ் நடப்பதாகக் கூறுகிறார்களே..?”

“மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை பா.ஜ.க-வுக்கு இழுக்க, பேச்சுவார்த்தை நடக்கிறது. `முத்தரையர் வாக்கு களைக் குறிவைத்து இந்த ஸ்கெட்ச்’ என்கிறார்கள். இதேபோல, மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானுக்கும் தூண்டில் போடுகிறார்கள். தகவல் தெரிந்து கு.ப.கிருஷ்ணனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமாதானம் பேசியதாகத் தகவல்.”

“அ.தி.மு.க அவைத்தலைவர் பதவிக்கு ரேஸ் நடக்கிறதாமே?”

“ஆமாம். வயது முதிர்வு காரணமாக அவைத்தலைவர் மதுசூதனனால் முன்புபோல சுறுசுறுப்பாகச் செயல்பட முடியவில்லை. அதனால், அவரைப் பதவியிலிருந்து விடுவித்து விட்டு, சீனியர்கள் யாரையாவது நியமிக்கலாம் என்று கட்சித் தலைமை கருதுகிறது. பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்களாம்.”

கழுகாருக்கு இஞ்சி டீயைப் பரிமாறிக்கொண்டே, “தூத்துக்குடி அ.தி.மு.க-வில் புகைச்சல் என்கிறார்களே..?” என்றோம்.

டீயை ரசித்து உறிஞ்சியவர், “அமைப்புரீதியாக தூத்துக்குடி மாநகர் மாவட்டப் பொறுப்பை உருவாக்கி, அதில் அமர்வதற்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் காய் நகர்த்திவந்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரான கடம்பூர் ராஜூவும், தெற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.பி.சண்முக நாதனும் இதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டனர். எடப்பாடி ஆதரவாளரான செல்லப் பாண்டியன் இதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லையாம். இதற்கிடையே தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு அறிவிக்கப் பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில் செல்லப்பாண்டியனின் ஆதரவாளர்கள் மொத்தமாகவே ஓரங்கட்டப்பட்டுள்ளனர். கொதித்துப்போன செல்லப்பாண்டியன் மீடியாக்களிடம் செல்ல முடிவெடுத்த நிலையில், எடப்பாடி தரப்பு தலையிட்டு அமைதிப்படுத்தி யிருக்கிறது. ஆனாலும் கோபம் குறையாதவர், விரைவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.”

“சரிதான்...”

“முழு ஊரடங்கான ஆகஸ்ட் 23-ம் தேதி ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் நீராடிவிட்டு, சங்கமேஸ்வரர் கோயிலில் வழிபட்டார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ‘ஊரடங்கில் அமைச்சருக்கு மட்டும் எப்படி அனுமதி தரலாம்?’ என்று இந்த விவகாரம் கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதனால், குலதெய்வக் கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தீர்த்தம் எடுக்க வந்ததாகச் சமாளித்திருக்கிறார் பாலாஜி. ஆனால், விவகாரமே வேறு என்கிறார்கள். ஆவின் பால் நிறுவனத்தில் ஊழல், மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு விவகாரங்களால் அப்செட்டில் இருக்கும் பாலாஜி, ஜோசியர் ஒருவரைச் சந்தித்தாராம். ஏடு பார்த்த ஜோதிடர், ‘ராகு - கேது பெயர்ச்சியால் நேரம் சரியில்லை. பித்ரு சாபம் இருக்கிறது. பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் கோயில் கோயிலாக வலம் வருகிறாராம்.”

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி


“அ.தி.மு.க-வில் வேறு தகவல்கள் ஏதேனும்...’’

“அமைச்சர் வேலுமணிமீதான டெண்டர் முறைகேடு வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த முறைகேட்டில் சிக்கிய நிறுவனங்களில் சில ‘கப்சிப்’ என்று காணாமல்போய்விட்டனவாம். கோவை உடையாம்பாளையத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு பெயர்ப் பலகைகளை மாற்றி மாற்றி வைப்பார்களாம். ஒரே முகவரியில் இருந்தாலும் வெவ்வேறு நிறுவனங்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என்கிறார்கள். இந்தச் சர்ச்சை எழுந்ததால், அந்த அலுவலகத்தையே அவிநாசி சாலைக்கு மாற்றிவிட்டனர். அதேபோல வழக்கில் தொடர்புடைய வேறு இரண்டு நிறுவனங் களின் செயல்பாடுகளும் முடங்கிக்கிடக்கின்றன. இது தொடர்பான விவகாரங்களை, சமூக ஆர்வலர்கள் சிலர் தோண்ட ஆரம்பித்துள்ளனர்” என்றபடி சிறகுகளைச் சிலுப்பிய கழுகார்...

திரிபாதி
திரிபாதி


“தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்கிற காவலர் குண்டுவீசிக் கொல்லப்பட்டார் அல்லவா... இந்தச் சம்பவத்தில் காவலர் சுடலைமுத்து என்பவர் சாதியப் பாசத்தால் ரெளடி துரைமுத்துவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சுடலைமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது போன்ற சாதிய மனநிலை காவல்துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கருதுகிறார் டி.ஜி.பி-யான திரிபாதி. இதனால், தென் மாவட்டங் களில் நீண்டகாலமாகப் பணியாற்றுவோர் பட்டியலை எடுக்கும்படி அவர் உத்தர விட்டுள்ளாராம். விரைவிலேயே தென் மாவட்டக் காவல்துறையில் அதிரடி மாற்றம் இருக்கலாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

ராகுல் கலகம்!

ஆகஸ்ட் 24-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், அந்தக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. முன்னதாக, `கட்சிக்கு முழுநேரம் பணியாற்றக்கூடிய துடிப்பான தலைமை தேவை’ என கபில் சிபல், குலாம் நபி ஆசாத், சசி தரூர் உட்பட 23 பேர் சோனியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கூட்டத்தில் இதைச் சுட்டிக்காட்டி, `இதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது’ என்று ராகுல் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதான் அந்தக் கட்சியில் பிரளயமாக வெடித்துள்ளது.

கடும் அதிருப்தியடைந்த கபில் சிபல், ‘காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வாதாடினேன். பா.ஜ.க அரசைக் கீழே இறக்கி, காங்கிரஸ் கட்சியைப் பாதுகாத்தேன். கடந்த 30 ஆண்டுகளில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக எந்த அறிக்கையையும் வெளியிட்டதில்லை’ என்று ட்வீட் செய்திருந்தார். சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அழித்துவிட்டார் கபில் சிபல்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதுமிருக்கும் கட்சியின் சீனியர்கள் பலரும் மனக்கொதிப்பில் இருக்கிறார்கள். இந்தக் களேபரங்களுக்கு இடையில், ‘சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராகத் தொடர்வார்’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.` நாடு முழுவதுமிருக்கும் சீனியர் தலைவர்களை ஓரங்கட்டினால், தேர்தல் செலவுகளை யார் செய்வார்கள்?’ என்பதே தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

* 2021 சட்டமன்றத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் களமிறங்க பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். ‘அ.தி.மு.க கூட்டணி தொடர்ந்தால், வெற்றி உறுதி’ என்கிறது அவரது தரப்பு.

* சி.பி.சி.ஐ.டி-யில் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தினர் மட்டும் அடுத்தடுத்து முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறையின் உயர் பொறுப்புக்கு வந்த ஒருவர், தன் மதம் சார்ந்தவர்களை புரொமோட் செய்வதாகக் காவல்துறை தலைமைக்குப் புகார்கள் சென்றுள்ளன.

* ‘திருவள்ளூர் தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரான கும்மிடிப்பூண்டி வேணு வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவதில்லை’ என அறிவாலயத்துக்கு அம்பு விட்டிருக்கிறார்கள் அவரின் எதிர் கோஷ்டியினர். அதேபோல, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன்மீதும் புகார்கள் சென்றுள்ளன. ‘இருவரையும் மாற்றிவிடலாமா?’ என்று செனடாப் சாலையில் ஆலோசனை நடக்கிறது.

* வரும் சட்டமன்றத் தேர்தலில், மகளிருக்கு 30 சதவிகிதம் சீட் ஒதுக்கக் கோரும் முடிவில் இருக்கிறாராம் தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி.

* நீலகிரி அ.தி.மு.க-வில் முன்னாள் மாவட்டச் செயலாளர் புத்திச்சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ-வான சாந்தி ராமு ஆகியோரால் பதவிகளுக்குக் கொண்டுவரப் பட்டவர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையைப் புதிய மாவட்டச் செயலாளரான வினோத் ஆரம்பித்திருக்கிறாராம். பதவியில் இருப்பவர்கள் அலற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism