Published:Updated:

மிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்களுக்கு எக்ஸாம் வைத்த முதல்வர்! - வினாத்தாள் தயாரித்துக்கொடுத்த ‘அவர்’

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

செரிமானப் பிரச்னையால் ராஜாத்தி அம்மாளின் உடல்நிலை நலிவுற்றிருந்தது. சில சமயங்களில் மூச்சுத்திணறலால் பெரிதும் அவதியுற்றிருக்கிறார். சென்னையிலுள்ள சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் சரியாகவில்லை

மிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்களுக்கு எக்ஸாம் வைத்த முதல்வர்! - வினாத்தாள் தயாரித்துக்கொடுத்த ‘அவர்’

செரிமானப் பிரச்னையால் ராஜாத்தி அம்மாளின் உடல்நிலை நலிவுற்றிருந்தது. சில சமயங்களில் மூச்சுத்திணறலால் பெரிதும் அவதியுற்றிருக்கிறார். சென்னையிலுள்ள சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் சரியாகவில்லை

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

“தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்த ‘ரிப்போர்ட் கார்டு’ தயாராகிவருகிறது. கோவை மண்டல சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு, அந்த ரிப்போர்ட்டை வைத்து விசாரணையைத் தொடங்கவிருக்கிறார் முதல்வர்” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகார், நேரடியாகச் செய்திகளுக்குள் நுழைந்தார்.

“தன்னை கோவைப் பொறுப்பாளராக நியமித்தது முதல் முதல்வரை அடிக்கடி அழைத்து வந்து, பிரமாண்டக் கூட்டங்கள் நடத்தி, அவரது குட்புக்கில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துவருகிறார் செந்தில் பாலாஜி. காலையில் ஈச்சனாரியில் ஒரு லட்சம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் அரசு நிகழ்ச்சி, மாலையில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் மாற்றுக் கட்சிகளிலிருந்து 55,000 பேர் தி.மு.க-வில் இணையும் பிரமாண்ட கட்சி நிகழ்ச்சி என கோவையையே ஸ்தம்பிக்கவைத்துவிட்டார் செந்தில் பாலாஜி. ‘இந்த 55,000 பேரையும் செக் பண்ணியே கட்சியில் சேர்த்தோம்’ என்று சொல்கிறது செந்தில் பாலாஜி தரப்பு. ‘எப்படி... காலையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் துப்புரவுப் பணியாளர்களையெல்லாம் பயனாளிகள்போல உட்காரவைத்து கூட்டம் காண்பித்தீர்களே... அப்படியா?’ என்று கேலி செய்கிறார்கள் உள்ளூர் தி.மு.க-வினர்.”

மிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்களுக்கு எக்ஸாம் வைத்த முதல்வர்! - வினாத்தாள் தயாரித்துக்கொடுத்த ‘அவர்’

“55,000 பேரா... விட்டால் ஒட்டுமொத்த கோவையுமே தி.மு.க-வில் சேர்ந்துவிட்டதாகச் சொல்வார்கள்போல. முதல்வர் பயணத்தில் வேறு என்ன விஷேசம்?”

“கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தொடரும் சர்ச்சைகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்திருக்கிறார். கோவை மாவட்டத்தை நிர்வாகரீதியில் மூன்றாகக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது தலைமை. அதேபோல, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் மா.செ-க்கள் மாற்றம் இருக்கிறது என்கிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு முன்பு உள்ளூர் நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் இந்தப் பயணத்தை முதல்வர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.”

“தொடக்கத்தில் சொன்ன ‘ரிப்போர்ட் கார்டு’ இதற்குத்தானா?”

“அது வேறு கதை... தேர்தல் அறிக்கையிலேயே, ‘மாதம்தோறும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டு வெளியிடப்படும்’ என்று சொல்லியிருந்தது தி.மு.க. ஆனால், ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அதைச் செயல்படுத்தவே இல்லை. இந்தச் சூழலில்தான், எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்த ‘ரிப்போர்ட் கார்டு’ தயாராகியிருக்கிறது. அதையொட்டித்தான், ‘உங்கள் தொகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கும் முக்கியமான 10 பிரச்னைகளை மையப்படுத்தி அனுப்பிவையுங்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். ‘பெனின்சுலா ரிசர்ச் ஆபரேஷன்’ என்ற நிறுவனம் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை ஒன்றை முதல்வரிடம் கொடுத்திருக்கிறது. அதில் எம்.எல்.ஏ-க்களின் மெத்தனச் செயல்பாடு மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தனவாம். இதை இப்படியே விட்டால் மக்கள் மத்தியில் பெயர் கெட்டுவிடும் என்பதால்தான், எம்.எல்.ஏ-க்களிடம் அவர்களது தொகுதிப் பிரச்னைகள் குறித்து அனுப்பச் சொன்னாராம். முதலில் இதை தி.மு.க எம்.எல்.ஏ-க்களோடு நிறுத்திக்கொள்ளலாம் என்றுதான் நினைத்திருக்கிறார் ஸ்டாலின். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சொல்லிவருவதால், அதை திசைதிருப்பவும், அ.தி.மு.க-வுக்கு அரசியல்ரீதியான செக் வைக்கவும் இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ‘அவர்’ சொன்னதும்தான் 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் கடிதம் அனுப்ப ஒப்புக்கொண்டாராம் முதல்வர். இந்த ரிப்போர்ட்டுக்கான வினாத்தாள் தயாரித்துக் கொடுத்ததும் ‘அவர்’ தானாம்.”

மிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்களுக்கு எக்ஸாம் வைத்த முதல்வர்! - வினாத்தாள் தயாரித்துக்கொடுத்த ‘அவர்’

“ஓஹோ...”

“இது குறித்துத் தெரிந்துகொண்ட சில எம்.எல்.ஏ-க்கள், ‘அமைச்சர்களாலேயே சுயமாகத் தங்களது துறைகளில் முடிவெடுக்க முடியவில்லை. டெண்டர்களை மொத்தமாக மேலிடத்திலேயே முடிவுசெய்து, எல்லா வைட்டமின்களையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். செலவுசெய்து எம்.எல்.ஏ ஆனதற்குக் குறைந்தபட்சம் லோக்கல் கான்ட்ராக்ட்டிலாவது சம்பாதிக்கலாம் என்றால் அதற்கும் ஆப்புவைக்கிறார். வெளியில் வந்து தேர்தலில் போட்டியிட்டுப் பார்த்தால்தானே தெரியும் அவருக்கு’ என்று புலம்புகிறார்கள்.”

“அவர்… அவர்… என்கிறீர்களே… யார் அந்த அவர்?”

“ ‘அவர்’ யார் என்பது உமக்குத் தெரியாதா... என் வாயிலிருந்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர். அதுதானே... மேலிடத்து அதிகாரப்புள்ளிகள் இருவரில் ஒருவர்தான் அவர்.”

“ஓ... அவரா? சரி சரி... சிகிச்சைக்காக ராஜாத்தி அம்மாள் ஜெர்மனிக்குச் சென்றிருக்கிறாராமே?”

“செரிமானப் பிரச்னையால் ராஜாத்தி அம்மாளின் உடல்நிலை நலிவுற்றிருந்தது. சில சமயங்களில் மூச்சுத்திணறலால் பெரிதும் அவதியுற்றிருக்கிறார். சென்னையிலுள்ள சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் சரியாகவில்லை. `வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லலாமா?’ என ஸ்டாலினிடம் ஆலோசனை செய்திருக்கிறார் கனிமொழி. இதையடுத்து, ஆகஸ்ட் 24-ம் தேதி ராஜாத்தி அம்மாளை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஜெர்மனிக்குச் செல்லும் நாளன்று கனிமொழியின் வீட்டுக்கு வந்த ஸ்டாலின், ராஜாத்தி அம்மாளுக்கு தைரியம் சொல்லி, அனுப்பிவைத்திருக்கிறார். இரண்டு வாரங்கள் ஜெர்மனியில் சிகிச்சையளிக்க ஏற்பாடாகியிருக்கிறது” என்ற கழுகாருக்கு சூடாக பாதாம்பால் கொடுத்தோம். அதைக் குடித்துவிட்டு அடுத்த செய்திக்குத் தாவினார்.

“கடும் கோபத்தில் இருக்கிறாராம் அமைச்சர் தா.மோ.அன்பரசன். விஷயம் இதுதான். தாம்பரம் மாநகரச் செயலாளர் பதவிக்கான தேர்தலில், பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். கடைசி நேரத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்த தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா, குறைந்த வாக்குகளே பெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் முறைப்படி அறிவாலயத்துக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. ஆனால், இல்ல ரூட்டைப் பிடித்த ராஜா, மாநகரச் செயலாளர் பொறுப்புக்கு 10 ஸ்வீட் பாக்ஸ்களுடன் தீவிரமாகக் காய்நகர்த்துகிறாராம். இதுதான் லோக்கல் அமைச்சரான தா.மோ.அன்பரசனைக் கடுப்பாக்கியிருக்கிறது. ஏற்கெனவே அமைச்சருக்கும் ராஜாவுக்கும் ஏழாம் பொருத்தம். ‘ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலையே கேலிக்கூத்தாக்குறாங்களா... கட்சிக்காரன் ஓட்டு பெருசா, ஸ்வீட் பாக்ஸ் பெருசான்னு பார்க்குறேன்’ என்று பொருமிக் கொண்டிருக்கிறாராம்.”

தா.மோ.அன்பரசன்
தா.மோ.அன்பரசன்

“பொதுக்குழுவை முடித்த கையோடு, நிர்வாகிகளை மாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறாரே டி.டி.வி.தினகரன்?”

“ஆமாம், டெல்லி மேலிடத்தின் சிக்னலைத் தொடர்ந்து 2024-ல் பா.ஜ.க-வுடனான கூட்டணிக்குத் தயாராகிவரும் அவர், கட்சியில் ஆக்டிவ்வாக இல்லாத நிர்வாகிகளைத் தூக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அதேபோல கட்சியில் அமைப்புரீதியான மாற்றங்களைச் செய்யும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். உதாரணமாக, பட்டுக்கோட்டை வடக்கு, தெற்கு என இரண்டாக இருந்த ஒன்றியங்களை, இப்போது மூன்றாக்கியிருக்கிறார். கட்சியில் நிர்வாகிகள் ஆக்டிவ்வாக இருந்த காலத்தில் ‘சைலன்ட்’ மோடுக்குப் போய்விட்டார். முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேறிப் போன பிறகு உற்சாகமாக இறங்கியிருக்கிறார். இந்த உற்சாகமாவது கடைசிவரை நீடித்தால் சந்தோஷம் என்கிறார்கள் அ.ம.மு.க-வின் நிர்வாகிகள் சிலர்” என்ற கழுகார்...

“ ‘36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்திருக்கின்றன’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார் அல்லவா... அதை மறுத்து அவசர அவசரமாக டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘15 இல்லை 12 கொலைகள்’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கியிருந்தார்கள். ‘48 மணி நேரத்தில் 12 கொலைகள் என்பது மட்டும் என்ன பாராட்டுக்குரியதா?’ எனச் சமூக வலைதளங்களில் டி.ஜி.பி-யை வறுத்தெடுக்கிறார்கள்” என்று சிரித்தபடியே சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* ஒவ்வோர் ஆண்டும் அரசு அலுவலகங்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் கொடுக்கப்படும் காலண்டர்களை எட்டு மாதங்கள் கழித்து இப்போதுதான் அச்சடித்து வாங்கியிருக்கிறார்கள். இதை அலுவலகங்களுக்கு விநியோகம் செய்யலாமா, வேண்டாமா என்ற யோசனையில் துறைத் தலைமை அலுவலகத்திலேயே போட்டுவைத்திருக்கிறார்களாம்.

* தி.மு.க பொதுக்குழுவைக் கட்சியின் முப்பெரும் விழாவோடு சேர்த்து, விருதுநகரில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசும்தான் அதற்குப் பொறுப்பு என்பதால், செலவுகள் குறித்து இப்போதே விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

* வசூல்துறையின் அமைச்சர் இல்லத் திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. அதற்கான அழைப்பிதழ்களை அவர் சார்ந்திருக்கும் இரண்டு துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகளுக்கு கொடுக்கும்போதே, ‘மொய்யைத் தங்கமாகக் கொடுங்க’ என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறாராம் அமைச்சரின் வலதுகரம்.