Published:Updated:

மிஸ்டர் கழுகு: “தொலைச்சுப்புடுவேன்!” - ஸ்டாலின் பெயரைச் சொல்லி சீறிய பொன்முடி...

பொன்முடி
பிரீமியம் ஸ்டோரி
பொன்முடி

காங்கிரஸ் உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் கட்சியைப் பற்றியோ, நிர்வாகிகள் பற்றியோ எதிர்க் கருத்துகளைப் பதிவிட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

மிஸ்டர் கழுகு: “தொலைச்சுப்புடுவேன்!” - ஸ்டாலின் பெயரைச் சொல்லி சீறிய பொன்முடி...

காங்கிரஸ் உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் கட்சியைப் பற்றியோ, நிர்வாகிகள் பற்றியோ எதிர்க் கருத்துகளைப் பதிவிட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

Published:Updated:
பொன்முடி
பிரீமியம் ஸ்டோரி
பொன்முடி

‘‘நம்மைப்போல நெஞ்சம்கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை...’’ என்று பாடியபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘காரணம் இல்லாமல் பாட்டெல்லாம் பாட மாட்டீரே... என்ன விவகாரம்?’’ என்று கழுகாரைக் கலாய்த்தபடி நன்னாரி சர்பத்தை கிளாஸில் நீட்டினோம். வாங்கிப் பருகியபடியே செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘டாஸ்மாக் நிறுவனத்தில் எஃப்.எல் 1 என்றொரு லைசென்ஸ் உண்டு. டாஸ்மாக் மதுக்கடைகளையொட்டி பார்களை அமைத்துக்கொள்ள அனுமதியளிக்கும் லைசென்ஸ் அது. ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் பெரும்பாலான பார்களின் லைசென்ஸ் காலாவதியாகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய லைசென்ஸ் பெற்றுத்தான் பார்களைத் திறக்க வேண்டும். ஏலம் எடுப்பவர், கடையின் மது விற்பனைக்கேற்ப ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை அரசுக்கு உரிமத்தொகையாகக் கட்டுவார்கள். தற்போது ஏலம் எடுப்பவர்கள், தாங்கள் கட்டும் உரிமத்தொகையின் மதிப்பில் பாதித் தொகையைத் துறையின் ‘ஷாக்’ புள்ளிக்குக் கமிஷனாகக் கொடுக்க வேண்டுமாம்.’’

மிஸ்டர் கழுகு: “தொலைச்சுப்புடுவேன்!” - ஸ்டாலின் பெயரைச் சொல்லி சீறிய பொன்முடி...

“இதற்கும் அண்ணன் தம்பிக்கும் என்ன சம்பந்தம்?”

‘‘பொறுமையாகக் கேளும்... ஏலம் தொடர்பாக தமிழகம் முழுவதுமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. இதையடுத்து, உரிமத் தொகைக்கான கமிஷனைப் பெறுவதற்காகவே மாவட்ட மேலாளர்களை ‘ஷாக்’ புள்ளி களமிறக்கியிருக்கிறார். இவை அனைத்தும் ‘ஷாக்’ புள்ளி தம்பியின் கண்ணசைவில்தான் நடக்கின்றனவாம். கடந்த முறை இவர் அதிகாரத்திலிருந்தபோதும், அவரின் தம்பிமீது புகார்கள் வரிசைகட்டின. ஆட்சி மாறிய பிறகும் அண்ணன், தம்பி ஆட்டத்துக்கு எண்ட் கார்டே கிடையாதா என்று புலம்புகிறார்கள் அவர் சார்ந்த மாவட்டப் புள்ளிகள்.’’

‘‘காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த சங்கதி தெரியுமா?”

‘‘ம்... சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ‘காங்கிரஸ் உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் கட்சியைப் பற்றியோ, நிர்வாகிகள் பற்றியோ எதிர்க் கருத்துகளைப் பதிவிட்டால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். நிர்வாகிகள் அதே தவற்றை செய்தாலும், ஒழுங்குக்குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதற்குக் கட்சிக்குள்ளேயே கடும் புகைச்சல் எழுந்திருக்கிறதாம். ‘கருத்துச் சுதந்திரம் என்னாவது?’ என்றெல்லாம் நிர்வாகிகள் குரல் உயர்த்தியும் ஒன்றும் நடக்கவில்லை.’’

‘‘இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார்களே?”

‘‘எல்லாம் பதவிக்காகத்தான்... காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ‘ராஜ்யசபாவில் எங்களுக்கு ஒரு சீட்டை ஒதுக்குங்கள்’ என்ற கோரிக்கையை அவர்கள் ஸ்டாலினிடம் வைத்தார்களாம். ஆனால், இதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து பாசிட்டிவ் ரியாக்‌ஷன் இல்லை என்கிறார்கள்.’’

“ஓஹோ!”

‘‘பெயர்களை நீரே யூகித்துக்கொள்ளும்... முன்னாள் டாக்டர் அமைச்சர், மறைந்த காங்கிரஸ் தலைவர் பெயர்கொண்ட முன்னாள் அமைச்சர், ‘சர்வேயர்’ பிரமுகர், ‘சிந்து’ பிரமுகர், முன்னாள் உச்ச அமைச்சர் ஒருவரின் பினாமி பிரமுகர் ஆகிய ஐந்து பேரும் அவரவரின் மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதற்குக் கடந்த ஆட்சியில் தடையில்லாச் சான்று பெற்றிருந்தார்கள். எந்த ஆய்வும் செய்யாமல் அதற்கு என்.ஓ.சி கொடுத்துவிட்டார் அப்போதைய துறையின் ‘ஆவேசப்புள்ளி.’ ஆனால், மத்திய அரசிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், விவகாரம் தமிழக ஆளும் தரப்பிடம் போயிருக்கிறது. எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் எப்படி என்.ஓ.சி கொடுத்தார்கள் என்று அவர்கள் தோண்டத் தயாராகிவருவதால், விவகாரம் விரைவில் பூதாகரமாக வெடிக்கலாம்.’’

‘‘அமைச்சர்கள் பலரும் அப்செட்டில் இருக்கிறார்களாமே?”

‘‘அப்படித்தான் தகவல்கள் வருகின்றன. மூத்த அமைச்சர்களே தங்கள் துறைக்குள் பெரிதாக எதையும் செய்துகொள்ள முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள். அமைச்சர்களுக்கு நியமிக்கப்பட்ட தனிச்செயலாளர்கள் மூலம் அந்தந்தத் துறைகளில் நடக்கும் விவகாரங்கள் அனைத்தும் முதல்வர் அலுவலகத்துக்குச் சென்றுவிடுகின்றனவாம். இதனால், பெரிய டீலிங்குகளில் முதல்வருக்கு நெருக்கமானவர்களிடம் ஒப்புதல் பெறாமல் எதையும் நகர்த்த முடியவில்லை என்று அழாத குறையாகப் புலம்புகிறார்கள் அவர்கள்.”

மிஸ்டர் கழுகு: “தொலைச்சுப்புடுவேன்!” - ஸ்டாலின் பெயரைச் சொல்லி சீறிய பொன்முடி...

‘‘ஆனால், அமைச்சர் ஒருவர் முதல்வரின் பெயரைச் சொல்லியே கட்சியினரிடம் சீறியிருக்கிறாராமே?”

‘‘பொன்முடி விவகாரத்தைத்தானே சொல்கிறீர்கள்... சமீபத்தில் தனது மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசியவர், ‘என்னைப் பத்தி முதல்வர் வீடு வரைக்கும் புகார் கொடுத்தீங்க... அதையெல்லாம் முதல்வரே என்கிட்ட சொல்லிட்டார். ஒழுங்கா எனக்குக் கட்டுப்பட்டு நடந்துக்கிட்டா உங்களுக்குப் பதவி கிடைக்கும். என்னை எதிர்த்து அரசியல் செய்யணும்னு நினைச்சா, தொலைச்சுப்புடுவேன்... தொலைச்சு...’ என்று காட்டமாகச் சொன்னாராம்.’’

‘‘தமிழ்நாட்டுக்குச் சத்தமில்லாமல் வந்துபோயிருக்கிறாரே ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்?’’

‘‘கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், கடந்த மாத இறுதியில் மூன்று நாள்கள் நடந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்தர ஆலோசனைக் கூட்டத்தில் மோகன் பகவத் பங்கேற்றிருக்கிறார். பகவத்தைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பேச வேண்டும் என்று தீவிரமாக முயன்றார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால், அவர் நேரம் ஒதுக்கவில்லையாம். அதேசமயம், தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைக்கும் வாய்ப்பு மட்டுமே பொன்.ராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கிறது. தனிமையில் சந்தித்து சில விஷயங்களைப் பேசலாம் என்று நினைத்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது தனிமையில் புலம்பிவருகிறாராம்!”

‘‘டெல்டா அ.தி.மு.க-வுக்குள் அனல் பறக்கிறதாமே?’’

‘‘தஞ்சாவூர் முன்னாள் அ.தி.மு.க எம்.பி பரசுராமன் தி.மு.க-வில் இணைவதற்காக அந்தக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த தகவல் தெரிந்து, பரசுராமன் உள்ளிட்ட சிலரைக் கட்சியிலிருந்து நீக்கியது அ.தி.மு.க தலைமை. ஆனாலும், பரசுராமனை நீக்குவதற்கு முன்பு கடைசி முயற்சியாக அவரைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, ‘நான் கட்சி மாறக் காரணமே துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்தான்’ என்று சொன்னவர், மேலும் சில ரகசியங்களையும் போட்டு உடைத்துவிட்டாராம்.”

‘‘உடைத்துவிட்டால்தான் அது ரகசியம் இல்லையே... சொல்லும், சொல்லும்!”

‘‘ ‘வைத்திலிங்கம் என்னை பினாமியாக வைத்துக்கொண்டு சொத்துகளை வாங்கிக் குவித்தார். இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் வராத பணத்துக்காக நான் மூன்றரைக் கோடி ரூபாய் அபராதம் செலுத்தினேன். அந்தப் பணத்தையும் எனக்குத் தராமல், என் பெயரிலிருந்த சொத்துகளையும் அவரின் உறவினர்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டார். அவரால் எனக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. வைத்திலிங்கம் யார், யார் பெயரில் சொத்துகள் வைத்திருக்கிறார் என்கிற ரகசியங்களெல்லாம் எனக்குத் தெரியும். தி.மு.க தலைமையிடம் அதைத் தெரிவித்து வைத்திலிங்கத்துக்கு சிக்கலை உண்டாக்காமல் விட மாட்டேன். அதனால், என்னைச் சமாதானப்படுத்த நினைக்க வேண்டாம்’ என்று சொல்ல, எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லையாம். இந்தத் தகவல் வைத்திலிங்கம் காதுக்கும் போக... அவரும் பயங்கர அப்செட்டாம்” என்றபடி ஜூட் விட்டார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மேலிடத்தில் நெருக்கமாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரி அவர். ஆட்சி முடியும் நிலையில், ஜெயலலிதா சமாதி கட்டுவதில் சில முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழவே, அவரை சென்னையிலிருந்து மத்திய மண்டலத்துக்குத் தூக்கியடித்தது அ.தி.மு.க அரசு. ஆட்சி மாறியதும், இனிஷியல் அமைச்சர் ஒருவருக்கு இரண்டு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுத்து, மீண்டும் சென்னைக்கே மாறுதல் வாங்கிக்கொண்டு வந்து விட்டாராம். இப்போது கமிஷன்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அந்த அதிகாரிக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

* கடந்த ஆட்சியிலும் பவர்ஃபுல்லான துறையிலிருந்த அந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, டெல்லியில் ‘சக்சஸாக’ லாபி செய்து இந்த ஆட்சியிலும் பசையான துறையைப் பிடித்துவிட்டார். கடந்த வாரம் பெண் அலுவலர் ஒருவர், ஃபைலுடன் அதிகாரியின் அறைக்குள் நுழைந்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே அறையிலிருந்து கண்ணீருடன் வேகமாக வெளியேறிய பெண் அலுவலர், அவரது சீட்டுக்குக்கூடச் செல்லாமல் நேராக வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இப்போது கோட்டையின் ஹாட் டாபிக் இதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism