Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... உளவுத்துறை ரிப்போர்ட் - கண்டுகொள்ளாத எடப்பாடி!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. வழக்கமாக இப்போதெல்லாம் சிவகாசியில் பட்டாசுத் தொழில் பரபரவென்று நடந்துகொண்டிருக்கும். ஆனால், இப்போது கொரோனாவால் மந்தநிலையில் இருக்கிறது.

மிஸ்டர் கழுகு: ஊரடங்கு நீட்டிப்பு... உளவுத்துறை ரிப்போர்ட் - கண்டுகொள்ளாத எடப்பாடி!

தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. வழக்கமாக இப்போதெல்லாம் சிவகாசியில் பட்டாசுத் தொழில் பரபரவென்று நடந்துகொண்டிருக்கும். ஆனால், இப்போது கொரோனாவால் மந்தநிலையில் இருக்கிறது.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
இந்த இதழ் ஜூ.வி-க்காகத் தயாராகிக் கொண்டிருந்த ‘நோயால் சாவா, ஊரடங்கால் சாவா?’ கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தோம். கட்டுரையின் உண்மைத்தன்மை நம்மை உலுக்கியெடுத்தது. ‘‘இனி என்ன செய்யப்போகிறோம்?’’ என்கிற அச்சம் தொண்டைக்குழியில் இறங்கியபோது, சலனமில்லாமல் என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘என்ன... பேயறைந்ததுபோல் இருக்கிறீர்?” என்றவர், நமது கையிலிருந்த கட்டுரையை வாங்கிப் படித்தார். இரண்டு நிமிடங்களுக்கு அதிர்ச்சியில் கழுகாரிடமிருந்து பேச்சு வரவில்லை. ‘‘இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மை. மக்களின் கோபம் தீப்பிழம்பாகக் கனல்வதை முதல்வருக்கு உளவுத்துறையும் எச்சரித்திருக்கிறது’’ என்றபடி செய்திக்குள் நுழைந்தார்.

‘‘ஓர் உதாரணம் சொல்கிறேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர சில நாள்களுக்கு முன்னர் விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டது. ‘தொழிலாளர் களை அழைத்து வந்து வேலையைத் தொடங்கலாம்’ எனக் கொங்கு மண்டலத்திலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் உள்ள பல குறு, சிறு தொழில் முதலீட் டாளர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். புக்கிங் ஆர்டர்களும் குவிய ஆரம்பித்தன. இந்த நிலையில், ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் நீட்டித்து அரசு அறிவித்துவிட்டது. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகம் வருவதில் சிக்கல் நீடித்தது. பல தொழில் நிறுவனங்கள் பயணச் செலவுக்காகத் தொழிலாளர்களுக்குப் பணம் அனுப்பியிருந்தனர். புதிய ஆர்டர்களுக்கான மூலப்பொருள் களுக்காகச் செய்திருந்த செலவும் கையைக் கடித்துவிட்டது. ஒவ்வொருவருக்கும் பல லட்ச ரூபாய் நஷ்டம்.’’

‘‘அடக்கொடுமையே!’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘‘தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. வழக்கமாக இப்போதெல்லாம் சிவகாசியில் பட்டாசுத் தொழில் பரபரவென்று நடந்துகொண்டிருக்கும். ஆனால், இப்போது கொரோனாவால் மந்தநிலையில் இருக்கிறது. திருப்பூர், ஈரோட்டில் ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி படுத்துவிட்டது. இதை நம்பிப் பல லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த ஊரடங்கு நீட்டிப்பால் ஒவ்வொரு தொழிலிலும் ஏகப்பட்ட நஷ்டம். `உயிரைக் காப்பாற்றுகிறோம்’ எனக் கம்பு சுற்றி, மக்களைத் தெருவுக்குக் கொண்டுவந்ததுதான் மிச்சம்.’’

‘‘கொரோனாவை ஒழிக்கத்தான் ஊரடங்கு விதித்ததாக அரசு கூறுகிறதே?’’

‘‘சரி... கொரோனாவை ஒழித்தார்களா? ஊரடங்கால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைத்தான் உங்கள் கட்டுரை பேசுகிறதே! ‘தமிழ்நாடு கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது’ என்று முதல்வரே கூறுகிறார். அதை நிவர்த்தி செய்ய தொழில்துறையை இயக்குவதுதானே புத்திசாலித்தனம். பல மாநிலங்களும் ஜூலை 1-ம் தேதி முதல் தளர்வுகளை அமல்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டன. `இ-பாஸ் தேவையில்லை’ என மத்திய அரசே கூறிவிட்டது. ஆனால், தமிழக அரசு ஊரடங்கைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறது. தைரியமான முடிவுகளை எடுக்க முடியாமல் எடப்பாடி திணறு கிறார். ஊரடங்கு அமல்படுத்து வதற்கு முன்னதாக உளவுத்துறை யிலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் சர்வேயை எடுத்துள்ளார்கள். அதை முதல்வர் புறக்கணித்தது ஏன் என்பதுதான் புரியவில்லை.’’

‘‘என்ன சர்வே அது?’’

‘‘அதாவது, ‘தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கலாமா... வேண்டாமா?’ என்கிற தலைப்பில் பல்வேறு செக்டார் பிரிவினரிடம் குறுகியகாலத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டதாம். மத்திய அரசின் ஊரடங்குத் தளர்வுகளில், `கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு, அதன் அறிவிப்பில் இரவு நேரங்களில் தனி நபர் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அறிவித்தது. ‘மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு உள்ளேயும் தனி நபர்கள் நடமாட்டம் மற்றும் சரக்குகள் கொண்டு செல்ல தடைவிதிக்கக் கூடாது; அதற்குத் தனியாக அனுமதியோ, இ பாஸோ பெறத் தேவையில்லை’ என்று அறிவித்தது. இதற்கெல்லாம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு இருந்துள்ளது. இதை ஹைலைட் செய்து, ‘தமிழக மக்கள் ஊரடங்கை நீட்டிக்க விரும்பவில்லை’ என உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. அதைப் பார்த்ததும் முதல்வருக்கு ஷாக் ஏற்பட்டாலும், அதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையாம். அதனால்தான் ‘அவரை யாராவது குழப்பினார்களா... ஏன் உளவுத்துறையின் ரிப்போர்ட்டைப் புறக் கணித்தார்’ என ஒரு பட்டிமன்றமே கோட்டையில் நடக்கிறது. மக்களுடன் தொடர்பில்லாத ஒரு லாபி, முதல்வரின் அருகில் இருந்துகொண்டு அவரை திசை திருப்புவதாக மூத்த அமைச்சர்களே புலம்புகிறார்கள்.’’

ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்
ஸ்டாலினுடன் பழனிவேல் தியாகராஜன்

கழுகாருக்கு பருத்திப் பால் கொடுத்தோம். அதை அருந்தியபடியே அ.தி.மு.க ஐ.டி விங் தொடர்பாக தயாராகிக்கொண்டிருந்த கட்டுரையைப் படித்தார்.

‘‘தி.மு.க ஐ.டி விங் பற்றிய ஒரு தகவலை நான் சொல்கிறேன். ஐபேக் உடன் ஏற்பட்ட மோதலில், அந்த அணியின் செயலாளர் பழனிவேல் தியாராஜனுக்கு கட்டுப்பாடுகள் இறுகியதால் அப்செட்டில் இருந்துள்ளார். இந்த மனக்கசப்பு நீடிக்கக் கூடாது என்று கருதிய ஸ்டாலின், ‘வர்ற தேர்தல்ல உங்க அணிதான் முக்கியப் பங்காற்றணும். போய் வேலையைப் பாருங்க...’ என்று தியாகராஜனைத் தட்டிக் கொடுத்துள்ளாராம். ஐபேக்கின் ஐ.டி பணிகள் சொல்லிக்கொள்ளும்படி பலன் தரவில்லை என்று தலைமை கருதியதுதான் இந்த அரவணைப்புக்குக் காரணம் என்கிறார்கள்.’’

‘‘ம்ம்... தளவாய் சுந்தரத்தை ஏதோ கட்சி ஒதுக்கிவைப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறதே..?’’

‘‘ஆமாம். தென்மாவட்டங்களில் தளவாய் சுந்தரத்தின் கை எப்போதும் ஓங்கியிருக்கும். சமீபத்தில் அவர் கொடுத்த பட்டியலைத் தூர எறிந்துவிட்டு, கட்சிப் பதவிகளை நிரப்பியுள்ளனர். ‘தலைமையின் பெயரைச் சொல்லி தளவாய் தடம் மாறுகிறார்’ என எடப்பாடியிடம் ஓ.பி.எஸ் போட்டுக் கொடுத்ததே தளவாயின் லிஸ்ட் புறக்கணிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதில் அவர் ஏக அப்செட். இதே அப்செட்டில் கட்சியின் துணை ஒருங் கிணைப்பாளர் வைத்திலிங்கமும் இருக்கிறாராம்.’’

“அவருக்கு என்ன பிரச்னையாம்?’’

“ஜூன் மாதத்தில் டெல்டா பாசனத்துக்காக, கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட விழாவில் மட்டும் கலந்துகொண்டவர், அதன் பிறகு எங்கும் தலைகாட்டவில்லை. கட்சியில் 15 எம்.எல்.ஏ-க்கள் தன் கைப்பிடிக்குள் இருந்தும், சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்தும் தனக்கான அங்கீகாரத்தைத் தலைமை அளிக்கவில்லை எனச் சோர்ந்துவிட்டாராம். தன்னை ஓரங்கட்டிவிட்டு பல அமைச்சர்கள் தன் ஆதரவாளர்களைக் கையிலெடுத்து தஞ்சையில் அரசியல் செய்வதும் அவரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில், வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளரும், மருத்துவக் கல்லூரிப் பகுதி செயலாளருமான சரவணன் என்பவர் அமைச்சர் வேலுமணியின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். வேலுமணியை வைத்தே அ.தி.மு.க-வில் தஞ்சையின் முக்கியப் பொறுப்புக்கு வரவும் அவர் முயல்கிறார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் சரவணன் ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியது, வைத்திலிங்கம் ஆதரவாளர்களைக் கொந்தளிக்கச் செய்துவிட்டது.’’

“சரிதான்!’’

“நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தச்சை கணேசராஜாவே மீண்டும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக அறிவிக்கப் பட்டார். இதனால் அமைப்புச் செயலாளரான சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி-யான முத்துக்கருப்பன் எனப் பலரும் வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். அ.ம.மு.க-வில் அமைப்புச் செயலாளராக இருந்து, மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த கல்லூர் வேலாயுதம் தனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருக்கிறார்.”

வைத்திலிங்கம் - தளவாய் சுந்தரம்
வைத்திலிங்கம் - தளவாய் சுந்தரம்

“தென்காசியிலும் ஏதோ கொந்தளிப்பாமே?”

“ஆம். தென்காசி மாவட்டச் செயலாளராக இருந்த கே.ஆர்.பி.பிரபாகரனிடமிருந்து பொறுப்பைப் பறித்ததோடு, மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து, எம்.எல்.ஏ-வான செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கும் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியனின் மகன் கிருஷ்ண முரளிக்கும் மா.செ பதவியளித்துள்ளனர். எம்.பி தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பும் இல்லாமல் போனதால் கே.ஆர்.பி.பிரபாகன் ஏக அப்செட்!’’

‘‘ஓஹோ...’’

சிறகைச் சிலுப்பியபடி கிளம்ப எழுந்த கழுகார், ‘‘தூத்துக்குடியில் பிரிக்கப்படவுள்ள ‘மாநகர் மாவட்டச் செயலாளர்’ பதவியைக் குறிவைத்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் காய்நகர்த்திவருகிறார். அவருக்கு அந்தப் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காக, எதிரும் புதிருமாக இருந்த கடம்பூர் ராஜூவும் சண்முகநாதனும் கைகோத்துள்ளனர். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் சுதாகரை மாநகர் மா.செ-வாகக் கொண்டுவருவதற்கு இருவரும் ஆதரவளித்துள்ளதால் தூத்துக்குடி அ.தி.மு.க தகிக்கிறது’’ என்றவர், ‘‘இதே இதழில் உமது நிருபர் கொடுத்திருக்கும், ‘ஐயோ, 140 வீடுகளைக் காணோம்!’ என்கிற கட்டுரையைப் படித்தேன். அதில் சில அப்டேட் தகவல்கள்... குறித்துக்கொள்ளும்” என்றபடி அந்தத் தகவலையும் சொன்னார்.

‘‘மேற்கண்ட விவகாரத்தில் ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட இயக்குநர் பொன்னியின் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் அல்லவா... இதில் மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ராஜா, உதவிப் பொறியாளர் சண்முகசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, ஊராட்சியின் பணி மேற்பார்வையாளர் பிரபாகரன் ஆகிய நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism