Published:Updated:

மிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி!

சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்
பிரீமியம் ஸ்டோரி
சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்

ரகசியமாகச் சந்திக்கும் காக்கி உயரதிகாரிகள்

மிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி!

ரகசியமாகச் சந்திக்கும் காக்கி உயரதிகாரிகள்

Published:Updated:
சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்
பிரீமியம் ஸ்டோரி
சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்

‘‘திகார் சிறைவாசியாக ப.சிதம்பரம் 100 நாள்களைத் தாண்டிவிட்டாரே?’’ - சிறகுகள் படபடக்க அலுவலகத்துக்குள் கழுகார் வந்து அமர்ந்ததும் இப்படியொரு கேள்வியை வீசினோம்.

‘‘சிதம்பரம் தரப்பு சற்றும் எதிர்பாராத விஷயம் இது. சிறைவாசம் இன்னும் தொடரும் என்றே தெரிகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு கைதுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தது. அப்போது, ‘நாங்கள் இன்னும் விசாரணையை முடிக்கவில்லை. வழக்கு விசாரணைக்காக கார்த்தி சிதம்பரத்தையும் கைதுசெய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே, சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணையின் போக்கு பாதிக்கும்’ என அமலாக்கப் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தீர்ப்புக்கான தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிதம்பரத்தை வெளியே விடக் கூடாது என்பதில் அமித் ஷா விடாப்பிடியாக இருக்கிறாராம். கார்த்தி சிதம்பரத்துக்கும் நெருக்கடி முற்றிவிட்டதாக டெல்லி சோர்ஸ்கள் கூறுகின்றன.’’

மிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி!

‘‘உள்ளாட்சித் தேர்தல் தேதியை எப்போதுதான் அறிவிக்கப்போகிறார்களாம்?’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. எனவே வெகுவிரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்கும் முன், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை நிறைவேற்ற தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நவம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க திடீர் மனுவைத் தாக்கல் செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தேர்தல் குறித்து அ.தி.மு.க தலைமை இப்போது என்ன நினைக்கிறதாம்?”

“ஒருவழியாக தேர்தலை நடத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். நவம்பர் 29-ம் தேதியே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கமும் தரத் தொடங்கிவிட்டார்கள். அதேபோல் புதிய மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளைத் தொடங்கிவைப்பதற்கும் உள்ளாட்சித் தேர்தல்தான் காரணம் என்கின்றனர்.’’

‘‘தி.மு.க முகாம் நிலவரம்?’’

‘‘வழக்கமாக பெண்களுக்காக ஒதுக்கிய உள்ளாட்சிப் பகுதிகளை தங்கள் மனைவி, மகள்களுக்கு கரைவேட்டிகள் பொட்டலம் கட்டி விடுவார்கள். இந்த முறை, கட்சிக்காகப் போராட்டங்களைச் சந்தித்த மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அந்தப் பதவிகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உள்ளாட்சிப் பதவிகளை ‘பேக்’ செய்துவிடலாம் என்ற கனவில் இருந்த முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர், கனிமொழியின் வேண்டுகோளால் நிலைகுலைந்து போயுள்ளனராம்.’’

சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்
சத்தியமூர்த்தி, ஜாபர்சேட்

‘‘தி.மு.க-வின் தேர்தல் ஆலோசகராக இருந்த சுனில் பதவி விலகிவிட்டாரே... என்ன காரணமாம்?’’

“2015-ம் ஆண்டு சுனில் தி.மு.க-வுக்கு வந்த பிறகுதான் ‘நமக்கு நாமே’ திட்டத்தை தி.மு.க கையில் எடுத்தது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், சுனில்மீது சில விமர்சனங்கள் எழுந்தன. சுதாரித்த சுனில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மோடிக்கு எதிரான அலையை சமூக வலைதளங்கள்மூலம் ஏற்படுத்தினார் என்கிறார்கள். ஆனால், சமீபகாலமாக ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் தனிமனிதத் தாக்குதலை சுனில் தலைமையில் செயல்படும் ஓ.எம்.ஜி குழு சரியாகக் கையாளவில்லை என்று ஸ்டாலின் மருமகன் சபரீசன் கருதியுள்ளார்.’’

‘‘ஓஹோ!’’

‘‘சமீபத்தில் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த சபரீசன் தரப்பை அணுகிய தேர்தல் ஆலோசகரான ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் தரப்பு, ‘வரும் சட்டமன்றத் தேர்லில் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று தூண்டில் போட்டுள்ளனர். ஏற்கெனவே அ.தி.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவற்றுக்குப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் தரப்பு, தி.மு.க-வுக்குப் பணியாற்ற ஆசைப்பட்டது சபரீசன் தரப்புக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வந்தவுடன் இதுகுறித்து ஸ்டாலினிடம் விவாதித்துள்ளார். ஸ்டாலின் தரப்பில், ‘சுனில், பிரசாந்த் கிஷோர் இருவருமே நமக்கு வேலை செய்யட்டும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த டீலிங்கில் சுனிலுக்கு உடன்பாடில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் சுனில் தி.மு.க ஆலோசகர் பதவியிலிருந்து வெளியேறியுள்ளார். ‘தி.மு.க-வின் ஐ.டி விங் ஒழுங்கான செயல்பாட்டில் இல்லை. அவர்களை வைத்துக்கொண்டு யார் வந்தாலும், நிலைமையை மாற்ற முடியாது’ என்று சுனில் தரப்பில் வருத்தப்படுகின்றனர். விரைவில் ஐபேக் நிறுவனம் தி.மு.க-வுக்காகக் களமிறங்கலாம்.’’

“உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி தரப்பினரும், சி.பி.சி.ஐ.டி பிரிவு டி.ஜி.பி-யான ஜாபர்சேட் தரப்பினரும் மாலை நேரத்தில் மணிக்கணக்கில் ரகசியமாகச் சந்திக்கிறார்களாமே?’’

‘‘இந்தச் சந்திப்பு ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறதாம். டி.ஜி.பி அலுவலகத்திலும் வெளியேயும் சந்திப்புகள் நடக்கின்றனவாம். சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின்போது, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீனப் பாதுகாப்புக் குழுவினருடன் சேர்ந்து ஒருங்கிணைக்கும் பணியில் ஜாபர்சேட் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பொறுப்பில் சென்னை மாநகர ஆணையர் அல்லது சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-தான் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்கு முரணாக சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஜி.பி-யான ஜாபர்சேட் நியமிக்கப்பட்டது அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது. இதற்குப் பரிந்துரைத்ததே சத்தியமூர்த்தி தரப்புதான் என்கிறது காக்கிகள் வட்டாரம். இப்போதைய சந்திப்புகளுக்கு இரண்டு காரணங்களை அடுக்குகிறார்கள்.’’

‘‘என்ன காரணங்களாம்?’’

‘‘முதலில், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியைக் குறிவைத்ததாம் ஜாபர்சேட் தரப்பு. அது முடியாததால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவிக்கு காய்நகர்த்தப்பட்டதாம். அதுவும் முடியவில்லை. அதனால், இப்போது குற்றப்பிரிவு டி.ஜி.பி (க்ரைம்) என்று ஒரு புதுப்பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறதாம். ஏற்கெனவே இதுபோன்ற ஒரு பதவி காவல்துறைக்குள் இருந்ததாகக் குறிப்பிடும் உயரதிகாரிகள், இந்தப் பதவியின் கட்டுப்பாட்டின்கீழ் பொருளாதாரக் குற்றப்பிரிவு, சிலைக்கடத்தல் பிரிவு, ரயில்வே உள்ளிட்ட காவல் பிரிவுகளைக் கொண்டுவந்து, திரிபாதியின் அதிகாரத்தில் கை வைக்க ஜாபர்சேட் தரப்பு திட்டமிடுகிறது என்கிறார்கள். இது தொடர்பாக ஆலோசிக்கத்தான் மேற்கண்ட ரகசிய சந்திப்பு என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: தமிழக காவல்துறையில் புதுப்பதவி!

‘‘பெரிய திட்டம்தான். இதற்கு ஆட்சியாளர்கள் சம்மதிக்க வேண்டுமே!’’

‘‘இரண்டாவது காரணத்தில் அதற்கும் விடை சொல்கிறேன்... சென்னை முன்னாள் மேயரும் தி.மு.க மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன்மீது சிட்கோ நில மோசடி வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கில் மா.சு-வை கைதுசெய்து ஸ்டாலினுக்கும் செக் வைப்பதாக உத்தரவாதம் அளித்துதான் சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஜி.பி-யாக ஜாபர்சேட் வந்து அமர்ந்தாராம். ஆனால், வழக்கில் போதிய ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. இதற்கும் ஒரு தீர்வு காணவே சத்தியமூர்த்தி தரப்பிடம் அவர் ஆலோசனை கேட்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. சி.பி.சி.ஐ.டி வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகப்போகிறார் என செய்திக்குறிப்பு அனுப்பியதெல்லாம் மா.சு வழக்கில்தான். முதல்வரிடம் நல்லபெயர் வாங்குவதற்காக ஜாபர்சேட் இப்படியெல்லாம் குட்டிக்கரணம் அடிப்பதாகக் கூறுகிறது காக்கி வட்டாரம்.

“ஒருகாலத்தில் ஜாபர்சேட்டும் சத்தியமூர்த்தியும் எதிரும்புதிருமாக இருந்தவர்களாயிற்றே!”

“தி.மு.க ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி-யாக ஜாபர்சேட் இருந்தபோது, எஸ்.பி-யாக இருந்த சத்தியமூர்த்தியைப் படாதபாடு படுத்தியதெல்லாம் வரலாறு. ஆனால், இப்போது இருவரும் மொபைல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ரகசியமாகச் சந்தித்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கி வந்திருப்பதுதான் காக்கி உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஆச்சர்ய ரேகையைப் படரவிட்டுள்ளது.’’

‘‘இன்னொரு ரகசிய சந்திப்பு பற்றியும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்களே..!’’

‘‘உங்களுக்கும் தகவல் வந்துவிட்டதா? ரஜினியும் டி.டி.வி.தினகரனும் சென்னை புறநகரில் உள்ள பங்களாவில் நேரில் சந்தித்து அரசியல் நிலவரம்குறித்துப் பேசினார்கள் என்பதே அந்தத் தகவல். கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாம்’’ என்ற கழுகார் சட்டெனச் சிறகை விரித்தார்.