Published:Updated:

மிஸ்டர் கழுகு: “ரஜினியை கண்காணியுங்கள்!” - உளவுத்துறைக்கு எடப்பாடி உத்தரவு

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

தேவைப்பட்டால் கமலுடன் இணையவும் தயார்’ என ரஜினி கூறியதிலிருந்து போயஸ் கார்டனில் உள்ள அவரின் வீட்டை உளவுத்துறை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது.

‘‘நித்யானந்தாவை விடமாட்டீர்போலிருக்கிறதே!” - சிரிப்புடன் வந்து அமர்ந்தார் கழுகார். நெய்முறுக்குடன் சூடான டிகிரி காபியை நீட்டினோம். முறுக்கை நொறுக்கி கொறிக்க ஆரம்பித்தவர், ‘‘நித்யானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதை யும், தனிநாடு அமைக்கத் திட்டமிட்டிருப்பதையும் உமது நிருபர்கள்தான் முதலில் வெளியிட்டனர். இப்போது அது நாடு முழுக்கப் பற்றிக்கொண்டுவிட்டது. பட்டையைக் கிளப்புகிறீர்களே!’’ என்று வாழ்த்திவிட்டு, செய்திக்குள் தாவினார்.

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

‘‘ `தேவைப்பட்டால் கமலுடன் இணையவும் தயார்’ என ரஜினி கூறியதிலிருந்து போயஸ் கார்டனில் உள்ள அவரின் வீட்டை உளவுத்துறை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. ரஜினியின் வீட்டுக்கு யாரெல்லாம் வருகிறார்கள், எவ்வளவு நேரம் பேசுகிறார்கள், என்ன விவாதிக்கப்பட்டது என்பது வரை ஆட்சி மேலிடத்துக்கு ‘நோட்’ போகிறது. ‘ரஜினி வெளிமாநிலத்துக்குச் சென்றாலும், ஆள் அனுப்பி கண்காணியுங்கள். அவர் பிறந்த நாளுக்கு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்பதையும் விசாரியுங்கள்’ என்று ஆட்சித்தலைமை உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம். அவருடைய பிறந்த நாள் நெருங்க நெருங்க, போயஸ் கார்டனில் கண்காணிப்பு தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. இது ரஜினிக்கும் தெரியும்.’’

‘‘அவருடைய ரியாக்‌ஷன்?’’

‘‘அவரோ ‘அட, இதுக்குப்போயி அலட்டிக்கலாமா...’ என்று அமைதியாக இருக்கிறார். ஆனால், அந்த அமைதிக்கு ஓர் அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். விரைவிலேயே அ.தி.மு.க மீதான தன்னுடய கருத்தை வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பிப்பார் என்றும் பேச்சு கிளம்பியிருக்கிறது.’’

நாடாளுமன்றக் கூட்டம் முடிந்து வெளிவரும் ப.சிதம்பரம்
நாடாளுமன்றக் கூட்டம் முடிந்து வெளிவரும் ப.சிதம்பரம்

‘‘100 நாள்களுக்குப் பிறகுதான் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்கும் என்று முன்பே சொல்லியிருந்தீர். அதேபோல் 106 நாள்கள் கழித்துதான் அவருக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. வெளியே வந்ததும் மத்திய அரசுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டாரே?’’

‘‘ஆமாம். எது நடந்துவிடக் கூடாது என மத்திய அரசு நினைத்ததோ, அதை நடத்திக்காட்டிவிட்டார் சிதம்பரம். சிறையிலிருந்து வெளியே வந்தவர், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தினார். அப்போது, ‘இந்தியா கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது. வரவிருக்கும் நாள்களில் இதைப் பற்றி தொடர்ந்து பேசவும் எழுதவும் இருக்கிறேன். 8 சதவிகிதத்திலிருந்து 4.5 சதவிகிதமாக ஜி.டி.பி குறைந்திருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியன் போன்ற பொருளாதார வல்லுநர்கள், இதைவிடவும் ஜி.டி.பி குறைவாக இருக்கலாம் என கணிக்கின்றனர். பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார். தன் அமைச்சர்களை பொய் பேசவைத்து வேடிக்கை பார்க்கிறார். இந்த அரசு, பொருளாதாரம் என்ற விஷயத்தில் தகுதியற்றதாக மாறியுள்ளது. கிராமப்புறங்களில் கடும் பொருளாதார வீழ்ச்சி இருக்கிறது. விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். வெங்காயம் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆனால், நிதியமைச்சர் வெங்காயம் உண்பதில்லையாம்’ என்று கிழித்து எடுத்துவிட்டார்.’’

‘‘ம்!’’

‘‘சோனியாவைச் சந்தித்த பிறகுதான் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்திருக்கிறது. ‘நீங்கள், பா.ஜ.க அரசை துணிந்து எதிர்க்க வேண்டும்’ என்று சோனியா தரப்பில் அட்வைஸ் சொல்லப் பட்டதாம். இன்னொரு தகவல்... சிறையிலிருந்து வந்த சிதம்பரத்தை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்திருக்கிறார் ஸ்டாலின்.’’

தி.மு.க-வில் இணைந்த அரசகுமார்
தி.மு.க-வில் இணைந்த அரசகுமார்

‘‘அதுசரி... ஸ்டாலினை பிரசாந்த் கிஷோர் சந்தித்தாரா?’’

‘‘இல்லை... அவருடைய அலுவலகத்தைச் சேர்ந்த வேறு ஓர் அதிகாரிதான் கடந்த 2-ம் தேதி சந்தித்துப் பேசியிருக்கிறார். கட்சிக்கான தேர்தல் பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாக அப்போது சொல்லியிருக்கிறார்.’’

‘‘ஓஹோ!’’

‘‘பிரசாந்த் கிஷோரை நியமிப்பதில், தி.மு.க மூத்த தலைவர்கள் சிலருக்கு உடன்பாடில்லை. ‘நம் கட்சிக்கு அவர் தேவையில்லை. அவருடைய திட்டங்கள் வடநாட்டுக்கு சரிபட்டுவரும்; தமிழ்நாட்டுக்கு சரிபட்டு வராது. திராவிடப் பின்னணியைப் பற்றி அவருக்கு பெரிதாக எந்த அறிவும் இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் ஒழுங்காக வேலைபார்த்தாலே வெற்றி பெற்றுவிடலாம்’ என்று ஸ்டாலினிடம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிரஷரால்தான் கிஷோரைக் கொண்டுவரும் முடிவில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின்.’’

மோடியுடன் தி.மு.க எம்.பி-க்கள்
மோடியுடன் தி.மு.க எம்.பி-க்கள்

‘‘பா.ம.க-அ.தி.மு.க இடையே இடைவெளி விழுந்துவருவதாகச் சொல்கிறார்களே?’’

‘‘முதல்வரும் துணை முதல்வரும் அப்போலோவுக்கே சென்று ராமதாஸைச் சந்தித்து நலம் விசாரித்தார்கள். ஆனாலும், இரண்டு கட்சிகளிடையே விரிசல்கள் வீரியமாகி வருகின்றனவாம். கடலூரில் ராமசாமி படையாச்சி மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு தொல்.திருமாவளவனுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அன்புமணிக்கு அழைப்பு இல்லை. ஏற்கெனவே சட்டமன்றத்தில் ராமசாமி படையாச்சி படத் திறப்பு விழா நடத்தியபோதும், பா.ம.க தரப்பில் ஆலோசனை நடத்தவில்லை என்ற வருத்தம் இருந்தது. இப்போது, மணிமண்டபம் திறப்பு விழாவுக்கே அழைப்பு இல்லை. இதனால் டென்ஷனான அன்புமணி, ‘சட்டமன்றத் தேர்தலை நாம் தனியாகவே எதிர்கொள்ளும் அளவுக்கு நமது பலத்தை அதிகரிக்க வேண்டும்’ என்று பா.ம.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார். இது முதல்வர் காதுக்கும் எட்டியிருக்கிறது. இதையெல்லாம் வைத்து, இரண்டு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் தொடங்கிவிட்டது என்கிறார்கள்.’’

‘‘பா.ஜ.க-வின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டிஅரசகுமார், தி.மு.க-வில் இணைந்துவிட்டாரே?’’

‘‘டெல்லி நீக்குவதற்கு முன்பாக அவர் முந்திக்கொண்டார் என்கின்றனர். தி.மு.க மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசுவின் குடும்ப விழாவில், ‘ஸ்டாலின்தான் முதல்வராக வரவேண்டும்’ என்று அவர் பேசியதை, ஜே.பி.நட்டா, அமித் ஷா வரை இங்கு உள்ள தலைவர்கள் கொண்டுசென்றுள்ளனர். அதன் அடிப்படையில் அரசகுமாரை பா.ஜ.க-விலிருந்து நீக்குவதற்கும் கட்சித் தலைமை முடிவெடுத் திருந்தது. அதற்குள்ளாக அவரே முந்திக்கொண்டு தி.மு.க-வில் ஐக்கியமாகி விட்டார்.’’

ரஜினி
ரஜினி

‘‘ம்ம்… உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா?’’

‘‘புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங் களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. தி.மு.க தரப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுதான் சரியாக இருக்கும் என வாதிட்டுள்ளனர். வியாழன் அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துவிட்டது. தீர்ப்பு வந்தால்தான் தேர்தல் நடக்குமா, இல்லையா என்பது தெரியும்.’’

‘‘சீட் ஒதுக்கீட்டை இதுவரை இரண்டு திராவிட கட்சிகளும் ஆரம்பிக்காமல் இருப்பதன் பின்னணி இதுதானா?’’

‘‘ஆமாம். இரண்டு கூட்டணிகளிலும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளிடம் சண்டைபிடித்து கூட்டணியைவிட்டு வெளியே அனுப்பிவிடுவார். ‘எதுவாக இருந்தாலும் மாவட்டச் செயலாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என கருணாநிதியும் கூட்டணிக் கட்சிகளைத் தட்டிக்கழித்துவிடுவார். இதுபோல் பா.ம.க, தே.மு.தி.க-வை ஒதுக்கும் தைரியம் அ.தி.மு.க-வுக்கும், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளைக் கழற்றிவிடும் துணிச்சல் தி.மு.க-வுக்கும் இல்லை.’’

‘‘ `தனித்துப் போட்டியிடலாம்’ என்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் பா.ஜ.க-வினர் கூறினார்களாமே?’’

‘‘கட்சி அலுவலகங்களின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக ஜே.பி.நட்டா தமிழகம் வந்திருந்தபோதுதான் ‘உள்ளாட்சியில் தனித்துப் போட்டியிடலாம்’ என்று இங்கு உள்ளவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர். நாகர்கோவில், திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகளைப் பிடித்துவிடலாம் என கணக்குப்போட்டுக் காட்டியுள்ளனர். ‘அமித் ஷாவிடம் பேசுகிறேன்’ என்று மட்டும் கூறிவிட்டு நட்டா புறப்பட்டுள்ளார். இந்த மாத இறுதிக்குள் புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கும் டெல்லி பா.ஜ.க மேலிடம் முடிவெடுத்திருக்கிறதாம்.’’

‘‘தி.மு.க எம்.பி-க்களை மோடி சந்தித்திருக்கிறாரே?’’

‘‘நீட் தேர்வு, நதிநீர் பங்கீடு, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பிரதமரை தி.மு.க எம்.பி-க்கள் சந்தித்திருக்கின்றனர். சாதாரணமாக பா.ஜ.க எம்.பி-க்களுக்குக்கூட அப்பாயின்மென்ட் கொடுக்காத பிரதமர், தி.மு.க-வினருக்கு மட்டும் நேரம் ஒதுக்கியது பலரின் புருவங்களையும் உயர்த்தவைத்துள்ளது. கனிமொழியின் தொகுதியான தூத்துக்குடி - குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவுக்கு தான் வரப்போவதையும் சந்திப்பின்போது சுட்டிக் காட்டினாராம் மோடி” என்ற கழுகார், ‘‘விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படவுள்ளதாம். நிதி, ரயில்வே, வர்த்தகத் துறைகளில் மாற்றம் இருக்கலாம் என்று பேசப்படுகிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

பேரியாட்ரிக் சர்ஜரி... ஒரு விளக்கம்!

‘15 ஆண்டுகளில் 100 மடங்கு... அதிகரித்துவரும் பேரியாட்ரிக் சர்ஜரி... விழித்துக்கொள்வது எப்போது?’ என்ற தலைப்பில் 6.11.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியாகி யிருந்தது. இது தொடர்பாக, இந்திய உடல் எடைக்குறைப்பு அறுவைசிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அருண் பிரசாத், செயலாளர் டாக்டர் பிரவீன்ராஜ் ஆகியோர், நமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அதில், ‘இந்த அறுவைசிகிச்சையால் நிறையபேர் உயிரிழக்கின்றனர் என்கிற கருத்தை முன்வைத்திருப்பது சரியல்ல. குடல்வால் நீக்கம், கர்ப்பப்பை நீக்கம், மண்ணீரல் நீக்கம் என எந்த அறுவைசிகிச்சையாக இருந்தாலும், பல்வேறு காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்படலாம். அதற்காக அறுவைசிகிச்சையே பாதுகாப்பு இல்லாதது என்று கூறிவிட முடியாது. அதுபோல்தான் பேரியாட்ரிக் அறுவைசிகிச்சையும். இதுவரை இந்தியாவில் 20,000 பேரியாட்ரிக் சர்ஜரிகள் நடைபெற்றுள்ளன. சர்வதேச சர்க்கரைநோய் கூட்டமைப்பும் அமெரிக்க சர்க்கரைநோய் சங்கமும், சர்க்கரைநோய்க்குத் தீர்வாக இந்த அறுவைசிகிச்சையை அங்கீகரித்துள்ளன.

அருண் ஜெட்லிக்கு, 2014-ம் ஆண்டு பேரியாட்ரிக் சர்ஜரி நடைபெற்றது. அப்போதே சர்க்கரைநோய் காரணமாக அவருடைய சிறுநீரக இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. சிறுநீரகம் மேலும் பாதிக்கப்பட்டதால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2018-ல் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். சிறுநீரகச் செயலிழப்பால் ரத்தத்தில் ஏற்பட்ட நச்சேற்றத்திலிருந்து (Sepsis) ஒருவரை மீட்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே, அவர் எடைக்குறைப்பு அறுவைசிகிச்சையால்தான் உயிரிழந்தார் என்று சொல்ல முடியாது.

பேரியாட்ரிக் சர்ஜரி, அழகியல் காரணங்களுக்காக மிகக் குறைவானவர்களுக்கே செய்யப்படுகிறது. யாருக்கு, எந்தத் தருணத்தில் பேரியாட்ரிக் சர்ஜரி செய்யப்பட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் தவறாமல் பின்பற்றப்படுகின்றன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சர் பதவிக்கு யாகம்?

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரத்தில் உள்ள தன் வீட்டில் ரகசிய யாகம் ஒன்றை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னிடமிருந்து பறிபோன அமைச்சர் பதவியை மீண்டும் அடைவதற்காகவும், மாவட்டத்தில் உள்ள தன் அரசியல் எதிரிகளின் செயல்பாடுகளை முறியடிக்கவும், இந்த யாகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த புரோகிதர்கள் இரண்டு மணி நேரத்துக்கும்மேலாக நடத்திய இந்த யாகத்தில், மணிகண்டனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனராம்.