அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஒரிஜினலாவே நான் வில்லன்மா?

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

ரஜினியின் பன்ச் யாருக்கு?

மெல்லிய சாரல் மழைத்தூறலில் நனைந்துகொண்டே வந்த கழுகார், “இந்த இதழுக்காகத் தயாராகி இருக்கும் `உன்னாவ்’ தொடர்பான தனிக்கட்டுரையைப் படித்தேன். அதில் பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் பற்றியும் உமது நிருபர் எழுதியிருக்கிறார். டெல்லி நீதிமன்றத்தில் நடந்துவந்த அந்த வழக்கில் டிசம்பர் 16-ம் தேதி ‘குல்தீப் சிங் குற்றவாளி’ என அறிவித்துள்ள நீதிமன்றம், தண்டனை விவரத்தை டிசம்பர் 17-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறது” என்று தகவலை அப்டேட் செய்தார்.

“பரவாயில்லையே... சரியான சமயத்தில் நினைவூட்டினீர்கள். தமிழக நிலவரத்துக்கு வருவோம், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்துவிட்டதே!”

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

“அது முடிந்துவிட்டது. ஆனால், அதற்கு முன்பே பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான ஏலங்களும் முடிந்துவிட்டன. விருதுநகர் மாவட்டத்தில் இதை தட்டிக்கேட்ட இளைஞர் ஒருவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். இதுதொடர்பான உமது நிருபரின் தனிக்கட்டுரையையும் படித்தேன். தமிழக வரலாற்றிலேயே இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான பதவிகள் ஏலம் மூலம் முடிவுக்கு வந்ததில்லை என்கிறார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் அ.தி.மு.க-வில் பணத்தை வைத்து நடந்த ஆட்டங்களே அதிகம். அதே கூத்துதான் இப்போது ஊராட்சித் தேர்தலிலும் நடந்துள்ளது. பல ஊராட்சிகளில் பகிரங்கமாகவே ‘தலைவர் பதவி ஐம்பது லட்சம் ரூபாய்... ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்’ என்று கூவிக் கூவி ஏலம்விட்டிருக் கிறார்களாம். இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர் சிலர், ‘உங்கள் கட்சித் தலைமையே கூவத்தூர் ஏலத்தில்தானே பதவியைக் கைப்பற்றியது’ என்று நக்கலடிக்கிறார்கள்.”

“ஊராட்சிகளில் ஏலத்தொகை எவ்வளவு வரை போகிறதாம்?”

“ஆ.ராசாவின் சொந்த ஊரான சத்திரமனை வேலூர் உள்ளிட்ட கிராமங்களிலும் கடைசி நாள் வரை, ஊராட்சி மன்றத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. அங்கும் ஏலம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் எம்.எல்.ஏ-வான பரமேஸ்வரியின் கணவர் முருகனை ஒன்றியத் தலைவர் ஆக்க பல லட்சங்கள் வாரி இறைக்கப்பட்டுவருகிறது. தொட்டியம் அடுத்த அரசலூர் கிராமத்தில் நான்காவது வார்டு உறுப்பினர் பதவியும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம்விடப்பட்டுள்ளது.’’

ரஜினி
ரஜினி

“ஆனால், அ.தி.மு.க தரப்பில் வேட்பாளர்கள் பட்டியலெல்லாம் வெளியானதே?”

“வெளியானதுதான். அதில் இருக்கும் பெயர்களெல்லாம் அமைச்சர்களின் பினாமிகள் என்கிறார்கள். ‘சீட் தருகிறோம்...

நீ செலவு செய்ய முடிந்தால் செய்துகொள்’ என்று கொக்கி போட்டதும், கட்சிக்காரர்கள் பலரும் ஒதுங்கிவிட்டார்களாம். ஆனால், அமைச்சர்களுக்கு வேண்டிய ஆட்கள் என்றால் மட்டும் அமைச்சர் தரப்பே செலவை பார்த்துக்கொள்வதாக ஒப்புதல் கொடுக்கப்பட்டதாம். இதற்கிடையே அ.தி.மு.க கூட்டணிக்குள் இருந்த பா.ஜ.க-வும் பல மாவட்டங்களில் தனித்து களம் இறங்கியிருக்கிறது.”

“பா.ஜ.க-வின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ், ‘அ.தி.மு.க-வுடனான உறவு கணவனும் மனைவியும் போன்றது’ என்றெல்லாம் சொல்லிவந்தார். அப்படி இருக்கும்போது ஏன் இந்தத் தனிக்குடித்தனம்?”

“அ.தி.மு.க கூட்டணியில், கூட்டணிக் கட்சிகள் தரப்பில் 40 சதவிகித இடங்களை எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால், ‘மாவட்டவாரியாக முடிவு’ என்று அ.தி.மு.க தலைமை அறிவித்ததும், பா.ஜ.க தரப்பை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்.

ஊராட்சிமன்றத் தலைவர் பதவி ஏலம்
ஊராட்சிமன்றத் தலைவர் பதவி ஏலம்

இல.கணேசன் அ.தி.மு.க தரப்பைச் சந்தித்து பேசியபோதும் சரியான ஒத்துழைப்பில்லை. இதனால், தனித்தே களத்தில் நிற்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் பா.ஜ.க பங்காளிகள். வட மாவட்டங்களில் மட்டும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 35 சதவிகிதம் வரை ஒதுக்கீடு நடந்துள்ளது. தென் மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும்படி யாருக்கும் சீட் ஒதுக்கவில்லை என்கிறார்கள்.”

“ம்”

“இதனால், தென் மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினரே ஆளுங்கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவுசெய்துள்ளார்கள். அதைத் தடுக்க ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து பணபேரமும் நடந்துவருகிறது. தி.மு.க-விலும் இந்தப் பஞ்சாயத்துகள் உள்ளன. மாவட்டவாரியாக அந்தக் கட்சியின் கூட்டணிக்குள்ளும் சத்தமில்லாமல் பங்கீடு முடிந்துவிட்டது. ஆனால், தி.மு.க-விலேயே சில அதிருப்தியாளர்கள் போட்டி வேட்பாளர்களை களத்துக்குக் கொண்டுவரும் திட்டத்தில் இருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், உள்ளாட்சித் தேர்தலில் சாதிரீதியான பிரிவினைகளும் எதிரொலிக்கின்றன.”

“என்னவாம்?”

“தென் மாவட்டங்களில் அகமுடையார் சமூகத்தினர்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரு கட்சிகளுக்கும் எதிராகக் கொடி பிடிக்கத் தொடங்கியுள்ளனர். நடக்கவிருக்கும் உள்ளாட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சில் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் அந்தச் சமூகத்தினருக்குச் சரியான பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்பதே அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். முக்குலத்தோரில் அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மறவர் சமூகத்தினருக்கே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கிறார்கள் என்பது அவர்கள் வைக்கும் விமர்சனம்.”

மிஸ்டர் கழுகு: ஒரிஜினலாவே நான் வில்லன்மா?

“லாட்டரி விவகாரம் அரசுக்கு பெரும்தலைவலியாகிவிட்டதே?”

“அரசுத் தரப்பில், சத்தமில்லாமல் ஒரு விஷயம் நடந்துவருகிறது. ஒருகாலத்தில் தமிழகத்தில் லாட்டரி விற்பனைமூலம் தினமும் பல கோடிகளை அள்ளியவர்களுக்கு சட்டவிரோதமாகப் பதுங்கிப் பதுங்கிச் சம்பாதிப்பதில் விருப்பமில்லையாம். அதனால், மீண்டும் அரசு அனுமதியுடன் லாட்டரி நடத்த தமிழக முக்கிய அமைச்சருடன் இரண்டு வாரங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்காக 500 கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த டீலிங்கில் தமிழகத்தில் போலி லாட்டரி விற்பனையில் கொடிகட்டிப் பறப்பவரும், வெளிநாடு ஒன்றில் ஆன்லைன் லாட்டரி நடத்திவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் அந்த அமைச்சருடன் பேசியுள்ளனர். இந்தச் சமயத்தில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் லாட்டரி விவகாரத்தால் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. இதனால், டீலிங் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப் பட்டிருக்கிறதாம்.”

“விழுப்புரம் விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?”

“தமிழகம் முழுவதும் ஒரு நம்பர் லாட்டரியை ஒழித்துக்கட்டும்படி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டிருக் கிறார். மேலும், இந்த விவகாரத்தில் அவர் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய மண்டலத்தில் முன்பு இருந்த முக்கியமான போலீஸ் அதிகாரி நன்றாக கல்லா கட்டியது தெரிய வந்திருக்கிறது. இப்போது ‘யாரும் லாட்டரி தரப்பினரிடம் மாமூல் வாங்கக் கூடாது. வாங்கினால், உடனடியாக சஸ்பெண்ட்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.”

“தி.மு.க-வில் கிஷோரின் செயல்பாடுகள் வேகம் எடுத்துவிட்டனவா?”

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

“அவருக்கு எதிரான கருத்துகள்தான் வேகமெடுத்துள்ளன. இங்கு தி.மு.க-வில் ஒப்பந்தம் போட்ட சில நாள்களிலேயே டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது ஐபேக் நிறுவனம். ‘எத்தனை கட்சிகளுக்குத்தான் இவர் வேலைசெய்வார்?’ என்று அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். இரண்டு தினங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் குழுவுடன் தொடர்புகொள்ள, செல்வகணபதி தலைமையில் நான்கு பேர்கொண்ட குழுவை அமைத்துள்ளாராம் ஸ்டாலின். அந்த நால்வர் அணிதான் கிஷோர் அணியுடன் தொடர்பில் இருந்து திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறார்கள்.”

கருணாநிதி நினைவிடத்தில்...
கருணாநிதி நினைவிடத்தில்...

“எதிரும் புதிருமாக இருப்பதாகக் கருதப்பட்ட ஸ்டாலின் - கனிமொழி இருவரும் இணைந்தே கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றிருக்கிறார்களே!”

“உண்மைதான். வெளிநாட்டிலிருந்து திரும்பிய கனிமொழி, டிசம்பர் 14-ம் தேதி மரியாதை நிமித்தமாக கட்சித் தலைவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இருவரும் அரை மணி நேரத்துக்கும்மேலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து இருவரும் இணைந்தே கருணாநிதி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இது, உடன்பிறப்புகள் தரப்பில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது!”

“சி.வி.சண்முகத்துக்கு எதிராக பொன்முடி பொங்கி யிருக்கிறாரே?

சி.வி.சண்முகம், பொன்முடி
சி.வி.சண்முகம், பொன்முடி

“அவர் எங்கே பொங்கினார்... உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ‘என்னைப் பற்றிப் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது’ என்று கடுமையாக விமர்சித்தார். இது தி.மு.க தலைமைக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு கட்சித் தலைமையிலிருந்து பொன்முடியைத் தொடர்புகொண்டு இதற்கு பதிலடி தரச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே பொன்முடி பொங்கினாராம்.”

“ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் டிரெய்லர் டிசம்பர் 16-ம் தேதி மாலை 7 மணியளவில் வெளியானதே!”

“ஆமாம், நானும் பார்த்தேன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது டிரெய்லர். இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம், டிரெய்லரின் இறுதியில் ரஜினி சொல்லும், ‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா’ என்று சொல்லும் பன்ச்தான். இந்திய மற்றும் தமிழக அரசியலில் அவர் யாருக்கெல்லாம் வில்லன் என்பது, போகப்போகத்தான் தெரியும்” என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்.