அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மக்கள் உணர்வை மதிக்காத ராஜ் பவன்... ஈகோ ஆளுநர்... இரையாகும் மசோதாக்கள்!

ஆளுநர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளுநர்

‘நீங்கள் ஃபைல் அனுப்பினால், அதில் நான் அப்படியே கையெழுத்து போடணுமா?’ என்கிற ஆளுநரின் ஈகோதான் எல்லாவற்றுக்கும் காரணமாம்.

“தமிழக ஆளுநரின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா காலாவதியாகிவிட்டது. பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமான ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசு சார்பில் எவ்வளவோ முயன்றும் அதைக் கண்டுகொள்ளாமலேயே இருந்துவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன” என்றபடி அலுவலகத்துக்கு வந்த கழுகார்...

“தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சூழலில், ஆளுநரின் இந்தச் செயல் அதிர்ச்சியளிக்கக்கூடியது. இத்தனைக்கும் கடந்த அக்டோபர் 1-ம் தேதி அவசரச் சட்டம் போட்டு அனுப்பிவைத்தபோது, அன்றைய தினமே அனுமதி அளித்தார் ஆளுநர். ‘வார்த்தையோ புள்ளியோ மாறாமல்தான் அதே சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அனுமதி தர மறுக்கிறார் ஆளுநர்’ என்று அரசுத் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். அவசரச் சட்டத்துக்கு ஆயுள் குறைவு என்பதும், அதற்குள்ளாக சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்தி நிரந்தரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும் விதி. அப்படிச் சட்டமன்றம் கூடிவிட்டால், அது கூடிய நாளிலிருந்து ஆறு வாரங்களில் அவசரச் சட்டம் தானாகவே காலாவதியாகிவிடும் என்பதை அறியாதவர் அல்ல ஆளுநர். அப்படியிருந்தும், அக்டோபர் 19-ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல், கடந்த நவம்பர் 24-ம் தேதி விளக்கம் கேட்டு அரசுக்குக் கடிதம் எழுதினார் ஆளுநர்.”

மிஸ்டர் கழுகு: மக்கள் உணர்வை மதிக்காத ராஜ் பவன்... ஈகோ ஆளுநர்... இரையாகும் மசோதாக்கள்!

“அவ்வளவு பிஸியா ஆளுநர்?!”

“ஆமாம்... ஆமாம். ஆளுநர் வேலையைப் பார்க்க நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு மற்ற வேலைகளில் ரொம்ப பிஸியாகத்தானே இருக்கிறார் அவர்... இத்தனைக்கும் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் மாளிகை எழுப்பியிருந்த கேள்விகளுக்கெல்லாம் 24 மணி நேரத்துக்குள் பதிலளித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அப்படியிருந்தும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி காலம் தாழ்த்தியதால், சட்ட மசோதா காலாவதியாகியிருக்கிறது.”

“சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு அப்படியென்ன சங்கடம்?”

“ ‘நீங்கள் ஃபைல் அனுப்பினால், அதில் நான் அப்படியே கையெழுத்து போடணுமா?’ என்கிற ஆளுநரின் ஈகோதான் எல்லாவற்றுக்கும் காரணமாம். துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கா, ஆளுநருக்கா என்கிற விஷயத்தில் ஈகோ பார்த்திருந்தால்கூட புரிந்துகொள்ளலாம்... மக்களை நேரடியாக பாதிக்கிற இந்த விஷயத்தில்கூட ஆளுநர் இப்படி நடந்துகொண்டிருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.”

“பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள்கூட, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தியிருந்தனவே?”

“ஆமாம். ‘ஆன்லைன் சூதாட்டத்தில் 33 உயிர்களைப் பறிகொடுத்துவிட்டோம். ஆளுநர் இனியும் தாமதிக்கக் கூடாது’ என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியும் பெரும்படையோடு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து, ‘ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார். ஆயினும், ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்திருக்கிறார் ஆளுநர். அவரின் இந்தச் செயலால், மீண்டும் சூதாட்டத் தற்கொலைகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. இதனால், ‘ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்ட வடமாநிலப் பெண் உயிரிழப்புக்கு ஆளுநர்தான் காரணம். அவர் பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா. இப்படியே போனால், ஆளுநருக்கு எதிரான கண்டனக் குரல்கள், போராட்டமாக வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.”

“மசோதாக்களைக் கையாளக்கூட நேரமில்லாத ஆளுநர், பாரதியாரின் பிறந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து புதிதாக ஒரு பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறாரே?”

“இதையும் கேளும்... கார்த்திகை தீபத் திருநாளான டிசம்பர் 6-ம் தேதி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம், தானும் திருவண்ணாமலைக்குச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று ஆளுநர் ரவி, ராஜ் பவன் அதிகாரிகளிடம் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறாராம். ‘கட்டுக்கடங்காத கூட்டமிருக்கும் சமயத்தில் உங்களுக்கென்று தனியாகப் பாதுகாப்பு அளிப்பதால் சிக்கல் ஏற்படும்’ என அதிகாரிகள் அறிவுறுத்தியும் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை என்கிறார்கள்.”

“இங்காவது எதிர்க்கட்சி ஆட்சி. பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சி ஆளும் புதுவையிலும் மோதல் அதிகரித்திருக்கிறதே?”

“அதை ஏன் கேட்கிறீர்... புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை முதல்வரும், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை ஆளுநரும் தவிர்க்கிற அளவுக்கு இருவருக்குள்ளும் முட்டல் மோதல் அதிகரித்திருக்கிறது. அரசுக்குச் சொந்தமான சுமார் 100 மதுபான பார்களை தனியார் நிறுவனத்திடம் லீஸுக்கு விடுவதற்காக முதல்வர் அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்ற கோப்பு, பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறதாம். இது குறித்து நினைவூட்டியும் ஆளுநர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்கிறார்கள். அதேபோல சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதுச்சேரி அரசு சார்பாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பட்டியலில் முதல்வர் பரிந்துரைத்த யாருடைய பெயரும் இல்லை. அதனால், கோபத்தின் உச்சத்திலிருக்கிறாராம் முதல்வர் ரங்கசாமி” என்ற கழுகாருக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்தோம். “இது ஆளுநர் அல்வாவா... உதயநிதி அல்வாவா?” என்று நக்கலடித்தபடியே ருசித்த கழுகார்...

“தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன பலரும், அவரை அமைச்சராக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கமான துதிதான் இது என்றாலும், முதல்வரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அதை வழிமொழிந்திருப்பதால், இதை எளிதாகக் கடந்துவிட முடியாது. ‘முரசொலி’யும் இந்த ஆண்டு உதயநிதி பிறந்தநாளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. சமீபத்தில், ‘முரசொலி’ அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘தம்பியை சீக்கிரமே அமைச்சராக்குங்க தலைவரே. எங்க எல்லாரோட விருப்பமும் அதுதான்’ என்றிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும் அதை வழிமொழிந்திருக்கிறார்கள். அமைதியாக அதைக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், எந்த பதிலையும் சொல்லவில்லையாம். பலரும், ‘உதயநிதி அமைச்சராக வேண்டும்’ என வாழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், கனிமொழியின் வாழ்த்தை கவனித்தீரா?”

மிஸ்டர் கழுகு: மக்கள் உணர்வை மதிக்காத ராஜ் பவன்... ஈகோ ஆளுநர்... இரையாகும் மசோதாக்கள்!

“உதயநிதி, தனக்கு பொன்னாடை அணிவிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தாரே, அதைத்தானே சொல்கிறீர்?”

“அதுவே ஒரு குறியீடுதான். தன் வாழ்த்துச் செய்தியில், ‘முதலமைச்சர் தளபதி அவர்களின் மகனும், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் மக்கள் பணியும், கலைப் பணியும் சிறந்திட வாழ்த்துகிறேன்’ என்று கூறியிருக்கிறார் கனிமொழி. ‘கட்சிப் பொறுப்பு, எம்.எல்.ஏ என்பதோடு நிறுத்தியிருக்கலாம். முதல்வரின் மகன் எனக் குறிப்பிடவேண்டிய தேவை என்ன... வாரிசு அரசியல் என ஏற்கெனவே எதிர்க்கட்சியினர் விமர்சித்துக் கொண்டிருக்கும்போது கனிமொழியின் பதிவு அதற்கு அவல் கொடுத்ததுபோல ஆகிவிடாதா?’ என மேலிடக் குடும்பத்துக்குள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். ‘அமைச்சர்கள் எல்லோரும், உதயநிதி சினிமாவைக் கைவிட்டு முழுநேர அரசியலுக்குள் வர வேண்டும் என்கிறார்கள். ஆனால், உதயநிதியின் கலைப்பணியும் சிறந்திட வாழ்த்துகிறார் கனிமொழி. தம்பியை எப்போதும் சினிமாவில் மட்டுமே இருக்கச் சொல்கிறாரா... அதென்ன `முதலமைச்சர் தளபதியின் மகன்’ என்று வாழ்த்துவது, ஒரு அத்தையாக வாழ்த்த மனம் வரவில்லையா?’ என்று குடும்பத்துக்குள் சில உறவுகள் கொளுத்திப்போட்டிருப்பதால், கடுப்பில் இருக்கிறதாம் செனடாப் சாலை இல்லம்” என்ற கழுகார்...

“தி.மு.க-வில் புதிதாக இரண்டு அணிகளை உருவாக்கியிருக்கிறார்கள். `அமைப்பு சாரா ஓட்டுநர் அணி’ என்ற ஒன்றை உருவாக்கி, அதற்குத் தலைவராக கதிர் ஆனந்தையும், `விளையாட்டு மேம்பாட்டு அணி’ என்ற ஒன்றை உருவாக்கி, அதற்குச் செயலாளராக தயாநிதி மாறனையும் நியமித்திருக்கிறார்கள். தன் மகனுக்கு எப்படியாவது இளைஞரணியில் மாநிலப் பொறுப்பு வாங்கிவிடலாம் என முட்டி மோதிய துரைமுருகனின் முயற்சி எடுபடவில்லை. எனவே, வேறு ஏதாவது பொறுப்பு கொடுங்கள் எனத் தலைமையை நெருக்கியிருக்கிறார். தவிர்க்க முடியாமல் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி என்ற புதிய அணியை உருவாக்கியிருக்கிறார்களாம். இதைக் கேலி செய்திருக்கும் ஒரு மூத்த அமைச்சர், ‘இதுவாவது பரவாயில்லை... கருணாநிதி இருக்கும்போது மத்திய அமைச்சராக கொடிகட்டிப் பறந்த தயாநிதி மாறனுக்கு இப்படி ஒரு பொறுப்பைத் தர யார் ஐடியா கொடுத்தார்களோ தெரியவில்லை’ என்று சொல்லிச் சிரித்தாராம்” என்றபடி ஜூட் விட்டார்.